அரம்பு போற்றுதும் – 035 : ஜ இல்லை ஐ

ஜூன் 22, 2026

*

தமிழ்நாட்டில் பிறந்து தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எல்லாக் குழந்தைகளும் அறிவது போல ஐ, ‘அ’கரத்தை அறியாமல் தன் பெயரையே முதன்முதலில் அறிந்துகொண்டு, கடந்த ஓராண்டாக அதை நன்றாக வாசிக்கவும் தொடங்கிவிட்டான்.

இதில் வேடிக்கை யாதெனில், அவனுக்கு ஐ’க்கும் ஜ’வுக்குமான வித்தியாசம் தெரியாததால் (பார்க்க ஒன்று போலவே இருப்பதால்) எங்கே ஜ’வை பார்த்தாலும் அதை ஐ என்றே படித்து வருகிறான்.

முதல் தடவை அவன் இவ்வாறு படித்தபோது, ”தங்கப் பப்பு… இது ஐ இல்ல சாமி. ஐ மாதிரி இருக்க ஜ’’ என்றதற்கு, அவன் அடம் பிடிப்பது போல கைகளை உதறிவிட்டு அத்தனை உறுதியானக் குரலில், ”இல்ல ஐ’தான்’’ என்றதும், அதற்குமேல் மறுக்க மனம் வராமல் நாங்களும் சிரித்துக்கொண்டு, ‘சரி, வளர்ந்து அவனாகவே தெரிந்து; தெளிந்துகொள்ளட்டும்’ என்று ஏற்று விட்டுவிட்டோம்.

அதனால் அதுமுதல் அவன் எப்போது; எங்கே ஜ’வை பார்த்துவிட்டு ஐ என்றாலும், ”ஆமாம் பப்பு, ஐ’தான்’’ என்று கூறுவதை நாங்களும் வாடிக்கையாக வைத்திருக்கிறோம்.

அதேநேரம், இந்தச் சலுகை ஜ’வுக்கு மட்டும்தான் என்பதில் தெளிவாகவும்; உறுதியாகவும் இருக்கிறோம். ஆகையால், அவன் எப்போது மெய்யெழுத்துகளான க், ங், ட், த், ந், ம், ப், ய்… வை – க, ங, ட, த, ந, ம, ப, ய… என்றும், உயிர்மெய் எழுத்துக்களான க, ங, ட, த, ந, ம, ப, ய… வை – க், ங், ட், த், ந், ம், ப், ய்… என்றும் மாற்றி வாசித்தாலும் உடனே தலையிட்டு தவறாமல் திருத்தி வருவதை சீரிய செம்பணியாக செய்து வருகிறோம். இதுவே ஐ தவிர்த்து, அ முதல் ஒள வரையான உயிர் எழுத்துகளுக்கும், ஃ என்னும் ஆய்த எழுத்துக்கும் பொருந்தும்.

இந்நிலையில் சென்ற வாரத்தில் ஒருநாள் மாலை அவனை கூட்டிக்கொண்டு எழும்பூர் வரை சென்றிருந்தோம். பேருந்தின் சாளரத்தோர இருக்கையில் அமர்ந்துகொண்டு மெளனமாக வெளியில் வேடிக்கைப் பார்த்து வந்தவன், சட்டென்று வழியில் தென்பட்ட ‘ஐசிஐசிஐ வங்கி’யின் தமிழ்ப் பெயர் பலகையை பார்த்துவிட்டு, பெரிய யானை ஒன்றைக் கண்டதுபோல குதூகளித்துக் கத்தி, ”ஐ… ஐ… ஐ…” என்றிட்டான்.

ஏதோ யோசனையில் இருந்த நான் அவன் சொன்னதை கவனிக்காமல் இருந்ததை பார்த்துவிட்டு, ”அப்பா ஐ… அப்பா ஐ…’’ என்று மறுபடியும் தட்டிக் கூப்பிட்டுக் காட்டினான்.

உடனே அவன் சுட்டிய இடத்தில் பார்த்துவிட்டு, ”ஆமான்டா பப்பு… ஐ’’ என்பதற்குள், பேருந்தில் இருந்த நான்கைந்து பேர் எங்களைத் திரும்பிப் பார்த்துவிட்டார்கள்.

நாங்களோ எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தோம்.

இது சென்ற வாரக் கதை. இனி சொல்லப் போவது இந்த வாரத்தது.

இன்று காலை ஒன்பது மணி இருக்கும். மூவருமாகக் கிளம்பி பக்கத்தில் இருக்கும் நீலகண்டர் கோயிலுக்குப் போனோம்.

சென்றதும் இருவரையும் அங்கே உட்காரச் சொல்லிவிட்டு, நான் மட்டும் தனியாகப் போய் சுவரோரம் இருந்த வில்வ மரங்களில் ஒன்றில் கை நிறைய இலைகள் பறித்துவந்து மதியிடம் கட்டத் தந்துவிட்டு, ஐ நின்றிருந்த இடத்திற்குப் போனேன்.

சிறிது நேரம் அங்கும் இங்கும் ஓடிச் சென்று வேடிக்கை பார்த்துவிட்டு வந்தவன், சட்டென்று என்னருகில் வந்து நின்று, அங்கே பலகையில் எழுதியிருந்த எழுத்துக்களில் ஜ’வை மட்டும் எப்படியோ கண்டுவிட்டு, ”அப்பா, ஐ’’ என்றான்.

திரும்பிப் பார்த்துவிட்டு நானும், ”ஆமாம்டா ஐ’’ என்றேன்.

அங்கே உட்கார்ந்திருந்த நடுவயதுக்காரர் ஒருவர் திரும்பி அவன் குறிப்பிட்ட இடத்தில் ஐ இல்லாமல் ஜ இருப்பதை பார்த்துவிட்டு, எங்களை ஏதோ மாதிரி பார்த்தார்.

பதிலுக்கு நாங்களும் அவரை ஏதோ மாதிரி பார்த்துவிட்டுப் போய், சாமி கும்பிட்டு வந்து சிறிதுநேரம் உட்கார்ந்திருந்துவிட்டு, பிறகு அங்கிருந்து வீட்டுக்குக் கிளம்பினோம்.

இது எதுவும் தெரியாத அவன், தன் பாட்டுக்கு எப்போதும் போல வரும் வழி நெடுக ஜ என்னும் ஐ இருக்கிறதா என்று முன்னிலும் மிகத் தீவிரமாக தேடிப் பார்த்துக்கொண்டு வந்தான்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=