அரம்பு போற்றுதும் – 013 : பாட்டு வரைப்பா

பிப்ரவரி 22, 2026
*
வீட்டில் இருக்கும் நாட்களில் தினந்தோறும் மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் படுத்து ஓய்வெடுப்பது வழக்கம். அவ்வாறு இன்று ஓய்வெடுத்துவிட்டு விழிக்கையில், அதற்காகவே காத்திருந்தவன் போல பக்கத்தில் தனது டேப்போடு (Tab) அமர்ந்திருந்தான் ஐ.
சின்னதாக இதழசைத்துப் புன்னகைத்தபடி எழுந்து, ”மாலை வணக்கம், பப்பு… அதுக்குள்ள தூங்கி எழுந்துட்டியா?’’ என்று கேட்டேன்.
‘ஆமாம்’ என்பது போல தலையாட்டியவன், கையிலிருந்த டேப்பை என்னிடம் தந்து, ”அப்பா, ஆடு வரை” என்றான். வரைந்தேன்.
உடனே அதை அழித்துவிட்டு, ”மாடு வரை” என்றான். வரைந்தேன்.
அதையும் அழித்துவிட்டு, ”கோழி வரை’’ என்றான். வரைந்தேன்.
அடுத்து நாய் வரையச் சொன்னான். வரைந்தேன்.
அதற்கடுத்து குரங்கு. அதையும் வரைந்தேன்.
இப்படி சுமார் இருபது நிமிடங்களுக்கு மேலாக கொஞ்சம்கூட இடைவிடாமல் ஆடு தொடங்கி… குளிர்சாதனப் பெட்டி வரைக்கும் வரையச் சொன்னவன், ஒரு கட்டத்தில் என்ன நினைத்தானோ, என்னிடம் இருந்த டேப்பை, ”தா ப்பா” என்று வாங்கிக்கொண்டு வேகமாகச் சென்று, தனது சிறிய மேசை மேல் வைத்துவிட்டு சிறுநீர் கழிக்கப் போனான்.
நானும், ‘அப்பாடா, இன்னிக்கி வரைபுராணம் முடிஞ்சது’ என்று நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தேன்.
வேகமாக வந்தவன், தனது டேப்பை மறுபடியும் எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் தந்து, ”அப்பா… பாட்டு வரை” என்றான்.
அவன் சொன்னது நன்றாகக் காதில் விழுந்தாலும் விழாத மாதிரி கேட்டேன். ”என்னது, பாட்டா?’’
‘ஆமாம்’ என்று தலையாட்டிவிட்டு இன்னும் விளக்கமாக, ”ஊரு கண்ணு பாட்டு வரை’’ என்று சொன்னான்.
‘சரியாப்போச்சு’ என்று நினைத்துக்கொண்டு, ஒரு கட்டில் வரைந்து அதில் ஐயும் மதியும் அமர்ந்திருப்பது போல இரு உருவங்கள் வரைந்துவிட்டு, அதன் முன்பாக கையில் கற்பூரம் ஏற்றி வந்து நின்றுகொண்டு இன்னோர் உருவம் அதாவது நான், கண்ணேறு கழிப்பது போல வரைந்து காட்டி, அதுதான் அவன் சொன்ன பாடல் என்பதை நம்பும் விதமாக விளக்கிச் சொன்னேன்.
எனது ஓவியத் திறமையில் அல்லது விளக்கத்தில் மகிழ்ந்தவன், சில நொடிகள் வரைந்ததையே உற்றுப் பார்த்தான். பிறகு மொத்தத்தையும் அழித்துவிட்டு, ”அப்பா, நீராட்டு பாட்டு வரை’’ என்றான்.
உடனே நான் என்ன செய்வதென்று தெரியாமல், ”இருடா பப்பு… அப்பா ஒரு பெரிய்…………ய சுச்சூ போயிட்டு வந்து வரையறன்” என்றுவிட்டு, எழுந்து ஓட்டமாக ஓடிவந்துவிட்டேன்.
நிச்சயம் அவன், ‘எங்கே இன்னும் அப்பாவைக் காணோம்?’ என்று நினைத்து அடுத்த சில நிமிடங்களில் எழுந்து வந்து கழிவறைக் கதவைத் தட்டிக் கூப்பிடுவான்.
அதற்குள் அடுத்த வழியை கண்டுபிடித்திட வேண்டும்.
*