அரம்பு போற்றுதும் – 010 : தன்னாடை என்னாடை

பிப்ரவரி 08, 2026
*
ஐ மற்ற குழந்தைகள் மாதிரி அவ்வளவாக அடம் பிடிக்கமாட்டான். என்றாலும், அவ்வப்போது வெகு சிலவற்றுக்காக மட்டும் அடம் பிடிப்பான். அவ்வாறு அடம் பிடிப்பதிலும் குறும்பு தூக்கலாக இருப்பதை கவனித்திருக்கிறோம்.
அவ்வகையில் இன்று மாலை பூங்காவுக்குக் கூட்டிப்போக நினைத்து வெகுநேரமாகத் தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பிவிட்டு, அவன் அணிவதற்காக பச்சை வண்ண ஆடையை எடுத்து வைத்தேன்.
உடனே என்ன நினைத்தானோ, அது வேண்டாம் என்றுவிட்டுப் போய் வேறோர் ஆடையை அவனாகவே எடுத்துவந்து அதுதான் வேண்டும் என்றான். நானும், ”சரி” என்றேன்.
ஆனால் மதி, ”அது வேண்டாம் பப்பு… இதுதான் நல்லா இருக்கும். இத இன்னைக்குப் போட்டுட்டுப் போ. அதை நாளைக்குப் போட்டுக்கலாம்’’ என்றாள்.
சட்டென்று மதி சொன்ன ஆடையைத் தூக்கி எறிந்தவன், அவன் எடுத்துவந்த ஆடையை நீட்டி, ”போடு’’ என்றான்.
‘சரி’ என்று மேலும் வம்பிழுக்காமல் அவன் சொன்ன ஆடையை அணிவிக்க, அவனும் மகிழ்ச்சியாக பூங்காவுக்குக் கிளம்பி நின்றான்.
இத்தோடு முடிந்ததென்று நினைத்திருந்தபோது, அவன் வேண்டாம் என்று வீசியெறிந்த ஆடையை மறுபடியும் போய் எடுத்து வந்து என்னிடம் தந்து, ”அப்பா போடு’’ என்றான். அதாவது, அந்த ஆடையை நான் போடவேண்டுமாம்.
உடனே நான் அணிவதற்காக எடுத்து நாற்காலி மீது வைத்திருந்த ஆடையைக் காட்டி, ”அப்பா போட அதோ இருக்குடா’’ என்றேன்.
என் பதிலை பொட்டும் காதில் வாங்காதவனாக, சட்டென்று அடம்பிடித்தவாறு கையில் இருக்கும் தனது ஆடையைத்தான் போட வேண்டும் என்றான்.
இருவரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். கேட்பதாக இல்லை. வேறு வழியில்லாமல் இறுதியாக இப்படிச் சொன்னேன். ”ஐ பாப்பா, நீ சின்னப் பாப்பால்ல… உன்னோடது சின்னத் துணி, அப்பா பெருசா இருக்கேன்ல… அதனால பத்தாது. வேணும்னா ஒண்ணு செய்யலாம். நாமக் கண்ண மூடி… ஞாயிறு தாத்தாகிட்ட சொல்லி, ஐ பாப்பாவோட சின்னத் துணிய… பெரிய துணி ஆக்க சொல்வோமா?’’
அவன் சட்டென உற்சாகமாகித் தலையாட்டி, ”ம்…’’ என்றான்.
உடனே அவனது கண்களை மூடச் சொல்லிவிட்டு, நான் எடுத்து வைத்திருந்த ஆடைக்குப் பதில் அவன் சொன்ன ஆடையை மறைத்து வைத்துவிட்டு, அந்த வண்ணத்தில் இருக்கும் எனது வேறு ஓர் ஆடையை எடுத்துக்கொண்டு சத்தமாக, ”வாவ்… ஐ பாப்பா, கண்ணத் தொறந்து இப்போப் பாரு. ஞாயிறு தாத்தா துணிய எவ்ளோ பெருசா ஆக்கிட்டாரு’’ என்று சொன்னேன்.
பெருத்த ஆர்வத்துடன் கண்களை வேகமாகத் திறந்து பார்த்தவன், கையில் இருக்கும் ஆடையைக் கண்டுவிட்டு நம்ப முடியாதவனாய் அவன் சொன்ன ஆடையைத் தேடிப் பார்த்தான். அது எங்கேயும் இல்லாததால் நம்பி வாங்கிப் பார்த்துவிட்டு, ”அப்பா போடு’’ என்றான்.
‘அப்பாடா, தப்பித்தோம்’ என்று வாங்கி அணிந்துகொண்டு வாசலுக்கு வந்தேன்.
எனக்கு முன்பாக ஓடிப்போய் எனது செருப்பை மாட்டியவன், அவன் செருப்பு எடுத்து நீட்டி, ”அப்பா போடு” என்று சொன்னான்.
நானோ, செய்வது அறியாமல் முழித்துக்கொண்டிருந்தேன்.
*