முரம்பு – 30

‘புள்ளிங்க என்ன கேக்கப் போறாங்களோ…?’ எனும் கேள்வியோடவே வந்த முத்துசாமிக் கவுண்டரைப் பார்த்துவிட்டு முதலில் எழுந்த மாணிக்கம் கேட்டான்.
”தலிவரு சரின்னிட்டாராய்யா…?’’
இதை சற்றும் எதிர்பாராத கவுண்டர், வியந்துபோய் மெதுவாகத் தலையாட்டி, ”ஆமா” என்றார்.
மெல்ல இதழசைத்து சிரித்துக்கொண்டு பக்கத்தில் வந்த மாணிக்கம், ”நீ எதுக்கும் கவலப்படாதய்யா… எல்லாம் நல்லபுடியா நடக்கும். நாங்க கீறம் கூட’’ என்றான் உறுதியாக.
”ஆமாய்யா’’ என ஒற்றைக்குரலில் சொல்லிக்கொண்டு எழுந்து பக்கத்தில் வந்தார்கள் ஏழுமலையும் முருகனும்.
”செரிய்யா” என மூவருக்கும் பொதுவாகச் சொல்லிவிட்டு, வீட்டின் பின்னாலுள்ள சாக்கடையில் போய் கை கால், முகம் கழுவிக்கொண்டு துண்டால் முகத்தைத் துடைத்துவிட்டு வந்த கவுண்டர், துரிஞ்ச மரத்தடியில் செல்வி நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு, ”என்ன தாயி, இங்க வந்து நின்னுனு கீற…?’’ என்று கேட்டார்.
பறந்துபோய் வீட்டு மோட்டுவளை மேல் வெகுநேரமாக உட்கார்ந்திருந்த ஆட்டுக்காரம்மாவின் பெரிய சேவல், சட்டென்று கவுண்டரின் தலைக்கு மேலாகப் பறந்துவந்து ஆட்டுப்பட்டி நடுவில் போட்டிருந்த மூங்கில் கொடாப்பு மேல் உட்கார்ந்தது.
அருகில் வந்து கவுண்டரின் முகத்தைப் பார்த்த செல்வி, ”ஏன்யா இப்டி பண்ண…? எனுக்கு நல்லெடத்துல கலியாணம் பண்ணி வக்கிறதுக்காக… நமுக்குனுகீற மொரம்புக் கொல்லிய விக்க ஒனுக்கு எப்பிடிய்யா மனுசு வந்துச்சி…?’’ என்று அழுதுகொண்டு கேட்டாள்.
எத்திசையிலும் இருள் மிக வேகமாகக் கவிந்துகொண்டிருந்தது.
இருளுள் தெரிந்த செல்வியின் ஒளிமுகத்தைப் பார்த்து, ”என் புள்ளிங்கள வுட… எனுக்கு எதுவும் பெருசில்ல தாயி’’ என்றுவிட்டு பக்கத்தில் கட்டியிருந்த கருப்பு மாட்டை அவிழ்த்துப் போய் கட்டுத்தெருவில் கட்டிவிட்டு, செத்தநேரம் அதன் கன்னம், கழுத்து, வயிறு எங்கும் தடவிக்கொடுத்துவிட்டு வந்து வாசலோர திண்ணையில் வைத்திருந்த ஒடுக்கு விழுந்த தோண்டி நீரில் தன் கைகளைக் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார் கவுண்டர்.
எல்லோருக்கும் சேர்த்து பெரிய குண்டானில் உப்புப்போட்டு சுடச்சுட கஞ்சிசோறு ஆக்கி வைத்திருந்தார் பூரணியம்மா.
நடுவீட்டுக்குள் போய் சாமி படத்தின் கீழே சீமெண்ணை விளக்கு வெளிச்சத்தில் பிள்ளைகளோடு உட்கார்ந்து அணில்காய் ஊறுகாய் கடித்துக்கொண்டு, யாரிடமும் எதுவும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்து வெளியில் வந்த கவுண்டர்… வாசலில் போட்டிருந்த கட்டிலருகில் சென்று நின்று, தன் தந்தை தான் பத்துவயது சிறுவனாக இருக்கும்போது சொன்ன வார்த்தைகளை நினைத்துப் பார்த்தார்.
அதுவும், அன்று ஊரிலிருந்து மாட்டை பிடித்து வந்து தெக்கால காட்டுவா மரத்துண்டில் முளைக்குச்சி அடித்து கட்டிவிட்டு, கையில் பிடி முரம்பு மண்ணை அள்ளி கவுண்டரிடம் காட்டி, ”டே முத்துசாமி, இந்த மண்ணு கீதே மண்ணு… இது நம்முளோட வகரா பூமிடா. இதலதான் ஒன் தாத்தா பாட்டிலாம் ஏரு ஓட்டி பயிரு வச்சாங்க. இப்ப நானு வச்சினு கீறன். நாளிக்கி நீயும் ஒன் புள்ளிங்குளும் வப்பீங்க. என்னிக்கி எந்த கஷ்டநஷ்டம்னாலும் செரி… ஓடியாந்து இந்த மண்ண மெரிச்சா போரும்… அது கீற எடந்தெரியாம போயிரும். அப்பிடியாப்பட்ட மண்ணுடா இது. எப்ப எப்பேர்பட்ட நெலம வந்தாலும் செரி… நீ பெத்த புள்ளமரே இத பாத்துக்குனும் செரியா…?’’ என்ற அவரது தந்தையின் வார்த்தைகளும், அவரது வெற்றிலை பாக்கு போட்டு கறைபடிந்த பற்களைக் காட்டி சிரித்த சிரிப்பும் அப்படியே கவுண்டரின் கண்முன்னால் வந்து போனது.
கூடவே மேட்டுத் துண்டில் உட்கார்ந்து மல்லாட்டை ஆயும்போது அவர் அம்மா சொன்ன, ”எய்யா முத்துசாமி, என்னிக்கும் இந்த பூமிய கொறச்சி எடப்போட்றாத. இது நம்முளோட கண்ல தெரிற, நம்ம கொல தேவாதி வடுவுச்சி அம்மா. இதல வெளயிற ஒருஒரு பயிரும், அவ நம்முளுக்காக தர்ற படி. இத எப்பியும் மறந்துறாத சாமி’’ என்னும் வார்த்தைகளும்.
அம்மாசி பாட்டி மகன் பெரியசாமியும், கோபால் ஆச்சாரியும் எலி குத்த கையில் சில்லாக்கோலும் ராந்தலும் எடுத்துக்கொண்டு தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு மேற்குப் பக்கமாக நடந்து வேகமாக போய்க்கொண்டிருந்தார்கள்.
தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து கட்டிலில் விரித்துப் போட்டு சீக்கிரமாகவே படுத்துக்கொண்ட கவுண்டர், நிலவின்றித் தெரிந்த கருவானத்தையும் எங்கோ ஒன்றாக முளைத்திருந்த மீன் நிலாவையும் பார்த்தும் பார்க்காமல், முரம்பு நிலத்தையே திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டு தனக்குள் ஏதேதோ சொல்லி புலம்பிக்கொண்டிருந்தார்.
‘அன்னிக்கி பூர்ணி வெசனத்தோட சொன்னப்ப, எதோ வெளாட்டா எடுத்துக்குனம். இப்ப என்னடான்னா, அதுவே உண்மயாவப்போது’
‘எப்டியெப்டிலாம் இருந்த மண்ணு… அதல எப்டிலாம் இருந்துகீறம்…? இனி கொறகாலமும் அந்த நெனப்போடதான் வாழ்ணும்னு… நம்ம தலில எழ்தி வச்சிக்கீறான், அந்த ஆண்டவன். அத நாம என்ன பண்ணமுடியும்…?’
‘பெத்த புள்ளமரே பாத்துக்குடான்னாரு, எங்கய்யா… நானு பெத்தப் புள்ளயயே பொதச்சி வச்சி பாத்துக்குனன். இப்ப என் கைய வுட்டு போவப் போது. நானு என்ன பண்ணுவன், எனுக்கு இதவுட்டா வேற வழிவாக்கியா தெர்லயே.’
‘தலமொற தலமொறயா கட்டிக் காபுந்து பண்ணினு வந்த பூமிய, நானு எவுனோ அசலான்கிட்ட காசுக்காக விக்கப்போறனே… நிச்சிமா இத என் ஆயாளும் அப்பனும் மன்னிக்க மாட்டாங்க. என் பாட்டியும் தாத்தாவும் ஏத்துக்க மாட்டாங்க…’
மொத்த ஊரும் அடங்கியிருந்தது. தூரத்தில் எங்கோ ஒரு காகம் மட்டும் விட்டுவிட்டு தனியாகக் கரைந்துகொண்டிருந்தது.
”ஏந்தே, இன்னும் தூங்கலயா…?’’
பூரணியம்மா பின்னால் வந்து நின்றுகொண்டு கேட்டார்.
படுத்திருந்த கவுண்டர் மெல்ல எழுந்து உட்கார்ந்து, ”இல்ல பூர்ணி’’ என்றார் மென் குரலில்.
கவுண்டரின் முன்னால் வந்த பூரணியம்மா, எதுவும் சொல்லாமல் தலையைக் கீழே தொங்கப் போட்டுக்கொண்டு மௌனமாக நின்றார்.
மெல்ல அவர் கையைப் பிடித்து அருகில் உட்காரவைத்த கவுண்டர், ”எனுக்கு இதவுட்டா வேற வழி தெர்ல, பூர்ணி’’ என்று குரல் உடைந்துபோய் சொன்னார்.
”எனுக்கு தெரியுந் தே.’’
ஆறுதலாக கவுண்டரின் கரத்தைப் பற்றிக்கொண்டு பூரணியம்மா சொன்னார்.
”எம்மேல ஒனுக்கு கோவம் கீவம் எதும் இல்லியே, பூர்ணி…?’’
”அதல்லாம் இல்ல தே.’’
சொல்லிவிட்டு கவுண்டரின் முகத்தைப் பார்த்த பூரணியம்மா, ”சொல்லுனும்னா… நீங்க இந்த முடுவ எடுத்ததுக்கு அப்பறம்தான், ஒங்கமேல இன்னும் பாசம் கூடலாயிகீது தே’’ என்றார்.
கேட்ட கவுண்டருக்கு தன்னையறியாமல் இரு கண்களும் ஒருசேர கலங்கி கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அவ்வளவு இருட்டிலும் அதை எப்படியோ தெரிந்துகொண்ட பூரணியம்மா, சட்டென்று தன் புடவைத் தலப்பை எடுத்து கவுண்டரின் கண்களைத் துடைத்துவிட்டார்.
முன்னைக் காட்டிலும் இப்போது கூடுதலாக வானில் மீன்நிலா முளைத்திருந்தன. மாலையிலிருந்து அடிக்காமலிருந்த காற்றும் மிதமாக அடிக்கத் தொடங்கியிருந்தது.
கொஞ்சநேரம் அமைதியாக இருந்த கவுண்டர், ”பூர்ணி’’ என்றார், தனக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில்.
”சொல்லு தே.’’
தன்னை கடைசித் துளிவரை நேசிக்கும் ஒருவருக்கு, தன் மூச்சுக் காற்றின் மொழிகூட தெரியும் என புரிந்துகொண்ட கவுண்டர், ”நானு செத்தநேரம் ஒன் மடிமேல படுத்துகிட்டுமா, பூர்ணி…?’’ என்று கேட்டார்.
கவுண்டர் தன் வாழ்நாளில் இதுபோல் இதுவரை இரு தடவை மாத்திரமே அவரிடம் கேட்டிருக்கிறார். அதுவும் கண்ணாடிபோல் சுக்குநூறாய் தன்னுள் உடைந்துபோய் வலி தாங்க முடியாமல் அழும்போது மட்டுமே. ஒன்று, அவர் உயிருக்குயிராய் நினைத்த தன் தந்தையின் மரணத்தின்போது. இன்னொன்று, தன் ஆருயிர் நண்பர் மோட்டூர் ஆச்சாரி மறைவின்போது.
எதுவும் சொல்லாமல் சட்டென்று சற்று தள்ளி உட்கார்ந்து, கவுண்டரின் தோளைப் பிடித்து சாய்த்து தன் மடியில் படுக்கவைத்த பூரணியம்மா, ”புள்ளிங்கதான் என்ன சொல்லுவாங்களோன்னு பயிந்துனுருந்தன் தே’’ என்றுவிட்டு, திரும்பி வீட்டு வாசற்படியில் தெரிந்த ராந்தல் வெளிச்சத்தைப் பார்த்துவிட்டு பெருமிதத்தோடு, ”பாத்தா அவுங்க நம்முள வுட நாலு மடங்கு மேல ஓசன பண்றாங்க தே. நம்ம ஐயாவும் அம்மாவும் ஒரு முடுவு பண்ணாங்கனா… அது நம்முளோட நல்லதுக்காதான் இருக்கும்னு நெனிக்கிறாங்க தே’’ என்றார்.
துளி அசைவுமின்றி தனக்குள், ‘ம்’ கொட்டி கேட்டுக்கொண்டிருந்தார் கவுண்டர்.
”செல்விதான் மதியானத்துலருந்து… எனுக்கிந்த கலியாணமே வேணாம்னு மோடி வச்சினு ஒக்காந்துனு கீறா. எம்மாஞ் சொல்லியும் கேக்காம… இப்பிடி என் கலியாணத்த பண்றதுக்காக, இருக்குற கொல்லிய வித்து அந்த பாவத்த எம்மேல ஏத்தப் பாக்குறீங்களான்னு கேக்குறா. நானும் எவ்ளோத்தரம் சொல்லிப் பாத்துட்டன் தே… அவ மட்டும் புரிஞ்சிக்கவே மாட்றா.’’
ஈரக்குரலில் பூரணியம்மா சொன்னதைக் கேட்டுக்கொண்டு அமைதியாகப் படுத்திருந்தார் கவுண்டர்.
”எது எப்பிடியோ தே… நம்ம பொண்ணு கலியாணம் நல்லபுடியா நடக்கப்போது. அதுபோதும் தே, நமுக்கு.’’
சற்று குரல் உயர்த்தி பூரணியம்மா இதை சொல்லி முடிக்கவும், பின்னால் வந்து நின்ற செல்வி கேட்டுவிட்டு கண்கலங்கி அவர் தோளைத் தொடவும் சரியாக இருந்தது.
”ஏன் தாயி, தூங்கலயா இன்னும்…?’’
சட்டெனத் திரும்பி செல்வியைப் பார்த்துவிட்டு கேட்டார் பூரணியம்மா.
எதுவும் சொல்லாமல் கொல்லிக்காட்டு பொம்மைபோல் நின்றாள் செல்வி.
”ஒன்கிட்டதான் தாயி கேக்கறன்… இன்னும் தூங்கலயா…?’’
பூரணியம்மா எட்டி செல்வியைத் தொட்டுக் கூப்பிட்டு கேட்டார்.
எதையோ தனக்குள் யோசித்துக்கொண்டிருந்தவள், ”எப்பிடிம்மா எனுக்கு மட்டும் தூக்கம் வரும்…?’’ என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு, விழியோரம் துளிர்த்து வந்த கண்ணீர்த் துளியைத் தன் வலது கையால் துடைத்துவிட்டாள்.
வேகமாக எழுந்து உட்கார்ந்து செல்வியைப் பார்த்த கவுண்டர், ”ஏன் தாயி, நானு ஒண்ணு கேப்பன் ஒன்கிட்ட… மனசுல கீறத மறக்காம சொல்லுனும், செரியா…?’’ என்று கேட்டார்.
மேற்கே ராமு கவுண்டர் வீட்டைத் தாண்டி கோயில் பொர்ச மரத்தருகில் நாய் ஒன்று மொத்த இருளையும் களைப்பதுபோல் குரைக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்துவிட்டு, ”கேளுய்யா’’ என்றாள் குரலில் உரமின்றி.
”நாங்க ரண்டுபேரும் எது பண்ணாலும்… ஒங்க நல்லதுக்குதான் பண்ணுவம்னு தெரிமா, தெரியாதா ஒனுக்கு…?’’
தாழ்ந்த குரலில், ”தெரியும்யா’’ என்றாள் செல்வி.
”இதயும் அப்பிடிதான் தாயி நெனச்சி பண்றம். இனிமேலு இதப்பத்தி ஒரு வாத்த எங்கியும் பேசக்கூடாது, செரியா…?’’
என்ன சொல்வதென்று தெரியாமல் மீண்டும் கண்கலங்கி மெல்ல தலையாட்டி, ”செரிய்யா’’ என்றாள்.
உடனே எழுந்து நின்று, ”போயி கம்முனு படுத்துத் தூங்கு தாயி… எங்களப் பத்திலாம் ஓசன பண்ணாத. நாங்க கூலி வேல செஞ்சாது, கவுருவமா பொழ்ச்சிப்பம். நீ போற எடத்துல நல்லபுடியா இருந்தா… அது போரும் தாயி எங்குளுக்கு. போ… போயி நல்லா தூங்கு. நேரம் ஆச்சிபாரு’’ என்றார் கவுண்டர்.
எதுவும் பேசாமல் திரும்பி, அங்கிருந்து கண்கலங்கி அழுதுகொண்டு வீட்டுக்குள் போனாள் செல்வி.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த பூரணியம்மா எழுந்து, ”செரி தே, நீயும் படுத்துத் தூங்கு… நானு போயி செல்வி கூட படுக்கறன். அப்பதான் அவ ஒழ்ங்கா தூங்குவா’’ என்று சொல்லிவிட்டு, இரண்டடி எடுத்து வைத்து நடந்திருப்பார்.
அதற்குள் கவுண்டர், ”பூர்ணி’’ என்று கூப்பிட, நின்று திரும்பி, ”ஏந்தே…?’’ என்று கேட்டார் பூரணியம்மா.
எதிர்வீட்டுப் பக்கத்திலிருந்த செத்தசெனாருக்குள் இருந்து ஏதோ பூச்சிப்பொட்டு ஓடும் சத்தம் கேட்டது.
திரும்பி அங்கே பார்த்துவிட்டு பூரணியம்மாவின் பக்கத்தில் வந்து அவரது கலங்கிய கண்களைப் பார்த்து, ”ஒண்ணுல்ல பூர்ணி’’ என்றார் கவுண்டர்.
எதையோ சொல்ல வந்து சொல்லாமல் போன கவுண்டரின் முகத்தைப் பார்த்து, ”ஆனா ஒண்ணு தே… என்னதான் மொரம்புக் கொல்லி நம்முள வுட்டு போனாலும், நம்ம மனுசவுட்டு என்னிக்கும் போவாது தே’’ என்று பட்டென சொல்லிவிட்டு, தனக்குள் உடைந்துபோய் அழுதுகொண்டு வேகமாக வீட்டுக்குள் போனார் பூரணியம்மா.
எவ்வளவு சொல்லியும் சாப்பிடாமல் வாசலில் உட்கார்ந்திருந்த செவடனைப் பார்த்து, ”டேய் பொசகெட்டவன… ஒனுக்கு என்னடா வந்துச்சி இப்ப…? வேதி வன்ச்சா, வெக்க வன்ச்சா… நல்லாதான இருந்தவன். எதுக்கிப்ப சோறு தின்னமாட்டன்னு கப்புலு கவுந்தமாரி ஒக்காந்துனு கீற…?’’ என்று கேட்டார் பேராமுட்டா கிழவி.
எதுவும் சொல்லாமல் தன் பாட்டுக்கு தெரு முக்கில் தெரிந்த விளக்கு வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் செவடன்.
மெல்ல செவடன் பக்கத்தில் வந்து குத்துக்காலிட்டு உட்கார்ந்து, அவன் கண்கள் கலங்கியிருப்பதை பார்த்த கிழவி, ”டேய் செவுடா… என்னடா பய்யா ஆச்சி ஒனுக்கு…? நீ பாட்டுனு இப்டி வந்து தனியா ஒக்காந்து அய்துனுகீறவன்…’’ என்று அவனிரு தோளைப் பிடித்து குலுக்கிக் கேட்டார்.
செத்தநேரம் ஒன்றும் பேசாமல் இருந்தவன் சட்டென மெல்லிய குரலில் அழுதுகொண்டு, ”நம்ம கவுண்ரு… அவுரோட மொரம்புக் கொல்லிய… விக்கப்போறாரு’’ என்றான்.
கேட்ட கிழவிக்கு திக்கென தூக்கிப்போட்டது.
”என்னடா சொல்றவன்…?’’
கண்கள் அகல விரிய பெரும் அதிர்ச்சியோடு கேட்டார்.
”ஆமாங் கெய்வி… அவுரு பொண்ணு கல்யாணத்துக்கு, சீரு செய்ய காசில்லாம விக்கிறாரு.’’
செவடன் சொன்னதைக் கேட்டு துடித்துப்போன பேராமுட்டா கிழவி, ”அடியே எம்மா முண்டக்கண்ணி தாயி… ஏன்டியெம்மா எங்க கவுண்ர, இம்மாம் பாடுபடுத்தற நீ…? யாரு எதுவேணும்னு போயி நின்னாலும்… இல்லன்னு சொல்லாம இந்தான்னு தூக்கித் தர்ற மனுசன்கிட்ட கீற, கடசிப் பொட்டு மண்ணயும் புடுங்கினு வுட பாக்கறயே… இது ஒனுக்கே அடுக்குமா…? இதுக்குதான் ஒண்ண இம்மாந்நாளா நானு கும்ட்டனா…? நீ வெறுங் கல்லுடி… இனிமேலு ஒண்ண கும்ட மாட்டன்… நீ சாமில்ல, வெறும் கல்லு… நீ சாமில்ல, வெறும் கல்லு…’’ என்று சொல்லிக்கொண்டு எழ முடியாமல் கையைத் தரையில் ஊன்றி எழுந்து பக்கத்திலிருந்த குடிசைக்கு அழுதுகொண்டு போனார்.
எவ்வளவு படுத்தும் தூக்கம் வராமல், வெறுமனே விடியும் வரை படுத்திருந்துவிட்டு செப்புல் பிரியும் நேரத்தில் எழுந்து உட்கார்ந்த கவுண்டர்… கொஞ்சநேரம் விடிவானை பார்த்துவிட்டு, கட்டிலைக் கூட தூக்கிக்கொண்டு போய் பூவரச மரத்தடியில் போடாமல் துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு, தான் சிறுவனாக இருக்கும்போது தன் தாய் தந்தையோடு முரம்புக் கொல்லியில் இருந்த நாட்கள் தொடங்கி, கல்யாணம் முடிந்த கையோடு பூரணியம்மாவை கூட்டிவந்து தனது சொந்தங்களை அறிமுகம் செய்ததுபோல் கொல்லியை முதல்தடவை காட்டி அறிமுகம் செய்தது, குழந்தையை இரவோடு இரவாக தூக்கிப்போய் புதைத்தது, ஊரிலிருந்த வீட்டைக் காலிசெய்துகொண்டு இங்கேயே குடுத்தனம் வந்தது, கொல்லியையொட்டி புதிதாக ஊர் ஒன்று உருவானது… என ஒவ்வொன்றாக மனத்துள் ஓட்டிப்பார்த்துக்கொண்டு, வெப்பால மர வழியாக இறங்கி, வேலியோர உண்ணிமில் புதருக்குள் ஒலித்த நொல்லக் குருவி கத்தும் சத்தத்தைக் கூட காதில் வாங்காமல் முரம்புக் கொல்லிக்கு வந்தார் கவுண்டர்.
தான் பெரிதும் நேசித்த, தன் முன்னோர் நினைவாகத் தன்னிடமுள்ள, தன் மகனைப் புதைத்த, தனது இத்தனை ஆண்டுகால வாழ்வில் தன் அத்தனை கஷ்டநஷ்டத்திலும் பங்கெடுத்த முரம்புக் கொல்லியை கண்ணாற மகிழ்வோடு ஒருவாட்டி மேற்குத் துண்டில் நின்று பார்த்த கவுண்டர், மறுநொடியே இன்னும் கொஞ்ச நேரத்தில் அது வேறு ஒருவரின் மண்ணாகப் போவதை நினைத்து நொறுங்கிபோய் சிறுபிள்ளை போல் அழுதார்.
யாரோ பக்கத்து ஊர்க்காரர்கள் ஏழெட்டு பேர் கடப்பாரை மண்வெட்டியும் தட்டுக்கூடையும் எடுத்துக்கொண்டு கிணறு தோண்ட தெற்குப் பக்கமாக இறங்கி நடந்துபோனார்கள்.
இவ்வளவு நேரமாக கவனிக்காத கவுண்டர், இப்போதுதான் கவனித்தார். மேட்டுத் துண்டு மரிசிமேல் குழந்தையை புதைத்த இடத்தில் நட்டு வளர்ந்திருந்த வேப்ப மரத்தடியில் வெட்டிப்போட்ட கட்டைபோல் உட்கார்ந்திருந்தான் செவடன்.
தோளில் போட்டிருந்த துண்டால் கண்களையும் முகத்தையும் துடைத்துக்கொண்டு உயிரற்ற உடல்போல் நடந்து செவடன் அருகில் போய் நின்ற கவுண்டர், ”செவடா’’ என்று தேய்ந்த குரலில் கூப்பிட்டார், அவன் அருகில் இருந்த வேப்ப மரத்தை ஒருதடவை நன்றாகப் பார்த்துவிட்டு.
தனக்குள் எதையோ அசைபோட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்த செவடன், திடுமென நினைவு வந்தவனாய் கவுண்டரைப் பார்த்துவிட்டு எழுந்து பக்கத்தில் வந்தான்.
வேப்ப மரத்தில் உட்கார்ந்திருந்த ஓணான் ஒன்று, சட்டென கீழே இறங்கிவந்து கவுண்டரையும் செவடனையும் இரண்டு தடவை தலையைத் திருப்பிப் பார்த்துவிட்டு, சற்று தூரத்தில் சனிமூலையோரமிருந்த சிறு துரிஞ்சி மரத்தில் போய் ஏறிக்கொண்டது.
இரவு முழுக்க தூங்காமல் கண்கள் சிவந்துபோய் முகமெல்லாம் வீங்கியிருந்தது செவடனுக்கு. எதுவும் கேட்காமல் வேப்ப மரத்தடியில் போய் நின்ற கவுண்டர், குழந்தையைப் புதைத்த இடத்தைப் பார்த்துவிட்டு மரத்தின் சிறு கிளையை இறுகப் பற்றிக்கொண்டு கண் கலங்கினார்.
எப்படியாவது கவுண்டர் தன் முடிவை மாற்றிக்கொள்வார் என நம்பிக்கொண்டிருந்த செவடனுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.
திரும்பி சுற்றிலும் கொல்லியைப் பார்த்தவன், கலங்கிப்போய் நின்றுகொண்டிருக்கும் கவுண்டருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளற்றவனாய் தனக்குள் அழுதுகொண்டு அங்கேயே நின்றிருந்தான்.
என்ன நினைத்தாரோ உடனே செவடனைப் பார்த்து கவுண்டர், ‘இங்க வா’ என்பதுபோல் தலையசைத்துக் கூப்பிட்டார்.
அவிழ்ந்து வந்த தன் பூ போட்ட லுங்கியை அரையும்குறையுமாக கட்டிக்கொண்டு வேகமாக பக்கத்தில் வந்தான் செவடன்.
”ஏன் செவடா… ஒனுக்கு ஏம்மேல கோவம் எதும் இல்லியே…?’’
கவுண்டர் தன்னைப் பார்த்து இப்படிக் கேட்டதும் உடைந்துபோனான் செவடன். தாரை தாரையாய்க் கண்ணீர் கொட்டியது.
தரையில் முட்டிபோட்டு தொம்மென உட்கார்ந்து கவுண்டரின் காலைப் பிடித்துக்கொண்டவன், ”நானு என்னிக்கி கவுண்ர, ஒங்கமேல கோவப்பட்டுகீறன்…? நீங்க போட்ட சோத்தத் தின்னு வளந்தவன் நானு. கொடுவாள எடுத்தாந்து என்ன வெட்டிப் போட்டாலும்… எனுக்கு ஒங்கமேல கோவம் வராது சாமி’’ என்று சொல்லி கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டு, தேம்பித் தேம்பி அழுதான்.
அதைப் பார்த்த கவுண்டரால் எவ்வளவு முயன்றும் அழுகையை அடக்க முடியவில்லை. தானும் அவனோடு சேர்ந்து அழுதுகொண்டு, கீழே குனிந்து வலுகொண்டு அவனைத் தூக்கி நிறுத்தினார்.
கிழக்கே தவுலத்கான் சாயுபு வீடு தாண்டி முடியனூரான் கொல்லி முடக்கில் வளைந்து, தன் இரு சக்கர வாகனத்தில் யாரையோ உடன் கூட்டிக்கொண்டு வந்த ஊர் தலைவர்… துரிஞ்ச மரத்தடியில் வந்து வண்டியை நிறுத்திவிட்டு, கவுண்டரும் செவடனும் மேட்டுத் துண்டில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, மெல்ல முரம்புக் கொல்லிக்குள் இறங்கி நடந்து வந்தார்.
அவர்கள் வருவதைப் பார்த்துவிட்டு தன் துண்டால் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு செவடனிடம் வராத பொய்ப்புன்னகையைக் காட்டிய கவுண்டர், ”இன்னுங் கொஞ்ச நேரத்துல… இது தலிவனோட கொல்லியா ஆவப்போது செவடா’’ என்று வலியோடு சொன்னார்.
பதறிப்போய் திரும்பிப் பார்த்த செவடன், எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சற்று தள்ளிப் போய் நின்றான்.
பக்கத்தில் வந்து மொத்த கொல்லியையும் ஒருபார்வை பார்த்த தலைவர், ”என்ன கவுண்ர, நேத்து சொன்னதுல எதாது மாத்தம் கீதா…?’’ என்று கேட்டார்.
‘இல்லை’ என தலையாட்டினார் கவுண்டர்.
கையில் வைத்திருந்த மஞ்சப் பையை கவுண்டரிடம் நீட்டி, ”யா, அல்லா…’’ என்று வானை நோக்கி கண்மூடி மெல்லமாகச் சொல்லிவிட்டு, ”இதல முப்பதாயிரம் கீது கவுண்ர, எண்ணிப் பாத்துக்குங்க’’ என்றுவிட்டு தந்தார் தலைவர்.
தைரியம் கொண்டவராய் தன் முரம்புக் கொல்லியையும், தன் மகனைப் புதைத்த இடத்தையும், அங்கே வளர்ந்திருந்த வேப்ப மரத்தையும் ஒருதடவை பார்த்துவிட்டு, தன் நடுங்கும் கைகளை நீட்டி வாங்கிக் கொண்டார் கவுண்டர்.
சூரியன் கொஞ்ச கொஞ்சமாக மேலேறி வேப்ப மரத்தின் நிழல் கவுண்டரின் மேல் விழ ஆரம்பித்தது.
உடன் வந்திருந்தவரிடம் பாண்டு பத்திரத்தைத் தர சொல்லி வாங்கி அதை கவுண்டரிடம் நீட்டிய தலைவர், ”இதல, இங்க ஒரு கையெழ்த்து போடு கவுண்ர’’ என்றார்.
பின்னால் சற்று தள்ளி நின்றிருந்த செவடனைக் கைகாட்டி கூப்பிட்டு, கையில் வைத்திருந்த பணப் பையை அவனிடம் தந்துவிட்டு, பாண்டு பத்திரத்தையும் பேனாவையும் வாங்கிக்கொண்டு வேப்ப மரத்தடியில் போய் உட்கார்ந்து, கடைசியாக ஒருதடவை தன் முரம்புக் கொல்லியைப் பிரிவன்போடு பார்த்த கவுண்டர், முதல்முறையாக தன் பெயரை வலியும் கண்ணீரும் கலந்து எழுதினார்.
‘மு த் து சா மி’
[முற்றும்]
*