தாவர சங்கமம் – 4 : அறாக்கண்ணி

நூறு வயதைக் கடந்துவிட்ட என் பாட்டியிடம், ‘பெண்கள் தம் மார்பில் இருக்கும் தேமல் சரியாக என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டால், ‘பவுர்ணமிக்கி மக்கியா நாள்ல இருந்து, புங்கன் துளுரு எல பறிச்சியாந்து மார்மேல வச்சினு தூங்கு. தெனக்கும் அப்டி செஞ்சன்னா… முழுநெலா எப்டி கொஞ்சகொஞ்சமா தேஞ்சு கருப்பு நெலாவா மாறுதோ, அதுமாதிரி அம்மாவாசிக்குள்ள வெள்ளப் புள்ளிலாம் மறஞ்சி பளபளன்னு ஆயிடும்’ என்பார்.
நூறு வயதை எட்டப்போகும் என் ஐயாவிடம், ‘தாய் தந்தையர் தம் குழந்தை அடிக்கடி எதையோ பார்த்து பயந்துபோய் அழாமல் இருக்க என்ன பண்ணலாம்?’ எனக் கேட்டால், ‘வேப்பங்கொத்து ஒடச்சியாந்து வூட்டுக் கூரையில சொருவிவுட்டு… ரவ வெள்ள கடுவு அள்ளி நெருப்புல போட்டு பொகபோட்டு வுடு, காத்துக்கருப்பு எதுவும் அண்டாம இருக்கும்’ என்பார்.
இன்னும் சில வயதான பாட்டிதாத்தாக்களிடம் கேட்டால், ‘கருவுற்ற பெண்களுக்கு மசக்கை காலத்தில் ஏற்படும் வாந்தி உணர்வினை கட்டுப்படுத்த புளியங்காய் உதவும்’ என்றும், ‘பிள்ளைப் பேற்றினால் வயிற்றில் உண்டாகும் வடுக்கள் நீங்க நெய்யுடன் சிறுவெண் கடுகை அரைத்துப் பூசலாம்’ என்றும் சொல்வர்.
நாமும் அதை அவ்வாறே செய்ய சட்டென சரியாகிவிடும். ‘அதெப்படி?’ என ஆச்சரியமாக இருக்கும். அவர்களிடம் ‘இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்றால், தம் முன்னோர்களை கை காட்டுவார்கள் (சிலர் அனுபவம் மூலமாக தெரிந்துகொண்டதாக). அவர்களிடம் கேட்டிருந்தால், நிச்சயம் அவர்தம் முன்னோரை காட்டியிருப்பார்கள். இதை அப்படியே பின்தொடர்ந்து போனால், வாய்மொழி இலக்கியம் வழியாக புராண, இதிகாச, பக்தி, நீதி, காப்பிய இலக்கியங்கள் கடந்து, நம்மிடம் இருக்கும் மிக மூத்த இலக்கியமான சங்க இலக்கியத்திற்குக் கூட்டிப்போய் நிறுத்தும்.
‘பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி’
என்கிறது நற்றிணை (9). அதாவது, பொரியைப் போன்ற பூக்களையுடைய புன்கு மரத்தின் அழகுமிகுந்த ஒளி பொருந்திய தளிரை, சுணங்கு நிரம்பிய (சுணங்கெனில் பெண்கள் மார்பில் தோன்றும் தேமல்) அழகிய முலையில் கண்டாரை வருத்தும் அழகு வீற்றிருக்க அணியச் சொல்கிறது. அப்படியே பாட்டி சொன்ன வைத்தியம்.
‘வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென்றவ்வே……’
என்கிறது புறநானூறு (296). அதாவது, வேம்பின் தழையை உடைய கிளைகளை ஒடிப்பதிலும், காஞ்சிப் பண் பாடுவதிலும், நெய்யுடைய கையராய் வெண்சிறு கடுகைப் புகைப்பதிலுமாக எல்லா மனைகளும் கல்லென்ற ஆரவாரம் உடையனவாய் உள்ளன. அதுவும் ஏன் தெரியுமா? வேம்பின் தழையை வீட்டின்முன் செருகுதலும், காஞ்சிப் பண்ணைப் பாடுதலும், வெண்சிறு கடுகைப் புகைத்தலும் புண்பட்டோரையும், சிறு குழந்தைகளையும் பேய்கள் அணுகாதிருக்கும் பொருட்டென்பதால். கிட்டத்தட்ட ஐயா சொன்னதேதான்.
‘…………. பசும்புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர்’
‘ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை…..’
என்கிறது குறுந்தொகையும் (287), நற்றிணையும் (40). அதாவது, கருவுற்ற பெண்களுக்கு மசக்கை காலத்தில் ஏற்படக்கூடிய வாந்தி உணர்வினை கட்டுப்படுத்த புளியங்காய் உதவுமென்றும்… பிள்ளைப் பேற்றினால் உண்டாகும் வடுக்கள் நீங்க கருத்தறித்த மகளிர் நெய்யுடன் சிறுவெண் கடுகை அரைத்து உடம்பில் பூசுவரென்றும் சொல்கிறது. அப்படியே நம் பாட்டிதாத்தாக்கள் சொல்வது.
இங்கே ஆச்சர்யம் என்னவென்றால், என் பாட்டிக்கும், ஐயாவுக்கும், மற்ற பாட்டிதாத்தாக்களுக்கும் சங்க இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாது. இம்மருத்துவத் தகவல்கூட ‘அப்படியே அங்கே இருக்கிறது’ என்று சொன்னால், கண்கள் அகலவிரிய ‘அப்டியா?’ எனக் கேட்டு வியப்பார்கள்.
இவ்வாறு சங்கப் பாடல்களில் மட்டும் பலநூறு அரிய தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. அனைத்தும் நம்மைச் சுற்றி, நம்மோடு ஒன்றரக் கலந்து வாழ்ந்துவரும் மரம்செடிகொடிகளால் ஆன மிக எளிய மருத்துவங்களாக இருப்பவை.
‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்றார்கள் நம் முன்னோர்கள். இன்றைய வியாபார உலகமோ, ‘அதெல்லாம் தவறு’ எனச் சொல்லி, தான் உருவாக்கியதை நம் தலையில் கட்டி ‘இதுதான் நல்லது’ என்று நம்பவைக்கிறது.
ரத்தசோகையைத் தடுக்க தண்டுக்கீரை, ஞாபகசக்தியை அதிகரிக்க வல்லாரைக்கீரை, நாவறட்சியை நீக்க பசலைக்கீரை, கண்புகைச்சலை நீக்கி பார்வையை பிரகாசமாக்க சிறுகீரை, உடல் உஷ்ணத்தை தணிக்க காசினிக்கீரை, காய்ச்சல் ஜன்னி கபம் வாதம் போன்றவற்றை சரியாக்க அரைக்கீரை, முடிவளர்ச்சி பெருக கருவேப்பிலை, வயிற்றிலுள்ள கோளாறுகள் நீங்க புளிச்சக்கீரை, உடல் உறுதிபெற முருங்கைக்கீரை… என எத்தனை எத்தனையோ கைமருத்துவத்தை, தலைமுறை தலைமுறையாக அழியாமல் கடத்திவந்ததை, அது இது எனச் சொல்லி மாற்றும் தந்திரம் பெருகிவிட்டது. நாமும் ‘பாட்டி தாத்தாக்கள் சொல்வதெல்லாம் இனி எதற்கு?’ என அதன் அருமை பெருமை தெரியாமல், எவரோ எங்கோ இருந்துகொண்டு சொல்வதைக் கேட்டு ஏமாறத் தயாராக இருக்கிறோம்.
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என நோயில்லாத் தன்மையையே நம் மூதாதையர் செல்வத்தில் பெரிய செல்வமாகக் கருதியிருக்கிறார்கள். அதோடு, ஒரு பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலைகளால் ஏற்படும் நோய்களுக்கு, அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் மூலிகைப் பொருட்களைக்கொண்டு பாமர மக்கள் தம் பட்டறிவால் செய்துவந்த மருத்துவத்தையே நாட்டுமருத்துவமாக வகுத்துப் போற்றியிருக்கிறார்கள்.
‘வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்
வேம்பும் கடுவும் போல வெஞ்சொல்’
என்பது தொல்காப்பியர், பெரியோர்கள் வாழ்த்தும் முறை பற்றி பாடிய நூற்பா (தொல்.செய் – 40). இங்கே வாய் என்பது வாய்மொழி. உறை என்பது மருந்து. வாயுறை என்பது சொல்மருந்து. ‘ஒருவருக்கு கடுஞ்சொல் சொல்லாது, பின்னாளில் நன்மை பயக்கவேண்டிய அதாவது, முன்னால் கசந்து பின்னால் உடலுக்கு உறுதி பயக்கும் வேம்பும், கடுகும் போல’ என்பது பேராசிரியர் உரை.
‘நோயாளிகளின் துன்பத்தை துடைப்பதே மருந்து’ என்கிறது நற்றிணை (140).
‘அருந் துயர் அவலம் தீர்க்கும்
மருந்து ……’
‘மருந்தானது நோயை மட்டுப்படுத்தி நோயாளிக்கு எவ்வித தீங்கும் நேராவண்ணம் உயிர் காக்கவேண்டும்’ என்கிறது கலித்தொகை (32).
‘இன்உயிர் செய்யும் மருந்தாகி’
மேலும் காயம்பட்ட புண்ணுக்கு பஞ்சு வைத்துக் கட்டும் மருத்துவ வழக்கம் சங்க காலத்திலேயே இருந்ததை,
‘……… உழக்கிக் குருதி ஓட்டி,
கதுவாய் போகிய துதிவாய் எஃகமொடு,
பஞ்சியும் களையாப் புண்ணர்’
என்னும் புறநானூறு (353) வரிகள் மூலமாகவும், உடலில் தோன்றிய புண்ணை அதன் விஷநீர் பரவாதபடி அறுத்து, அதிலுள்ள அசுத்தமான உதிரத்தை வெளியேற்றி, காரத்தைப் பொருந்த வைத்துச் சுட்டு உலர்த்தி அதற்குரிய மருந்தினால் துயரம் நீங்கப் பெற்றதை,
‘உடலிடைத் தோன்றிற் றொன்றை யறுத்ததன் உதிர மூற்றிச்
சுடறுறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்’
என்னும் கம்பராமாயண (கும்ப. 146) வரிகள் மூலமாகவும், போரிலே புண்பட்ட வீரர்களின் உடலானது ஊசி கொண்டு தைக்கப்பட்டதை அதாவது, இன்றைய மருத்துவத்தின் உயரிய நிலையாக சொல்லப்படும் அறுவை சிகிச்சை முறைக்கு முன்னோடியாக நம் தமிழ்ச்சமூகம் விளங்கியதை,
‘மீன் தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசி
நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின்
அம்பு சேர் உடம்பினர்’
என்னும் பதிற்றுப்பத்து (42) வரிகள் மூலமாகவும், நெல்லிக்காய் தாகத்தைத் தீர்த்துப் போகும் உயிரைப் போகவொட்டாது தடுக்கும் தன்மையன என்பதை,
‘நெடுஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்
செல்உயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லி’
என்னும் அகநானூறு (271) வரிகள் மூலமாகவும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அவர் விரும்பியதை கொடுக்காமல் நோய்க்குத்தக்க மருந்தை ஆராய்ந்து கொடுப்பவன் ‘அறவோன்’ எனப்பட்டதை,
‘அரும் பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது,
மருந்து ஆய்ந்து கொடுத்து அறவோன் போல’
என்னும் நற்றிணை (136) வரிகள் மூலமாகவும், அதேபோல் நோயுற்றோரின் உடல்நிலையை அறிந்து, அதற்கேற்றாற் போல அக்கால மருத்துவர்கள் மருந்து கொடுத்ததை,
‘திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
மருந்து போல், மருந்து ஆகி, மனன்உவப்ப’
என்னும் கலித்தொகை (17) வரிகள் மூலமாகவும், நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் தன்னை நோயாளியாக பாவித்து, பிறர் நோயை தம்நோய்போல் எண்ணி சிகிச்சையளிக்க வேண்டுமென்பதை,
‘பிறர் நோயும் தம்நோய் போல் போற்றி, அறன் அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன்’
என்னும் கலித்தொகை (139) வரிகள் மூலமாகவும், கருச்சிதைவிற்கு ஊக்கமளிக்கக்கூடாது என அப்போதே வற்புறுத்தப்பட்டதையும், அதை மீறினால் அறம் அவர்களை தண்டிக்கும் என நம்பப்பட்டதையும்,
‘மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,
……………… உய்தி இல்’ என,
அறம் பாடின்றே’
என்னும் புறநானூறு வரிகள் (34) மூலமாகவும், மருத்துவன் தாமோதரனார், மருத்துவன் நல்லச்சுதனார் உள்ளிட்ட சங்கப்புலவர்கள் மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றிருந்ததையும், கடுகு பெருந்தேவனார், போந்தை (பனை) பசலையார், வெள்ளெருக்கிலை காவட்டனார் போன்றோர் மருந்துப்பொருட்களின் பெயரை தம் பெயரோடு சூட்டியிருந்ததையும், அதற்குப் பிறகான பதினெண்கீழ்கணக்கு நூல்களில் திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் மூன்றும் தம்பெயரிலேயே மருத்துவக் குறிப்புகளைக் கொண்டிருப்பதையும் [,இவை தவிர இன்னும் பல மருத்துவ நூல்கள் இருப்பதையும்] பார்க்கலாம்.
ஏட்டிலக்கியங்களில் இவ்வாறென்றால், வாய்மொழி இலக்கியமான சொலவடைகளில்… அகத் தீயைப் போக்கும் அகத்தி, வெந்து கெட்டது முருங்கை; வேகாமல் கெட்டது அகத்தி, அரச மரத்தை சுற்றினால் அகலும் மலட்டுத் தன்மை, வேலம்பட்டை பித்தத்தைப் போக்கும்; ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும், எந்த வீக்கத்துக்கும் எருக்கன்பாலை அடி, கட்டிக்கு குட்டிப்பலா; கடிக்கு எருக்கம் பால், வேலுக்குப் பல் உறுதி; வேம்புக்கு பல் ஒளி, திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) தின்றால் துவரேறும்; கறிவேம்பு தின்றால் பசியேறும், தாய் ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும், பலாக்கனி செரிக்க அதன் பச்சைக் கொட்டையே மருந்து, வில்வப்பழம் தின்பார் பித்தம்போக; பனம்பழம் தின்பார் பசிபோக, பொன்னாங்கண்ணிக்குப் புளியுட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் உழக்கு உண்பாள், ஆள் மதத்தால் கீரை; ஆனை மதத்தால் வாழை… என பலநூறு மருத்துவத் தகவல்கள்.
எல்லாம் ஈராயிரமாண்டுகள் கடந்து வழிவழியாக பலகோடி ஜீவர்களுக்கு நிவாரணம் தந்து இன்னும் நம்மிடையே இருந்து வருவது. அதுவும் இப்பூமியெங்கும் பரவியிருக்கும் உயிர்களுக்காக இயற்கை என்னும் பெருங்கருணைமிக்க நல்லாள் தந்தது. ஆம்!
அண்மையில் அக்கா ஒருவர் அழைத்து, ‘தம்பி, எனக்குத் தெரிஞ்ச ஒருத்தவங்களுக்கு இப்பதான் குழந்தை பிறந்து நாலுநாள் ஆகுது. மார்புல பால்கட்டிக்கிட்டு என்ன பண்ணாலும் கரையமாட்டுது. ஒரே வலி, காய்ச்சல்னு அவதிப்படுறாங்க. மருத்துவர்கிட்ட போனா மாத்திரை தந்து ‘இத சாப்பிட்டும் கரையலனா… அறுவை சிகிச்சைதான் பண்ணனும்’னு பயமுறுத்துறாங்க. பாவம், கேக்கவே சங்கடமாருக்கு. நீங்க ஐயாகிட்ட கேட்டு, இதுக்கு எதனா மருத்துவம் சொல்ல முடியுமா?’ என்றார்.
உடனே ஊரிலிருக்கும் அண்ணனுக்கு அழைத்து ஐயாவிடம் நகர்பேசியை தரச்சொல்லிக் கேட்டேன். ‘மொத அவுங்கள பயப்படவேணாம்னு சொல்லு. அப்பறம் முடிஞ்சுவரைக்கும் தானே அழித்தி பால பீய்ச்சமுடியுதான்னு பாக்க சொல்லு. முடியலனா மல்லி எல கைநெறயா பறிச்சாந்து… ராத்திரி படுக்கறப்ப மார்புல வச்சிக்கினு நல்லா அழுந்தறமாரி கவுந்து படுக்க சொல்லு. அது எப்டியாப்பட்ட கட்டியா இருந்தாலும் கரச்சிடும்’ என்றவர், சிறிது இடைநிறுத்தி கூடவே சடங்கு ஒன்றையும் செய்யச் சொன்னார். ‘கைநெறயா கல்லு உப்பு அள்ளி… ரண்டு மார்பயும் சுத்திப்போட்டு, நெறகொடம் தண்ணியில போட சொல்லு. அப்டி போட்டா, உப்பு கரையறமாரி கட்டியும் கரைஞ்சிடும்னு நம்பிக்கை.’
மகிழ்வோடு இதனை அவரிடம் சொன்னேன். கேட்டுவிட்டு, ‘இவ்வளவு எளிய மருத்துவம் அதுவும், பல்லாயிரம் வருசமா நம்ம மண்ணுல தொடர்ந்து வர்ற ஒண்ணு இருக்க… ஏன் தம்பி இதையெல்லாம் விட்டுட்டு, இந்த மனுசங்க எடுத்ததுக்குலாம் ஆங்கில மருத்துவம் பின்னால ஓடறாங்க?’ என்றார். எதுவும் சொல்லாமல் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.
அச்சிரிப்பு எனக்குள் நான் நிகழ்த்திக்கொண்டதல்ல… ‘ஈராயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்த நம் மூதாதையர்கள் என் வழியாக இவ்வுலகோரைப் பார்த்து நிகழ்த்திக்கொண்டது’ என எண்ணிக்கொண்டேன். கூடவே, ‘எவ்வித பிரதிபலனும் பாராமல் காலந்தோறும் தம் உயிர்வரை தந்து, இவ்வுலக உயிர்கள் யாவற்றையும் வாழ்விக்கும் தாவர சங்கமத்துக்கு நாம் எதை திருப்பியளிக்கிறோம்?’ என்றும் கேட்டுக்கொண்டேன்.
இயற்கை மருத்துவம் ஓர் இடையறா தொடர்கண்ணி. எங்கோ, எப்போதோ நம் பாட்டிதாத்தன்களால் தொடங்கப்பட்டு, அடுத்தடுத்தென ஆண்டுபலவாய் கைமாற்றி இதோ, இக்கணினி யுகம் வரைக்கும் வந்திருக்கிறது. நிச்சயம் இது வந்ததைவிட வருநாளில் இன்னும் பலமடங்கு தூரம் பயணமாகும்.
இயற்கையின் இறுதித்துளி இருக்கும்வரைக்கும் அதன் கருணைச்சாரமான இம்மருத்துவமும், அதனை ஏந்தியுள்ள ஏடுகளும், அதைக் கைமாற்றிவிடும் மூத்தகுடிகளும் இருக்கும்; இருப்பர். ஆம்; ஆம்; ஆம்!
(கொலுசு – மார்ச் 2023 இதழில் வெளியானது.)
*