அரம்பு போற்றுதும் – 015 : தண்ணி பாட்டு

பிப்ரவரி 28, 2026
*
காதொலிப்பான் (earphone) அணிந்து நாங்கள் பாடல் கேட்பதை ஓரிரு தடவை பார்த்த ஐ, அவ்வப்போது அவனாகவே அதனை எடுத்து நகர்பேசியில் இருக்கும் துளையில் அதேபோல சொருகி எடுத்துக்கொண்டு வந்து எங்கள் காதில் மட்டிவிட்டு, ”பாட்டு” என்பான். அதாவது, ‘பாடல் கேளுங்க’ என்பான். நாங்களும் சில நொடிகள் கேட்பது போல பாவனை செய்வோம்.
இது ஒருபக்கம் தொடர்ந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் கடந்த சில தினங்களாக காதொலிப்பானை எடுத்துப்போய் வீட்டில் எங்கெல்லாம் சிறுசிறு ஓட்டைகள் இருக்கிறதோ, அதிலெல்லாம் சொருகி காதில் மாட்டிக்கொண்டு பாடல் கேட்பதாக பாவனை காட்டத் தொடங்கினான்.
நாங்களும் அதைப் பார்த்தும் பார்க்காதது போலவும், சில நேரம் மட்டும், ”என்ன பாப்பா, பண்ற?’’ என்று கேட்கவும் செய்வோம்.
இந்நிலையில் இன்று மதியம், அவனது புதிய தண்ணிர் போத்தலில் இருக்கும் சிறிய ஓட்டைக்குள் முதல் தடவையாக காதொலிப்பானை சொருகி காதில் மாட்டிக்கொண்டிருந்தான்.
எங்கே நீர் பட்டால் காதொலிப்பான் பழுதாகிவிடும் என்பதால், வேகமாக ஓடிப்போய் அவன் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு, ”என்ன பப்பு, பண்ற?’’ என்று கேட்டேன்.
உடனே, ”பாட்டு’’ என்றான்.
அதைத்தான் சொல்வான் என்று முன்னமே தெரிந்தாலும், வெறுமே கேட்க வேண்டும் என்பதற்காகக் கேட்டேன். ”என்ன பாட்டு கேக்கற, பப்பு?”
”தண்ணி பாட்டு.”
”என்னது, தண்ணி பாட்டா?”
முகத்தை மிகத் தீவிரமாக வைத்துக்கொண்டு, ‘ஆமாம்’ என்று தலையாட்டினான்.
இதழ்வரை வந்த சிரிப்பை மறைத்துக்கொண்டு கேட்டேன். ”தண்ணி பாட்டு எப்டி இருக்கு, பப்பு?’’
வேகமாகத் தலையாட்டி, ”நல்லார்க்கு’’ என்றான்.
”எங்கக் கொடு… நானும் கேட்டுப் பாக்கறன்.”
உடனே கழட்டிக் கொடுக்க, நானும் ஆர்வத்தோடு வாங்கி மாட்டிக்கொண்டு பாடல் கேட்பது போல பாவனை செய்தேன்.
அதைப் பார்த்துவிட்டு, ”நல்லார்க்கா?” என்று கேட்டான்.
”ம்… நல்லாருக்கு, பப்பு…” என்றுவிட்டு, கண்கள் மூடி கேட்கத் தொடங்குவதற்குள், அவன் போய் நடுவீட்டில் அமர்ந்து ஏதோ வேலையில் மூழ்கியிருந்த மதியைக் கூட்டி வந்திருந்தான்.
*