தாவர சங்கமம் – 6 : தனிப்பெருங்கணக்கு

எனதிந்த முப்பத்து நான்காம் வயதிலிருந்து பால்ய காலத்தை திரும்பிப் பார்க்கையில் இயற்கை என்னும் மூதன்னை அதிலும் குறிப்பாக, மரம் செடி கொடி புல் பூண்டுகள், என்போன்ற கிராமத்துச் சிறார்களை ஒருபோதும் பசியில் வாடவிட்டதில்லை; ஏக்கத்தில் தவிக்கவிட்டதில்லை என்று தெரிகிறது.
அதுவும் என் வயதுடைய எதிர்த்த வீட்டுப் பையன்கள் தன் அப்பா அம்மா ஊரிலிருந்து வாங்கி வந்த விதவிதமான பிஸ்கட்களையும், பன்களையும் திண்ணையில் உட்கார்ந்து பாலிலும், தேநீரிலும் தொட்டுத் தின்றுகொண்டிருப்பதை ஏக்கத்தோடு சிலநொடிகள் நின்று பார்த்துவிட்டு எங்கள் வீட்டின் பின்னால் போனால், அங்கே எனக்காக கொத்துக்கொத்தாய் கொடுக்காய்ப்புளி காய்கள் காய்த்துத் தொங்கிக்கொண்டிருக்கும். அப்படியே மரத்தில் ஏறி கைகளாலோ, சிறு குச்சியால் மாட்டிப் பறித்தோ அங்கேயே உட்கார்ந்து தின்றுவிட்டு கீழே இறங்கி வருவேன். அல்லது சுவரோரம் சாய்த்துவைத்திருக்கும் நீளமான சொண்டியை எடுத்து கீழிருந்தவாரே மாட்டிப் பறித்து ஒவ்வொரு சுளையாக ரசித்து ருசித்து உண்டுவிட்டு வயிறு நிறைய தண்ணீர் குடிப்பேன்.
வாரத்தில் குறைந்தது நான்கு நாட்களாவது ஐஸ்காரனோ, பஞ்சுமிட்டாய்க்காரனோ, அல்வாக்காரனோ வந்துவிடுவான் எங்கள் கிராமத்துக்கு. என்ன செய்வதெனத் தெரியாமல் கொஞ்சநேரம் ஏக்கத்துடன் பார்த்திருந்துவிட்டு, ஊரை ஒட்டியிருக்கும் யார் கொல்லிக்காவது போனால், அங்கே எங்களுக்காக பப்பாளிப்பழமோ, கொய்யாக்காயோ, மாங்காயோ காய்த்திருக்கும். மரத்திலேறிப் பறித்து வந்து கீழே வட்டமாக உட்கார்ந்து பங்கிட்டுக் கதைகள் பேசிச் சிரித்துக்கொண்டு தின்றுவிட்டு, ஐஸையும் பஞ்சுமிட்டாயையும் அல்வாவையும் மறந்துபோய் வீட்டுக்கு வருவோம்.
அதேபோல் ஐயாவோடு விறகு வெட்டப் போகையிலும், என் வயதொத்த சிறார்களுடன் கூடிக்கொண்டு அருகில் உள்ள மலைகளில் ஏறி விளையாடச் செல்கையிலும் தவறாது எங்களுக்காக அங்கே காரைப்பழமோ, சூரைப்பழமோ, ஞானாப்பழமோ, சொத்துக்கிளாப் பழமோ, கிளாப் பழமோ, பூலாப் பழமோ இருக்கும்.
காரைப்பழம் என்றால் நேரடியாய்ப் பறித்து வாயில் போட்டுக் கொண்டால் போதும். இனிப்பாக இருக்கும். காயென்றால் மஞ்சள் நிறத்தில் துவர்ப்பாக இருக்கும். ஓர் அளவுக்குமேல் தின்னமுடியாது. அருகில் மஞ்சம்புல் இருந்தால் நான்கைந்தை எடுத்துச் சுருட்டி அதற்குள் வைத்துப் பாறையில் தேய்த்தால் சற்று நேரத்திலேயே பழுத்துவிடும். இல்லையென்றால் ஆவாரம் தழைக்குள் வைத்திருந்தால் மாலைக்குள் பழுத்துவிடும். தின்போம்.
சொத்துக்கிளாப் பழத்தை அப்படியே பறித்து வாயில் போட்டுக்கொள்வோம். ஒரேநேரத்தில் இனிப்பும் துவர்ப்பும் கலந்ததாய் இருக்கும். பச்சரிசிப் பழம் என்று சொல்லக்கூடிய பூலாப் பழத்தையும், முட்புதர்களில் இலைகளோடு இலைகளாய் காய்த்து மறைந்திருக்கும் சிறு கோலிகுண்டு வடிவிலான கருநிற கிளாப் பழத்தையும், அதன் செம்பச்சைநிற காய்களையும் ஒவ்வொன்றாய் தேடித்தேடிப் பறித்து அதன் பால் உதட்டில் பட்டுவிடாதவாறு லாவகமாய்த் தின்போம்.
சூரைப்பழம் என்னதான் புளிப்பாக இருந்தாலும் எவ்வளவு தின்றாலும் சலிக்காதது. அதிலும் முட்களுக்கிடையில் இருக்கும் சின்னஞ்சிறு பழங்களை முள் குத்தாமல் பறிக்கவே தனிப்பயிற்சி தேவை. அதுவும் கதைகள் பேசியவாறு தின்றுகொண்டே வேகவேகமாகப் பறித்துப் பாக்கெட்டில் நிரப்பிக்கொண்டு, வழிநெடுக வாயில் போட்டு உண்டபடி வீடு வரைக்கும் வருவது ஒருபோதும் மறவாதது.
ஞானாப்பழம் மழைக் காலங்களில் மட்டுமே இருப்பது. செடிக்குச் செடி வடிவிலும் சுவையிலும் மாறுபட்டு தித்திப்பாகவும் சல்லெனவும் இருப்பது. அளவோடு தின்றால் சளி பிடிக்காது என்று தெரிந்தும் ஒரு வருடம்கூட அளவுடன் தின்னாதது. இன்னும் சொல்லப்போனால் பழங்கள் மிகுந்திருக்கும் கொத்துகளாகப் பார்த்து உடைத்து ஒரு கையில் வைத்துக்கொண்டு, நடந்தபடி அல்லது பிடித்த இடத்தில் சென்று உட்கார்ந்து இன்னொரு கையால் ஒவ்வொரு பழமாகப் பறித்துத் தின்றது இப்போதும் நினைவிலாடுவது.
இங்கே பலருக்கும் தெரிந்த இலந்தைப் பழம் எனக்கு ஆயிரம் கதைகள் சொல்வது. அதற்காக அதிகாலையில் எழுந்துபோய் மரத்தடியில் காத்திருந்து விடிந்ததும் பை நிறையப் பொறுக்கிவந்து நாள்முழுக்க வைத்திருந்து தின்றது. சில நாட்களில் மரத்தின் உரிமையாளரிடம் மாட்டிக்கொண்டு வசை பெற்றது. யாரும் இல்லாத சமயமாகப் பார்த்து கல்லும் கட்டையும் எடுத்து அடித்தும், மரத்திலேறி கிளைகளைப் பிடித்து உலுக்கியும் பழங்களை விழவைத்து உண்டது. செங்காய்களைக் கூட விடாமல் பொறுக்கி அப்படியேவும், பழுக்கவைத்தும் தின்றது. காசு தேவைப்படும் நேரங்களில் பழங்களை கொண்டுபோய் ஊருக்குள் விற்றுச் சம்பாதித்து விரும்பியதை வாங்கி உண்டது. இப்படி எத்தனையோ.
அதேமாதிரி சிலருக்கு மட்டுமே தெரிந்த உண்ணிமில் பழம். நாஞ்சில் நாடன் இதை உண்ணிப்பழம் என்பார் (தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் சங்ககால ‘கரந்தை’ இதுதான் எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்). பார்க்க அப்படியே மணத்தக்காளிப்பழம் போல இருக்கும். ஆனால் சுவையிலும், வண்ணத்திலும் வேறானது. ஊரைச் சுற்றி அதிலும் குறிப்பாக, சாலையோரங்களில் அடர் புதர்களாய் வளர்ந்து கொத்துக்கொத்தாய் காய்த்துப் பழுத்துக் கருகருவென இருப்பது. தின்னத்தின்ன இன்னும் இன்னும் என நா கேட்பது.
அனைவரும் அறிந்த புளியமரம் வேறெந்த தாவரத்தைக் காட்டிலும் வருடம்முழுக்க எங்களுக்கு ஏதாவதொரு தின்பண்டம் தருமரம். அதிலும் அதன் துளிரிலையைப் பறித்து வாயில் போட்டு மென்று தின்பது தொடங்கி, பூவைப் பறித்துத் தின்பது. பிஞ்சுக் காய்களை அப்படியேவும், உப்பு மிளகாய்த்தூள் சேர்த்தும், கல்மேல் வைத்து இன்னொரு கல்லால் நசுக்கியும் உண்பது. முற்றினக் காய்களை கல்லில் தேய்த்து அதன் மசியலையும், செம்பழத்தைப் பறித்து தோலுரித்தும் தின்பது. பழத்தை மரத்திலிருந்து தானாக உதிர்ந்தும், கல்லால் அடித்து விழவைத்தும், மரத்திலேறி உலுக்கியும் தோலுரித்துவிட்டு உண்பது வரைக்கும் சொல்லலாம்.
கூடவே, உள்ளங்கையளவு புளியை எடுத்து உப்புடன் சேர்த்து சிறு உருண்டையாக உருட்டி சிறு குச்சியின் நுனியில் செருகி ‘புளிபாப்’பாக (லாலிபாப் போல) நாவில் எச்சில் ஊற ஊற உண்பதையும், புளியங்கொட்டையை அப்படியே வாயில்போட்டு கொஞ்சகொஞ்சமாக மென்றும், கல்மேல் வைத்து இன்னொரு கல்லால் உடைத்தும், நெருப்பிலிட்டு சுட்டும் தோலுரித்துவிட்டு தின்பதையும், வாணலியில் போட்டு வறுத்தெடுத்து உரலிலிட்டு உலக்கையால் நன்றாகக் குத்தித் தோலுரித்து அப்படியேவும், உப்பிட்ட நீரில் இரவுமுழுக்க ஊரவைத்து காலையில் எழுந்து எடுத்தும் உண்பதையும் சொல்லலாம்.
இவ்வரிசையில் பனை மரமும், தென்னை மரமும் எப்போதும் முதன்மையாக வைக்கத் தக்கது. அதிலும் பனை முதலில் நுங்கையும், அதன்பிறகு பழத்தையும் (அப்படியே தோலுரித்துவிட்டும், நெருப்பிலிட்டு லேசாகச் சுட்டுத் தோலுரித்தும் தின்பது), இறுதியாக [அதை மண்ணுக்குள் நட்டுவைத்தால்] கிழங்கையும் தருவது (கிழங்கு தந்த பிறகும்கூட அதற்குள் தேங்காய்க்குள் இருப்பது போல் பூவும், பத்தையும் கொடுப்பது). தென்னையோ இளநீரில் ஆரம்பித்து, முற்றினத் தேங்காயை உடைத்துக் காயவைத்து எண்ணெய் ஆடும்போது வெளிப்படும் புண்ணாக்கு வரைக்கும் எத்தனையோ வழிகளில் பசியைத் தீர்ப்பது.
இவ்வாறு வேப்ப மரத்திலிருந்து பழுத்த மஞ்சள் நிற வேப்பம்பழம், ஆலமரத்தின் செந்நிற சிறுசிறு ஆலம்பழம், நாவல் மரத்திலிருந்து கருநிற நாவல் பழம், அரை நெல்லி மரத்தின் நட்சத்திர வடிவிலான அணில்காய், கொளஞ்சி மரத்திலிருந்து பந்து போன்ற கொளஞ்சிக்காய், கொய்யா மரத்தின் கொய்யாக்காய், நார்த்த மரத்திலிருந்து நார்த்தங்காய், சீத்தா மரத்தின் சீத்தாப்பழம், மாதுளை மரத்திலிருந்து மாதுளைப்பழம், மா மரத்தின் மாங்காய் மாம்பழம் மா-வற்றல், பப்பாளி மரத்திலிருந்து பப்பாளிப்பழம், பலா மரத்தின் பலாப்பழம் பலாக்கொட்டை, வாழை மரத்திலிருந்து வாழைப்பழம், ஈச்ச மரத்தின் ஈச்சங்காய் ஈச்சம்பழம், அத்தி மரத்திலிருந்து அத்திப்பழம், முந்திரி மரத்தின் முந்திரிப்பழம் முந்திரிக்கொட்டை, சப்போட்டா மரத்திலிருந்து சப்போட்டாப்பழம், விளா மரத்தின் விளாம்பழம்…
செடிகளில் மணத்தக்காளிப்பழம், பச்சைப்பயிறு, துவரை… கொடிகளில் விளை நிலங்களில் முளைத்துப் படர்ந்து காய்த்திருக்கும் சுக்கம்பழம், வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம், தர்பூசணி, பழுத்தங்காய்… மரங்களிலும் புதர்களிலும் கொடியேறிப் பழுத்திருக்கும் கோவைப்பழம், ஊளைமூக்குப்பழம்…
மனிதர்களால் விளைவிக்கப்படும் கரும்பு, மல்லாட்டை, கம்பு, மரவள்ளிக்கிழங்கு என்கிற குச்சி வள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெற்றிலை வள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம்… தானாக காடுமேடுகளில் வளரும் காட்டு வள்ளிக்கிழங்கு, சப்பாத்திப்பழம், காளான்… என இன்னும் இன்னும்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால்… இவற்றில் மல்லாட்டை, கரும்பு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், குச்சி வள்ளிக்கிழங்கு உள்ளிட்ட மிகச் சிலவைதான் மனிதர்களால் விளைவிப்பவை. மற்ற யாவும் இயற்கை என்னும் முதலன்னை இப்பூவுலகில் வாழும் உயிர்களுக்காக தானாக விளைவித்துத் தருபவை.
இங்கே மரம் செடி கொடி புல் பூண்டுகள்தான் இப்படி என்றால், இதைத்தாண்டி எங்கள் பசியைத் தீர்க்க இன்னும் எத்தனையோ இருந்திருக்கின்றன. அதில் மிக முக்கியமானவையாக மீன்களையும், நண்டுகளையும், குருவி, தண்ணீர்க்கோழி, காடை, கவுதாரிகளையும் அவற்றின் முட்டைகளையும், தேன், ஈசல், வெள்ளெலி போன்றவைகளையும் சொல்லலாம்.
இதுபோல் பலருக்கும் பலவற்றை இந்த இயற்கை அன்னை தந்திருப்பாள். [இங்கே மனிதர் அல்லாத பிற உயிர்களுக்கு அவள் தருவது வேறு பெருங்கணக்கு!] அதுவும் இன்னொரு தாயாக இருந்து நம்மையெல்லாம் அவள் சேயாக எண்ணி எவ்விதக் கைமாறும் கருதாது எக்காலத்தும் வழங்கியிருப்பாள். அதன் மூலமாக பசியைத் தீர்த்து, நம் ஆயுளை நீட்டித்து, பலவித சத்துக்களையும், பல்வேறு பாடங்களையும் ஈந்திருப்பாள்; உணர்த்தியிருப்பாள்.
இது ஏதோ அன்று மட்டும் நிகழ்ந்ததல்ல. இன்றும் ஏன், என்றும் நிகழக்கூடியதுதான். ஆம்! இப்போது இதையெல்லாம் திரும்பிப் பார்க்கையில் அப்படித்தான் தோன்றுகிறது.
[இதன் அண்மைய உதாரணமாக சமீபத்தில் பெரும் பசியோடு சதுரகிரி மலையேறுகையில், வழியில் இருந்த காரை மரத்தில் கொத்துக்கொத்தாய்க் காய்த்திருந்த காய்களில் கை நிறைய பறித்துத் தின்றுக்கொண்டுபோய், எதிர்பட்ட மலையருவியில் வயிறு நிறைய தண்ணீர் அருந்திப் பசியாறியதைச் சொல்லலாம்.]
இன்னொருபக்கம் இந்தத் தாவர சங்கமமே ஒன்றையொன்று சார்ந்தும் விலகியும், ஒன்றுடன் ஒன்று முட்டிமோதி வென்றும் வீழ்ந்தும், ஒன்றுக்கொன்று உண்டும் இரையாகியும் வாழவும் வீழவுமே படைக்கப்பட்டிருக்கின்றன என்றும் தோன்றுகிறது.
இன்னும் இதை ஆழ யோசித்து இப்படி சொல்லலாம். ‘எது எப்படி இருந்தாலும், எக்காலத்தும் கிராமத்து சிறார்களை பசியில் வாடவிடாமல்; ஏக்கத்தில் தவிக்கவிடாமல், இடத்துக்கும் காலத்துக்கும் ஏற்ப விதவிதமாய் அதேசமயம், எவ்விதக் கலப்பும் இல்லாமல் அன்பும், கருணையும், ஆரோக்கியமும் மட்டுமே மிக்கதாய் தந்து காபந்தித்து வாழ்விக்கும் இயற்கை என்னும் நல்லாளுக்கு, நிகரிலாப் பெருந்தாய்க்கு, நாம் எல்லோரும் நெஞ்சார நன்றி நவில்வதே தகுமாய் இருக்கும்’. என்ன, நான் சொல்வது சரிதானே?
(கொலுசு – மே 2023 இதழில் வெளியானது.)
*