சொல்லன்றி எதுவுமற்றவன்! – 288

அவற்றில் ஏதேனும் ஒரு சம்பவத்தை அல்லது அண்மையில் நிகழ்ந்ததை கூறமுடியுமா?

கடந்த மே மாதம் நாங்கள் குடியிருந்த பழைய வீட்டின் மின் இணைப்பை கமர்ஷியலிலிருந்து டொமஸ்டிக்காக மாற்றக் கேட்டு அருகில் உள்ள மின் நிலையத்துக்குப் போயிருந்தேன். அங்கிருந்த சம்மந்தப்பட்ட ஊழியர் ஒருவர் எனது விண்ணப்பத்தை பார்த்துவிட்டு தனியாகக் கூட்டிப் போய், ”எல்லாமே சரியா இருக்கு சார். நான் சொல்ற நம்பர நோட் பண்ணிக்கோங்க’’ என்று தனது நகர்பேசி எண்ணை தந்தார். குறித்துக்கொண்டேன்.

”முதல்ல ஒரு ஆயிரம் ரூபா ஜீபே பண்ணிடுங்க. வேலை முடிந்ததும் மீதி ஆயிரம் ரூபா அனுப்புங்க’’ என்றார். சுர்ரென கோபம் வந்தது. அடக்கிக்கொண்டு மென்மையாகச் சிரித்தபடி கேட்டேன். ”எதுக்கு சார் பணம் அனுப்ப சொல்றீங்க? அதான் ஆன்லைன்லயே இதுக்கான கட்டணத்த கட்டிட்டனே. வேணும்னா… லஞ்சம்னு போட்டு, அத ஸ்கிரீன்ஷாட் எடுத்து அமைச்சருக்கும், தலைமை செயலாளருக்கும் அனுப்புறன்; சோசியல் மீடியாவுலயும் போடுறன், பரவாயில்லயா?’’ சட்டென அவர் முகமே மாறிவிட்டது.

அதைக் காட்டிக்கொள்ளாமல் குழைந்தவர், ”சார், விருப்பம் இருந்தா அனுப்புங்கன்னுதான் சொன்னேன். இல்லன்னா விட்ருங்க சார், பரவால்ல’’ அப்படியே நல்லவர் மாதிரி மாற்றிப் பேசினார்.

நான் கேட்டேன். ”உங்க வேலைய செய்ய எதுக்கு சார் லஞ்சம் கேட்குறீங்க?’’ எந்த பதிலும் இல்லை. ”லஞ்சம் இல்லாம வேல செய்ய கஷ்டமா இருந்தா சொல்லுங்க சார்… நான் வேணா யார்கிட்ட போய் கேட்கணுமோ அவங்ககிட்ட கேட்டு செய்ய சொல்றன்.’’

உடனே வராத சிரிப்பை வரவழைத்து, ”சார், அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சார்… நீங்க வீட்டுக்குப் போங்க. சார் வந்ததும் நானே கையெழுத்து வாங்கிட்டு சொல்றன்’’ என்றார். சரி, என்று வந்துவிட்டேன்.

ஐந்து நிமிடத்தில் மிக எளிதாய் முடியக்கூடிய வேலையை, ஐந்து நாட்களுக்கு ஐந்து தடவைக்குமேல் வேண்டுமென்றே அலையவைத்து இழுத்தடித்து செய்தார். ‘படித்து விவரம் தெரிந்த நம்மிடமே இப்படியென்றால், படிக்காத பாமர மக்களிடம் இன்னும் எப்படியெல்லாம் இவர் நடந்துகொள்வார், எவ்வளவு பணம் பிடுங்குவார்?’ என்று மனத்துள் எண்ணிக்கொண்டேன்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 287

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=