அரம்பு போற்றுதும் – 014 : தொப்புள் கதை

பிப்ரவரி 25, 2026
*
அவ்வப்போது ஐக்கு புதுப்புதுக் கதைகள் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அதனால் கதைருசி அறிந்தவன், கடந்த சில மாதங்களாக அவ்வப்போது அவனாகவே வந்து பக்கத்தில் படுத்துக்கொண்டு அல்லது மடியிலோ, முதுகிலோ சாய்ந்துகொண்டு கதைகள் கேட்பதை (அதிலும் குறிப்பாக, நாங்கள் சொன்ன கதைகளைக் காட்டிலும் அவனாகவே ஏதாவது ஒன்றைச் சொல்லி, உதாரணமாக : சாமிக்கண்ணு தாத்தா கதை, மேசை கதை, தென்னை மரம் கதை, காத்தாடி கதை, கொழுக்கட்டை கதை, ஆட்டோ மாமா கதை… இப்படி.) வாடிக்கையாக வைத்திருக்கிறான்.
அவ்வகையில் இன்று முன்னிரவு மாடியில் பாய் போட்டு படுத்துக்கொண்டு, வானில் தவழ்ந்தோடும் வெண் மேகங்களையும், அவ்வப்போது கடந்து செல்லும் விமானங்களையும், சுடர்ந்தொளிரும் நட்சத்திரங்களையும், திங்களையும் பார்த்துக்கொண்டு தீவிரமாக கதைகள் பேசிக்கொண்டிருந்தோம்.
சட்டென்று கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில், ”அப்பா, தொப்புள் கதை வேணும்’’ என்று கேட்டான்.
”என்னது, தொப்புள் கதையா?” என்று புரியாதது போல நானும் கேட்டேன்.
உடனே எழுந்து உட்கார்ந்து தனது மேல்சாட்டையைத் தூக்கித் தொப்புளைத் தொட்டுக் காட்டி இன்னும் விளக்கமாக, ”ஐ பாப்பா, தொப்புள் கதை வேணும்’’ என்றான்.
திரும்பவும் வேண்டுமென்றே அவனை வம்புக்கு இழுக்கும் நோக்கில் புரியாதது போல அவன் சொன்னதற்கு மாறாக, கடந்த ஏழரை ஆண்டுகளுக்கு முன்பு ஐயாவின் 94 ஆவது பிறந்தநாளுக்கு, அவரையும் அம்மாவையும் ஊரிலிருந்து சென்னைக்கு அழைத்துவந்து விமானத்தில் கூட்டிப்போய் வந்ததை சுமார் இருபது நிமிடங்களுக்கு மேலாக ஒரு கதையாகச் சொல்லி முடித்தேன்.
அதுவரை ஒன்றும் கூறாமல் ஒரு தேர்ந்த கதை கேட்பவன் போல மிகுந்த ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டிருந்தவன், நான் முடிப்பதற்காகவே காத்திருந்த மாதிரி முடித்ததும் சொன்னான். ”அப்பா, தொப்புள் கதை.’’
‘ரைட்டு… இவன நாலு நாளு உட்காரவச்சி, நாப்பது இல்ல… நானூறு கதை சொன்னாலும்… தான் கேட்ட கதைய சொன்னாதான் விடுவான் போல’ என்று நினைத்துக்கொண்டு, அவன் கேட்ட தொப்புள் கதையை சொல்லத் தொடங்கினேன்.
”ஐ பாப்பாவோட தொப்புள் இருக்குல்ல…’’
*