தலை தீபாவளி!

நண்பர் ஒருவர் கேட்டார், ”என்ன வடிவு, தல பொங்கல் எங்கக் கொண்டாடப் போற?’’. நான் சொன்னேன், ”தல தீபாவளியே நாங்க எல்லார மாதிரி கொண்டாடாம… மனசுலப் பட்டமாதிரி கொண்டாடினோம். அப்படித்தான் எங்க தல பொங்கலும் இருக்கும்’’. ”சரி சரி’’ என்றுவிட்டு கடந்து போனார்.
உண்மையில் எங்கள் தலை தீபாவளியை எப்படிக் கொண்டாடப் போகிறோம் என்ற எண்ணம் முன்தினம் மாலை வரைக்கும் இல்லை. சட்டென இருவரின் மனத்தில் தோன்றுவதை செய்யலாம் என்று மட்டும் நினைத்தோம். அதன்படி ஒரு பெட்டி நிறைய இருந்த விதவிதமானப் பட்டாசுகளை எடுத்துப் பத்தாகப் பிரித்தோம். ஒரு பெரிய கட்டைப் பையில் அதைப் போட்டெடுத்துக்கொண்டு மனம் போன தெருக்களில் நடந்தோம்.
எங்கெங்கும் பெருங்கூட்டம் அலைமோதியது. யாவும் புத்தாடை, இனிப்பு, பட்டாசு வாங்கக் குவிந்த கூட்டங்கள். அவர்களுக்கு மத்தியில் ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாக சில முகங்கள். எவ்வித கொண்டாட்ட அறிகுறியும் இன்றி தங்கள் அன்றாட வயிற்றுப் பாட்டுக்காக இருப்பவர்களை நோக்கி கையேந்திக் கொண்டிருந்தனர். அதிகமும் மூன்று முதல் பன்னிரண்டு வயதுடைய சிறார்கள். ஒவ்வொருவரிடமும் ஒரு பட்டாசுப் பையைத் தந்தோம். சற்றும் எதிர்பாராதவர்கள், ”இது என்ன?’’ என்று கேட்டார்கள். சொன்னோம். அவ்வளவு மகிழ்ச்சி அவர்களது முகத்தில்.
ஒன்றரை மணிநேரம் சுற்றி வந்ததில் ஏழு குழந்தைகளிடம் ஏழு பைகளைத் தந்துவிட்டோம். இன்னும் மூன்று மட்டுமே பாக்கி. ‘சரி, நாளை எதிர்படுவோரிடம் தரலாம்’ என எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தோம்.
தலை தீபாவளி, தலை பொங்கல், தலை ஆடிப்பெருக்கு மூன்றும் திருமணமான புதுத் தம்பதிகள் வாழ்வில் அவசியம் கொண்டாட வேண்டியவை என்பார்கள் ஊரில். அதுவும் பெண் வீட்டில். அதிகாலை எழுந்து எண்ணெய்த் தேய்த்து தலைகுளித்து புத்தாடை அணிந்து சாமி கும்பிட்டுவிட்டு விதவிதமான உணவுகள் உண்டு சுற்றத்தோடு பேசி மகிழ்ந்து குலாவி இருக்க வேண்டும் என்பது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம்
நாங்களோ பெண் வீட்டாரை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். நிச்சயம் பெண் வீட்டில் போய் எல்லோரையும் போல் கொண்டாட வாய்ப்பே இல்லை. எங்கள் வீட்டுக்கு சென்று கொண்டாடியிருக்கலாம். ஏனோ அது சரியாகப் படவில்லை. அதனால் அவ்வெண்ணத்தை விட்டுவிட்டு, எங்களுக்குப் பிடித்ததுபோல் கொண்டாடலாம் என நினைத்து தீபாவளியன்று அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து குளித்துக் கிளம்பி முதல் மின்சார ரயிலில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை போய் பேருந்தில் சீகாளத்தி என்னும் காளஹஸ்தி செல்லலாம் என முடிவெடுத்தோம்.
முன்னிரவு முதல் விடாது கொட்டித் தீர்க்கும் மழை விடுவதாகத் தெரியவில்லை. குடை பிடித்துக்கொண்டு பல்லாவரம் ரயில் நிலையத்திற்குச் சென்றோம். பயணச்சீட்டு அலுவலகம் இன்னமும் திறக்கப்படாமல் இருந்தது. காத்துக் காத்துப் பார்த்தோம், திறப்பதாகத் தெரியவில்லை. அடுத்தடுத்து வந்த நான்கைந்து பேர் சத்தம் போட்டு அழைத்ததும் உள்ளிருந்த பெண் எழுந்து விளக்கைப் போட்டு ‘இன்னிக்கி சண்டே சர்வீஸ். மொத வண்டி நாலே முக்காலுக்குதான்’ என்றார். கிட்டத்தட்ட அரை மணிநேரம் தாமதம். சரி, எனக் காத்திருந்து பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு போய் மழையோடு முதல் ரயிலில் ஏறிக் கொண்டோம்.
மொத்தச் சென்னையும் திகட்டத் திகட்டக் குளித்துக் கொண்டிருந்தது மழையில். சென்ட்ரல் ரயில் நிலையம் அடைந்ததும் சூலூர்பேட்டை செல்லும் ரயில் ஒன்று புறப்படத் தயாராக இருந்தது. ஓடிப்போய் ஏறிக்கொண்டோம். பெரிதாகக் கூட்டம் இல்லை என்றாலும் ஓரளவுக்கு இருந்தார்கள். அதிகமும் ஆந்திரர்களும், ஆந்திர எல்லையை ஒட்டிய தெலுங்கு பேசும் தமிழர்களும் என்பது அவர்கள் முகத்தையும் பேச்சையும் வைத்தே தெரிந்தது.
ரயிலில் ஒரு குட்டித்தூக்கம் போட்டேன். குளிருக்கு இதமாக அதுவும் அதிகாலையில் ரயில் பயணத்தில் உறங்கியது அத்தனை அலாதியாக இருந்தது. மெல்ல வானம் வெளுக்கத் தொடங்கியது. எனினும் மழை விடுவதாக இல்லை. முன்னிரவு ஆரம்பித்தது. பல்லாவரத்திலிருந்து சூலூர்பேட்டை சென்று இறங்கும் வரைக்கும் கூடவே வந்தது. மழையோடு நாம் செல்வதும் அல்லது மழை நம்மோடு வருவதும் அனுபவிக்கும்தோறும் சில்லிப்பையும் சிலிர்ப்பையும் உண்டாக்குவது.
சூலூர்பேட்டையில் இறங்கியதும் முதலில் கண்ணுக்குப் பட்டது, எவ்வித கொண்டாட்ட மனநிலையும் இல்லாத சிறுவன் ஒருவன். அவனுக்கு இன்று தீபாவளி என்பது தெரியுமா? என்றே சந்தேகமாக இருந்தது. உடனே பையிலிருந்த பட்டாசுக் கவரில் ஒன்றை எடுத்துப்போய் அவனிடம் தந்து, ”பட்டாசு’’ என்றேன். கண்கள் அகலவிரிய வாங்கியவன், ”ஓ! பட்டாசு’’ என்று மகிழ்ச்சியோடு சொல்லிவிட்டுப் போய் அருகிலிருந்த குழாயில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த தன் தங்கையிடம் நீட்டினான்.
இருவரும் எங்களைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தார்கள். பதிலுக்கு நாங்களும் புன்னகைத்துவிட்டு வெளியில் வந்து ஓர் உணவகத்தில் காலையுணவு சாப்பிடப் போனோம். கூட்டம் அதிகமாக இருந்தது. அதிலும் மிகுதி ஆந்திரர்கள். நான்கைந்து தடவை எங்களுக்கான உணவைக் கேட்டும் தராமல் பின்னால் வந்தவர்களுக்கெல்லாம் தந்துகொண்டிருந்தார்கள். தமிழ்முகம், தமிழ்ப்பேச்சு எனக் கண்டுகொண்டதால் இருக்குமோ என நினைத்துக் கொண்டு கோபத்துடன் எழுந்து வெளியில் வந்தோம்.
மழை ஓரளவுக்கு விட்டிருந்தது. அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்து சாலைக்கு வந்ததும் ஒரு தள்ளுவண்டிக் கடை கண்ணில் பட்டது. சென்று ஆளுக்கு மூன்று இட்லியும், ஒன்றரை வடையும் சாப்பிட்டோம். நன்கு காரசாரமாக இருந்தது. இட்லி ஐந்து ரூபாய், மூன்று வடை பத்து ரூபாய் என்றார்கள். தந்துவிட்டு பேருந்து நிலையம் எதிரில் இருந்த தேநீர் கடைக்கு வந்தோம். ஏற்கனவே ஒருதடவை அங்கே வந்து குடித்ததாக மதியிடம் சொன்னேன். ”நீங்க எங்கதான் போய் இன்னும் டீ குடிக்கல?’’ என்றாள் பதிலுக்கு.

மிகச் சுவையானத் தேநீர். அதுவும் வித்தியாசமான சிறு கண்ணாடிக் குவளையில் தந்தார்கள். ரசித்துக் குடித்துவிட்டு பேருந்து நிலையத்துக்கு வந்து சீகாளத்தி செல்லும் பேருந்துக்காக காத்திருந்தோம். வெளிரிய முகத்துடன் ஒரு சிறுமி வந்து கை நீட்டினாள். திரும்பி மதியைப் பார்த்தேன். இது அவள் தவணை என்பதால் (ஆளுக்கு ஒருவருக்கு பட்டாசு தரவேண்டும் என்பது எங்கள் திட்டம்) ஒரு பட்டாசுப் பையை எடுத்துத் தந்தாள். வாங்கிக்கொண்டு சற்று தள்ளி இருந்த தன் அம்மாவிடம் ஓடிப்போய் காட்டினாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் பேருந்து வந்தது. ஓர் ஒழுங்குமின்றி அடித்துப்பிடித்து ஏறிக்கொண்டார்கள். கடைசியாக ஏறி தனித்தனியாக ஆளுக்கோர் இடத்தில் உட்கார்ந்து கொண்டோம். மிக மோசமான சாலை. ஆனால் இரு பக்கமும் அழகான இயற்கை காட்சிகள். நல்லதைக் கொண்டு அல்லதை விடல் போல, அழகிய காட்சிகளை ரசித்துக்கொண்டு குண்டும் குழியுமான சாலைப் பயணத்தை சகித்துக் கொண்டோம்.
முன்னமே ஒருதடவை சீகாளத்தி வந்திருக்கிறேன். மதியும் தம் பெற்றோரோடு இருதடவை வந்ததாகச் சொன்னாள். மிகப் பிரமாண்டமானக் கோயில். பல சிறப்புகளைக் கொண்டது. தென்கயிலாயத் தலங்களுள் முதன்மையானது. பொன்முகலி நதிக்கரையில், அழகிய திருக்காளத்தி மலையடிவாரத்தில், கல்லால மரத்தையும் மகிழ மரத்தையும் தலவிருட்சமாகக் கொண்டது. ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் வந்து பாடி வழிபட்டது. ‘வாய்கலசமாக வழிபாடு செய்யும் வேடன் மலராகு நயனம், காய்கணையினாலிடந்து ஈசனடி கூடு காளத்தி மலையே’ எனத் திருஞானசம்பந்தர் சிறப்பித்துப் பாடியது.
பையையும் செருப்பையும் நகர்பேசியையும் அதற்கான இடங்களில் வைத்துவிட்டு கோயிலுக்குள் நுழைந்தோம். தீபாவளித் திருநாள், அதிலும் அமாவாசையுடன் கூடிய நன்நாள் என்பதால் நோம்பிருக்கும் கூட்டம் வழிந்துகொண்டிருந்தது.
வரிசையில் நின்று மெல்ல ஒவ்வோர் அடியாக உள்ளே சென்று பேரழகு நிறைந்த பெருங்கற்கோயிலை வியக்க வியக்க ரசித்துக்கொண்டு கொடிமரத்தை வணங்கிவிட்டு காளத்திநாதர் வீற்றிருக்கும் கருவறை முன் போய் நின்றோம். அத்தனை அழகான சிவலிங்கம். பஞ்ச பூத தலங்களில் காற்றைக் குறிக்கும் விதமாக கருவறையில் எரியும் தீபம் காற்றால் மோதப்பெற்றதுபோல் அசைந்துகொண்டிருந்தது. சில நொடிகளே கண்டாலும் அத்தனை அழுத்தமாக மனத்துக்குள் பதிந்துகொண்டது.
அங்கிருந்து வர மனமின்றி வெளிப்பிரகாரம் வந்து அங்குள்ள சிறுதெய்வங்களையும், சிற்பங்களையும், தூண்களையும் அவற்றின் கலைநேர்த்தியையும் பார்த்துக்கொண்டு ஓரிடத்தில் போய் உட்கார்ந்தோம். மலரலங்காரம், விளக்கலங்காரம் எனக் கோயில் முழுக்க திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து போனபோதும் எங்கிலும் சுத்தம். அவ்வளவு நேர்த்தியாக ஒரு கோயில் பராமரிக்கப்படுவதை வேறெங்கும் நான் கண்டதில்லை.
பின் மெல்ல எழுந்து போய் ஞானப்பூங்கோதை தாயார் சன்னதிக்குள் நுழைந்து வணங்கிவிட்டு அங்கே வெளியில் நுழைவாயில் அருகில் மேற்புறம் இருக்கும் ரம்மியமான விதானத்துச் சித்திரங்களைப் பார்த்து ரசித்துவிட்டு, அக்கோயில் பற்றி எங்களுக்குத் தெரிந்த சொர்ப்ப தகவல்களை பகிர்ந்துகொண்டு வெளியில் வந்தோம்.
சீகாளத்தி – சிலந்தி (சீ), பாம்பு (காளம்), யானை (அத்தி) மூன்றும் வந்து வணங்கிய தலம் என்பதால் உருவானக் காரணப் பெயர். ஆனால் பின்னாளில் சீ ஸ்ரீ ஆகி ஸ்ரீகாளத்தி என்றும், ஸ்ரீகாளஹஸ்தி என்றும் மாறிப்போனது நினைத்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.
கோயில் முன்புறம் மிக அழகான அறுபதடி உயர ஒற்றைக்கல் கொடிமரமும், அங்கிருந்து சற்று தூரத்தில் ஓர் உயரமான சிறு ஊஞ்சல் மண்டபமும் இருப்பதைப் பார்த்து மதி, ”செமையா இருக்குல்ல…’’ என்றாள். ”ஆமாம்’’ எனச் சொல்லிவிட்டு போய் அவ்வூஞ்சல் மேடைப் படிக்கட்டில் இருவரும் உட்கார்ந்து கொண்டோம்.

பின் கோயில் முன்பக்கம் உள்ள மிகப்பெரிய அன்னதானக் கூடத்தில் மிகச் சுவையான மதிய உணவினை (ஏதோ எங்களுக்காகவே, அதுவும் எங்கள் தலை தீபாவளிக்காக ஊரையே கூப்பிட்டு உட்காரவைத்து சாப்பாடு போட்டதுபோல் இருந்தது) உண்டுவிட்டு அருகிலிருந்த திருக்காளத்தி மலைமேல் ஏற ஆரம்பித்தோம்.
ஒவ்வொரு படியாக ஏறஏற பொத்தப்பி நாட்டின் உடுப்பூர் என்னும் ஊரில் நாகனுக்கும் தத்தைக்கும் பிறந்த திண்ணன் என்கிற வேடர் குலத் தலைவன் தன் சகாக்கள் நாணன் காடன் இருவரோடு ஒரு பன்றியை வேட்டையாடத் துரத்திக்கொண்டு இவ்விடம் வந்ததும், அதை வேட்டையாடி முடித்ததும் தனக்கு தாகம் எடுப்பதாக சொன்னதும், பின் இம்மலையைப் பார்த்துவிட்டு நாணனிடம் அங்கே செல்லலாம் என்றதும், அதற்கு நாணன் அங்கே போனால் கோணமில் குடுமித்தேவர் இருப்பர் கும்பிடலாம் எனச் சொல்ல… தாகம் மறந்து தன்னை மறந்து ஊர் மறந்து உறவு மறந்து அன்புருவாகி மலையேறி குடுமித் தேவரைக் கண்டு வணங்கியதும், அவருக்காக தினந்தோறும் விருப்புற வேட்டையாடி உணவுவெடுத்து வந்து தந்ததும், அதை அவர் விரும்பி உண்டதும், உறங்காது விழித்திருந்து இரவெல்லாம் அவருக்காக காவல் காத்ததும், இங்கே நாள்தோறும் வழிபாடு செய்யவரும் தவமுடைய முனிவர் சிவகோசரியார் மாமிசத் துண்டுகள் சிதறிக்கிடப்பதைக் கண்டு வருத்தமுற்றதும், அதனால் அவர் கனவில் சென்று குடுமித்தேவர் திண்ணனின் ஒப்பிலா அன்பைச் சொல்லி அடுத்தநாள் அவனது பக்தியைக் காட்ட அவரை மறைந்திருக்கச் சொன்னதும், அப்போது வேட்டையாடிய உணவை எடுத்துவந்த திண்ணன் குடுமித்தேவரின் ஒரு கண்ணிலிருந்து இரத்தம் வழிவதைக் கண்டு கலங்கிப்போய் யாது செய்வதென்று தெரியாது தன் ஒரு கண்ணைத் தோண்டி அவ்விடத்தில் அப்ப ரத்தம் நின்றதும், உடனே மற்றொரு கண்ணிலிருந்து ரத்தம் வருவதைப் பார்த்து தன் காலை அவ்விடத்தில் அடையாளத்திற்கு வைத்துக்கொண்டு தனது மற்றொரு கண்ணைத் தோண்டப் போகையில் ‘நில் கண்ணப்பா’ என்று குடுமித்தேவர் குரல் கொடுத்து தன் கைகளால் அவன் கையைப் பிடித்துத் தடுத்ததும் மனமானது நெக்குருக எண்ணிப் பார்த்தது.
மலை உச்சியில் கண்ணப்பருக்கும் குடுமித்தேவருக்கும் சிறு கோயில் இருந்தது. வணங்கிவிட்டு அங்கிருந்த மரத்தடி கல்மீது போய் உட்கார்ந்து சுற்றிலும் தெரியும் மலைகளையும், நீண்டோடும் பொன்முகலி ஆற்றையும், காளத்திநாதர் கோயிலையும், ஊரையும் பார்த்து ரசித்துவிட்டு, அருகில் மிகப் பிரம்மாண்டமான சிவன் – பார்வதி சிலைகள் எழுப்பி வருவதை அதனருகில் சென்று கண்டுவிட்டு ஒளிப்படம் எடுத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தோம்.

இன்னொரு தடவை கோயிலுக்குள் சென்று வரவேண்டும் போலிருந்தது. மதியை அங்கிருந்த ஊஞ்சல் மண்டபப் படிக்கட்டில் உட்கார வைத்துவிட்டு தனியாக உள்ளே போய் இம்முறை இன்னும் கூடுதல் நேரம் காலத்திநாதரையும் ஞானப்பூங்கோதையரையும் தரிசித்துவிட்டு கோயிலை ஒருதடவைக்கு இரு தடவை நன்றாகச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தேன்.
மெல்ல இருள் கவிந்து கொண்டிருந்தது. வேகமாக நடந்து பேருந்து நிலையம் வந்து அங்கே எதிர்பட்ட சிறுவனிடம் கடைசிப் பட்டாசுப் பையை தந்துவிட்டு, சென்னை செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தோம். ஒருமணி நேரமாகியும் ஒருபேருந்து கூட வரவில்லை. ”சரி, என்ன செய்யலாம்?’’ என அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் கேட்டேன். ”நாயுடுபேட்டை போனால் அடிக்கடி சென்னை செல்லும் பேருந்து வரும்’’ என்றார். ”சரி” என அடுத்து வந்த நாயுடுப்பேட்டை போகும் பேருந்தில் ஏறிக்கொண்டோம்.
சற்று தாமதமாகத்தான் பேருந்தில் நடத்துனர் என ஒருவர் இல்லை என்பதை கவனித்தோம். பார்த்தால் ஒவ்வொருவராக எழுந்து போய் ஓட்டுனரிடம் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு வந்தார்கள். பேருந்தையும் இயக்கிக்கொண்டு பயணச் சீட்டையும் தந்துகொண்டு ‘உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணிப்பது’ என்பார்களே, அப்படித்தான் இருந்தது அவரைக் கண்டதும்.
நாயுடு பேட்டை வந்து இரவு உணவை அருகில் உள்ள ஓர் உணவகத்தில் உண்டுவிட்டு, சென்னை – மாதவரம் செல்லும் பேருந்தில் ஏறினோம். சரியாக பதினோரு மணிக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து கோயம்பேடு போக பேருந்து எதுவுமில்லை. சாலையின் மறுபக்கம் போய் நின்றால் வரும் என்றார்கள். சென்று நின்றோம். அடுத்த பத்து நிமிடத்தில் ஒரு சொகுசுப்பேருந்து வந்தது. எங்களிடம் இருபத்தி மூன்று ரூபாய் கட்டணம் வாங்கிக்கொண்ட நடத்துனர், பக்கத்தில் உட்கார்ந்து வந்த வேற்றுமொழிக்காரரிடம் அதே இடத்துக்குச் செல்ல இருபத்தி ஏழு ரூபாய் வாங்கிக் கொண்டார். ‘அடப் பன்னடையே’ என நினைத்துக்கொண்டேன்.
கோயம்பேடு வந்து அங்கிருந்து தாம்பரம் செல்லும் பேருந்தில் ஏறி பல்லாவரத்தில் இறங்கி வீட்டுக்கு சரியாக நள்ளிரவு ஒரு மணிக்கு வந்தோம். பெரும் புகைமண்டலத்துக்கு நடுவிலும் வானம் லேசாகத் தூறிக்கொண்டிருந்தது.
கதவைத் திறந்து நடுவீட்டுக்குள் வந்து நின்றதும் மதியிடம் கேட்டேன், ”எப்படி இருந்தது நம்ம தல தீபாவளி?’’. நொடியும் தாமதிக்காமல், ”இந்த உலகத்துலயே நம்மள மாதிரி யாரும் இவ்வளவு அழகா ஒரு தல தீபாவளி கொண்டாடியிருக்க மாட்டாங்க’’ என்றாள். ‘ஆமாம்’ என மெல்லத் தலையாட்டிப் புன்னகைத்தேன். பதிலுக்கு அவளும் புன்னகைத்து என் கையைப் பிடித்துக்கொண்டாள்.
*