பிரண்டை

கண்ணாடி டப்பாவின் மூடியைத் திறந்து, ஸ்பூனில் கொஞ்சமாய் எடுத்து, தட்டின் ஓரமாக வைத்து தொட்டுக்கொண்டோ அல்லது சோற்றுடன் சேர்த்து பிசைந்தோ சாப்பிடும் பிரண்டை ஊறுகாயைத்தான் (துவையலைத்தான்) இங்கே பலருக்கும் தெரிந்திருக்கும்.
எனக்குத் தெரிந்ததோ முற்றிலும் வேறு விதமானது. முழுக்க முழுக்க இயற்கையானது. ஆசையால் பறிக்கப்பட்டு, அன்பால் அரைக்கப்பட்டு, அக்கறையால் பரிமாறப்படுவது.
கரம்புக்காடு, மலை, கல்லாக்குட்டை போன்ற இடங்களில் காரை, சூரை மீதோ அல்லது துரிஞ்சி, கள்ளி மீதோ விரிந்து துளிர்த்துப் படர்ந்திருக்கும் பிரண்டைக் கொடியில் துளிர் தண்டுகளையும், லேசாக முற்றிய தண்டுகளையும் தேடித்தேடி ஒவ்வொன்றாக மெதுமெதுவாய்க் கிள்ளி துணிப்பையிலோ, ஏனத்திலோ அல்லது துண்டிலோ, புடவையிலோ, பாவாடையிலோ வேண்டிய அளவுக்கு எடுத்துக்கொண்டு வந்து வீட்டில் கொடுத்தால்… அதை அவர்கள் வாங்கி மேலிருக்கும் தோலை மட்டும் லேசாக உரித்தெறிந்துவிட்டு, நன்றாக அலசி, பின் அத்துடன் தேவையான அளவு புளி, காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்கியெடுத்து, அவற்றுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து அம்மியில் வைத்து மிகப் பக்குவமாக அரைத்துத் தருவார்கள்.
பார்க்கவே நாவில் எச்சில் ஊறும். அதன் வாசம் நாசியில் நுழைந்து தொண்டை தாண்டி அடிவயிறு வரைக்கும் போய் சாப்பிடத் தூண்டும். கொஞ்சமாய் விரலில் தொட்டு நாக்கில் வைத்தால் போதும். ப்ப்பா!
இப்படிப்பட்ட பிரண்டை ஊறுகாயைத்தான் எனக்குத் தெரியும்.
தினமும் காலையில் பழைய சோறு சாப்பிடவும், கூழ் குடிக்கும்போது கடித்துக்கொள்ளவும், சுடு சோறில் பட்டதும் படாததுமாகப் போட்டுப் பிசைந்து உண்ணவும் அவ்வளவு சுவையாக இருக்கும்.
எழுதும்போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது. வாய்ப்பிருந்தால் சாப்பிட்டுப்பாருங்கள். அதன் சுவை ஒரு பக்கம் என்றால், அதில் நிரம்பியுள்ள நிகரிலா மருத்துவ குணங்கள் இன்னொரு பக்கம்.
‘பெரண்டயும் தூதுவளயும் பொன்னுக்கு சமானம்’ என்பார்கள் ஐயாவும் அம்மாவும். ஆம்! உண்மைதான்.
பிரண்டையின் தண்டினை பெண்களின் விரலுக்கு உவமையாகச் சொல்வார்கள் கிராமத்தில்.
‘பெரண்ட வெரலுப் பொண்ணே –
தளிர் பொண்ணே…
பாக்கும்போதே எச்சி ஊறுதடி கண்ணே –
பசுங் கண்ணே…’
பெரும்பிரண்டை, சதுரப்பிரண்டை, சங்கிலிப் பிரண்டை, நூல்பிரண்டை, களிப்பிரண்டை, காட்டுப்பிரண்டை என பிரண்டையில் பல வகை உண்டு.
இவற்றோடு அருகணி, இந்திரவல்லி, உச்சிரதம், உஷ்ணசஞ்சீவி, கழலி, கிரீட்டி, கிருட்டி, சில்லை, திரக்கிரணி, நரளை, பிரட்டை, புரண்டை, பேரீகம், வச்சிரவல்லி, வச்சிராட்சி, வயிரவல்லி போன்ற பல சொற்கள் பிரண்டையை அழைக்க இருப்பதையும் அறியலாம்.
பிரண்டையை இடியுண்ட பாம்பினது பசிய உடலுக்கு உவமையாகச் சொல்கிறது பழந்தமிழ் இலக்கியங்களில் ஒன்றான அகநானூறு.
‘ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை,
ஏறுபெறு பாம்பின் பைந்துணி கடுப்ப,
நெறிஅயல் திரங்கும் அத்தம், வெறிகொள’
குடவாயிற் கீரத்தனார் பாடிய இப்பாலைத் திணை பாடலுக்கு… அம்மலை வழியாகச் செல்லும் மக்கள் அறுத்துப் போட்டுச் சென்ற பிரண்டைக் கொடியானது, இடியுண்ட பாம்பினது பசிய உடலின் துண்டுகள் போல, வழியின் பக்கத்தே பயனின்றி வாடி வதங்கிக் கிடக்கும் என்பது பொருள்.
இப்பாடலை நினைக்கும்போதெல்லாம் இரண்டு சம்பவங்கள் மறக்காமல் கண்முன் காட்சிகளாய் வந்தாடுவதுண்டு. ஒன்று, சிறுவயதில் என் வயதொத்த சிறார்களுடன் பிரண்டைக் கொடியை பிய்த்து வைத்து பாம்பு எனச் சொல்லி விளையாடியது. இரண்டு, நம் தமிழர்களின் வாழ்வில் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பிரண்டை ஓர் உணவாகவும் பாடுபொருளாகவும் இருந்து வருவது. ஆம்!
அடுத்த தடவை ஊருக்கு போகும்போது நிச்சயம் பிரண்டை ஊறுகாயோடுதான் சாப்பாடு. இதோ… இப்போதே அழைத்து அம்மாவிடம் சொல்லிவிடவேண்டியதுதான்.
*