குழிவு
ஆசைப் பள்ளத்தாக்கில் விழுந்து
அங்கம் முழுக்க சலனமற்றுக் கிடந்தபோது
பதிலாய் மறந்துபோனது
அனைத்து விருப்பங்களும்
சுகக்குகையில் நுழைந்து
மேகமாய் கலைந்தபோது
வண்ணமாய் அழிந்துபோனது
பெயர் வரைக்கும்
பித்துள்ளம் சிதறி
ஆர்ப்பரிப்பின் அடித்தளமடங்க
சிறு மண்ணானது
மொத்த உருவும்
இறகால் வருடி
இமைகள் மூடிவைத்து
குழிவு தூர்ப்பதாய்க் கண்ட கனவு
நிசமானபோது
நிஜமான என்னைப் பார்த்து
கைகொடுத்தேன்
நிஜத்திலும் நிஜமாக