அரம்பு போற்றுதும் – 009 : மாங்கா காணாம்

பிப்ரவரி 06, 2026
*
காலை சரியாக ஏழு மணி இருக்கும். கூடாரத்துக்குள் தனியாகப் படுத்திருந்த ஐ, தூக்கத்தில் எழுந்து உட்கார்ந்து, ”அப்பா, இங்க வாங்க’’ என்று கூப்பிட்டான்.
அறைக்குள் அமர்ந்து ‘தமிழணங்கே’ எழுதிக்கொண்டிருந்தவன், உடனே எழுந்து போய் பார்த்தேன். படுக்கையில் உட்கார்ந்தபடி எதையோ தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்தான்.
எப்போதும் போல பணிந்து கும்பிட்டு, ”ஐ பாப்பாவுக்கு… காலை வணக்கம்’’ என்றேன்.
பதிலுக்கு வழக்கம் போல காலை வணக்கம் சொல்லாமல் மறுபடியும், ”அப்பா, இங்க வாங்க’’ என்றான்.
”என்னடா, பப்பு?’’ என்று கேட்டபடி கூடாரத்தைத் திறந்து உள்ளே போய் அவன் அருகில் உட்கார்ந்தேன்.
உடனே, ”மாங்க காணாம்’’ என்றான்.
‘என்ன மாங்க?’ என்று கேட்க நினைத்து கேட்காமல் சும்மா தேடுவது போல பாவனை காட்டிவிட்டு, ”எங்கப் போச்சி?’’ என்று கேட்டேன்.
”காணாம்” என்றான் உதட்டைப் பிதுக்கிக் காட்டி.
என் பங்குக்குக் கொஞ்சம் அதிர்ச்சிக் குரலில் நானாகக் கேட்டேன். ”எங்க இருந்துச்சி?’’
சட்டெனக் கூடாரத்தின் ஓர் ஓரத்தைக் காட்டி, ”அங்க” என்றான்.
”அப்ப, எங்க போச்சி? வா, தேடிப் பாக்கலாம். இங்கதான் எங்கனா இருக்கும்’’ என்று சொல்லியபடி, அவனோடு சேர்ந்து கூடாரத்துக்குள் இருந்த போர்வை, தலையணை எல்லாவற்றையும் எடுத்துப் பார்த்துவிட்டு, சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு உதட்டைப் பிதுக்கிக் காட்டிச் சொன்னேன். ”எங்கயுமே காணாம், பப்பு.’’
உடனே எடுத்தவர் யார் என்பதைத் தான் கண்டுபிடித்துவிட்டதைப் போல முகம் காட்டிச் சொன்னான். ”கொசு எடுத்து.”
சட்டென்று அதை ஆமோதிப்பது போல நானும், ”ஆமா, பப்பு. நீ தூங்கும்போது ஒரு பெரிய கொசு… அதோ, அங்கதான் இருந்துச்சி. அதான் வந்து எடுத்துட்டுப் போயிருக்கும்’’ என்றேன்.
நான் சொன்னதைக் காதில் வாங்கியும் வாங்காதவனாக, கூடாரத்தின் ஓரிடத்தில் அதுவும், கஷ்டப்பட்டு நுழையக்கூடிய அளவுக்கு இருந்த ஓர் ஓட்டையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
அடுத்து அவன் என்ன சொல்லப்போகிறான் என நானும், இந்தப் புலன் விசாரணையை சீக்கிரம் முடித்துவிட்டு வந்து அடுத்து நான் என்ன எழுதப்போகிறேன் என தமிழணங்கேவும் ஒரேசேரக் காத்திருந்தோம்.
*