சொல்லின்றி எதுவுமற்றவன்! – 066

உங்களதுசிங்கப்பூர் பொங்கல்’ பாடல் பட்டித் தொட்டியெங்கும் ஒலித்தது. அது உருவான விதம் பற்றி சொல்ல முடியுமா?

ஒவ்வோர் ஆண்டு தைப்பொங்கல் வரும்போதும் பொங்கல் பாடல் எழுதவேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் எழும். கூடவே அது வெறும் பொங்கல் பற்றின பாடலாக மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கான தமிழர் திருநாள் பாடலாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் வரும். அப்படியான ஒரு பாடல் எழுதும் வாய்ப்பு 2019 ஆம் ஆண்டு இறுதியில் வந்தது.

அதாவது, 2020 ஆம் ஆண்டு தமிழர் திருநாளுக்கு வெளியிடப்போகும் பொங்கல் பாடலை எழுதும் வாய்ப்பு. அதுவும் உலகெங்கும் சென்று நூற்றுக்கும் அதிகமான விருதுகளை பெற்றுவந்த ‘TOLET’ திரைப்படத்தின் கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜன் வழியாக. அவரது இயக்கம் மற்றும் நடிப்பில். ஆம்!

சென்னை – வள்ளுவர் கோட்டம் பின்புறம் இருக்கும் சுதந்திர தின பூங்காவில் உட்கார்ந்து நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்ததாக நினைவு. சரியாக அப்போது அழைத்தவர், அடுத்தநாள் காலையில் என்னையும் இசையமைப்பாளர் ஷ்ரவன் கலையையும் வடபழனியில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் அவசரமாக சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். சந்தித்தோம்.

வழக்கமான நலம் விசாரிப்புகளுக்குப் பின், உலகத் தமிழர்களுக்காக பொங்கல் பாடல் ஒன்று தமிழகத்தையும் சிங்கப்பூரையும் மையமாக வைத்து உருவாக்க உள்ளதாகச் சொல்லி, அப்பாடலை என்னை எழுதுமாறு கேட்டுக்கொண்டார். மிகுந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டேன்.

பலதடவை எழுத நினைத்த பாடல். அதுவும் ஒட்டுமொத்த தமிழர்களுக்காக. சந்திப்பு முடிந்த அடுத்த அரை மணி நேரத்தில்,

‘ஞாலத்தில் எத்தனை மொழிகளிருந்தும் –

மனிதரில் எத்தனை முகங்களிருந்தும் –

நாட்களில் எத்தனை சிறப்புகளிருந்தும் –

தமிழர் திருநாள் போல் வருமா?!

எம் பொங்கல் போல் வருமா?!

என்ற தொகையறாவும்,

நாளு நாளு நாளு நாளு –

தமிழர் திருநாளு

கேளு கேளு கேளு கேளு –

தமிழர் புகழ்கேளு…’

எனத் தொடங்கும் பல்லவியும் எழுதி முடித்தேன்.

முடித்த கையோடு போய் இசையமைப்பாளரிடம் காட்ட, அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. இரண்டு மூன்று தடவை படித்துப் பார்த்தவர், உடனே தன் கீபோர்டில் இசைமீட்டி எனது வார்த்தைகளை பாடலாக்கிப் பாடிக் காட்டினார். அத்தனை உயிர்ப்புடன் இருந்தது. மகிழ்ந்தேன்.

அதே மகிழ்வோடு வெளியில் வந்து அடுத்த இரு சரணங்களையும் எழுதிச் சென்று நீட்டினேன். படித்தவருக்கு உற்சாகம் தாளவில்லை. சட்டென சந்தோஷ் நம்பிராஜன் எண்ணுக்கு அழைத்து ஒரு மணி நேரத்தில் வரச்சொன்னார்.

என்ன ஏதோவென வந்தவர், நாங்கள் அதற்குள் உருவாக்கியிருந்த பாடலைக் கேட்டதும் எழுந்து இருவருக்கும் கை கொடுத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதிலும் பாடலில் வரும் ‘லேலே பொங்கலு’ எனும் இடங்களில் தன்னை அறியாமல் தன் உள்ளமும் கால்களும் ஆட்டம் போடுவதாகச் சொன்னார்.

உடனே ‘யாரை பாட வைக்கலாம்?’ என்று கேட்டார். இசையமைப்பாளர்தான் மக்கள் இசைக் கலைஞர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதியரை பாடவைக்கலாம் என்றார் முதலில். நாங்களும் அவர்கள்தான் பொருத்தமாக இருக்கும் என முடிவெடுத்து ‘சரி’ என்றோம்.

அடுத்தடுத்த நாட்களில் பாடல் பதிவாகி, காட்சிகள் தமிழகத்திலும் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் பிடிக்கப்பட்டு, பாடல் வெளியாகி உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்தது.

இதில் மகிழ்ச்சி என்னவென்றால் பாடலை கேட்ட ஒவ்வொருவரும் மனதாரக் கொண்டாடி தங்கள் யூடியூப் சேனல்களிலும், முகநூல் பக்கங்களிலும் பதிவிட்டது, தங்கள் நட்புகளுக்கும் சொந்தங்களுக்கும் பகிர்ந்தது. வருத்தம், நாங்கள் கைகாட்டிய பாடகர்கள் தாங்கள் தோன்றும் மேடைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தவறாமல் இப்பாடலைப் பாடியும் எழுதிய என் பெயரையும் இசையமைத்த இசையமைப்பாளர் பெயரையும் சொல்லாமல் தங்கள் பெயரை மட்டுமே பிரதானப்படுத்தியது.

எது எப்படியோ… தமிழர்களுக்காக, தமிழர் திருநாளுக்காக நாங்கள் சேர்ந்து உருவாக்கிய இப்பாடல் காலத்துக்கும் தமிழர் நெஞ்சங்களில் ஒலித்தால் அதுவே போதும் எங்களுக்கு.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 065

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=