தாவர சங்கமம் – 2 : முத்தம்

‘சிறு கண் யானை வெண் கோடு பயந்த
ஒளி திகழ் முத்தம்‘
என்னும் புறநானூறு (170) வரிகள், ‘சிறுகண் யானையின் தந்தத்தில் ஒளி திகழும் முத்து விளையும்’ என்கிறது.
‘புலி பொரச் சிவந்த புலால் அம் செங்கோட்டு
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப’
என்னும் நற்றிணை (202) வரிகள், ‘யானை புலியுடன் போர் புரிந்ததால் ரத்தம் தோய்ந்து சிவந்ததும், புலால் நாற்றம் வீசுவதுமான செவ்விய தந்தத்தின் அடியில் முத்துக்கள் திரண்டிருக்கும்’ என்கிறது.
‘வைந்நுதி வால்மருப்பு ஒடிய உக்க
தெண்நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு’
என்னும் அகநானூறு (282) வரிகளோ, ‘யானையின் வெண்ணிறக் கொம்பினைக் கருவியாகக் கொண்டு நீர்வளம் மிக்க நெடுமலையில் அகழ்ந்தபோது, கூரிய முனையையுடைய யானையின் கொம்பு ஒடிந்தமையால் ஆலங்கட்டியைப் போன்ற தெளிந்த முத்துக்கள் அதனின்று தெறித்து வீழ்ந்தன’ என்கிறது.
‘………… நெடுவேய்க்
கண்விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்’
என்னும் அகநானூறு (173) வரிகள், ‘உயர்ந்து வளர்ந்த மூங்கில் கணுவிலிருந்து தெறித்த கழுவப்பெறாத முத்துக்கள்’ என்றும்,
‘முத்துடை மருப்பின் மழ களிறு பிளிற’
என்னும் பதிற்றுப்பத்து (32) வரி, ‘முத்துடைய கொம்புகளையுடைய இளைய ஆண் யானைகள் பிளிறும்படி’ என்றும்,
‘…………….. முத்து ஆர் மருப்பின்
வகைசால் உலக்கை’
என்னும் கலித்தொகை (40) வரிகள், ‘முத்து நிறைந்த யானைத் தந்தத்தால் ஆன உலக்கையைக் கொண்டு’ என்றும்,
‘……… பெருங் களிற்று
முத்துடை வான்கோடு தழீஇ’
என்னும் பத்துப்பாட்டில் முதல் பாட்டான திருமுருகாற்றுப்படை வரிகள் (304, 305), ‘பெரிய களிற்று யானைகளின் முத்துக்களையுடைய வெள்ளிய கொம்புகளை உள்ளடக்கிக்கொண்டு குதித்து’ என்றும்,
‘நெற்கொள் நெடுவெதிற்கு அணந்த யானை,
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப’
என்னும் எட்டாவது பாட்டான குறிஞ்சிப்பாட்டு வரிகள் (35, 36), ‘நெடிய மூங்கிலைத் தின்பதற்காகத் தன் தலையை மேல்நோக்கி உயர்த்தி நின்று வருந்திய யானை, அவ்வருத்தம் தீர்வதற்காகத் தன்னுடைய முத்துக்கள் நிறைந்த கொம்பின்மேல் துதிக்கையை இட்டுக் கொள்ளும்’ என்றும்,
‘குரூஉப் புலி பொருத புண்கூர் யானை
முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள்’
என்னும் பத்தாவது பாட்டான மலைபடுகடாம் வரிகள் (517, 518), ‘புலியினால் தாக்கப்பட்ட புண்மிக்க குறைவற்ற வலிமையுடைய யானைகளின் முத்துக்களைக் கொண்ட தந்தங்கள்’ என்றும்… யானையின் தந்தம் மற்றும் மூங்கிலின் கணுக்களில் இருக்கும் முத்துகளை அழகுற பதிவு செய்துள்ளது.
சிறுவயது முதல் சிப்பியில் இருந்துதான் முத்து பிறக்கும் என கற்பிக்கப்பட்ட; கற்ற எனக்கு மேற்கண்ட சங்கப் பாடல் வரிகள், முத்து சிப்பியில் இருந்து மட்டுமல்ல… யானையின் தந்தம் மற்றும் மூங்கிலின் கணுக்களில் இருந்தும் பிறக்கும் எனக் கற்றுத் தந்தன.
சேக்கிழாரின் பெரியபுராணத்தில் இன்னும் சில ஆச்சர்யத் தகவல்கள் கிடைக்கின்றன. அதுவும்,
‘கரிப்பரு மருப்பின் முத்தும்
கழைவிளை செழுநீர் முத்தும்’ (கண்ணப்ப – 14)
என ‘யானைக் கொம்பினின்றும் அரிந்தெடுத்த முத்து மற்றும் மூங்கிலில் விளைந்த நீரோட்டமுடைய நன்முத்து’ பற்றியும்,
‘கரைவளர் கழையின் முத்தும்’ (கண்ணப்ப – 98)
என ‘கரையில் வளரும் மூங்கிலின் முத்து’ பற்றியும்,
‘வரம்பெலாம் வளையின் முத்தம்’ (குங்கிலியக்கலய – 2)
என ‘வரப்புகள் யாவற்றிலும் சங்குகள் ஈன்ற முத்து’ பற்றியும்,
‘செந்நெல் லார்வயற் கட்டசெந் தாமரை
முன்னர் நந்துமிழ் முத்தஞ் சொரிந்திட’ (அரிவாட்டாய – 2)
என ‘செந்நெற்பயிர்கள் நிறைந்து வளர்ந்திருக்கும் வயல்களில் களையாகப் பிடுங்கப்பட்ட செந்தாமரை மலர்களில் முன்னர் அத்தாமரையிலிருந்து சங்குகள் உதிர்த்த முத்து’ பற்றியும்,
‘பொங்கிய மாநதி நீடலை உந்து புனற்சங்கம்
……………..
பைங்கமு கின்தலை முத்தம் உதிர்க்குவ பாளையென’ (ஆனாய – 4)
என ‘நீர்ச்சங்குகள் கமுகின் உச்சியில் ஏறிச்சேர்ந்து அங்குள்ள பாளைகள் பூக்களை உதிரச் செய்வனபோல முத்துக்களை சொரிவன’ பற்றியும் கூறியிருப்பதை பார்க்கலாம்.
கூடவே, கம்பர் தம் பங்குக்கு,
‘பணிலங்கள் உயிர்த்த முத்தும்’ (பால – 38)
என ‘சங்குகள் ஈன்ற முத்துகள்’ பற்றி பாடியிருப்பதையும் பார்க்கலாம்.
ஆக, நாம் சிறுவயது முதலே அறிந்த சிப்பி, சங்கப் பாடல்கள் சொன்ன யானைத் தந்தம், மூங்கில் கணு மூன்றோடு, சேக்கிழாரும் கம்பரும் கூறிய சங்கையும் சேர்த்து நான்கிடங்களில் முத்து விளைகிறது அதாவது, பிறக்கிறது என்பது ஐயமின்றி தெளிவாகியுள்ளது.
இன்னொரு பக்கம், ‘அப்போ, இவற்றிலிருந்து மட்டும்தான் முத்து பிறக்குமா?’ என்ற கேள்வி எழாமல் இல்லை.
குமரகுருபரர் தம் மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழில் அங்கயற்கண்ணியைக் குழந்தையாகப் பாவித்து, ‘முத்தம் தா’ என்று கூறும் முத்தப்பருவத்தில், ‘இன்ன இன்ன இடங்களில் கிடைக்கும் முத்தம் நின் செங்கனிவாய் முத்தத்திற்கு ஈடாகாது’ என்று முத்துக்கள் கிடைக்கும் இடங்களாக கொண்டல் (மேகம்), கரும்பு, தாமரை, சங்கு, கமுகு (பாக்குமரம்), பணை (மூங்கில்), யானை மருப்பு (தந்தம்) போன்ற ஏழு இடங்களை பட்டியலிட்டிருப்பதைப் பார்க்கலாம்.
‘கொழுது மதர்வண்டு உழக்குகுழற்
கோதைக்கு உடைந்த கொண்டலும், நின்
குதலைக் கிளிமென் மொழிக்கு உடைந்த
குறுங்கட் கரும்பும், கூன்பிறைக்கோ(டு)
உழுத பொலன்சீ றடிக்கு உடைந்த
செந்தா மரையும், பசுங்கழுத்துக்(கு)
உடைந்த கமஞ்சூற் சங்கும், ஒழு(கு)
ஒளிய கமுகும், அழகுதொய்யில்
எழுது தடந்தோட்கு உடைந்த தடம்
பணையும், பணைமென் முலைக்கு உடைந்த
இணைமா மருப்பும் தரும்முத்து உன்
திருமுத்து ஒவ்வா…..’
‘அப்போ, முதலில் பார்த்த சிப்பி, இரண்டாவதாகப் பார்த்த யானைத் தந்தம், மூங்கில் கணு, சங்கு போன்றவற்றோடு… புதிதாக இப்பாடல் மூலம் தெரியவந்த மேகம், கரும்பு, தாமரை, கமுகு போன்றவற்றில் மட்டும்தான் முத்து பிறக்குமா?’ என்றால், ‘இல்லை. இன்னும் இருக்கிறது’ என்கிறது, ‘இரத்தினச் சுருக்கம்’ என்னும் நூலில் உள்ள நான்கு வரி பாடலொன்று.
பாடல் இதுதான் :
‘தந்தி வராக மருப்(பு) இப்பி பூகம் தனிக்கதலி
நந்து சலஞ்சலம் மீன்தலை கொக்கு நளினமின்னார்
கந்தரம் சாலி கழை கன்னல் ஆவின்பல் கட்செவிக்கார்
இந்து உடும்பு கராம் முத்தை ஈனும் இருபதுமே’
அதாவது,
1, 2. தந்தி மற்றும் வராக மருப்பு – யானைத் தந்தம் மற்றும் பன்றித் தந்தம்.
3. இப்பி – சிப்பி (கிளிஞ்சல்).
4. பூகம் – கமுகு (பாக்குமரம்)
5. தனிக்கதலி – வாழைமரம்.
6. நந்து – நத்தை.
7. சலஞ்சலம் – சங்கு.
8. மீன்தலை – மீனின் தலை.
9. கொக்கு – கொக்கின் கண்டம்.
10. நளினம் – தாமரை.
11. மின்னார் கந்தரம் – பெண்களின் கழுத்து.
12. சாலி – செந்நெல் கதிர்க்குலை.
13. கழை – மூங்கில்.
14. கன்னல் – கரும்பு.
15. ஆவின் பல் – பசுமாட்டின் பல்.
16. கட்செவி – பாம்பு.
17. கார் – மேகம்.
18. இந்து – சந்திரன் (நிலா).
19. உடும்பு – உடும்பின் தலை.
20. கராம் – முதலை.
என்னும் இருபது இடங்களில் முத்து பிறக்கும் என்கிறது இப்பாடல்.
ஆக, இப்போது முத்து பிறக்கும் இடங்கள் இருபது எனத் தெரிகிறது. இவற்றில் கமுகு, வாழை, தாமரை, செந்நெல், மூங்கில், கரும்பு ஆகிய ஆறும் தாவரம். அதாவது, ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு பெயராத நிலைத்திணை (என் ஆறாவது நூலின் தலைப்பிது). யானைத் தந்தம், பன்றித் தந்தம், சிப்பி, நத்தை, சங்கு, மீனின் தலை, கொக்கின் கண்டம், பெண்களின் கழுத்து, பசுமாட்டின் பல், பாம்பு, மேகம், நிலா, உடும்பு, முதலை ஆகிய பதினான்கும் சங்கமம். அதாவது, ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு பெயரும் இயங்குதிணை. இதனை சேக்கிழார் ‘நிற்பன சரிப்பன’ என்பார் (ஆனாய – 36). தாயுமானவரோ ‘அசர சர’ என்பார் (தாயு. சின் – 4).
இவை தவிர இன்னும் தவளையிலும், கோவேறு கழுதையின் முன்னங்காலிலும், சிங்கத்தின் கையிலும்கூட முத்து பிறக்கும் என்கின்றன சில பழைய நூல்கள். எனினும் அவை எந்தளவுக்கு சாத்தியம் எனத் தெரியவில்லை.
முத்து பிறக்கும் இடங்களின் பட்டியல் எப்படி சிப்பியில் ஆரம்பித்து ஒவ்வொன்றாகக் கூடிக்கொண்டு வந்ததோ, அதுபோலத்தான் முத்துக்கான பொருள்களும், வகைகளும், நிகர்ச்சொற்களும் கூடிவருகின்றன, தமிழ் லெக்சிகன் உள்ளிட்ட பேரகராதிகளையும், சில பழந்தமிழ் நூல்களையும் புரட்டிப் பார்க்கையில்.
* நவமணியில் ஒன்று, கண்ணீர், ஆமணக்கு விதை, வைசூரிக்கொப்புளம், நெய்யுள்ள விதை, மாதுளையின் விதை, அரிசி, பணவெடைகொண்டதோர் பொன்னிறை, ஆட்டக்காய்கள், மேலானது, அழகு, மகிழ்ச்சி, பிரியம், முத்தம், வெண்குருகு.
* அம்புமுது, அனுவட்டம், ஆணிமுத்து, ஒப்புமுத்து, ஒட்டுமுத்து, கரடு, கவடுவட்டம், கறடு, குருட்டுமுத்து, குறுமுத்து, கையேறல், சக்கத்து, சிவந்தநீர், சீனத்துமுத்து, சூரத்துமுத்து, தலசம், நிம்பொளம், பயிட்டம், பருமுத்து, மூங்கின்முத்து, வசந்தம், வட்டம், இரட்டை, தைப்புமுத்து.
* ஆரம், ஆழிவித்து, காழ், சசிப்பிரியம், சலசம், சிப்பி, தரளம், தலசம், தாரம், திரட்சி, தூமணி, தெளதிகம், நகை, நாலி, நித்திலம், நெதி, மஞ்சரம், மஞ்சரி, மணி, முக்தாபலம், முத்தங்கி, முத்தம், முத்தரை, முத்தவி, முத்தாபலம், முருந்து, முருவஞ்சி, மேகசம், மெளத்திகம், வெண்மணி, கரடி, கழுந்தி, சுக்கிரனாளி.
மேலும் தேடிப் பார்த்ததில் கற்குளிமாக்கள், குளிகாரன், குளியாள், சலங்குக்காரன், முழுக்காளி போன்ற பல சொற்கள் முத்துக்குளிப்போருக்கு இருப்பதையும்… குளிப்பிடப்பாறு, சலாபத்துறை போன்ற பெயர்கள் முத்துக்குளிக்குந்துறைக்கு உள்ளதையும்… முத்தாகாரம், முத்தாமணக்கு, முத்தாவளி, முத்துக்கடுக்கன், முத்துக்கண்டி, முத்துக்கற்பம், முத்துக்குடை, முத்துக்கொட்டை, முத்துக்கொண்டை, முத்துக்கொதி, முத்துக்கொம்பன், முத்துக்கோவை, முத்துச்சம்பா, முத்துச்சல்லி, முத்துச்சலாபம், முத்துச்சனிப்பு, முத்துச்சுண்ணம், முத்துச்சோளம், முத்துடக்கன், முத்துத்தரியம், முத்துத்தாமம், முத்துநீர், முத்துபந்தர், முத்துப்பல்லக்கு, முத்துப்புரி, முத்துமணல், முத்துமழை, முத்துமாதுளை, முத்துமுறி, முத்துருவி, முத்துவட்டம், முத்துவர்ணம், முத்துளம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சொற்கள் முத்தைக் கொண்டு விளங்குவதையும்… முத்துக்குமார், முத்துக்குமரன், முத்துக்கருப்பன், முத்துப்பாண்டி, முத்துராசா, முத்துநாதன், முத்துமதி, முத்தம்மா, முத்தரசி, முத்தரசு, முத்தழகி, முத்தையன், முத்துமணி, மாரிமுத்து, அனுமுத்து போன்ற எத்தனை எத்தனையோ மாந்தர் பெயர்கள் முத்தணிந்து இருப்பதையும் அறியமுடிந்தது.
[இங்கே முத்து வகைகளில் வட்டம் உருண்டையாக உள்ள முத்து, அனுவட்டம் ஓரளவு உருண்டையாக இருப்பது, ஒப்புமுத்து ஒளிவிடும் முத்து / நல்லுருவமைந்த முத்து, குறுமுத்து சிறியமுத்து, கரடு சொரசொரப்பாக இருக்கும் முத்து, இரட்டை இரண்டு முத்துச் சேர்ந்திருப்பது, ஆணிமுத்து உயர்தரமான முத்து, ஒட்டுமுத்து சிப்பியில் ஒட்டிய முத்து, கறடு தாழ்தரமான முத்துவகை, குருட்டுமுத்து மங்கலான முத்து, சீனத்துமுத்து ஒருவகைப் போலி முத்து, தலசம் பூமியில் தோன்றிய முத்து, பருமுத்து பெரிய முத்து, மூங்கின்முத்து மூங்கிலினின்று உண்டாவதாகக் கருதப்படும் முத்து, வசந்தம் சிறிய முத்து என்பது கூடுதல் தகவல்.]
பொதுவாக முத்தை நவமணிகளில் ஒன்றாகச் சொல்வர் நம் மூதாதையர். நவமணிகள் என்பது வைரம், முத்து, மரகதம், மாணிக்கம், நீலம், புட்பராகம், வைடூரியம், கோமேதகம் மற்றும் பவளம். நவமணிகளில் தலை, இடை, கடை எனும் மூவகை உண்டு. வைரம், முத்து, மரகதம், மாணிக்கம் நான்கும் தலைமணிகள். நீலம், புட்பராகம், வைடூரியம் மூன்றும் இடைமணிகள். கோமேதகம், பவளம் இரண்டும் கடைமணிகள்.
‘வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழை சிப்பியின் வாய்க்குள் புகுந்து முத்தாகும்’ என்பது காலம் காலமாக முத்துப் பிறப்பு குறித்து சொல்லப்பட்டுவரும் கதை. இதனை வழிமொழியும் விதமாக, ‘மிசைப்பெய்த நீர்கடல் பரந்து முத்துஆகுந்து’ என்னும் கருவூர்க் கதப்பிள்ளையின் புறநானூறு (380) வரி இருப்பதைப் பார்க்கலாம். ‘விசும்பிலிருந்து பொழிந்த நீர் கடலுக்குள் சென்று முத்தாகும்’ என்பது இதன் பொருள்.
முத்தோடு சேர்த்து,
‘ஓர்க்கோலை, சங்கம், ஒளிர்பவளம், வெண்முத்தம்,
நீர்ப்படும் உப்பினோ டைந்து’
என்னும் ஐந்து செல்வங்களை கடல் தரும் என்கிறது பிங்கல நிகண்டு.
இப்போது கட்டுரையின் முதலிரு வரிகளுக்கு வருவோம்.
‘சிறு கண் யானை வெண் கோடு பயந்த
ஒளி திகழ் முத்தம்‘
என்னும் இப்புறநானூறு வரிகள் தந்த திறப்பும், ஆர்வமும் என்னை முத்து கிடைக்கும் இடங்கள் மொத்தம் இருபது என்னும் முடிவுக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. இப்பட்டியல் இன்னும் கூட நீளலாம்; பல நினைத்துப்பாரா ஆச்சர்யங்களை வாரி வழங்கலாம். அதையெல்லாம் அறிந்து என்போல் மகிழ மனமுள்ளோர் தேடிக் கண்டடையலாம். ‘இதிலென்ன மகிழ்ச்சி உள்ளது?’ என அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக ‘பிக் பாஸை’ எண்ணி வினவுவோர், வாழ்வின் முத்தானப் பொழுதுகளை மதிப்பற்று வீணே கண்டு கழிக்கலாம். வேறென்ன சொல்ல?
(கொலுசு – ஜனவரி 2023 இதழில் வெளியானது.)
*