ஐயா (எ) 95 வயது குழந்தை! – 1

”ஐயாவுக்கு விமானத்துல போக ஆசை;
அம்மாவுக்கு ரயில்ல போக ஆசை;
ரெண்டுபேருக்கும் வேலூர் தங்கக்கோயிலுக்குப் போக ஆசை;
எனக்கு அவங்களோட ஆசைகள நிறைவேத்தணும்னு ஆசை.’’
ஆம்! நிறைவேறியது; நிறைவேற்றினேன்; பெரிதும் மகிழ்ந்தார்கள்; அதைவிடப் பெரிதாய் மகிழ்ந்தேன் யான்.
நமக்கானவர்களை மகிழ்விக்கையில் உருவாகும் மகிழ்வே வாழ்வின் அதி உன்னத மகிழ்வென்பேன். அந்த வகையில் இது என் வாழ்நாளின் மிக முக்கிய மகிழ்வு; நிகழ்வு.
கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி ஐயாவுக்கு (தந்தைக்கு) 94 ஆவது பிறந்தநாள். சிறு வயது முதல் ஒவ்வொருநாளும் ஓயாது விவசாயம் பார்த்து அதில் கிடைக்கும் கொஞ்ச நஞ்சத்தைக் கொண்டு சோறூட்டி சீராட்டி எங்கள் (ஐந்து மகன்கள். ஒரு மகள். நான் கடைசி மகன்) ஆசைகளையெல்லாம் கேட்டறிந்து, தன்னால் முடிந்த மட்டும் கஷ்டப்பட்டுப் போராடி நிறைவேற்றிய ஐயாவின் இந்த பிறந்தநாளுக்கு, அவர் சற்றும் நினைத்துப்பார்க்காத ஆச்சர்யப் பரிசு ஒன்றினைத் தரவேண்டும் என பல நாட்களாக யோசித்துவந்தேன். அதில் உதித்த ஓர் ஐடியாதான் ‘ஐயாவயும் அம்மாவயும் விமானத்துல கூட்டிட்டுப் போகணும்’ என்பது.
இதற்கான ஏற்பாடுகளை ஒருபக்கம் செய்தவாறு, இதுபற்றி எக்காரணம் கொண்டும் யாருக்கும் தெரியாமல், குறிப்பாக ஐயாவுக்கும் அம்மாவுக்கும் வீட்டில் உள்ளோருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டேன். முதலில் அவரது பிறந்தநாளான செப்டம்பர் ஒன்றாம் தேதிதான் விமானத்தில் கூட்டிப்போகவேண்டும் என நினைத்திருந்தேன். வார இறுதிநாள் உள்ளிட்ட சில காரணங்களால் அன்றைய தினம் விமானச் சீட்டு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இருந்தாலும் அவர் பிறந்த மாதத்தில் இதைச் செய்யவேண்டுமென நினைத்து செப்டம்பர் பதினாறாம் தேதி மதியம் 1.20 மணி, ‘ஏர் இந்தியா’ விமானத்தில் நான், ஐயா, அம்மா மூவரும் சென்னையிலிருந்து கோவை செல்ல முன்பதிவு செய்தேன்.
அந்நிமிடம் முதல் ஒரு பக்கம் பதட்டமும், ஒரு பக்கம் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளும் மனத்தில் தொற்றிக்கொள்ள… ஒவ்வொரு நாளையும் ஆவலோடு எண்ணத்தொடங்கினேன். ஒவ்வோர் இரவும் என் நுங்கம்பாக்கம் அறையின் மொட்டை மாடியில் நின்று வானில் பறக்கும் விமானங்களைப் பார்த்து ‘இன்னும் பத்து நாள்ல நாங்களும் பறக்கப்போறோம்’, ‘இன்னும் ஒன்பது நாள்ல நாங்களும் பறக்கப்போறோம்’ என்று நாள்தோறும் சொல்லிக்கொண்டிருந்தேன்.
கோயிலுக்கு, தெருக் கூத்துக்கு, காட்டுக்கு, நிலத்துக்கு, மலைக்கு, விறகு வெட்ட, ஏர் ஓட்ட, பயிரிட, தண்ணீர் பாய்ச்ச, அறுவடை செய்ய, மாடு மேய்க்க… என எத்தனையோ இடங்களுக்கு சிறு வயது முதல் ஐயாவுடன் பயணித்திருக்கிறேன். ஆனால் இந்த விமானப் பயணம் கொஞ்சம்கூட நினைத்துப்பார்க்காதது; காலம் நிகழ்த்துவது; ஒரு கனவைப் போல, கவிதையைப் போல.
பயண நாள் நெருங்க நெருங்க தவிப்புடன்கூடிய எதிர்பார்ப்பு இன்னும் இன்னும் அதிகரித்தது. சரியாக இரு தினங்களுக்கு முன்பு வீட்டுக்கு நகர்பேசியில் (கைப்பேசி) அழைத்து அண்ணனிடம் ‘ஐயாவயும் அம்மாவயும் ஞாத்திக்கெழம மெட்ராஸ் கூட்டிட்டு வரலாம்னு இருக்கன். காலில ஆறு மணிக்கு சிவா (நண்பன்) வருவான் கூட்டிட்டுப் போவ’ என்றேன். அவரும் ‘சரி’ என்றார்.
அடுத்த நாள் விமானப் பயணம். மாலை ஐந்து மணி இருக்கும்; வீட்டுக்கு அழைத்து ஐயாவிடமும் அம்மாவிடமும் ‘காலில ரெடியா இருங்க. உங்க ரெண்டுபேரயும் மெட்ராஸ்க்கு கூட்டிட்டு வரப்போறன். சிவா காரெடுத்துட்டு வருவான். ஏறி வந்துடுங்க, நான் மெட்ராஸ்ல உங்களுக்காக காத்துட்டு இருப்பன். மறக்காம கூட ஓட்டர் ஐடி கார்டு, இல்லன்னா ஆதார் கார்டு எடுத்துட்டு வாங்க. மெட்ராஸ்ல அதெல்லாம் தேவப்படும்’ என்று மட்டும் நைசாகச் சொல்லி வைத்துவிட்டேன்.
இரவு முழுக்க தூக்கம் வரவில்லை. பயணம் எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும். ஐயாவுக்கும் அம்மாவுக்கும் நல்ல முறையில் உடல் ஒத்துழைக்க வேண்டும் என்றெல்லாம் யோசித்தவாறே படுத்துக்கிடக்க பொழுது தூங்காமலேயே விடிந்தது. ஐயாவும், அம்மாவும் காரில் ஏறியது தொடங்கி, எங்கே நிறுத்தி காபி, டீ வாங்கித் தரவேண்டும், எங்கே காலை உணவு சாப்பிட வேண்டும், சாப்பிட்டார்களா என ஒவ்வொரு தகவலையும் நண்பனிடம் நகர்பேசியில் கேட்டறிந்தவாறே விமான நிலையம் புறப்பட்டேன்.
காலை 10.30 மணிக்கு விமான நிலையம் வந்துவிடுவார்கள் என்பதால்… மிகக் குறிப்பிட்ட சில நண்பர்களை மட்டும் வழியனுப்பி வைக்கவும், ஐயா அம்மாவை சந்தித்துப் பேசவும் விமான நிலையம் வரச்சொல்லியிருந்தேன். நான் சரியாக பத்து மணிக்கு தோழியுடன் விமான நிலையம் சென்றடைய, 10.30-க்குள் ஒவ்வொரு நண்பர்களும், தோழிகளும் வந்து சேர்ந்தார்கள். சரியாக 10.25-க்கு ஐயாவும் அம்மாவும் விமான நிலையத்தில் வந்திறங்க… அவர்களை மகிழ்வோடு வரவேற்று அங்குள்ள இருக்கையில் அமரவைத்து பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு என் சிறு வயது வாழ்க்கை, குடும்பச் சூழல், பட்ட கஷ்டங்கள், நான் படித்தது, இப்போது பாடலாசிரியர் ஆகவேண்டும் என்ற கனவோடு போராடிக்கொண்டிருப்பது என நீள… மணி 11.30-ஐ தொட்டதும் விமான நிலையத்தின் உள்ளே செல்லத் தயாரானோம். வந்திருந்த நண்பர்களும் நண்பிகளும் ஐயா அம்மாவிடம் ஆசி பெற்று, புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்வோடு எங்களை வழியனுப்பி வைத்தனர்.
‘கோழிக்கூவும் முன்ன எழுந்து, நீசத் தண்ணிக் குடிச்சிட்டு, மாட்டப் புடிச்சிக்கிட்டு, பொடி நடையா நடந்து, விடியறதுக்குள்ள கொல்லைக்குப்போய், ஏர் பூட்டி உழுது, ஆறு மாசம் கெணத்துத் தண்ணிய நம்பியும், ஆறு மாசம் வானத்தப் பாத்தும் வெதச்சி, அறுவட செஞ்சி, கூலியாளுக்குப் போக சாப்பாட்டுக்குக் கொஞ்சமும், வெதைக்கக் கொஞ்சமும் எடுத்துக்கிட்டு, மிச்சம் மீதி இருந்தா அத கொஞ்ச நஞ்ச வெலைக்கு வித்துட்டு, அடுத்தடுத்து பயிர் செஞ்சி, நெலத்தோடயும், காட்டோடயும், ஆடு மாடு கோழி கொழந்த சொந்த பந்தம் மக்க மண்ணுன்னு, ஓய்வறியாம, ஒரு நாளும் சும்மாப் படுத்துக்கெடந்து பொழுதப் போக்காம, இந்த 94 வயசுலயும் தெனமும் காலையில எழுந்து ரெண்டு கிலோ மீட்டர் நடந்துபோய் கொல்லையிலக் கட்டியிருக்க மாட்டப் புடிச்சிக் கட்டி, அதுக்கு தண்ணிக் காட்டி, தன்னால முடிஞ்ச சின்னச் சின்ன வேலையயும் செய்துக்கிட்டு, மண்ணோடயும் மக்களோடயும், சந்தோசமா மன நிறைவா வாழுற ஒரு கிராமத்து மூத்த விவசாயி, தன்னோட தேய்ஞ்சுபோனக் காலோடவும், மண் கரைபட்ட வேட்டி சட்டையோடயும், பெரிய பெரிய செல்வந்தர்களும், அரசியல் சினிமா பிரபலங்களும், பணபலம் படைச்சவங்களும் மட்டுமே அதிகமா வந்துட்டுப் போற விமான நிலையத்துக்குள்ள கம்பீரமா நொழையிறக் காட்சி இருக்கே அதப் பாக்கக் கொடுத்து வச்சிருக்கணும் கொடுத்து’. ஆம்! நான் கொடுத்துவைத்தவன் தான்.

விமான நிலைய சோதனைகள் விதிமுறைகள் என ஒவ்வொன்றாக முடித்துவிட்டு, விமானப் புறப்பாடு வாயிலருகே சென்று இருக்கையில் விமானங்கள் இறங்குவதும் ஏறுவதும் தெரிவது போல் அவர்களை அமரவைத்தேன். நடப்பது கனவா இல்லை நனவா என்பதறியாது சிறு குழந்தைகள் போல் இருவரும் சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஏற்கனவே ஆறு தடவை நான் விமானத்தில் பயணித்தவன் என்பதால் எதையும் வேடிக்கை பார்க்காமல் ஐயாவையும் அம்மாவையும் அவர்கள் கொள்ளும் மகிழ்ச்சியையும் மட்டுமே ரகசியமாக வேடிக்கை பார்த்து உள்ளுக்குள் மகிழ்ந்துகொண்டிருந்தேன்.
‘வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த கஷ்டங்கள், எதிர்கொண்ட அவமானங்கள், உழைத்த உழைப்பு, செய்த தியாகம் எல்லாம் நான் அறிவேன் ஐயா.
அடுத்த வேளை சோத்துக்கு வழி இல்லாத வறுமை நிலையிலும், அதை நீங்கள் மட்டும் பசியோடு ஏற்றுக்கொண்டு வெளியே காட்டிக்கொள்ளாமல் மகிழ்ச்சியோடு எங்களின் பசியைப் போக்கினீர்கள்.
மழை பெய்கையில் எல்லாம் வீட்டுக்குள் ஆங்காங்கே ஒழுகும். அதனால் எங்கள் உறக்கம் சிறிதும் கெடக்கூடாதென இரவு முழுக்க விழித்திருந்து பாத்திரம் வைத்து அது நிரம்ப நிரம்ப வெளியில் ஊற்றி எங்களைத் தூங்க வைப்பீர்கள். அதையெல்லாம் நினைக்கையில் கண்ணீர் வரும்.
எவ்வளவு வறுமை நிலையிலும் என் மகன் பட்டம் படிக்கவேண்டும் என நினைத்தவர் நீங்கள். அதைச் செய்து காட்டியவர் நீங்கள். அதை ஊரெல்லாம் சொல்லிப் பெருமைப்பட்டவர் நீங்கள். உங்களின் நிலையையும், குடும்பச் சூழலையும் புரிந்துகொண்டதால் தான் இளங்கலைப் பட்டம் முடித்தவுடன் ‘இனி நானே படிச்சிக்கிறன்’ என பிடிவாதமாகச் சொல்லி.. கல்விக் கடன், பார்ட் டைம் வேலையென கஷ்டத்தை இஷ்டமாக்கிக்கொண்டு இரண்டு முதுகலைப் பட்டம் வரை முடித்தேன்.
‘பழசையெல்லாம்’ நீங்கள் கூட மறக்கலாம். ஆனால், ஒருபோதும் நான் மறக்கமாட்டேன் ஐயா.’
சட்டென ஐயாவின் கையில் விமானச் சீட்டைக் கொடுத்து ”இதான் ஃப்ளைட் டிக்கெட்” என்றேன். அந்த நிமிடம் வரை நான் வெறும் விமான நிலையம் சுற்றிக்காட்டத்தான் கூட்டிவந்தேன் என நினைத்தவர், ”நாம பிளைன்ல போறமா?” என்றார் வெள்ளந்தியாக. ‘ஆமாம்’ என தலையாட்டியதும்… அவரும் அம்மாவும் கொண்ட மகிழ்வை வார்த்தைகளால் ஒருபோதும் சொல்லிவிட முடியாது.

பணம், பதவி, அந்தஸ்துக்காக, சில நிமிடம் குடும்பத்தினருடன் உட்கார்ந்து நிம்மதியாகச் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் (அப்படிச் சொல்லிக்கொண்டு) அவசர அவசரமாக எங்கெங்கோ ஓடிக்கொண்டிருக்கும் இந்த அவசர யுகத்தில்… தன்னைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய வயதான பெற்றோருடன் உட்கார்ந்து பேசவும், சாப்பிடவும், அவர்களின் நலம் விசாரிக்கவும், விருப்பு வெறுப்புகள் கேட்டறியவும் இங்கு 99 சதவிகிதம் பிள்ளைகளுக்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால், யாரென்று தெரியாத ஒருவருடன் நட்பு உருவாக்கவும், பேசவும், அவர்கள் இடும் பதிவுகளுக்கும், புகைப்படங்களுக்கும் முகநூலில் லைக், கமெண்ட் இடுவதற்கும் மட்டும் எப்படியோ நேரம் கிடைத்துவிடுகிறது. இதனை இன்றைய அவல நிலை என்று சொல்வதைவிட கொடும் குரோத நிலை எனலாம்.
மதிய உணவு நேரம் வந்துவிட்டதால் அவர்களுக்கு என்னவேண்டுமெனக் கேட்டறிந்து வாங்கிக்கொடுத்தேன். சரியாக சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில், விமானப் புறப்பாடு நுழைவு வாயிலுக்கு அழைத்தார்கள். வரிசையில் நின்றபடி ஐயாவின் ஒரு கரத்தைப் பிடித்துக்கொண்டு கூட்டிச் சென்றேன். கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் விமானத்தை நெருங்க நெருங்க ஐயாவும் அம்மாவும் இதுவரை காணாத உலகத்தை வியப்போடு பார்த்துவந்தார்கள். சில நிமிட நடைக்குப் பிறகு விமானத்துக்குள் நுழைந்து எங்களுக்கான இருக்கையைப் பார்த்து அமர்ந்தோம்.
விமானம் முழுவதும் பயணிகள் நிரம்பியிருக்க… அந்த இடத்துக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாதவர்கள் போல நிச்சயம் எல்லோரும் எங்களைப் பார்த்திருப்பார்கள். இருக்கையில் இருவரையும் அமரவைத்து ‘சீட் பெல்ட்’ போட்டு விட்டு, ஐயா பேசுவதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்.
”சின்ன வயசுல மாடு மேச்சிட்டு இருக்குறப்ப எறும்புமாரி வானத்துல போற பிளைனப் பாத்திருக்கன். அப்பல்லாம் நெனச்சிக்கூடப் பாத்ததில்ல. இப்ப அந்தப் பிளைனுக்குள்ளார ஒக்காந்திருக்கன்…” எனக் கண்கள் ஈரமாக பேசிக்கொண்டிருந்தவரின் கைகளை இறுகப் பற்றினேன்.
ஒரு மனுசன் எவ்வளவு உழைக்கமுடியுமோ அதைவிட அதிகமாக உழைத்தவர் நீங்கள் ஐயா. ஒருநாள் கூட வேலையில்லை எனச் சொல்லி வீட்டில் சும்மா உட்கார்ந்துகொண்டு பொழுதைக் கழித்துப் பார்த்ததில்லை. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினத்தில் கூட கொண்டாட்டங்களை மறந்துவிட்டு ‘மாட்டுக்குத் தண்ணி வைக்கணும், நடவுக்கு தண்ணி பாய்ச்சணும்…’ என அக்கறையோடு விரையும் உங்கள் அர்ப்பணிப்பு கண்டு பல தடவை வியந்திருக்கிறேன்.
பல ஏக்கர் சொத்து இருந்தபோது அதை ஊர் மக்களின் நலனுக்காக கொடுத்துவிட்டு எதுவும் இல்லாமல் ஜீரோவில் இருந்து மீண்டும் வாழ்வைத் தொடங்கியவர் நீங்கள். ‘எதுவும் நிரந்தரமில்ல. இருக்குறத இல்லாதவங்களுக்கு கொடுத்து வாழணும். எப்பவும் நேர்வழியிலதான் போகணும். உழைப்புதான் நம்மலோட பெரிய ஆயுதம். அத மூச்சிமாதிரி எப்பவும் சுவாசிக்கணும்…’ என்பீர்கள்.
இப்படி ஒன்றா இரண்டா எத்தனை எத்தனையோ பாடங்களை உங்களிடம் இருந்து இதுவரைக்கும் கற்றுள்ளேன் ஐயா.
விமானம் ஓடு பாதை நோக்கி புறப்படத் தொடங்கியது. ஜன்னல் ஓரமாக ஐயாவும், அவர் பக்கத்தில் அம்மாவும், அவரது பக்கத்தில் நானும் என மூன்றுபேரும் வரிசையாக உட்கார்ந்திருந்தோம். ஓடு பாதைக்குப் போன விமானம் சில நொடிகள் நின்று பின் வேகமாக ஓடத்துவங்கி வான் நோக்கி பாய்ந்தது. வியப்போடும் மகிழ்வோடும் அதனை உணர்ந்தும் பார்த்தும் வந்த வயதானக் குழந்தைகள் இருவரைத் தவிர வேறெதுவும் என் கண்களுக்குத் தெரியவில்லை. அதனால் அந்த நிமிடங்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கும் ரசித்துக்கொண்டிருந்தேன்.
‘என் கைப் பிடித்து அகரம் எழுதச் சொல்லித்தந்த முதல் ஆசான் நீங்கள். எதச் செய்றதுக்கு முன்னாடியும் ஒரு தடவைக்கு பத்து தடவை யோசி. எது சரின்னு படுதோ அதச் செய்’னு வாழக் கற்றுத்தந்தவர் நீங்கள்.
‘யார் என்னவேண்ணா சொல்லட்டும். என் பையன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு’ என்று பெரும் சம்பளத்தில் கிடைத்த ஐ.டி வேலையை விட்டுவிட்டு, எனக்கு விருப்பமான பத்திரிகை வேலைக்கு போனபோதும், அதை விட்டுவிட்டு பாடல் எழுத வந்தபோதும் என்னை விட்டுக்கொடுக்காமல் தட்டிக்கொடுத்தவர் நீங்கள்.
அதிலும் ‘ஒருத்தி என்னை நேசிக்கிறாள். என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள்’ என்பதை உங்களிடம் எப்படி சொல்வதெனத் தெரியாமல் தவிப்போடும், தயக்கத்தோடும் சொன்னபோது.. ‘உனக்குப் புடிச்சிருந்தா சரின்னு சொல்லு. படிச்சி முடிச்சி வேலைக்குப் போயிட்டு கல்யாணம் பண்ணிக்கோ’ என மிகச் சாதாரணமாகப் பதில் சொல்ல சிலிர்த்துப்போனேன்.
‘என்னய்யா திடீர்னு வந்து ஒரு பொண்ணப் பத்தி சொல்றன். அவங்க யாரு, என்ன சாதின்னு எதுவும் கேக்காம புடிச்சிருந்தா கட்டிக்கோன்னு சொல்றீங்க’ என்றபோது, ‘நம்ம வாழ்க்கய நாமதான வாழப்போறோம். இதுல சாதியும் கெளரவமும் பாத்து முடிவு பண்ணி ஒண்ணும் ஆகப்போறதில்ல’ என சொல்லி சிரிக்க… சாதி என்ற வார்த்தைக்கான பொருளை என் மன அகராதியில் இருந்து தூக்கியெறிந்தேன்.
அதே பெண் தன் சாதி, அந்தஸ்து, குடும்ப கெளரவம்தான் முக்கியம் என என்னைத் தூக்கியெறிந்து போனபோது… ”விடு எல்லாம் நல்லதுக்குன்னு நெனச்சிக்கோ” என ஆறுதல் சொல்லி என் கண்ணீரைத் துடைத்து, காயத்துக்கு மருந்திட்ட நண்பர் நீங்கள்.’
உச்சி வான். எங்கெங்கும் வெண் மேகங்கள். விமானத்துள் சில்லென்ற ஏ.சி காற்று. இதுவரை அவர்கள் பார்த்திடாத உலகம். அதுவும் இத்தனை அடி உயரத்தில். கனவிலும் நினைத்துப்பார்க்காதது. எதுவும் பேசாமல் அமைதியாக மூவரும் இருக்க… விமானப் பணிப்பெண்கள் பிஸ்கெட், ஜூஸ் மற்றும் தண்ணீர் வினியோகம் செய்தார்கள். அதனை உண்டு பருகியவர்கள், தங்கள் மகிழ்வை வார்த்தைகளில் வெளிப்படுத்தத் தெரியாமல் தவித்தனர். அதைப் புரிந்துகொண்டவனாக பேச்சை வேறு திசைக்கு மாற்றினேன்.

பிள்ளைகளின் சந்தோசமே தங்களின் சந்தோசமென நினைத்து தங்களின் எத்தனை எத்தனை சந்தோசங்களை, விருப்பங்களை பிள்ளைகளுக்காக ஒவ்வொரு பெற்றோரும் விட்டுக்கொடுத்திருப்பார்கள். எத்தனை இரவுகள் நமக்காக விழித்திருப்பார்கள். எத்தனை எத்தனை நாட்கள் வலியோடும் சுமையோடும் இருந்திருப்பார்கள். சிறிதாகக் காய்ச்சல் வந்தாலே துடித்துப்போகும் பெற்றோரை எப்படித்தான் நாம் பெரியவர்களாக மாறியதும் மறந்துவிடுகிறோமோ தெரியவில்லை. இதுதான் உலக நியதியென்றால், இந்த நியதியை நாம் அவசியம் அடித்துத் திருத்தத்தான் வேண்டும்.
சரியாக ஒரு மணிநேரப் பயணத்துக்குப் பிறகு கோவை விமான நிலையத்தில் தரையிறங்கி வெளியே வர, கோவை நண்பர்கள் எங்களை வரவேற்கக் காத்திருந்தனர். வரவேற்று அருகிலிருந்த உணவகம் கூட்டிச்சென்றவர்கள்… மூவருக்கும் மதிய உணவு ஆர்டர் செய்துவிட்டு பேசத் தொடங்கினர். பின் மருதமலை அருகில் உள்ள பி.என். புதூரில் உள்ள நண்பரும் அண்ணனுமான செந்தில் வீட்டுக்குச் சென்றோம். அங்கே அவர்கள் (அவர், அவரது மனைவி, அவரது இரு பிள்ளைகள்) ஐயாவையும் அம்மாவையும் வரவேற்றது, உபசரித்தது, பேசியது எல்லாம் அவர்களைப் பெரிதும் ஆச்சர்யப்படுத்தியது. அதிலும்… ‘இந்தக் காலத்தில் நெருங்கிய சொந்தங்கள் கூட ஏதோ ஓர் எதிர்பார்ப்புடன் தான் பேசுகிறார்கள், பழகுகிறார்கள். ஆனால், யாரென்று தெரியாதவர்கள் நட்பு என்ற கிரீடம் சூடியதால் இப்படியெல்லாமா எதையும் எதிர்பார்க்காமல் பழகுவார்கள், பேசுவார்கள்’ என வியந்தார்கள்.
அன்றிரவு அவர்கள் வீட்டில் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை 6.15 மணிக்கு சென்னை செல்லும் ரயிலில் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த எங்கள் இருக்கையைத் தேடி அமர்ந்தோம். அதிலும் ஐயாவுக்கு ஜன்னல் இருக்கையைத் தந்துவிட்டு அங்கிருந்து காட்பாடி நோக்கிப் புறப்பட்டோம்.

இந்த 94 வயது மனிதரின் கால்கள் எவ்வளவு தூரங்கள் நடந்திருக்கும்? எவ்வளவு வேலைகளைச் செய்திருப்பார்? எத்தனை ஆயிரம் பேருக்குத் தன் கையால் உணவளித்திருப்பார்? எத்தனை பேரின் வாழ்வில் நல்லொளி ஏற்றியிருப்பார்? எத்தனை எத்தனை அறுவடைகள் செய்திருப்பார்? அவரின் தேய்ந்துபோன, வெடித்த பாதங்களைத் தொட்டுப்பார்க்க வேண்டும்போல் இருந்தது. சட்டெனத் தொட்டேன். ”என்னப்பா…’’ என்றார். ”ஒண்ணுமில்லயா’’ என்றேன்.
டீ, காபி மற்றும் காலை உணவை ரயிலிலேயே முடித்துவிட்டோம். ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போதும், ஐயா ‘இது எந்த ஊரெ’னக் கேட்டு குழந்தையைப் போல தெரிந்துகொண்டார். ஜன்னல் வழியாகக் கடக்கும் மலைகளையும், மரங்களையும், வீடுகளையும், மனிதர்களையும் வேடிக்கை பார்த்தவாறே எங்களிடம் தன் கடந்தகால வாழ்வில் நடந்த நிகழ்வுகளை கதைகளாகச் சொல்லி ஆனந்தப்பட்டார்.
சரியாக காலை 11.35-க்கு காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி நிலையம் விட்டு வெளியில் வர, அங்கே எங்களுக்காக நண்பர்கள் காரில் காத்திருந்தனர். பின் அவர்களுடன் டீ, காபி குடித்துவிட்டு… வேலூர் அருகில் உள்ள ஸ்ரீபுரம் தங்கக்கோயிலுக்குச் சென்றோம்.
ஐயாவுக்கு சிறு வயது முதலே கடவுள் பக்தி அதிகம். ஊரில் உள்ள கோயிலில் சாமிக்குப் பூஜை செய்வது, பாடுவது என சில காலம் பக்தியுடனேயே கழித்தவர். கோயில் கோயிலாகச் சென்று வந்தவர். ‘கிட்டத்தட்ட எல்லாக் கோயிலுக்கும் போயி வந்துட்டன். இந்த தங்கக் கோயிலுக்கு மட்டும் ஒருதடவயாது சாகறதுக்குள்ளப் போயிட்டு வந்துட்டன்னா போதும்’ என அம்மாவிடம் எப்போதோ சொல்லியிருக்கிறார். அம்மாவுக்கும் இந்தக் கோயிலுக்குப் போகவேண்டும் என ஆசை. அதை சில தினங்களுக்கு முன் என்னிடம் சொல்ல, அந்த ஆசையையும் இந்தப் பயணத்தில் சேர்த்துக்கொண்டேன்.
ஆசை யாருக்கு வேண்டுமானாலும், எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், குழந்தைகளின் ஆசை, இளைய வயதினர் ஆசைகளைப் போல வயதானோரின் ஆசைகளை இங்கே யாரும் மதிப்பதில்லை, பெரிதுபடுத்துவதில்லை. அதனால் பெரும்பாலான முதியவர்கள் தங்களின் ஆசைகளை வெளியில்கூட சொல்வதில்லை, சொல்லவும் விரும்புவதில்லை; சொன்னாலும் அதை யாரும் கேட்பதில்லை. மாறாக உதாசீனம் மட்டுமே மிஞ்சும் என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். இதில் அத்திப் பூத்தாற்போல சில பிள்ளைகள் தங்களின் வயதான பெற்றோரின் ஆசைகளைக் கேட்டும் அல்லது அவர்களாக அறிந்தும் அதனை நிறைவேற்ற விழைகிறார்கள். அத்தகைய பிள்ளைகள் வாய்த்தவர்கள் நிச்சயம் பாக்கியவான்கள் தான்.
தங்கக்கோயிலுக்குள் சென்று மகாலட்சுமி தாயாரைப் பார்த்து வணங்கிய ஐயா என் கைகளைப் பிடித்துக்கொண்டு, எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அந்த மவுனம் எத்தனையோ வார்த்தைகளைச் சொல்லியது. தன் ஆசை நிறைவேறியதாக, அதுவும் தான் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் நிறைவேறியதாக.
அதன்பின் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு திருவண்ணாமலை நோக்கிப் புறப்பட்டோம். அங்கிருந்த என் பள்ளி நண்பன் வீட்டுக்குப் போய் சிறிது நேரம் இருந்துவிட்டு அருகில் உள்ள திருவடத்தனூர் என்னும் எங்கள் கிராமத்தை இரவு எட்டு மணிக்கு அடைந்தோம்.
பிறந்து வளர்ந்த ஊர், பள்ளிப்படிப்பு, பால்யகால வாழ்வு, குடும்பம், சொந்தங்கள், மறக்க முடியாத நினைவுகள் என மனத்துக்கு மிக நெருக்கமான இடம். அடிக்கடி வந்துபோகும் ஊர்தான் எனினும் இன்றைக்கு ஏதோ புதிதுபோல் இருந்தது. அதிலும் வாழ்வில் ஏதோ மிக முக்கியமான ஒன்றை, மனதுக்கு நெருக்கமான ஒன்றை செய்ததாக உணர்ந்தேன்.
அண்ணனின் குழந்தைகள் ஓடிவந்து ஐயாவையும் அம்மாவையும் என்னையும் கட்டிக்கொள்ள… திரும்பி ஐயாவைப் பார்த்தேன். அவரும் அந்நொடி என்னைப் பார்த்து சின்னதாக உதட்டசைத்து புன்னகைத்தார். அந்த ஒற்றைப் புன்னகை, சொல்லாத எத்தனையோ வார்த்தைகளை, மகிழ்ச்சியைச் சொல்லியது. அந்நிமிடம் என் தந்தைக்கு ஒரு மகனாக நான் ஆற்றிய இச்சேவகம் நினைத்து உளமார மகிழ்ந்து நின்றேன்.
அடுத்த நொடி நிலையில்லாத இவ்வாழ்வினை எப்படி வேண்டுமானாலும் வாழலாம்தான். நான் நினைத்தேன் இப்படி வாழலாமென. நீங்களும் நினைக்கலாமே. முடிந்தால் வாழ்ந்துதான் பாருங்களேன்.
(‘குமுதம் – சிநேகிதி’யில் வெளியானக் கட்டுரையின் ‘முழு வடிவம்’ இது)
[இன்னும்]
*