முரம்பு – 27

”ஏந்தே, என்னாச்சி…?’’
கட்டிலிலிருந்து எழுந்த முத்துசாமிக் கவுண்டரைப் பார்த்து கேட்டார் பூரணியம்மா.
”எதுவுல்ல பூர்ணி.’’
உடைந்த குரலில் கவுண்டர் சொன்னது கேட்டு, ”செத்த நில்லு தே’’ என்றுவிட்டு, கட்டிலில் உட்கார்ந்திருந்த முருகனிடம் தட்டில் எடுத்துவந்திருந்த கேழ்வரகு அடையைத் தட்டோடு தந்து, ”நீ போயி வூட்டுள்ள ஒக்காந்து தின்னு சாமி, நானும் ஐய்யாவும் பின்னாலயே வர்றம்’’ என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
எதுவும் சொல்லாமல் வாங்கிக்கொண்டு முருகன் போனதும் பக்கத்தில் நின்றபடி சற்று தள்ளி துரிஞ்ச மரத்தடியில் கட்டியிருந்த கருப்பு மாட்டை பார்த்துக்கொண்டிருந்த கவுண்டரின் கையை மெல்ல பிடித்த பூரணியம்மா, ”இப்ப சொல்லு தே, என்னாச்சி…?’’ என்று கேட்டார்.
திரும்பி பூரணியம்மாவின் முகத்தைப் பார்த்த கவுண்டர், எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது என தனக்குள் யோசித்துக்கொண்டு குரலை சற்று தாழ்த்திச் சொன்னார்.
”மலமஞ்சனூர் புதூர்ல… மாரிமுத்து வூட்டுக்காரிக்கு சொந்தக்காரப் பையன் ஒருத்தன் கீறானாம். நல்ல வசதியான வூடாம், ஒரே பையனாம். பாக்க நல்லா அழ்வா, வாட்டசாட்டமா இருப்பானாம். நம்ம பொண்ணு செல்விக்கு அவனப் பேசி முடிச்சிரலாம்னு மாரிமுத்து சொல்றான்’’
ஒரே நேரத்தில், அதுவும் ஒரே செய்தியில் நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் கலந்துவந்தால் எப்படியிருக்கும்? அப்படி இருந்தது பூரணியம்மாவுக்கு. துளியும் இதை எதிர்பாராதவர், என்ன சொல்வதென்று தெரியாமல் கீழே குனிந்து செத்தநேரம் எதையோ யோசித்துவிட்டு, ”நீ என்ன சொன்ன, தே…?’’ என்று கேட்டார், தலையை நிமிர்த்தி மெதுவான குரலில்.
”நானு என்ன சொல்லப் போறன், பூர்ணி. ஆடி கய்ச்சி ஆவணில… நல்ல நாளா பாத்து நீயே கூட்டுனு வான்னு சொல்லிட்டு வந்துட்டன்.’’
”வூட்டுக்கு ஒரே பையன். நல்ல வசதின்னு வேற சொல்ற. நகநட்டு சீருசெனத்திலாம் நறயா எதுருபாப்பாங்களே, தே.’’
‘ஆமாம்’ என தலையாட்டிய கவுண்டர், அங்கிருந்து மெல்ல நடந்து துரிஞ்ச மரத்தடியில் கட்டியிருந்த கருப்பு மாட்டிடம் வந்து நின்று, அதன் நெற்றியிலும் கழுத்திலும் தடவிக் கொடுத்துக்கொண்டு, ”அதான் என்ன பண்றதுன்னு தெரியாம கீறன், பூர்ணி’’ என்றார்.
”செரி வுடு தே, நம்ம பொண்ணு தலில என்ன எழ்திகீதோ… அதான நடக்கும்.’’
பூரணியம்மா லேசாகக் கண் கலங்கியபடி சொன்னதைப் பார்த்துவிட்டு, தனக்குள் கலங்கிபோய் எதுவும் சொல்லாமல் மாட்டின் அடிவயிற்றில் தடவிக் கொடுத்தார் கவுண்டர்.
”ஒங்க மச்சாரு என்ன சொன்னாரு, தே…?’’
”அவன் என்ன சொல்லப்போறான்… இந்த பையன்தான் நம்ம பொண்ணுக்கு அமயிம்னு படுதுன்னு சொன்னான்.’’
கேட்டுவிட்டு திரும்பி வாசல் பக்கம் பார்த்தார் பூரணியம்மா. செல்வியும் பூவரசியும் கூடிக்கொண்டு கிழக்குப் பக்கம் தோட்டக்காட்டுக்கு போய் வருவதாகச் சொல்லிவிட்டு போனார்கள்.
”செரி தே, எதும் நெனிக்காம… மாட்டப் புடிச்சி கட்டுத்தெருல கட்டிட்டு வா, பாத்துக்குலாம்’’ என்று ஆறுதலாகச் சொல்லிவிட்டு போய் கட்டுத்தெரு பின்னால் அடுக்கிவைத்திருந்த விறகில் அரி அள்ளிக்கொண்டு, அம்மாசி பாட்டி கடைசியாக தன்னிடம் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகளை நினைத்துக்கொண்டு வீட்டுக்குள் போனார் பூரணியம்மா.
”எம் பொண்ணுக்கு தெரட்டிதான் சுத்தாம வுட்டுட்டன். அவ கல்யாணத்தயாது நல்லா ஜாம்ஜாம்னு நடத்தாம வுடமாட்டன்.’’
‘ஏன் ஒம் பொண்ணுக்கு தெரட்டி சுத்தாம வுட்டுட்ட…?’ என்று கேட்ட ஊராரிடமெல்லாம் இதைத்தான் பூரணியம்மா, செல்வி வயதுக்கு வந்த நாள்முதல் நான்கு நாட்களுக்கு முன்னாள் வரை சொல்லிவந்தார்.
அதிலும் அம்மாசி பாட்டி, கவுண்டரிடம் சண்டை போட்டுவிட்டு வந்து தாழ்வாரத்தில் உட்கார்ந்து நொய்யரிசியில் கல் பொறுக்கிக்கொண்டிருந்த பூரணியம்மாவிடம், ”ஏன்டி பூர்ணி, இது ஒனுக்கே நல்லாகீதா…? அவன்தான் எதோ ஆம்பள, அவுனுக்கு ஒண்ணும் தெரிலன்னு வுட்டுட்டாலும்… பொட்டச்சி ஒனுக்கெங்கடி போச்சி புத்தி…? ஒத்த பொட்டப் புள்ளய வச்சினு, அவுளுக்கு ஒரு தெரட்டி கூட சுத்தலனா… என்னடி அர்த்தம்?’’ என்று கோபமாகக் கேட்டதற்கு, என்ன சொல்வதெனத் தெரியாமல் கண்கலங்கி உட்கார்ந்திருந்த பூரணியம்மா, சமைத்த ஏனத்தை எடுத்துப்போய் சாக்கடையில் சாம்பல் தொட்டு தேங்காய் நாரில் தேய்த்துக் கழுவி எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்த செல்வியைப் பார்த்துவிட்டு எதுவும் நடக்காததுபோல் முகத்தை மகிழ்ச்சியாய் காட்டிக்கொண்டு, ”அட, இப்ப என் பொண்ணுக்கு தெரட்டி சுத்தலன்னா என்ன ஆயி… மேலிக்கி பொண்ண கட்டிக்கொடுக்குறப்ப சுத்தி, ஊரே வாயிமேல வெரலு வக்கிறமாரி… ஜாம்ஜாம்னு கல்யாணத்த நடத்திட்டாப் போது’’ என்றார்.
கேட்டுவிட்டு கைகொட்டி சத்தமாகச் சிரித்த அம்மாசி பாட்டி, ”போடி பொசகெட்டவள… குடிக்க கஞ்சி இல்லயாம், கொப்புளிக்க பன்னீரு கேக்குதாம்’’ என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் வந்து நின்ற செல்வியை பார்த்து, ”இன்னிக்கி வாயி கிய்ய வக்கனயா சொன்ன ஓன் ஆத்தாக்காரி… நாளிக்கி என்னத்த செஞ்சி கீக்கிறான்னு நானும் பாக்கறன்’’ என்றுவிட்டு கிடுகிடுவென வெளியில் வந்து வேகமாக நடந்து ஊருக்குப் போனார்.
கொஞ்சநேரம் தடவிக் கொடுப்பதை நிறுத்திவிட்டு எதையோ யோசித்த கவுண்டரை, கருப்பு மாடு மெல்ல தலையை திருப்பிப் பார்த்துவிட்டு அவர் வலது கையில் லேசாக நக்கியதும் நினைவு வந்தவராய், மாட்டை அவிழ்த்துப் போய் கட்டுத்தெரு நெடுங்காலில் கட்டிவிட்டு வந்து சாக்கடையில் கை கால், முகம் கழுவிக்கொண்டு தோளில் போட்டிருந்த கட்டம்போட்ட துண்டால் முகத்தைத் துடைத்துவிட்டு, பாலு செட்டியாரிடம் சொன்ன வார்த்தைகளைத் தன்னுள் ஓட்டிப்பார்த்துக்கொண்டு வாசலுக்கு வந்தார்.
அதுவும் அன்று, மாலை சூரியன் மறைவதற்கு செத்தநேரம் முன்பு சோமாசம் பாறை படிசுனை அருகில் தனக்குப் பிடித்த இடத்தில் போய் உட்கார்ந்துகொண்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த கவுண்டரை, அவ்வழியாகத் தன் கொல்லியிலிருந்து மஞ்சப் பை நிறைய எலந்தப் பழம் பொறுக்கிக்கொண்டு வந்து பார்த்துவிட்டு, ”என்னய்யா, இங்க வந்து ஒக்காந்துனு கீற…?’’ என்று குரலை உயர்த்தி பாலு செட்டியார் கேட்டதும்தான் நினைவு வந்து, மெதுவாக திரும்பி பாறையின் கீழே ஞானாச்செடி அருகில் நின்றிருந்த அவரை பார்த்தார் கவுண்டர்.
உடனே இதழ்விரித்து முறுவலித்த செட்டியார், ”என்னய்யா இங்க வந்து ஒக்காந்துனு கீற…?’’ என்று கேட்ட கேள்வியையே மறுபடியும் கேட்டார்.
சட்டென எழுந்து போய் பின்னால் பாறையோரத்தில் இருந்த சூரப்புதர் பக்கத்தில் எச்சில் துப்பிவிட்டு, ”சொம்மாதான் பாலு’’ என்றார் கவலை தோய்ந்த குரலில் கவுண்டர்.
செல்லும் வழியிலிருந்து திரும்பி பின்னால் வந்து பாறைமேல் ஏறி கவுண்டர் அருகில் வந்த செட்டியார், ”ஏன்யா, என்னமோ மாரி கீற…?’’ என்று கேட்டார்.
”அதலாம் ஒண்ணுல்ல பாலு… புள்ளிக்கி தெரட்டி சுத்தமுடியாமப் போச்சில்ல, அத நெனச்சி…’’
”அட, அதுக்காகவாய்யா இங்க வந்து தனியா ஒக்காந்துனுகீற…? இப்ப தெரட்டி சுத்தலனா என்ன… மேலிக்கி கல்யாணத்த ஜாம்ஜாம்னு நடத்திட்டாப் போவுது.’’
கவுண்டர் சொல்லி முடிக்கும் முன்பே செட்டியார் ஆரம்பித்து முடித்தார்.
கேட்டுவிட்டு புன்னகைத்த கவுண்டர், ”ஆமா பாலு… எப்பாடு பட்டாது, பொண்ணு கலியாணத்த ஜாம்ஜாம்னு நடத்திரணும்’’ என்றார் உறுதியாக.
”செரிய்யா, நானு வர்றன். மழ வர்றமாரி கீது பாரு. சீக்கிரமா வூட்டுக்கு போ’’ என்று அண்ணாந்து வானைப் பார்த்து சொல்லிவிட்டு, பையில் எடுத்துவந்திருந்த எலந்தைப் பழத்தில் இரு கைப்பிடி நிறைய அள்ளி ‘வேணாம்’ என சொன்ன கவுண்டரிடம் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து விரித்துப் பிடிக்கச்சொல்லி போட்டுவிட்டு, ”கொண்டுனு போயி புள்ளிங்குளுக்கு கொடுய்யா’’ என்றுவிட்டு வேகமாக நடந்துபோனார் பாலு செட்டியார்.
கதிரவன் முழுதும் மறைந்துபோய் எங்கெங்கும் மெல்லிருள் படரத் தொடங்கியிருந்தது. யாரோ ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு செவடனும் பேராமுட்டா கிழவியும் தெரு முனையில் உள்ள கோபால் ஆச்சாரி வீட்டின் முன்னால் வந்துகொண்டிருந்தார்கள்.
எட்டி வேகமாக பக்கத்தில் வந்தவர்கள், கவுண்டர் வாசலில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு புன்னகைத்து கையெடுத்து கும்பிட்டார்கள்.
பதிலுக்கு இதழ்விரியாமல் தலையாட்டி புன்னகைத்துவிட்டு செவடனைப் பார்த்து, ”வா செவடா, என்ன ரண்டு மூணு நாளா ஆளயே காணாம்…?’’ என்று கேட்டார் கவுண்டர்.
உடனே, ”மத்தியானந்தான் வந்து பாத்தன் கவுண்ர, நீங்க தெவ்டியாகுப்பத்துக்கு போயிகீறிங்கன்னு அம்மா சொன்னாங்க. அதான் வூட்டுக்கு போயி பொசாய்க்கா வரலாம்னு வந்தன்’’ என்று சொன்னான் செவடன்.
‘ஆமாம்’ என தலையாட்டிய கவுண்டர் பேராமுட்டா கிழவியைப் பார்த்து, ”என்ன வராத விருந்தாளிலாம் வூட்டுபக்கம் வந்துகீறாங்க…?’’ என்றார் இனிமையாகச் சிரித்துக்கொண்டு.
கவுண்டர் சொன்னது கேட்டுவிட்டு தன் கறைபடிந்த பற்கள் தெரிய சத்தமாகச் சிரித்த பேராமுட்டா கிழவி, ”வரலன்னா என்ன சாமி… தெனக்கியும் ஒங்கள நெனக்காமயா கீறம்…?’’ என்றார்.
புருவம் உயர்த்தி ஆச்சர்யமாகப் பார்த்த கவுண்டர், ”தெனக்கியும் நெனக்கிற அளவுக்கு நானு ஒண்ணும் பண்ணலயே…’’ என்றார்.
இரண்டடி எடுத்துவைத்து பக்கத்தில் வந்து கவுண்டரின் முகத்தை நேருக்குநேர் பார்த்த பேராமுட்டா கிழவி, ”நீங்க வேணா பண்ணதலாம் மறந்துட்டு, எதுவும் பண்ணுலன்னு சொல்லிக்கலாஞ் சாமி. ஆனா, நாங்க எதயும் மறக்காதவுங்க… நீங்க எங்குளுக்காக செஞ்சத, இந்த ஒடம்புல பொட்டு உயிரு கீற வரிக்கும் மறக்கமாட்டஞ் சாமி’’ என்றார் அழுத்தமாக.
லேசாக முறுவலித்த கவுண்டர், பக்கத்தில் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு நின்றிருந்த பெண்ணைப் பார்த்தார்.
”இவ எங்க பக்கத்தூட்டு பொன்னுதாயி மவ மேகலா. இவ புள்ளிக்கி நேத்து காலிலருந்து வுட்டுவுட்டு காயலடிக்கிது. எதயோ பாத்து பயிந்துனுகீறா. அதான் ஒங்க கய்யால திர்நூறு புடிச்சி போட்டுனு போலாம்னு கூட்டுனு வந்தன்.’’
பேராமுட்டா கிழவி சொன்னதைக் கேட்டுவிட்டு தலையாட்டிய கவுண்டர், ”செரி, திண்ணமேல ஒக்காருங்க. தோ வர்றன்’’ என்று சொல்லிவிட்டு, அப்பெண்ணையும் அவர் கையில் வைத்திருந்த குழந்தையையும் ஒருதடவை பார்த்துவிட்டு கிடுகிடுவென நடந்து வீட்டுக்குள் போனவர், நடுவீட்டுக்குள் போய் சாமி படத்தின் கீழே உட்கார்ந்து மாடத்தில் சிறு டப்பாவில் வைத்திருந்த கற்பூர வில்லையில் ஒன்றை எடுத்து திருநீறுதட்டில் வைத்து ஏற்றி, கண்மூடி சில நொடிகள் மனதார வேண்டிக்கொண்டு, கற்பூரம் அணைந்ததும் ஒரு காகிதத்தில் ரவ திருநீற்றை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து, திண்ணையில் உட்கார்ந்திருந்த பெண்ணை எழுந்து நிற்கச் சொல்லி, அவர் கையிலிருந்த குழந்தைக்கு அதில் ஒரு பிடி எடுத்து தலைமேல் போட்டுவிட்டு, நெற்றியிலும் கழுத்திலும் இட்டுவிட்டு மீதியை மடித்து அவரிடம் தந்து சொன்னார்.
”ஒண்ணும் பயிப்புட வேணாந் தாயி. வூட்டுக்குப் போயி, இதல ரவ திர்நூற எடுத்து… தண்ணில போட்டு, புள்ளிக்கி குடுப்பாட்டி வுட்டுட்டு… ரவோத்தரம் எடுத்து ஒடம்புல பூசி வுடு. காலிலக்குள்ள எல்லாம் சரியாப்புடும்.’’
பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த பேராமுட்டா கிழவி, ”ஒங்குளுக்கு புண்ணிமா போவுஞ் சாமி’’ என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு, அப்பெண்ணை தன்னுடன் கூட்டிக்கொண்டு செவடனிடம் சொல்லிவிட்டு மெதுவாக நடந்துபோனார்.
அவர்கள் சென்று தெருமுனையில் வடக்குப் பக்கம் திரும்பி மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு திண்ணையோரம் நின்றிருந்த செவடனை பார்த்து வராத புன்னகையை வரவழைத்துக் காட்டிய கவுண்டர், ”வாடா செவடா, போயி அந்தக் கட்டுல தூக்கியாந்து போட்டு ஒக்காருவோம்’’ என்று சொல்லி கூட்டிக்கொண்டு போய், பூவரச மரத்தடியில் இருந்த கட்டிலை ஆளுக்கொரு கை பிடித்து தூக்கிவந்து வாசலில் போட்டு உட்கார்ந்தார்கள்.
எங்கும் பேரிருள் வந்து சூழ்ந்து, ஆங்காங்கே வீடுகளில் எரியும் விளக்கு வெளிச்சம் மட்டுமே தெரிந்தது. பார்ப்பதற்கு யாவும் இருள்வெளியில் ஒளிப்பூக்கள் அலர்ந்திருப்பதுபோல் இருந்தது.
”தெக்கால பெருங்கொளத்தூரு, எளாங்கண்ணி வரிக்கும் போயி பாத்துட்டம்… எங்கயும் காணாம். இந்தப்பக்கம் அல்லப்பனூரு, ரயிண்டாபுரம், தொண்டனூருலாம் போயி… ஒரு எடம் வுடாம பாத்தாச்சி.’’
”வடக்கால மோட்டூரு, நாளால்பள்ளலாம் பாத்துட்டு… தண்ராம்பட்டு போனவுங்கள இன்னுங் காணாம். அவுங்க வந்தாதான் தெரியும்.’’
”இப்டி ஊரூரா போயி தேடறத வுட்டுட்டு… அந்த இரள நாயோட அப்பனயும் ஆத்தாளயும் ஈத்துப் போட்டு நாலு மெரி மெரிச்சா, பொலம் சொல்லப்போறாங்க.’’
யாரோ நான்கைந்து பேர், எதிரிலிருந்த பொன்னுசாமி ஆச்சாரி வீட்டுக்குள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்குத் தாம் பேசுவது கேட்கக் கூடாதென மென் சத்தத்தில் பேசுவதாக நினைத்து சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
வந்ததிலிருந்து சரிவர எதுவும் பேசாமல் உம்மென இருந்த செவடன், ”கவுண்ர, நானு ஒண்ணு கேப்பன்… உண்மய சொல்லுணும்’’ என்றான், கவுண்டரைப் பார்த்து.
சட்டென்று திரும்பி மெல்லிய வெளிச்சத்தில் தெரிந்த செவடனின் முகத்தை பார்த்து, ”ம்… கேளுடா, சொல்றன்’’ என்றார் கவுண்டர்.
”இப்பிடி யாரு எவுருன்னு பாக்காம… யாரு வந்து கேட்டாலும் திர்நூறு புடிச்சி தர்றீங்க. ஆடு மாடு மனுசன்னு யாருக்கு வந்து வைத்தியங் கேட்டாலும்… முன்ன பின்ன ஓசன பண்ணாம, கீற வேலயலாம் வுட்டுட்டு போயி ஒடனே பாக்குறீங்க. ஆனா, ஒருத்தருகிட்ட கூட நாலணாவோ எட்டணாவோ கைய நீட்டி, சம்மானமா வாங்கி நானு பாத்ததுல்ல. அப்பிடியே யாருனா ஒத்தக்கால்லு நின்னு எதனா தந்தாலும்… அத அவுங்ககிட்ட போயி கொடு, இவுங்ககிட்ட போயி கொடுன்னு இல்லாதவுங்க யாரனா கையக்காட்டி வுட்டுர்றீங்க. இதே, ஊருல வேற யாருனா இருந்திருந்தா… இம்மா நேரத்துக்கு கட்டுக்கட்டா பணம் சம்பாரிச்சி, பெரிய மெத்தவூடா கட்டிருப்பாங்க. ஏன் கவுண்ர, இந்த வூருக்கும் மக்கிங்கிளுக்கும் இப்பிடி எல்லாத்தயும் எனாமா பண்ணினு கீறிங்க…?’’
செவடன் என்றும் இல்லாமல் இன்று, அதுவும் இவ்வளவு நீளமான கேள்வியைக் கேட்டுவிட்டு, கவுண்டரின் பதிலுக்காக அவரையே பார்த்துக்கொண்டு காத்திருந்தான்.
சில நொடிகள் எதுவும் சொல்லாமல் கண்களை மூடி செவடனின் கேள்வியை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டிருந்த கவுண்டர், ”எங்கய்யாக்கு அவுரோட ஐயா, அதான் எங்க தாத்தா… என்னிக்கும் நீ செய்யிற இந்த வைத்தித்துக்கு, யாருகிட்டயும் கைய நீட்டி ஒரு பைசா கூட கூலியா வாங்கக்கூடாது. அதோட, யாரு வந்து வைத்தியன்னு கேட்டாலும்… அவுங்க யாரு எவுருன்னு பிரிச்சிப் பாக்காம, ஒனுக்கு தெரிஞ்ச வைத்தித்த மனசார செய்யின்னு சொல்லி கத்துத் தந்தாரு. அவுரும் அததான் எனுக்கிட்ட சொல்லித் தந்தாரு. அதான்…’’ என்றுவிட்டு திரும்பி, வீட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்து மேற்கால பக்கம் நடந்துபோன மாணிக்கத்தையும் ஏழுமலையையும் பார்த்துவிட்டு சொன்னார்.
”நம்மள நம்பி வேற போக்கத்து வர்றாங்க. அவுங்ககிட்ட போயி அத இத எதிருபாத்துனு… நம்முளுக்கு தெரிஞ்ச நல்ல விசியத்த பண்ணம்னா, அது நல்லாவாருக்கும்…? பாவம் இந்த மக்கிங்க… எதோ என்னால முடிஞ்ச ஒத்தாசய அவுங்குளுக்காக கைமாறு பாக்காம செய்யிறன். பாப்பம், இன்னும் எம்மாந்நாளு முடிமோ அம்மாந்நாளு செய்வோம்.’’
சொல்லிவிட்டு கவுண்டர் தன் மீசை தாடியை அழுந்த வருடிவிட்டு உதடசைத்து சிரித்தது, செவடன் கண்ணுக்கு அவன் கும்பிடும் ஒத்த கை முனியனே நேரில் வந்து பக்கத்தில் உட்கார்ந்து சிரிப்பது போல் இருந்தது.
கவுண்டரின் சொற்களைக் கேட்டுவிட்டு உள்ளுக்குள் நெகிழ்ந்து மகிழ்ந்தவனாய் செவடன் உட்கார்ந்திருக்க, மேற்காலப் பக்கம் போன மாணிக்கமும் ஏழுமலையும் தங்களுக்குள் எதையோ குசுகுசுவென பேசிக்கொண்டு பின்னால் வந்து நின்று, ”ஐய்யா’’ என்றார்கள்.
சட்டென்று திரும்பி இருவரையும் பார்த்த கவுண்டர், ”என்ன சாமி…?’’ என்றார்.
எதுவும் சொல்லாமல் இருவரும் முன்னால் வந்து நின்றார்கள்.
‘என்ன?’ என்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்த கவுண்டரின் முகத்தைப் பார்த்து, ”ஒன்கிட்ட ஒண்ணு சொல்லணும்யா’’ என்றான் மாணிக்கம்.
பின்னாலேயே ஏழுமலையும், ”நானு ஒண்ணு கேக்கணும்ய்யா’’ என்றான்.
இருவரும் ஒரே நேரத்தில் வந்து ஏதோ கேட்கப்போவதாகவும் சொல்லப்போவதாகவும் சொன்னதைப் பார்த்து, ‘ஹாஹா’ என மிதமான சத்தத்தில் சிரித்துக்கொண்டு செவடனைப் பார்த்துவிட்டு கவுண்டர் மாணிக்கத்திடம், ”நீ கேளுய்யா மொதுல்ல’’ என்றார்.
”பள்ளிக்கோடம் வுட்டு நின்னதுலருந்து… அப்பப்ப நம்ம கொல்லி வேலய செஞ்சிக்கினு… எதனா கூலி வேலிக்கு அதும், எப்பயாது போறதோட செரிய்யா… மீதி நேரம்லாம் சொம்மாதான சுத்தினுகீறன். அதான் ஊரப்பாக்கத்துல கீற தனபால் அண்ணங்கிட்ட போயி… துணி தக்க கத்துக்கலாம்னு கீறன்யா. நாளபின்ன எப்பனா ஒரு மிசினு வாங்கிப் போட்டாக்கா… நம்மூட்லயே டைலர் கட வச்சி ஒக்காந்து தக்கலாம்ய்யா’’ என்றான்.
கேட்டுவிட்டு உள்ளுக்குள் பெரிதாய் மகிழ்ந்த கவுண்டர், வெளியில் அதை சிறிதும் காட்டிக்கொள்ளாமல் லேசாக புன்னகைத்து, ”செரிய்யா, ஒனுக்கெது இஸ்டமோ அத செய்யி’’ என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் நின்றிருந்த ஏழுமலையைப் பார்த்து, ”நீ எதோ கேக்கணும்னு சொன்னியே, கேளுய்யா’’ என்றார்.
அதற்காகவே காத்திருந்தவனாய், ”எனுக்கு ரண்டு வெள்ளாடு வாங்கி கொடுக்குறயாய்யா…? நானு ஆடு மேக்கலாம்னு கீறன். இப்ப ரண்டாடு வாங்கி தந்தன்னா… இன்னும் அஞ்சாறு வருசத்துல இருவுது முப்புது ஆடாயிரும். இதயே ஒரு வேலயா மாரி தாத்தா, சேவிக் கவுண்ரு மாரி நானும் பண்ணலாம்னு கீறன்யா’’ என்றான்.
கவுண்டரால் முதலில் நம்பவே முடியவில்லை. கேட்டதும் வியந்தவர், ‘என்ன இன்னிக்கி பசங்க ரண்டுபேரும் ஒரே நேரத்துல வந்து… அதும் பேசி வச்சமரே, அது பண்ணப்போறன் இது பண்ணப்போறன்னு சொல்றாங்க…? ஒருவேள பூர்ணி வூட்டுவுள்ள போயி செல்வி கல்யாண விசியத்த சொல்லிருப்பாளோ…? அதான் பசங்க நாம எந்த வேலயும் செய்யாம சொம்மா கீறமேன்னு பேசினு, நாமுளும் எதனா பண்ணலாம்னு ஓசன பண்ணினு வந்து சொல்றாங்களோ…?’ என்று உள்ளுக்குள் தன்னைத் தானே கேட்டுக்கொண்டார்.
செத்தநேரம் அமைதியாக இருந்துவிட்டு எதிரில் நின்றிருந்த ஏழுமலையை பார்த்து கவுண்டர், ”செரி சாமி, சின்ன மாமங்காரன் நாளமறுநாளு வந்தா வருவான்… அவன்கிட்ட சொல்லி சக்கரால சந்தயில வாங்கியாற சொல்றன்’’ என்றார் தலையாட்டிக்கொண்டு.
உடனே மாணிக்கமும் ஏழுமலையும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டு, ”செரிய்யா, நாங்க வூட்டுள்ள போறம்… நீங்க பேசுங்க’’ என்று சொல்லிவிட்டு, தங்களுக்குள் எதையோ குசுகுசுவென பேசிக்கொண்டு வேகமாக நடந்து வீட்டுக்குள் போய் தாழ்வாரத் திண்ணையில் உட்கார்ந்து, சீமெண்ணை விளக்கு வெளிச்சத்தில் அடுப்பில் சாம சோறு ஆக்கிக்கொண்டிருந்த பூரணியம்மாவையும் பக்கத்தில் அமர்ந்து முருங்கைக் கீரை ஆய்ந்துகொண்டிருந்த செல்வியையும் பார்த்தார்கள்.
மாணிக்கமும் ஏழுமலையும் வந்து சொன்னது கேட்டு கண்கலங்கிய செவடன், கொஞ்சநேரம் உட்கார்ந்து பேசிவிட்டு போனதும் எழுந்து வீட்டுக்குள் வந்த கவுண்டர்… பூரணியம்மா கிண்ணியில் போட்டுத்தந்த சாமை சோற்றை பசியின்றி உண்டுவிட்டு, எதிரில் உட்கார்ந்திருந்த செல்வியைப் பார்த்து, ”இப்ப எப்டி தாயி கீது ஒடம்பு…?’’ என்று கேட்டார்.
”இப்ப கொஞ்சம் மாதிரியா கீதுய்யா’’ என்ற செல்வி, எழுந்து போய் அடுப்பு திட்டுமேல் சின்ன தட்டில் வைத்திருந்த சொய்யா உண்டையில் ஒன்றை எடுத்து வந்து தந்து, ”இந்தாய்யா… மாமா வூட்ல தந்தாங்க’’ என்றாள்.
‘வேண்டாம்’ என தலையாட்டிய கவுண்டர், ”எனுக்கு எதுக்கும்மா… சின்னப் புள்ளிங்க நீங்க தின்னுங்க’’ என்று சொல்லிவிட்டு, கடைசி வாய் சோறள்ளி வாயில் போட்டுக்கொண்டு, பக்கத்திலிருந்த ரோட்டா சொம்பை எடுத்து கிண்ணியிலேயே கை கழுவிவிட்டு எழுந்து வெளியில் வந்தார்.
இவ்வளவு நேரம் மேகத்திரள்களுக்குப் பின்னால் மறைந்திருந்த துளிர் நிலா, மெல்ல வெளியில் வந்து ஒளிர ஆரம்பித்திருந்தது.
செத்தநேரம் நின்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு கட்டிலில் போய் உட்கார்ந்த கவுண்டர், ‘செல்வி கலியாணத்த எப்பிடி நடத்தப்போறம்…?’ என நினைத்து உள்ளுக்குள் விசனப்பட்டுக்கொண்டிருந்தார்.
”தூங்கலயாய்யா…?’’
அரைமணி நேரம் ஆகியிருக்கும். ஒன்றன் பின் ஒன்றாக எதை எதையோ நினைத்துக்கொண்டிருந்த கவுண்டர், செல்வியின் குரல் கேட்டு பின்னால் திரும்பிப் பார்த்தார்.
சாப்பிட்டுவிட்டு தட்டில் கை கழுவிய நீரை எடுத்து வந்து வாசலோரமிருந்த சிறு வேப்ப மரத்தில் ஊற்றிவிட்டு, வெறும் தட்டை கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தாள் செல்வி.
”தூங்கணுந் தாயி.’’
கவுண்டர் உடைந்துபோய் சொன்னதைக் கேட்டு மெதுவாக பக்கத்தில் வந்து கட்டிலில் உட்கார்ந்த செல்வி, ”நகநட்டு நறயா கேக்கற மாப்பளலாம் எனுக்கு வேணாம்யா’’ என்றாள் கம்மிய குரலில்.
என்ன சொல்வதெனத் தெரியாமல், தெரு முனையிலிருந்த கோபால் ஆச்சாரி வீட்டு வாசலில் யாரோ நான்கைந்து பேர் நின்றுகொண்டு சத்தமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டு மெளனமாக உட்கார்ந்திருந்தார் கவுண்டர்.
”நாம கீற நெலமில இப்ப எனுக்கு கலியாணம்லாம் வேணாம்யா’’ என்றுவிட்டு, மெல்ல கவுண்டரின் கையைப் பிடித்த செல்வி, ”அம்மாகிட்ட சொன்னா கேக்க மாட்டாங்க. அதான்யா ஒன்கிட்ட வந்து சொல்றன்’’ என்று கண்கலங்கி சொல்லிவிட்டு, எழுந்து வேகமாக நடந்து வீட்டுக்குள் போனாள்.
சில நொடிகள் அவள் சொல்லிவிட்டு போன வார்த்தைகளையே நினைத்துக்கொண்டிருந்த கவுண்டர், சட்டென கையெடுத்து வானை நோக்கி கும்பிட்டு, ‘அப்பிடியே செத்துப்போன எங்கம்மாகாரிதான், செல்வி ரூவத்துல வந்து எனுக்கு புள்ளயா மறுபிடியும் பொறந்துகீறா… இப்பிடியாப்பட்ட புள்ளய பெத்ததுக்கு நானு எம்மாங் கொடுப்பன பண்ணிருக்கணும்…? வூரு ஒலகத்துல எந்தப் புள்ளயாது வந்து அப்பங்காரங்கிட்ட இப்பிடி சொல்லுமா…? அதும் வசதியான மாப்பள, அழ்வான மாப்பள வரப்போறான்னு தெரிஞ்சும்… குடும்ப நெலமிய நெனச்சிப்பாக்கற புள்ள, இந்தக் காலத்துல யாருக்கு கெடக்கும்…?’ என்று தனக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் சொல்லிவிட்டு, தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து கட்டிலில் விரித்துப் போட்டு படுத்த செத்தநேரத்திலேயே அசதியில் உறங்கிப்போனார்.
அடுத்த நாள் காலையில் எழுந்துபோய் ராமு கவுண்டர் கிணற்றில் குளித்துவிட்டு வந்து காக்கி டவுசரும் வெள்ளை சட்டையும் போட்டுக்கொண்டு, மதிய சாப்பாடு பள்ளிக்கூடத்தில் வாங்கி சாப்பிட காலி தட்டு எடுத்து கைப்பையில் வைத்துக்கொண்டு, ரவியுடன் அல்லாகோயில் ஒட்டிய ஒத்தையடிப் பாதை வழியாக பேசிக்கொண்டு நடந்துபோன முருகன்… அன்வர் பாய் மா மரத்தருகிலிருந்த தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டு, மெல்ல முரம்பு மேடேறி இறங்கி, வயல்வெளி நடுவில் போகும் மரிசியில் சென்று, பொறடியாத்தா சிலையிருக்கும் கல்லாக்குட்டைக்கு நேராக நின்று கையெடுத்து சாமி கும்பிட்டுவிட்டு, கிடுகிடுவென போய் ஆற்றில் இறங்கி பெரிய மடுவு பக்கத்திலிருந்த மணலில் பையை வைத்துவிட்டு ஆளுக்கொரு கப்பை கல் எடுத்துக்கொண்டு பள்ளியில் ஒண்ணாவது மணி அடிக்கும்வரை விளையாடிவிட்டு, முட்டிமூட்டு நீரில் இறங்கி நடந்து மறு கரையிலிருக்கும் பள்ளிக்குப் போனான்.
[இன்னும்]
*