சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009

உங்கள் ஐயா இன்று பலநூறு தமிழ் வாசகர்கள் அறிந்த முகமாகி இருக்கிறார். அவர் பற்றி இதுவரைக்கும் எவ்வளவோ எழுதிவிட்டீர்கள். இன்னமும்கூட எழுதுவீர்கள். இங்கே அவர்குறித்து இதுவரை சொல்லாத ஒன்றை அல்லது அண்மையில் அவரிடம் கண்ட ஒன்றை பகிரமுடியுமா?

ஒன்றென்ன ஓராயிரம் சொல்வேன். கடந்த சித்திரை மாத பௌர்ணமி அன்று எங்களூரில் நடக்க இருந்த மன்மதன் தகனத்துக்கு நான்கு தினங்களுக்கு முன்பாக, ஊரில் இருக்கும் பெரியவர்கள் சிலர்  ஒன்றாக வந்து ஐயாவை சந்தித்து, ‘இந்த ஊருக்கும், மக்களுக்கும், கோயிலுக்கும் இதுவரைக்கும் எவ்ளவோ செஞ்சிருக்கீங்க. அந்தப் புண்ணியம்தான் இந்த வயசுலயும் உங்கள நல்லபடியா வச்சிருக்கு. இந்த வருசம் மன்மதன் தகனத்துக்கு நீங்க தோட்டி வேசம் கட்டனும்னு நாங்க எல்லாரும் ஆசப்படறோம். இன்னைக்கு இருக்க சின்னப் பசங்க யாரும் நீங்க வேசம் கட்டி பாத்திருக்கமாட்டாங்க. அவங்க எல்லாரும் பாக்க இது ஒரு வாய்ப்பா இருக்கும். அதோட, நாங்களும் இந்த வயசுல நீங்க வேசம் கட்டறத பாக்கக் கொடுத்து வச்சிருக்கணும். மறுக்காம சரின்னு சொல்லுங்க’ என்றிருக்கிறார்கள். 98 வயதான ஐயாவும் அவர்களின் கோரிக்கையை மறுக்கமுடியாமல் ஏற்று ‘சரி’ என்றிருக்கிறார்.

அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் செய்தி ஊரெங்கும் பரவிவிட்டது. எல்லோரும் அத்தனை ஆர்வத்தோடு அந்த நாளுக்காகக் காத்திருக்க, ‘எங்கே இவர் தனக்குப் பதிலாக வேசம் கட்டி வந்தால், நமக்கு இனி மதிப்பில்லாமல் போய்விடுமோ?’ என எண்ணி அஞ்சிய ஓர் அண்ணன், இத்தனை வயது ஐயாவை தனக்குப் போட்டியாக நினைத்து, அவரை எப்படியாவது தோட்டி வேசம் கட்டவிடாமல் தடுக்க முடிவெடுத்து, மன்மதன் தகனத்திற்கு சரியாக இரு தினங்களுக்கு முன்பாக கோயில் முன்னால் இருந்த மன்மதங்காலை இரவோடு இரவாகக் கொளுத்தியிருக்கிறார். இதையறிந்த ஊரார் கோபப்பட்டு அவரை ஏதேதோ செய்ய நினைக்க, ஐயா அவர்களையெல்லாம் தடுத்திருக்கிறார்.

அண்மையில் ஊருக்குப் போயிருந்தபோது இதைக் கேள்விப்பட்டு நான் ஐயாவிடம் கேட்க, மென்மையாகச் சிரித்துக்கொண்டு சொன்னார். ”ஆமா, எங்க நானு வேசம் கட்டினு வந்து நின்னா… சுத்துப்பட்டு மக்களாம் ஒண்ணு கூடிருவாங்களோன்னு நெனச்சி, இந்த அக்குறும்ப பண்ணிகீறான். இதுக்கு அவன் என்கிட்ட வந்து ‘நீ வேசம் கட்டாதய்யா’ன்னு சொல்லிருந்தா… ‘செரி, கட்டல… போடா’ன்னு சொல்லிருப்பன்.’’ அவர் இப்படிச் சொன்னதைக் கேட்டதும் சிலிர்த்துப்போனேன். கூடவே, அவரது பெருந்தன்மையையும், மன்னிப்பு குணத்தையும் எண்ணிப் பெருமையுற்றேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=