அரம்பு போற்றுதும் – 011 : பூ விழ்து

பிப்ரவரி 12, 2026
*
சென்ற வாரத்தில் ஒரு நாள் மாலை கடைக்குப் போய் காய்கறி வாங்கிக்கொண்டு வரும்போது, வழியில் இருந்த சரக்கொன்றை மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த பூக்களில் ஒன்றை பறித்து வந்து மாடியில் விளையாடிக்கொண்டிருந்த ஐ கையில் கொடுத்தேன்.
அவன் இதுவரை பார்த்திடாத வகையில் மிக வித்தியாசமாக அப்பூ இருந்ததைப் பார்த்துவிட்டு கண்கள் அகல விரிய ஆச்சர்யக்குரலில், ”அப்பா, பெரிய்ய்ய்ய்ய்ய பூ’’ என்றான்.
”ஆமாம்டா, பெரிய்ய்ய்ய்ய்ய பூ’’ என்றேன்.
அடுத்து அவனாகவே அதை விதவிதமாகத் தொட்டுப் பார்த்துவிட்டு, ”அப்பா, மல்லிப் பூ’’ என்றான்.
உடனே மதி, ”மல்லிப் பூவா இது? நல்லா பாரு, மல்லிப் பூ சின்னதாதான இருக்கும்.’’ என்றாள்.
‘ஆமாம்’ என்று வேகமாகத் தலையாட்டியவன் அவனாகவே, ”வெள்ளயா இர்க்கும்” என்று சொன்னான்.
சட்டென்று நான் அவனைத் தூக்கிக்கொண்டு, ”சூப்பர் பப்பு…’’ என்றுவிட்டு கேட்டேன். ”மல்லிப் பூ சின்னதா வெள்ளையா இருக்கும்ல்ல… அதுமாதிரி இந்தப் பூ எப்படி இருக்கு? சொல்லு பாப்போம்.’’
எனது பாராட்டலில் அல்லது கேள்வியில் உற்சாகமானவன், ”பெரு……..சா இர்க்கு” என்றான்.
”என்ன வண்ணத்துல இருக்கு? நல்லா பார்த்து சொல்லு.”
”மஞ்சளு.”
”வாவ்… சூப்பர்டா.” நெற்றியில் முத்தமிட்டு தட்டிக்கொடுத்தேன்.
மறுபடியும் மதி கேட்டாள். ”இப்ப சொல்லு, இது என்ன பூ?’’
உடனே, ”நாஷ்” என்றான்.
அப்படியென்றால் அவனுக்குத் தெரியாது என்று அர்த்தம். அதாவது, தனக்குத் தெரியாத ஒன்றை தெரியாது என்று கூறாமல் அவ்வப்போது (அதுவும் சிறிது காலத்திற்கு ஒரே சொல்லையே) ஓர் அர்த்தமற்ற சொல்லைக் கொண்டு சொல்வது வழக்கம்.
‘சரி’ என்று நானாகவே சொன்னேன். ”ஐ பப்பு, இதுப் பேருதான் கொன்றைப் பூ. இது பார்க்க பூ கட்டினது மாதிரி சரமாட்டம் இருக்குல்ல… அதனால இதோடப் பேரு சரக்கொன்றைப் பூ. நாமப் போய் சிவன் சாமி கும்பிடுவமே… அந்த சாமிக்கு இந்தப் பூவுன்னா ரொம்பப் புடிக்கும். தலையில அழகா வச்சிருப்பாரு.’’
உடனே உதடசைத்து மென்குரலில், ”கொன்றைப் பூ’’ என்றான்.
”ஆமாம், பப்பு… கொன்றைப் பூ.’’
இதுநடந்து சரியாக ஒருவாரம் கழித்து இன்று மாலை மாடியில் அவனோடு உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று கெட்டாவி விட்டவன், ”பூ விழ்து’’ என்றான்.
காதில் லேசாக விழுந்தாலும், அது குறித்து எதுவும் கேட்காமல் தொடர்ந்து அவனோடு விளையாடிக்கொண்டிருந்தேன்.
மறுபடியும் இரவு தூங்குவதற்கு முன்பாகக் கொட்டாவி விட்டுவிட்டு அதேபோல, ”பூ விழ்து’’ என்றான்.
‘என்னடா, இவன் கொட்டாவி விட்டுட்டு பூ விழ்துன்னு சொல்றானே’ என்று மதியிடம் கேட்டேன்.
ஐயை பார்த்துவிட்டு மென் சத்தத்தில் சிரித்துச் சொன்னாள். ’’உங்களுக்குத் தெரியாதா, அப்பா? ஐ பாப்பா, கொட்டாவி விட்டா பூ விழும். அதுவும், என்னப் பூ தெரியுமா? சரக்கொன்றை.’’
வியப்போடு திரும்பி ஐயைப் பார்த்தேன். வேண்டுமென்றே அவன் ஒரு பொய்க் கொட்டாவி விட்டுக் காட்டி, ”பூ விழ்துப்பா’’ என்றுவிட்டு, மொத்தப் பற்களும் தெரியச் சிரித்திட்டான்.
*