சொல்லின்றி எதுவுமற்றவன்! – 036

உங்கள் இரண்டாவது தனிப்பாடல்சல்லிக்கட்டுடா இப்போது கேட்டாலும் அதே துடிப்புடன் இருக்கிறது. அதை உருவாக்கும்போது என்ன நினைத்துக்கொண்டு உருவாக்கினீர்கள்?

(உதடசைத்து மென்மையாக சிரித்துவிட்டு) சொல்லப்போனால் இப்படியொரு பாடல் உருவாக்கவேண்டும் என்ற எண்ணமே முதலில் எங்களுக்குக் கிடையாது. சல்லிக்கட்டு போராட்டம் தொடங்கிய சமயத்தில் ஒருநாள் முன்னிரவு (அப்போது நான் பொங்களுக்காக ஊருக்குக் கிளம்பி பையுடன் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு போய்க்கொண்டிருந்தேன்) என் இசையமைப்பாளர் அழைத்து, உடனே என்னை எங்கிருந்தாலும் கிளம்பி தன் ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வரச்சொன்னார். போனேன்.

ஒரு பிரபல இசையமைப்பாளர் வெளியிட்டிருந்த சல்லிக்கட்டுப் பாடலை போட்டுக் காட்டி, ”எவ்வளவு செலவழிச்சு, மொக்கையா ஒரு பாட்டு பண்ணிருக்காங்க. நம்மக்கிட்ட அவுங்க அளவுக்கு பணமும், பிரபலமும் இல்லனாலும்… இருக்க திறமைய வச்சு ஒரு நல்லப் பாட்டு… நம்ம சார்பா சல்லிக்கட்டுக்கு பண்ணுவோம் பாஸ்’’ என்றார்.

எதுவும் சொல்லாமல் ‘சரி’ என்பதுபோல் தலையாட்டிவிட்டு வெளியில் வந்து, அங்கிருந்த பூவரச மரத்தடியில் நின்றுகொண்டு,

அவன் யாரு,

இவன் யாருசொல்ல

அவன் என்ன,

இவன் என்ன, தடைபோட…

ஏ, சல்லிக்கட்டுடாதமிழன் 

உயிரில் கலந்ததுடாஎங்கள் 

வீரம் சொல்லுமடாஎன்றும்

ஈரம் உள்ளதடா…’

என ஆரம்பித்து அடுத்த பதினைந்து நிமிடத்தில் முழுப் பாடலையும் எனது நகர்பேசியில் எழுதிக்கொண்டுபோய் அவரிடம் காட்டினேன்.

படித்துவிட்டு முகம் மலர்ந்தவர், ”இதுதான் பாஸ், நாம பண்ணவேண்டிய பாட்டு” என்று சொல்லிவிட்டு, அடுத்த மூன்று மணி நேரத்தில் பாடலுக்கு இசையமைத்துப் பாடிப் பதிவாக்கி, இரவோடு இரவாக அதற்கான காட்சிகளை சேர்த்து அதிகாலையில் வெளியிட்டுவிட்டு பொங்கல் கொண்டாட ஊருக்குக் கிளம்பிப் போனேன்.

ஒரே இரவில் ஒரு ரூபாய் செலவில்லாமல் மிகமிக எளிமையாய் உருவாக்கி வெளியிட்டப் பாடலாக இருந்தாலும், அத்தனை துடிப்போடும் உயிரோட்டத்தோடும் இருந்ததால், கேட்டவர்கள் கொண்டாடினார்கள். அதன் உச்சமாய் யாரென்று தெரியாத அன்பர்கள் சிலர் இப்பாடலை போராட்டம் நடந்த மெரினா கடற்கரையில் ஒலிக்கவிட்டதைக் கேட்டு அத்தனை மகிழ்ந்தோம்.

அப்போதுதான் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொண்டேன். ஒரு பாடலுக்கு பிரபலம் என்ற அடையாளமும், அதை உருவாக்கவும் வெளியிடவும் பெரும் பணமும்; இடமும் தாண்டி பாடலுக்கு தகுதியும் தரமும் இருந்தால், அது சென்று சேரவேண்டிய இடத்திற்கு தானாய் போய் சேரும். என்ன, சற்று தாமதமாகும். பார்வையாளர் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 035

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=