அரம்பு போற்றுதும் – 023 :  கக்கா ரயில்

ஏப்ரல் 12, 2026

*

ஐ முதல் தடவை ரயிலைப் பார்த்ததும் அது வரிசையாக அதாவது, ஒன்றன் பின் ஒன்றாகப் பெட்டிகள் அடுக்கப்பட்டிருப்பதை; இணைக்கப்பட்டிருப்பதை ஆழ மனத்துள் பதித்துக்கொண்டான்.

அது முதல் எது எங்கே ஒன்றன்பின் ஒன்றாக அல்லது ஒன்றடுத்து ஒன்றாக வரிசையாக இருந்தாலும் பார்த்துவிட்டு, ‘ரயில் மாரி இர்க்கு’ என்று சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறான்.

கூடவே, சில நேரங்களில் தன்னிடம் கிடைக்கும் புத்தகம் தொடங்கி, தட்டு வரைக்குமானதைக் கொண்டு வரிசையாக அடுக்கி ரயில் செய்திருப்பதாகச் சொல்லி மகிழவும் செய்வான்.

இந்நிலையில் இன்று காலை மதி குளித்துக்கொண்டிருந்தாள். நான் எனது அறையில் உட்கார்ந்து ‘புத்தரும் அவர் தம்மமும்’ வாசித்துக்கொண்டிருந்தேன். வழக்கம்போல தனது பொம்மைகளோடு விளையாடிக்கொண்டிருந்தவன், வேகமாக எழுந்து வந்து, ”அப்பா கக்கா வர்து” என்றான்.

மதி அப்போதுதான் குளித்துக்கொண்டிருந்தாள். அதனால், ”இருடா பப்பு… அம்மா குளிச்சிட்டு வந்ததும் போலாம்” என்று சொன்னேன்.

உடனே அடம்பிடிப்பது போல ஒரு தடவை வேகமாக குதித்துக் கைகளை வீசிக் காட்டியவன், ”கக்கா வர்து” என்றான் இன்னும் அழுத்தமாக.

வேறு வழியின்றி எழுந்து, ”சரி, வாடா போலாம்” என்று அவன் கை பிடித்துக் கழிவறை முன்னால் கூட்டிப் போய் நிறுத்தி, ”இதோ, அம்மா குளிச்சி முடிச்சிட்டாங்களாம். இப்போ வெளிய வந்துடுவாங்க. வந்ததும் போலாம்’’ என்றேன்.

சரி, இல்லை என்பதற்குப் பதிலாக வேறு மாதிரி தலையாட்டிக் காட்டினான்.

சரியாக அந்நேரம் பார்த்து அடுப்பில் இருந்த குக்கர் மூன்றாவது விசில் எழுப்பக் கேட்டு, ”இருடா பப்பு… போய் அடுப்ப அணச்சிட்டு வர்றன்’’ என்றுவிட்டு வேகமாகப் போய் அணைத்துவிட்டு வருவதற்குள் அவன், கழிவறை முன்பு தொடங்கி நடுவீடு நோக்கி மூன்று இடங்களில் அடுத்தடுத்து சிறிது சிறிதாக மலம் கழித்துவிட்டு, நான்காவது இடத்தில் உட்கார்ந்து கழித்துக்கொண்டிருந்தான்.

கண்டதும் கோபத்திற்குப் பதிலாக, அவன் நேர் வரிசையாக அதுவும், அந்த அவசர கதியிலும் கழித்திருந்ததைப் பார்த்து சிரிப்புதான் வந்தது.

ஒன்றும் கூறாமல் அருகில் போய் உட்கார்ந்து, ”ஏன்டா பப்பு… அதுக்குள்ள கக்கா போன?’’ என்றுவிட்டு கேட்டேன். ”அப்பாதான் இதோ, அம்மா வந்துடுவாங்க. போலாம்னு சொன்னனே.”

நான் சொன்னதைக் காதில் வாங்காதவனாய் வியப்புக் குரலில், ”அப்பா… ரயில் கக்கா’’ என்றான்.

அவன் சொன்னது முதலில் புரியாததால் மறுபடியும் கேட்டேன்.

உடனே தான் வரிசையாகக் கழித்திருந்த மலங்களைச் சுட்டிக்காட்டி, ”அப்பா… கக்கா, ரயில் மாரி இர்க்கு’’ என்றான்.

‘ஓ, செரிதான்’ என்று புன்னகைத்துக்கொண்டு, மதி வெளியில் வந்ததும் அவன் செய்த தனித்துவம் மிக்க ‘கக்கா ரயிலை’க் காட்டி மகிழ்வதற்காக அவனோடு சேர்ந்து நானும் ஆவலோடு காத்திருந்தேன்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=