ஈழம் அன்ன ஈழம் – 8 : திருகோணமலை
திருகோணமலை இலங்கையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறந்த இயற்கைத் துறைமுக நகரமாக விளங்குவது. வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேசுவரர் ஆலயம் மட்டுமின்றி, போர்த்துகேயர், டச்சுக்காரர், பிரித்தானியர்களால் கட்டப்பட்ட கோட்டைகளுக்கும் புகழ்பெற்றது.
ராவணன் காலம் தொட்டு நீண்ட நெடும் வரலாற்றைக் கொண்டது. பாண்டியர் ஆட்சியில் முக்கியப் பங்கு வகித்தது. அத்தோடு, தமிழர்கள், சிங்களர்கள், இஸ்லாமியர்கள் என பல்லின சமூகத்தைக் கொண்ட இலங்கையின் மிக முக்கிய சுற்றுலா மையமாக இருப்பது. இவை யாவற்றுக்கும் மேலாக விடுதலைப் புலிகள் இயக்கம், தனி ஈழ நாட்டின் தலைநகராக அறிவித்திருந்தது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நாங்கள் தங்கிய முதல் நாள் இரவு முழுக்க மழை விடாமல் கொட்டிக்கொண்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் சொன்ன நேரத்துக்கு முன்பாகவே எழுந்து குளித்துக் கிளம்பி, ஐ’யை மட்டும் கடைசியாகக் குளிப்பாட்டலாம் எனப் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தோம்.
பக்கத்து அறையில் தங்கியிருந்த நண்பர் சற்று தாமதமாகவே வந்து சொன்னார். ”மழை விடுவது போல தெரியவில்லை. அதோடு, நாம் இங்கேயே தங்கி இருப்பதும் சரியாகப் படவில்லை. புறப்பட்டு கோயிலுக்குப் போவோம். திறந்திருந்தால் பார்த்துவிட்டு வேறு எங்காவது செல்லலாம்.’’
”சரி’’ என்றுவிட்டு ஐ’யை எழுப்பிக் குளிப்பாட்டிக் கூட்டிக்கொண்டு, அங்கிருந்து சற்று தொலைவில் திருஞானசம்பந்தர் வீதி அருகே இருந்த ஓர் உணவகத்தில் போய் காலை உணவு உண்டுவிட்டு, அடுத்த பதினைந்து நிமிடத்தில் திருகோணமலை கோட்டைக்குள் இருக்கும் பிரசித்திபெற்ற கோணேஸ்வரர் கோயிலுக்குப் போனோம்.
அலை ஆர்ப்பரிக்கும் குணக் கடலையொட்டி சிறு குன்றின் மீதிருக்கும் திருக்கோணேஸ்வர் ஆலயம் இலங்கையின் மிகப் புகழ்பெற்றது. பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்று. திரிகூடம், தட்சண கைலாயம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுவது. புராண காலத்தில் ராவணனும், சங்க காலத்தில் [கி.மு. 150-ன் போது] இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளனும் வழிபட்டது.
‘குற்றமிலாதார் குரைகடல் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான்
கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்தும்
உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
சுற்றமும் ஆகித் தொல்வினை யடையார்
தோன்றுவர் வானிடைப் பொலிந்தே’
என்று திருஞானசம்பந்தரால் தேவாரத்தில் போற்றிப் பாடப்பட்டது.
மலை அடி வாரத்திலேயே ‘மான்கள் ஆங்காங்கே சுற்றித்திரியும், கவனமாக செல்லவும்’ என்று சிங்களம், தமிழ், ஆங்கிலம் மும்மொழிகளிலும் அறிவிப்புப் பலகை வைத்திருந்தார்கள்.
ஒரு பக்கம் கடுமையானக் காற்று. இன்னொரு பக்கம் விடாமல் கொட்டும் மழை. கோயிலை ஒட்டி சற்று தூரத்தில் இருக்கும் கடைத்தெரு வரைக்கும் வாகனத்தில் போய் இறங்கி, அங்கிருந்து குடை பிடித்தபடி ஐ’யை தூக்கிக்கொண்டு நானும், பின்னாலேயே மற்றொரு குடையில் மதியும் கோயிலுக்குள் போனோம்.
சிறிய கோயில்தான். எனினும், பழமையான அடையாளங்கள் ஆங்காங்கே தென்பட்டன. சென்று கொடி மரத்தருகில் நின்று உள்ளிருக்கும் கோணேஸ்வரரை வணங்கிவிட்டு, உள் பிரகாரத்தை சுற்றியபடி தெற்கு நோக்கி இருக்கும் அழகான நடராஜரையும், மாதுமையம்மையையும் வணங்கியபடி, கோயில் சுற்றுச் சுவரில் வரைந்திருக்கும் வரலாற்று ஓவியங்களை பார்த்துவிட்டு வந்து ஓரிடத்தில் ஓரமாக உட்கார்ந்தேன்.
பிறகு அங்கே சுவரில் எழுதியிருந்த, ‘நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும்‘ என்று தொடங்கிப் புறநீர்மைப் பண்ணில் ஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடலை ஒரு தடவை மெல்லிய குரலில் எனக்கும், உள்ளே இருக்கும் கோணேசுவரருக்கும் மட்டும் கேட்குமாறு பாடிவிட்டு, மறுபடியும் எழுந்துபோய் ஈசனை வணங்கினேன்.
நண்பர் அருகில் வந்து, ”கிளம்பலாமா பிரதர்?” என்று கேட்டார்.
”இருங்க பிரதர், போகலாம்” என்றுவிட்டு வெளியில் வந்து, குடை பிடித்தபடி ஆளைத் தள்ளும் காற்றில் நடந்துபோய் எதிரில் இருக்கும் பாறை அருகில் நின்றுகொண்டு, குடை பிடிக்க முடியாமல் சுருட்டிவிட்டு நனைந்தபடி அங்கிருந்த கல்லால மரத்தையும், கோயிலையும், அதையொட்டி இருக்கும் 33 அடி உயர சிவனார் சிலையையும், கீழே கொந்தளித்து ஆர்ப்பரிக்கும் கடலையும், அதன் அருகில் இருக்கும் ராவணன் வெட்டையும் பார்த்தேன். அத்தனை ரம்மியமான இடத்தை அதுவும், இத்தனை மிகுதியான புயல் காற்று மழையில் அதற்கு முன் கண்டதில்லை. அத்தோடு, தனியனாக நின்று பார்த்துக்கொண்டிருந்தது ஒருவித பரவசத்தையும், சில்லிப்பையும், சிலிர்ப்பையும் ஒருங்கே தந்தது.
சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு, வர மனமின்றி மறுபடியும் குடை பிடித்துக்கொண்டு கவனமாக நடந்து கடைத்தெரு அருகில் இருக்கும் படிக்கட்டுக்கு வந்தேன். மதியும், நண்பர் குடும்பத்தாரும் முன்னரே சென்று எனக்காகக் காத்திருந்தார்கள்.
நண்பரிடம், ”பெரிய புயல் வந்துடுச்சி நினைக்கறன்’’ என்றேன்.
‘ஆமாம்’ என்று தலையசைத்தவர், ”மழை இன்னும் கடுமையாக இருக்கும்னு சொல்றாங்க. நாம இங்கே இருந்து சீக்கிரம் கிளம்பிப் போறதுதான் நல்லது’’ என்றார்.
எனக்கும் அப்போது அதுதான் சரி என்று பட்டது. உடனே, வந்து நின்ற வாகனத்தில் ஏறி மலையிலிருந்து கீழே இறங்கினோம்.
மழை கொஞ்சம் கூட விடுவதாக இல்லை. ”செல்லும் வழியில் சில கோயில்கள் இருக்கின்றன. முடிந்தால் பார்ப்போம்’’ என்றார் நண்பர்.
சரி, என்று தலையாட்டினாலும், மனத்துக்குள் கோணேசுவரர் கோயிலையும், அதையொட்டி இருக்கும் அழகான இடங்களையும், குறிப்பாக ராவணன் வெட்டு என்று சொல்லக்கூடிய பகுதியையும் சரியாகப் பார்க்க முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. கூடவே, ”இயற்கையை எதிர்த்து நம்மால் என்ன செய்ய முடியும்’’ என்று கூறி மனத்தை சமாதானமும் செய்துகொண்டேன்.
நகரின் வெளிப்புறத்தில் வாகனத்தை ஓரிடத்தில் ஓரமாக நிறுத்திவிட்டு, ”இது ஒரு ரங்கநாதப் பெருமாள் கோயில். மழை கொஞ்சம் விட்டமாதிரி இருக்கு. வாங்க, வேகமா போய் பார்த்துவிட்டு வருவோம்’’ என்றார் நண்பர்.
வெளியில் இருந்து பார்க்கும்போதே அது மிக அண்மையில் கட்டப்பட்டது. அதுவும், கோயிலுக்கான கலைத்தன்மை எதுவும் இல்லாமல் சாதாரணக் கட்டடம் மாதிரி இருப்பது தெரிந்தது.
சரி, என்று எதுவும் சொல்லாமல் இறங்கிப் போய் வெறுமே பார்த்துவிட்டு வந்தோம்.
அடுத்ததாக நகருக்குள் இருந்த பத்திரகாளி கோயிலுக்கு போனோம். அதுவும் அண்மையில் கட்டப்பட்டதாக இருந்ததால், அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் ஏதோ போக வேண்டும் என்றுதான் போனேன். ஆனால், உள்ளே சென்றதும் விதானத்தில் ஓவியங்களுக்குப் பதிலாக அழகான சிற்பங்கள் செய்திருந்தது வியப்பாகவும்; ஈர்ப்பாகவும்; தனித்துவமாகவும் இருந்தது.
சிறிது நேரம் கீழே நின்று பார்த்தேன். பிறகு அங்கே வாசித்த நாதஸ்வர மேள இசையை ரசித்தபடி உள்ளிருக்கும் பத்திரகாளியை வணங்கிவிட்டுப் புறப்பட்டு, சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கன்னியா வெந்நீரூற்றுக்குப் போனோம்.
வனத்துக்கு மத்தியில் வாகனத்தை விட்டு இறங்கி, கடைத்தெரு வழியாக அருகில் இருந்த சிறு மலைகளையும், பெரு மரங்களையும், குரங்குகளையும், பறவைகளையும் பார்த்தபடி சற்று தொலைவு நடந்து சென்றதும், பெரிய கிணறு போன்று இருக்கும் ஒரு பள்ளத்துக்குள் சுமார் நான்கடி ஆழமுள்ள ஏழு சதுர வடிவ சிறு கிணறுகள் (அதனை தொட்டி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்) இருந்தன. ஒவ்வொன்றின் நீரும் வெவ்வேறான வெப்பநிலையைக் கொண்டிருந்தன.
இயற்கையாக உருவானதாகவும், நீண்ட காலமாக பிதிர்கடன் செலுத்தும் இடமாகவும், புராண முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மருத்துவ குணம் மிக்கதாகவும் சொல்லப்படுவது.
அந்த இடத்தையும், அதிலிருந்து வெளிப்படும் நீரையும் பார்க்கையில் செயற்கையாக எதையோ செய்துதான் ஏமாற்றுகிறார்களோ என்று தோன்றியது. இருந்தாலும் உறுதிப்படத் தெரியாமல் அவ்வாறு எண்ணுவது தவறு என்று நினைத்ததும், அந்நீரூற்று குறித்து யான் பெரிதும் மதிக்கும் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடிய பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது.
‘காதலனை பிரிந்தவளின் மனம் போல ஒன்று
கவி பாடிப் பரிசு பெறான் மனம் போல ஒன்று
தீது பழி கேட்டவன் தன் மனம் போல ஒன்று
செய்த பிழைக் கலங்குபவன் மனம் போல ஒன்று
நீதி பெறா வேழைதுயர் மனம் போல ஒன்று
நிறைபழித்த கற்புடையாள் மனம் போல ஒன்று
காது மழுக் காறுடையான் மனம் போல ஒன்று
கனலேறு மெழு நீர்கள் உண்டு கன்னி யாயில்’
எங்களைத் தவிர அங்கே ஐந்து சிங்கள இளைஞர்களும் வந்திருந்தார்கள். மேலாடையின்றி டவுசர் மட்டும் அணிந்துகொண்டு ஒவ்வொரு தொட்டியாக தண்ணீர் மொண்டு ஊற்றிக் குளித்தவர்கள், எங்களைப் பார்த்து அதிலும் குறிப்பாக, எங்களோடு இருந்த பெண்களை, எதையோ சொல்லி நக்கலடித்து சிரித்தார்கள். சிங்களம் தெரியாதபோதும் அவர்களது பேச்சொலியையும், தொடர்ந்து வந்த ஏளனச் சிரிப்பையும் வைத்து உறுதியாக அறிய முடிந்தது.
நண்பரிடம் மென் குரலில் கூறியதும் சொன்னார். ”ஆமாம் பிரதர். அவங்க நாம் தமிழ்ப் பேசுவதைக் கேட்டு வேண்டுமென்றே வம்பிழுக்கிறார்கள். இதெல்லாம் இங்கே சாதாரணம்.’’
ஒரு பக்கம் கோபமாகவும், இன்னொரு பக்கம் மிக வருத்தமாகவும் இருந்தது.
அடுத்த கொஞ்ச நேரத்திலேயே இன்னும் சில பெண்களும், ஆண்களும் கூடவே, ஒரு சிங்களப் பெண் காவலரும் வருவதைப் பார்த்துவிட்டு அந்த இளைஞர்கள் அமைதியானார்கள்.
அங்கே இருக்கப் பிடிக்காமல் மதியிடம் இருந்து ஐ’யை வாங்கிக்கொண்டு மேலே ஏறி, சற்று தள்ளி மலையடிவாரத்தில் இருக்கும் புத்தர் கோயிலுக்குப் போனேன். அங்கே துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர் ஒருவர் நின்றிருந்தார்.
சென்று புத்தரை வணங்கிவிட்டு வந்ததும் நண்பர் சொன்னார். ”அதோ, ஒரு கட்டடம் தெரியுதே… அதற்குள் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. திட்டமிட்டு அதை மூடிவிட்டு, நீங்கள் இப்போது பார்த்து வந்த புத்தரை புதிதாகக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். அதோடு, இது பெளத்தம் சார்ந்த தொன்மையான இடம் என்றும் நிறுவுகிறார்கள். இது சம்மந்தமாக பெரிய சண்டையெல்லாம் கூட நடந்திருக்கிறது. இன்னும் தீர்ந்தபாடில்லை.’’
என்ன சொல்வதென்று தெரியாமல் போய் மூடி வைத்திருந்த கட்டடத்துக்குள் இருந்த சிவனை சாளரம் வழியாகப் பார்த்து வணங்கிவிட்டு, அங்கிருந்த கால சாட்சியான முது மரங்களையும், சூழ இருந்த இயற்கையின் வனப்பையும் கண்டும் காணாமல் நோக்கிவிட்டு, திரும்பி வரும்போது பார்க்கலாம் என்று நினைத்த கடைகளைக் கூட பார்க்கப் பிடிக்காமல் வந்து வாகனத்தில் உட்கார்ந்துகொண்டேன்.
நண்பர் ஐ’க்கு அழகான வட்டத் தொப்பி ஒன்று வாங்கிவந்து தந்தார். அதை ஆசையோடு போட்டுப் பார்த்து மகிழ்ந்தான் ஐ.
பிறகு அங்கிருந்து கிளம்பி வழியில் எங்கும் நிற்காமல், மதியம் இரண்டு மணி வாக்கில் ஒரு சிங்கள உணவகத்தில் நிறுத்தி உண்டுவிட்டு, ‘சிகிரியா செல்வதா? இல்லை, யாழ்ப்பாணம் நோக்கித் திரும்பிப் போவதா?’ என்று பேசிக்கொண்டோம்.
விடாமல் பெய்யும் மழையையும், எங்கும் நிறைந்தோடும் வெள்ள நீரையும் நினைவில் கொண்டு யாழ்ப்பாணம் செல்வதே சிறந்தது என்று தோன்றியது. நண்பரும் அதை உறுதி செய்யும் விதமாக சிகிரியாவில் உள்ள தனது நண்பர் ஒருவருக்கு அழைத்து அங்குள்ள நிலவரம் குறித்துக் கேட்டுவிட்டு சொன்னார். ”தயவுசெய்து அந்தப் பக்கம் வராதீங்க… அதோடு, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, யாழ்ப்பாணம் போயிடுங்க. அதுதான் நல்லதுன்னு சொல்லிட்டார்.’’
உணவகத்தின் அருகில் இருந்த ஓடையில் வெள்ள நீர் நொடிக்கு நொடி உயர்ந்து விரைந்து ஓடுவதைப் பார்த்துவிட்டு, உடனே அங்கிருந்து கிளம்பி யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டோம்.
வழி எங்கிலும் கோரமான வெள்ள பாதிப்பு. விவசாய நிலங்கள் மட்டுமின்றி, காடுகளும், வீடுகளும், கடைகளும், கல்வி நிலையங்களும், கோயில்களும் எல்லாம் நீரில் மூழ்கிக் கொண்டிருந்தன. கூடவே, ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டு வேறு வழியாக மாற்றி அனுப்பிக்கொண்டிருந்தார்கள். சில இடங்களில் முட்டி அளவு நீரில் கடக்க வேண்டியிருந்தது.
வவுனியா தாண்டி வந்ததும் ஓரிடத்தில் வாகனங்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தன. போலீசார் தடுத்து நிறுத்தி, ”வேறு வழியாக செல்லுங்கள். சாலை முற்றாக அடித்து சென்றுவிட்டது’’ என்றார்கள்.
இப்படி நேராக; எளிதில் வர வேண்டிய பாதையில் வராமல், ஐந்து மணி நேரத்தில் அடையக்கூடிய தொலைவை, அங்கே இங்கே என்று சுற்றிக்கொண்டு, சுமார் பத்து மணி நேரம் பயணித்து யாழ்ப்பாணம் வந்து சேர இரவு பத்து மணி ஆகிவிட்டன. மூடப்போன ஓர் உணவகத்தில் போய் என்ன இருக்கிறதோ வாங்கி வேகவேகமாக உண்டுவிட்டு, சரியாகப் பதினொரு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.
உடனே மனத்துக்குள் சீரிய சிவ பக்தரான ராவணனிடம், ”உம் இடத்துக்கு வந்த எங்களை இப்படியா திருப்பி அனுப்புவது?’’ என்று கேட்டுவிட்டு, பிறகு அவர் வணங்கிய கோணேசுவரரிடம், ”பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி’’ உரைத்தேன்.
அது நிச்சயம் இருநூறு கிலோமீட்டர் தாண்டி ஆர்ப்பரிக்கும் அலையொலி கேட்டு, கடும் புயல் மழைக்கு நடுவில் எந்தச் சலனமும் இல்லாமல் குன்று மீது வீற்றிருக்கும் ஈசருக்கு கேட்டிருக்கும் என்று உறுதியாகத் தோன்றியது.
*