ஐபக்கம் – 005 : ஒற்றை பரிசு

#ஜனவரி01,2024
கருவறையிலிருந்து பூமிக்கு வந்த ஐ’யை வரவேற்று ஒரு தந்தையாய் யான் தந்த ‘மகவே வருக’ நூல்தான் அவன் தன் வாழ்வில் பெற்ற முதல் பரிசு. இதுபோன்ற பரிசை இதுவரை பிறந்திட்ட எந்தவொரு மகவும் பெற்றிருக்கமாட்டார்கள். இனியும் பெறுவார்களே என்பது சந்தேகம்தான்.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பரிசினை, அவன் தன் கையால் முதன்முதல் யாருக்குத் தர வேண்டும்? என யோசித்தபோது, தம்பி பிரபாகரன்தான் உள்ளத்தில் தோன்றினார். இதனை உடனே மதியிடம் சொல்லலாம் என்று போனபோது, நான் சற்றும் எதிர்பாராத வகையில் அவளும் அதே விஷயத்தை சொன்னது பேராச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆம்!
காதலில் கட்டுண்ட இதயங்கள் இரண்டு இப்படித்தான் ஒன்று சுற்றியே சுழலும்; ஒன்றையே சிந்திக்கும் என்று எண்ணிக்கொண்டு எனக்குள் நானே புன்னகைத்துக் கொண்டேன்.
ஐ பிறந்த டிசம்பர் 28, 2023 அன்றே நாங்கள் இம்முடிவை ஒருசேர எடுத்துவிட்டதால் ஒரு நூலினை தனியாக எடுத்து வைத்திருந்து, சரியாக இன்று ஜனவரி 01, 2024 புத்தாண்டு அன்று (ஐ பிறந்த ஐந்தாவது நாள்), பிரபாகரனிடம் ஐ கையால் அவன் பெயரிட்டு தந்தோம்.
ஒருவர் தம் வாழ்வில் பெறக்கூடிய பரிசுகளில் மிகச் சிலதான் அவர் வாழ்நாளில் என்றைக்கும் மறக்க முடியாததாய் இருக்கும். அந்தவகையில் ஐ பெற்ற முதல் பரிசும்; தந்த முதல் பரிசும் ஒன்றாகவே அமைந்துவிட்டதில் எங்களுக்கும் சரி, ஐ’க்கும் சரி, மலையளவு மகிழ்ச்சிதான்.
*