சொல்லின்றி எதுவுமற்றவன்! – 091
மார்ச் முடிந்து ஏப்ரல் வந்துவிட்டது. மூன்று மாதம் போனதே தெரியவில்லை. சுயநேர்காணல் அவ்வளவு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இம்மூன்று மாதத்தில் சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி, எழுத்தாளர் கோணங்கி மீதான பாலியர் புகார், எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘பூக்குழி’ நாவல் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘புக்கர்’ பரிசின் இறுதிப் பட்டியலுக்கு தகுதிபெற்றது… என பல விஷயங்கள் இலக்கிய உலகில் பேசுபொருளாகி இருக்கின்றன. சரி, நாம் நேர்காணலுக்கு செல்வோம்.
எத்தனையோ முகங்கள் இருக்க, இந்த முகங்கள் பற்றிதான் எழுதவேண்டும் என்று எவ்வாறு தீர்மானித்தீர்கள்?
நல்ல கேள்வி.
நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் பல முகங்களை பார்க்கிறோம். அதில் பழகிய முகங்கள், பழகாத முகங்கள் இரண்டும் இருக்கும். எனினும் சில முகங்கள் மட்டுமே நம் மனத்தில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தும். அது நற்தாக்கமா, தீத்தக்கமா? என்பது வேறு விஷயம். தாக்கம்தான் முக்கியம். இதை பாடம் என்று கூட சொல்லலாம். அப்படி நான் சிறுவயது முதல் கண்ட பலநூறு ஏன், பல்லாயிரம் முகங்களில், என்னில் தாக்கத்தை ஏற்படுத்திய இருபது முகங்கள் பற்றி எழுத முடிவெடுத்தேன்.
இதில் இதுதான் அளவுகோல் என்று எதையும் வைத்துக் கொள்ளவில்லை. அப்போதைய என் நினைவில் வந்த முகங்களை பட்டியலிட்டேன். சுமார் முப்பது இருந்தன. அதிலிருந்து பத்தை நீக்கிவிட்டு இருபது முகங்கள் எழுதினேன்.
அவற்றில் ஒரே ஒருதடவை பார்த்த பாட்டையா, நகலி, அவளான் தொடங்கி… இப்போதும் பார்க்கும் மீயாய், ஏகாந்தர், ஒருபோதும் இனி பார்க்கவே போகாத அம்மணள், ஐயார், ஊம்பிங்தாத்தா, வினாமுகர் போன்ற பல முகங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
[இன்னும்]
*