முரம்பு

தமிழில் ’முரம்பு’ என்றொரு சொல் உண்டு. இச்சொல் நம்மில் மேலதிகமானோர் கேட்டிருக்க வாய்ப்பில்லை. என்றாலும், இச்சொல்லை நாளுக்கு குறைந்தது பத்து தடவையாவது உச்சரிக்கும் கிராமமும் நம் தமிழகத்தில் உள்ளது. அதுவும் இச்சொல் எத்தனைப் பழமையானது, எத்தகைய பெருமைக்கு சொந்தமானது என்பதை அறியாமல்.
ஆம். திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் பகுதியில் உள்ள திருவடத்தனூர் என்னும் கிராமத்தின் மேட்டுப் பகுதியில் உள்ள மேல் திருவடத்தனூரை, அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமத்தினர் ‘முரம்பு’ என்றுதான் அழைக்கிறார்கள். அதுவும் செல்லமாக, பட்டப்பெயர் வைத்து.
பட்டப்பெயர் மனிதர்களுக்கு சரி, ஓர் ஊருக்குமா? எனக் கேட்பின், ஆம் என்பதுதான் பதில்.
`முரம்பு` என்னும் சொல்லைக்கொண்டு, பேச்சு வழக்கில் `மொரம்பு` என இவ்வூரை அழைக்கக் காரணம், இவ்வூரின் மண் தன்மைதான். உறுதியான கல்லாகவும் இல்லாமல், பொடி மண்ணாகவும் இல்லாமல், நடுமத்திய நிலையில் இருக்கும் மண்வகை இது. பார்க்க கல்போல் கட்டியாக இருக்கும். கடப்பாரை, மண்வெட்டி அல்லது பாறக்குச்சி கொண்டு குத்தும்போது அல்லது வெட்டும்போது மிக எளிதில் உடைந்து கட்டிக்கட்டியாக வந்துவிடும். அதில் கைக்கொன்றை எடுத்து ஒன்றுடன் ஒன்றை வேகமாக தட்டுகையில் பொட்டென தூள் தூளாக உடைந்துபோகும் (நொறுங்கிப்போகும்).
இவ்வகை மண் இப்பகுதியில் அதிகமாக நிறைந்துள்ளதாலும், இப்பகுதி முழுக்கவும் சம நிலமாக இல்லாது மேடும் பள்ளமுமாக இருப்பதாலும், இப்பகுதியை (இவ்வூரை) கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு மேலாக மொரம்பு எனச் சொல்லி அழைத்துவருகிறார்கள்.
‘என்ன ஊர்ப்பா நீ?’ என்றால், ‘மொரம்பு’ என்றும், ‘யோவ் மாமா… மொரம்பு வரக்கும் போயிட்டு வர்றன்யா’ எனவும், தினந்தினம் ‘மொரம்பு’ எனும் சொல் இப்பகுதியில் ஒலிக்காத நாளே இல்லை எனலாம்.
பல லட்சம் சொற்கள் தமிழ் மொழியில் இருக்க, ஏன் இந்த சொல்லை இப்போது பேசவேண்டும் என்றோ, பல பெருமைகளுக்கு சொந்தமான சொல்லென இதனைக் கூற அப்படி என்ன இச்சொல்லில் இருக்கிறதென்றோக் கேட்பின், தமிழின் பழம்பெருமை வாய்ந்த சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான குறுந்தொகையின் 400 ஆவது பாடலை (NCBH பதிப்பில்; சில பதிப்புகளில் 398 ஆவது பாடலாகவும் இருக்கிறது) ஒருதடவை வாசிக்கச் சொல்வேன்.
”நன்றுபுரிந்து எண்ணிய மனத்தை ஆகி
முரம்புகண் உடைய ஏகி’’
என்னும் பேயனார் வரிகளில் உள்ள முரம்பும், சங்க இலக்கிய வாசம்கூட வீசாத இக்கிராமத்து பாமர மக்கள் அன்றாடம் தம் வாய்மொழிகளில் புழங்கும் மொரம்பும் ஒன்றா எனில், ஆம்.
இது மட்டுமல்ல… அகநானூறின் ஐந்தாம் பாடலில், பாலை பாடிய பெருங்கடுங்கோ,
`பரன்முரம்பாகிய பயமில் கானம்’ என்றும்,
’முரம்பு கண்ணுடைந்த நடவை தண்ணென’ என்று,
மலைபடுகடாம் 432 ஆம் வரியிலும், ‘முரம்பு’ எனும் சொல் ஆளப்பட்டிருக்கிறது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், என் தவிர இப்பகுதியில் யாரும் சங்க இலக்கியம் வாசித்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க, இச்சொல் எப்படி படிக்காத பாமர மக்களிடையே தினந்தினம் புழங்கிவருகிறது என்பதை எண்ணி பல தடவை வியந்திருக்கிறேன்.
குறுந்தொகையானது, முரம்பு என்னும் சொல்லுக்கு பரற்கற்களையுடைய மேட்டு நிலம் என பொருள் தருகிறது. அகநானூறு, பரற்கற்களையுடைய வன்னிலம் என்றும், மலைபடுகடாம் பருக்கைக் கற்களையுடைய மேட்டுநிலம் என்றும் பொருள் தருகிறது. கிட்டத்தட்ட இதே பொருளைக் கொண்டுதான் எங்கள் கிராமத்தினரும் முரம்பு எனும் சொல்லை அன்றாடம் பயன்படுத்திவருகிறார்கள்.
ஒருதடவை இச்சொல் குறித்தும், இரண்டாயிரம் ஆண்டு பழமையான சங்க இலக்கியங்களில் இவை வருவது குறித்தும், கிராமத்தின் மூத்த விவசாயியான என் 95 வயது தந்தையிடம் சொன்னபோது, ‘ஓ.. அப்டியா..’ என வியந்தார்.
`நாங்கலாம் எந்த புஸ்தகத்தப் பாத்திருப்போம். தலமுற தலமுறயா பெரியவங்க சொல்றதக் கேட்டும் பாத்தும் வளந்தவங்கதான் எல்லாரும்..` என்றார்.
அவர் சொன்னதில் உள்ள, `தலமுற தலமுறயா பெரியவங்க சொல்றதக் கேட்டும் பாத்தும் வளந்தவங்கதான் எல்லாரும்` என்ற கூற்று, நாம் அனைவரும் சங்க இலக்கிய காலத்தில் வாழ்ந்தவர்களின் வழிதோன்றல்கள்தான் என்பதையும், இச்சொல் அப்படித்தான் தலைமுறை தலைமுறையாக வந்து நம்மிடையே சேர்ந்துள்ளது என்பதையும் உணராமல் இருக்க முடியவில்லை. ஆம்.. அப்படி வந்த பல சொற்கள்தான் இன்றைய நம் பேசுமொழியில் இருக்கின்றன. அவற்றைத்தாண்டி தொலைந்துபோன அல்லது தொலைத்த சொற்கள் எத்தனையோ லட்சங்கள் இருக்கக்கூடும்.
இது ஒருபுறமிருக்க… இன்னொரு புறம் இச்சொல் குறித்து தமிழ் படித்த, படிக்கும் பலரிடம் கேட்கலாம் என நினைத்துக் கேட்டேன். பலருக்கும் அர்த்தம் தெரியவில்லை. அத்தோடு பேச்சுக்குக் கூட ஒருவரும் தெரிந்துகொண்டு வந்து சொல்வதாக சொல்லாதது பெரு வருத்தம். அவர்களில் ஓரிருவர் மட்டும், ‘ஏதோ மண் வகைன்னு நெனக்கிறன்’ என்றது சற்று ஆறுதல்.
சரி, நம் கூகுள் ஆண்டவர் என்ன சொல்கிறார் எனத் தேடியதில்… ஒருவகை நிலம், மேடான நிலம், பருக்கைகல்லுள்ள மேட்டுநிலம், மேடு, பாறை, வன்னிலம், தொங்குப் பாறை… என பல்வேறு பொருள்கள். இவையனைத்தும் சமீக காலமாகத் தரும் பொருட்கள். நான்காண்டுகளுக்கு முன் தேடியதில் நம்மவர்களை விட கூகுள் ஆண்டவர் படு மோசமாக இருந்ததை எப்படிச் சொல்ல?
இப்படி பல நாட்கள் முரம்பு முரம்பென தேடித்தேடித் திரிந்துவிட்டு, என் சொல்தேடு படலத்தை இத்தோடு முடித்துக்கொள்ளலாம் என முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டேன்.
சில சொற்கள் நம்மை சும்மா விடாது என்பார்கள். அப்படித்தான் இந்த சொல்லும். அண்மையில் நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளுமை நாஞ்சில் நாடன் ஐயா அவர்களை கோவையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசிக்கொண்டிருக்கையில், பேச்சு வாக்கில் இச்சொல்லை சொன்னேன். ‘அப்டினா என்ன?’ என ஆர்வமாகக் கேட்டார். பொருளோடு சேர்த்து, எங்கள் கிராமத்தின் பட்டப்பெயர் அது என்பதையும், இச்சொல் குறுந்தொகையில் வருவதாகவும் சொல்ல, ஆச்சர்யத்தோடும் ஆர்வத்தோடும் உடனே எழுந்து தன் அறைக்கு சென்று குறுந்தொகை நூலோடு வந்தார்.
நான் சொன்னதுபோல் முரம்பு எனும் சொல் அங்கிருப்பதையும், நான் சொன்ன பொருளும், அங்கு பாடலில் சொல்லப்பட்டிருக்கும் பொருளும் ஒத்திருக்கவும் வியந்தார்.
எதையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள் ஒன்று சேர்ந்தால் உள்ளம் துள்ளிகுதிக்க ஆரம்பித்துவிடும். ஆம், அப்படித்தான் இருக்கும் நாஞ்சில் ஐயாவை சந்தித்துப் பேசும்போதெல்லாம்.
ஆக முரம்பு என்னும் மொரம்பு, சங்க காலம் தொட்டு இன்றுவரை பயன்படுத்தப்பட்டுவரும் சொல்லாக இருந்துவருகிறது. இப்படி இன்னும் ஆயிரக்கணக்கான சொற்கள் நம்மிடையே இருக்கலாம். அதுவும் அதனைப் படிக்காத பாமர மக்கள் தம் அன்றாட பேச்சுமொழியில் தினந்தினம் உச்சரித்து வரலாம். அதையெல்லாம் அறியவோ, அறிந்ததை தமிழ்கூறும் நல்லுலகுக்கு எடுத்துச்சொல்லவோ இங்கு யாருக்கும் நேரம் இருப்பதில்லை.
முரம்பு எனும் சொல் வெறும் எம் கிராமத்தோடும், சங்க இலக்கியத்தோடும் நின்றுபோகும் சொல்லல்ல. நம் மண் சார்ந்தது; மரபு சார்ந்தது. தொன்று தொட்டு வரும் வரலாறு சார்ந்தது; இலக்கியம் சார்ந்தது. இதையே ஏன் நாம் எழுதப்போகும் முதல் நாவலுக்கு தலைப்பாக வைக்கக்கூடாது? என்ற கேள்வி முதல் தடவை எழுந்ததும், இதுதான் என் முதல் நாவலின் தலைப்பென அப்போதே முடிவெடுத்துவிட்டேன்.
முரம்பு எனும் சொல்லுக்கான என் பொருள் தேடு பயணமானது, அப்பேரிலேயே நாவல் ஒன்றை எழுதத் தூண்டியிருக்கிறது. சொல்லுக்கு முகம் உண்டு என்பார்கள். முகத்தோடு குணமும் உண்டு; ஆற்றலும் உண்டு எனலாம். கோவலனைக் கொன்றது ஒரு சொல்தான். பலரை வாழ வைத்ததும், வாழ வைப்பதும் ஒரு சொல்தான். வள்ளுவன், கம்பன், இளங்கோ, பாரதி என எல்லோரையும் இப்போதும் இருக்க வைப்பதும் இந்த சொல்தான். எந்த சொல்லும் வீண் கிடையாது. அதுபோல் எந்தவொரு சொல்லும் முதலும் கிடையாது, முடிவும் கிடையாது.
(2019 நவம்பரில் வெளியான ‘மொழி’ இலக்கிய இதழுக்காக எழுதப்பட்டது)
*