சொல்லின்றி எதுவுமற்றவன்! – 117
இந்நூல் குறித்து கேட்க இன்னும் எத்தனையோ கேள்விகள் இருக்கின்றன. இருந்தாலும் இந்த நேர்காணலில் நாம் அடுத்தடுத்து பல விஷயங்களை பேசவேண்டி இருப்பதால், உங்களது அடுத்த நூலான ‘ஏலேலோ பாட்டு’ பற்றி இனி பேசலாம். அந்நூல் உருவான விதம் பற்றி சொல்லுங்கள்…
உண்மையில் இப்படி ஒரு நூல் உருவாக்கி வெளியிடும் எண்ணம் முதலில் இல்லை என்றாலும், காலத்தின் தேவை கருதியே வெளியிட நேர்ந்தது. ‘அதென்ன காலத்தின் தேவை?’ என்று நீங்கள் கேட்கலாம்.
2021 ஆம் ஆண்டை நூறு பாடல்களோடு வரவேற்கலாம் என முடிவெடுத்து, நானும் எனது நண்பர் இசையமைப்பாளர் ஷ்ரவன் கலையும் சேர்ந்து, செப்டம்பர் 23, 2020 தொடங்கி, டிசம்பர் 31, 2020 வரை தொடர்ந்து, ‘100 நாட்கள் – 100 பாடல்கள் – ஒவ்வொன்றும் 100 நொடிகள்’ என உருவாக்கி வெளியிட்டோம். அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது.
சரியாக நூறாவது பாடலை வெளியிட்ட சில மணி நேரங்களில், பிரபல பாடலாசிரியர் ஒருவர், தனது ட்வீட்டர் பக்கத்தில் எங்களது எண்ணத்தை அப்படியே சிறிது மாற்றி, ஏதோ தானே உலகில் முதல் தடவையாக இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்வது போல அறிவித்திருந்தார். அதை இங்குள்ள எல்லா ஊடகங்களும் அப்படியே கேள்வி ஏதும் கேட்காமல் செய்தியாக வெளியிட்டு விளம்பரப்படுத்தியது. பார்த்ததும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
கூடவே, ‘என்னடா, இவ்வளவு பெரிய பாடலாசிரியர் போய்… நம்ம ஐடியாவ மனசாட்சியே இல்லாம, ஏதோ தானே உருவாக்கினது மாதிரி சொல்றாரு. அத இந்த மீடியாங்களும் கூச்ச நாச்சமே இல்லாம விளம்பரப்படுத்துது’ என்று கோபமாகவும் இருந்தது.
இத்தனைக்கும் என் வட்டத்தில் இருந்த எல்லா ஊடக நண்பர்களுக்கும் நாங்கள் நூறு நாட்கள் தொடர்ந்து நூறு பாடல்கள் வெளியிட்டது தெரியும். இருந்தும் அவரது அரசியல் பண பின்புலம் கண்டு பயந்துபோய் யாரும் ஒருவார்த்தையும் பேசவில்லை.
‘சரி, அவர் செய்யப்போவதாகத்தான் சொல்லி இருக்கிறார். நாமோ செய்துவிட்டோம். பின்னர் எப்படியும் அதை ஒரு நூலாக வெளியிடுவார். பின்னாளில் அது வரலாறாகவும் மாறிவிடும். அதற்குமுன் நாம் செய்ததை நூலாக வெளியிட்டுவிடவேண்டும். வரலாற்றில் ஒருபோதும் போலிக்கு இடம் தரக்கூடாது’ என முடிவெடுத்து, அடுத்த சில தினங்களில் இந்நூலை உருவாக்கி வெளியிட்டேன்.
இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் அறிவித்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இன்னமும் மூன்றில் ஒரு பங்கு பாடல்களை கூட அவர் எழுதி வெளியிடாததும், இதையெல்லாம் போய் எந்த ஊடகமும் அவரிடம் ஒரு கேள்வியாக கேட்காததும்தான்.
[இன்னும்]
*