அரம்பு போற்றுதும் – 012 : இன்னும் போடு

பிப்ரவரி 18, 2026

*

வேகவேகமாகக் குளித்துவிட்டு வந்து, விளையாடிக்கொண்டிருந்த ஐ முன்பாக முதலில் உள்ளாடைகளும், பிறகு கால் சட்டையும் மேல்சட்டையும் அணிந்துகொண்டு கிளம்பினேன்.

என்ன நினைத்தானோ, சட்டென்று விளையாட்டை பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து ஓடிப்போய், தனது ஆடைகள் இருக்கும் பெட்டிக்குள் இருந்த நான்கு உள்ளாடைகளை (ஜட்டி) ஒருசேர எடுத்து வந்தான்.

ஏதோ பெரும் சேட்டை ஒன்று அரங்கேறப்போகிறது என நினைத்துக்கொண்டு, அவனைப் பார்த்தும் பார்க்காமல் தொடர்ந்து கிளம்பிக்கொண்டிருந்தேன்.

உடனே, ”அப்பா, இங்க வாங்க’’ என்றான்.

”என்ன, பப்பு?’’ என்று கேட்டுக்கொண்டு அவன் அருகில் போனேன்.

”போடு’’ என்று ஒரு ஜட்டியை என்னிடம் நீட்டினான்.

அவன் முன்னமே அணிந்திருப்பதைக் காட்டி, ”அதான் ஏற்கனவே போட்டிருக்கியேடா, பப்பு’’ என்றேன்.

சட்டென்று அடம் பிடிப்பது போல, ”ம்… வேணும்” என்றான்.

‘சரி’ என்று அவன் அணிந்திருந்த ஜட்டி மேலேயே இன்னொரு ஜட்டி போட்டுவிட்டுப் போய் உண்ண அமர்ந்தேன்.

மறுபடியும் இன்னொரு ஜட்டியை எடுத்து வந்து போடச் சொன்னான். நான் உண்டுகொண்டிருந்ததால் சென்று மதியிடம் போடச் சொன்னேன்.

அவனும் போய் மதியிடம் கேட்க, அவளும் விளையாட்டாக ஜட்டிகள் மேலேயே ஜட்டி போட்டுவிட்டாள்.

சிரித்துக்கொண்டு வந்து என்னிடம் காட்டிவிட்டுப் போய், வேகமாக இன்னொரு ஜட்டி எடுத்துவந்து அதையும் போடச் சொன்னான். அவளும் போட்டுவிட்டாள்.

இப்படி அவனிடம் இருந்த மொத்த ஜட்டிகளையும் போட்டவன், நான் சாப்பிட்டுவிட்டு எழுவதைப் பார்த்துவிட்டு, ஓட்டமாக ஓடிப்போய் பெட்டியில் இருந்த அவனது மொத்த மேல் சட்டைகளையும் கொத்தாக அள்ளிக்கொண்டு வந்தான்.

அடுத்து அவன் கேட்கப்போவது என்ன என்பது தெரிந்ததால் முந்திக்கொண்டு, ”ஐ பப்பு, அப்பாவுக்கு நேரம் ஆச்சி… டாட்டா, போயிட்டு வர்றன்’’ என்று சொல்லிவிட்டு, அவன் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து ஓட்டம் எடுத்துவிட்டேன்.

பாவம் மதி!

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=