சொல்லின்றி எதுவுமற்றவன்! – 108
உங்கள் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் நம்ப முடியாதபடி இருப்பதாகத் தோன்றும். உதாரணமாக, உங்களது வீட்டில் பல்லாண்டுகள் இருந்த பாம்பு பற்றி நீங்கள் எழுதியிருப்பது?
ஹாஹா… (சத்தமாக சிரித்துவிட்டு) வாழ்வே ஒருவகையில் நம்ப முடியாத விசித்திரங்கள் நிரம்பியதுதானே? அந்த நோக்கில் பார்த்தால் இதெல்லாம் ஒன்றுமே கிடையாது.
அதுவும் கிராமங்களில் இதைவிட இன்னும் எத்தனையோ நம்ப முடியாத நிகழ்வுகள் தினந்தோறும் நடப்பதை இப்போதும் நீங்கள் பார்க்கலாம். ஒன்றை சொல்கிறேன், கேளுங்கள்.
அண்மையில் எங்கள் பக்கத்தூரில் தன் உயிருக்கு உயிரான மகன் இறந்துபோனதை தாங்கமுடியாத தந்தை ஒருவர், தானும் இறக்க முடிவெடுத்து மருந்து குடித்துவிட்டு எல்லோரையும் கூப்பிட்டு, ‘நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் இறக்கப்போகிறேன். என்னை யாரும் காப்பாற்ற வேண்டாம். என் மகன் இல்லாமல் என்னால் ஒருபோதும் வாழமுடியாது. மாறாக, என் கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள். என் மகனோடு சேர்த்து என்னையும் ஒரே பாடையில் தூக்கிப் போய், ஒரே குழியில் வைத்து இருவரையும் ஒன்றாகப் புதையுங்கள்’ என்று சொல்லிவிட்டு, அடுத்த நொடியே உயிரை விட்டிருக்கிறார். கேட்ட கிராமத்து மக்கள், ‘இப்படி ஓர் அப்பா, மகனா?’ என்று கண் கலங்கி அழுதுகொண்டு, அவர் சொன்னபடியே செய்திருக்கிறார்கள்.
இவற்றோடெல்லாம் ஒப்பிடும்போது எங்கள் வீட்டில் எங்களோடு நல்லபாம்பு இருந்ததும்; வாழ்ந்ததும் அத்தனை பெரிய விஷயம் கிடையாது என்பது புரியும்.
[இன்னும்]
*