அரம்பு போற்றுதும் – 006 : அப்பா கை எங்க?

ஜனவரி 31, 2026
*
எழுத்து மேசையருகே இடது புறமாக மேலே சுவரில் மாட்டியிருந்த எனது உருவ ஓவியத்தைச் சுட்டிக்காட்டி ஐ, ”அப்பா’’ என்றான்.
”ஆமா, அப்பா’’ என்றேன்.
உடனே என்னைக் காட்டி, ”இங்க ஒரு அப்பா’’ என்றான்.
நானும், ”ஆமாம், இங்க ஒரு அப்பா… அங்க ஒரு அப்பா’’ என்றேன்.
சட்டென்று எனது இரு கைகளையும் பிடித்துப் பார்த்துவிட்டு ஓவியத்தைச் சுட்டி, ”அங்க ஒரு அப்பா கை எங்க?’’ என்று கேட்டான்.
இது நான் ஒருபோதும் எதிர்பாராதக் கேள்வி என்பதால் சமாளிக்க நினைத்து, ”அங்க ஒரு அப்பாவுக்கு கை வெளியே இருக்கு’’ என்று சொன்னேன்.
நான் சொன்னது அந்த ஓவியப்படத்துக்கு வெளியே அதாவது, சட்டகத்துக்கு வெளியே தெரியாமல் இருக்கிறது என்ற பொருளில். ஆனால் அவனோ, அதை வேறு விதமாகப் புரிந்துகொண்டு இன்னொரு தடவை உற்றுப் பார்த்துவிட்டு, ”காணாம்’’ என்றான்.
”வெளியேன்னா இந்த வெளியே இல்ல… படத்துக்குப் பின்னாடி.’’ மறுபடியும் சமாளிக்க முயன்றேன்.
உடனே அவன், ”பாக்கலாமா?’’ என்று கேட்டான்.
என்ன சொல்வதென்று தெரியாமல் திரும்பி மதியை பார்த்தேன். அவளோ, தனக்குச் சம்மந்தமே இல்லாதது போல ஆனால், யாவற்றையும் கவனித்தபடி சத்தமின்றி சிரித்துக்கொண்டிருந்தாள்.
சட்டென்று முடிக்க நினைத்து, ”சுவருக்குப் பின்னால… அந்தப் பக்கம்; வெளியே இருக்கு’’ என்றேன்.
அவனோ விடாமல், ”பாக்கலாமா?’’ என்று திரும்பவும் கேட்டான்.
‘செரிதான், இவன் என்ன சொன்னாலும் விடமாட்டான் போலயே’ என்று எண்ணிக்கொண்டு, ”இப்ப வெளியில நறையா வெய்யில் அடிக்குதுல்ல… கொறஞ்சதும் போய் பாக்கலாம்’’ என்றேன்.
எனது பதிலில் அப்போதைக்கு சமாதானம் ஆனவனாய் ‘சரி’ என்று வேகமாகத் தலையாட்டிச் சிரித்துவிட்டுப் போய் மதியிடம் கேட்டான். ”அம்மா… அங்க அப்பா கை எங்க?’’
இதனை நான் இருபது அடி தள்ளி; மூன்று வாயில்கள் தாண்டி இருக்கும் சமையலறைக்குள் நின்றபடி கேட்டுக்கொண்டிருந்தேன்.
*