அரம்பு போற்றுதும் – 008 : கன்ட்ரோல் பட்டன்

பிப்ரவரி 03, 2026
*
குழந்தைகள் தம்மைச் சுற்றியிருக்கும் பெரியோர்கள் செய்வதைப் பார்த்து அதேபோல செய்து பார்ப்பதில் மிக்க ஆர்வம் உடையவர்கள். அதிலும் குறிப்பாக, பெற்றோர்கள் செய்வதை. ஆகையால், தாய் தந்தையர் தம் குழந்தைகள் முன்பாக ‘செய்யத் தக்கன செய்வதும்; செய்யத் தகாதன செய்யாததும்’ மிக மிக அவசியமாகிறது.
இதனால் முடிந்தவரை நாங்கள் ஐ முன்பாக செய்யத் தக்கனவற்றை மிகச் சிரத்தையோடு செய்து வருகிறோம். அதன் விளைவாக, எங்களைப் போல அவனும் புத்தகங்களை எடுத்து மெல்லிய முணுமுணுக்கும் குரலில் படிப்பது (!) தொடங்கி, வீட்டில் எங்கேனும் குப்பைகள் இருந்தால் அதை எடுத்துப்போய் அதற்கான இடத்தில் போடுவது வரை… பலவற்றைச் செய்துபார்த்து வருகிறேன்.
இந்நிலையில் இன்று காலை எனது அறைக்குள் அமர்ந்து மடிக்கணினியில் ‘மலையாற்றுப்படை’ எழுதிக்கொண்டிருந்தவன், ஒரு தேநீர் போட்டு எடுத்து வருவதற்காக சமையலறைக்குப் போயிருந்தேன். சரியாக அந்நேரம் பார்த்து சத்தமில்லாமல் உள்ளே நுழைந்த ஐ, நேராக எனது சுழலும் இருக்கையில் போய் ஏறி அமர்ந்து, மடிக்கணினி முன்பாக இருக்கும் கூடுதல் விசைப்பலகையில், (external keyboard) நான் வேகமாகத் தட்டி சத்தம் எழ எழுதுவது போல அவனும் தட்டிக்கொண்டிருந்தான் அல்லது எழுதிக்கொண்டிருந்தான்.
‘என்னடா, நடுவீட்டில் விளையாடிக்கொண்டிருந்தவன் சத்தத்தைக் காணோம்’ என்று தேடிவந்து பார்த்துவிட்டு, மாடியில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்த மதியைக் கூப்பிட்டுக் காட்டினேன்.
பிறகு, ‘சரி, கொஞ்சநேரம் எழுதட்டும்’ என்று விட்டுவிட்டு, சென்று தேநீர்ப் போட்டு எடுத்துக்கொண்டு வருவதற்குள், ஐ விசைப்பலகையில் தட்டுத் தட்டென்று தட்டி அதாவது, எழுது எழுதென்று எழுதி, ஓரமாக இருந்த கன்ட்ரோல் பட்டனை இரண்டாக உடைத்துவிட்டான்.
அதுகூட பரவாயில்லை. அப்படி ஒரு செயல் நடந்ததையே கவனிக்காமல் அல்லது கவனித்தும் அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பது போல மிகத் தீவிரமாகத் தொடர்ந்து தட்டிக்கொண்டிருந்தான் அல்லது எழுதிக்கொண்டிருந்தான்.
வந்து பார்த்துவிட்டு, உடைந்து கீழே விழுந்திருந்த பட்டனை எடுத்து ஐயிடம் காட்டி, ”இது என்ன, பப்பு?’’ என்று கேட்டேன்.
சட்டென்று ‘இதுகூட தெரியாதா, அப்பா?’ என்பது போல பல் தெரியச் சிரித்து, ”எழுது…’’ என்றுவிட்டு, மறுபடியும் விட்ட இடத்திலிருந்து தட்டிட்டான்; எழுதிட்டான்.
சரியென்று மேற்கொண்டு எதுவும் கூறாமல், நான் பாட்டுக்கு மின்னல் கோடு போல சின்னதாகப் புன்னகைத்துவிட்டு, கையில் வைத்திருந்த உடைந்த பட்டனை பார்த்துக்கொண்டு, சுவர் ஓரமாகப் போய் உட்கார்ந்து முதல் மிடறு தேநீரைப் பருகினேன். அதில் தேநீர்ச் சுவையைவிட ஐயின் ‘எழுது’ சுவை மிகுந்திருந்தது.
*