முரம்பு – 29

ஊர் வரும் வரைக்கும் யாரிடமும் சரிவர முகம்கொடுத்துப் பேசாத முத்துசாமிக் கவுண்டர், வீட்டுக்கு வந்ததும் நேராக பூவரச மரத்தடியில் போட்டிருந்த கட்டிலில் போய் உட்கார்ந்துகொண்டு வாதநாராயண மரத்தின் அடியில் விளையாடிக்கொண்டிருந்த இரு அணில்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

பின்னாலேயே வந்த பூரணியம்மா, மெல்ல பக்கத்தில் வந்து நின்று கவுண்டரின் தோளைத் தொட்டார்.

தொட்டது பூரணியம்மாதான் என திரும்பிப் பார்க்காமலேயே தெரிந்துகொண்ட கவுண்டர், ”ஏன் பூர்ணி…?” என்றார் தாழ்ந்த குரலில்.

எதுவும் சொல்லாமல் அருகில் உட்கார்ந்த பூரணியம்மா, ”எந்த தேரித்துல தே, அவுங்க கேட்டதலாம் செய்யிறன்னு சொல்லிட்டு வந்த…?’’ என்று கேட்டார்.

கீழே குனிந்து மண்ணைப் பார்த்துக்கொண்டு, ‘தெரியாது’ என்பதுபோல் தலையாட்டினார் கவுண்டர்.

பார்த்த பூரணியம்மா, ”இப்பிடி எதுவும் சொல்லலனா எப்டி தே…?’’ என்று கேட்டார்.

எந்தவோர் அசைவுமின்றி அப்படியே உட்கார்ந்திருந்தார் கவுண்டர்.

உடனே கவுண்டரின் கையைப் பிடித்துக்கொண்ட பூரணியம்மா, ”எனுக்கு ரம்ப பயமா கீது தே’’ என்று சொல்லிக்கொண்டு கண்கலங்கி அழ ஆரம்பித்தார்.

பூரணியம்மாவின் அழுகுரல் கேட்டு சட்டென நிமிர்ந்து பார்த்த கவுண்டர், ”எதுக்கு பூர்ணி, இப்ப கொய்ந்த புள்ளமரே அய்வர…? ஏன்ச்சி அய்வாம வூட்டுள்ள போ… நீ இப்பிடி அய்துனுகீறத பாத்தா, பொண்ணு துடிச்சிருவா’’ என்றார்.

கட்டியிருந்த புடவையின் தலப்பால் வேகமாக கண்களைத் துடைத்துக்கொண்டு கவுண்டரைப் பார்த்த பூரணியம்மா, ”எதயும் மறக்காம என்கிட்ட சொல்லு தே… எப்டி அவுங்க கேட்ட நகநட்டு சீர்செனத்தியலாம் செய்யப்போறம்…?’’ என்று கேட்டார்.

திரும்பி துரிஞ்ச மரத்தடியில் கட்டியிருந்த கருப்பு மாட்டை பார்த்துவிட்டு தைரியம் கொண்டவராய், ”நம்ம மொரம்புக் கொல்லிய வித்துதான் பூர்ணி’’ என்றார் கவுண்டர்.

பகீரென்றது பூரணியம்மாவுக்கு. உயிர்வரை துடித்துப்போனார். கண்கள் தானாகக் கலங்கி தாரை தாரையாகக் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. பல்லைக் கடித்துக்கொண்டு உள்ளுக்குள் சத்தமாக அழுதபடி கவுண்டரைப் பார்த்தார்.

வேகமாக எழுந்து தன் கலங்கிய கண்களை தோளில் போட்டிருந்த கட்டம்போட்ட துண்டால் துடைத்த கவுண்டர், ”ஆமா பூர்ணி… எனுக்கு இதவுட்டா வேற வழி தெர்ல’’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கடகடவென நடந்து எதிரில் வந்த கொல்லனை பார்த்தும் பார்க்காமல் வெப்பால மர வழியாக முரம்புக் கொல்லிக்கு வந்து, குழந்தையைப் புதைத்த இடத்திலிருந்த சிறு வேப்ப மரத்தடியில் நின்றுகொண்டு, வரும் வழியில் தன் மச்சான் ராமு கவுண்டரும், நண்பன் மாரிமுத்து கவுண்டரும் தன்னிடம் கேட்ட கேள்விகளை மனத்துள் மீட்டிப் பார்த்துக்கொண்டு, தன் கொல்லியை வலியோடு பார்த்தார்.

எப்போதும் சிரிப்பது போல் தெரியும் கொல்லி, தன் ஈரக்கண்ணில் முதல் தடவையாக அழுவதுபோல் தெரிந்தது கவுண்டருக்கு.

மாப்பிள்ளை வீட்டிலிருந்து கிடுகிடுவென முன்னால் நடந்துவந்த கவுண்டரை, ”டேய் முத்துசாமி, செத்த நில்லுடா’’ என்று சொல்லிக்கொண்டு பக்கத்தில் வந்தார் மாரிமுத்து கவுண்டர்.

எதையோ நினைத்து விசனத்தோடு இருந்த கவுண்டரைப் பார்த்து, ”ஏன்டா முத்துசாமி… இது ஒனுக்கே நல்லாகீதா…? நீ பாட்டுனு பெரிய இவன்மாரி ஏன்ச்சி, கேட்டதலாம் செய்யிறன்னு சொல்லிட்டு வந்துட்டவன். எப்டி எல்லாத்தயும் செய்யப்போற…?’’ என்று கேட்டார்.

எதுவும் சொல்லாமல் திரும்பி தன் பாட்டுக்கு நடந்தார் கவுண்டர்.

பின்னால் வந்த ராமு கவுண்டர், ”நானுதான் கொறச்சி கிறிச்சி சொல்லுங்கன்னு கேட்டனே… செத்தநேரம் வாய வச்சினு சொம்மாருந்திருந்தனா, ரண்டுமூணு பவுனாது கொறச்சிருப்பாங்கல்ல’’ என்றார்.

மெல்ல திரும்பி ராமு கவுண்டரை கண்களால் எரிப்பதுபோல் பார்த்துவிட்டு, எதிரில் ஒரட்டாங்கையில் சிறு மூங்கில் குச்சி வச்சி ‘ஓய்… ஓய்…’ என செம்மறி ஆடு ஓட்டிக்கொண்டு வந்த சிறுவனையும், அவன் பின்னால் நடக்க முடியாமல் தன் வலது காலை தாங்கித் தாங்கி நடந்துவந்த பட்டாப்பட்டி டவுசர் போட்ட பெரியவரையும் பார்த்துக்கொண்டு நடந்தார் கவுண்டர்.

”டேய் முத்துசாமி, ஓங்கிட்டதான்டா கேக்குறன்’’ என்று குரலை உயர்த்திக் கேட்டார் ராமு கவுண்டர்.

சட்டென நின்று பின்னால் சற்று தூரத்தில் இசைவள்ளியோடும் சாரதாம்மாவோடும் வாடிய மல்லாட்டை கொடிபோல் நடந்து வந்த பூரணியம்மாவைப் பார்த்துவிட்டு ராமு கவுண்டரிடம், ”என்னடா சொல்ல சொல்றவன்…?’’ என்று கேட்டார் கவுண்டர்.

”எதுக்கு நீ பாட்டுனு அவசரப்பட்டு ஏன்ச்சி… கேட்டதலாம் செய்யிறன்னு சொல்லிட்டு வந்தவன்…?’’

ஏற்கெனவே தான் சொன்னதை இப்போது கேள்வியாகக் கேட்டார், ராமு கவுண்டர்.

பக்கத்திலிருந்த அரச மரத்தடி நிழலில் ஒதுங்கி நின்று, குனிந்து ஓரமாக எச்சில் துப்பிவிட்டு சொன்னார் கவுண்டர்.

”நீ எனுக்கு நல்லது பண்றதா நெனிச்சிதான் கேட்ட… அத நானு இல்லன்னுல. நாளபின்ன அவுங்க வூட்ல எதனா சண்டகிண்ட வந்தா… இதயே பெரிய குத்தமாட்டம் சொல்லிக்காட்டுவாங்கல்ல, எதுக்கு வம்பு…? ஒண்ணு, அவுங்க வாயிவுட்டு கேட்டத செய்யினும். இல்லனா, எங்குளுக்கு செரிபட்டு வராதுன்னு சொல்லிட்டு ஏன்ச்சி வந்திருக்கனும். அததான் நானு செஞ்சன்.’’

கவுண்டர் சொன்ன பதிலைக் கேட்டுவிட்டு பக்கத்தில் நின்றிருந்த மாரிமுத்து கவுண்டரைப் பார்த்தார், ராமு கவுண்டர்.

உடனே ‘ஆமாம்’ என தலையாட்டி, ”முத்துசாமி சொல்றதும் செரிதான்’’ என்றார் மாரிமுத்து கவுண்டர்.

அங்கிருந்து ஒன்றும் பேசாமல் அமைதியாக வந்த ராமு கவுண்டர், தேவரடியார்குப்பம் கோயிலருகில் இருந்த மாரிமுத்து கவுண்டரின் வீட்டு முன்னால் வந்ததும் கவுண்டரிடம் இறுதியாகக் கேட்டார்.

”செரி, நடந்தது நடந்துபோச்சி… வுட்ருவம். நீ பாட்டுனு செய்யிறன்னு ஏன்ச்சி கவுருமா சொல்லிட்டு வந்துட்டயே… எங்கருந்து செய்யப்போற, அத மொதல்லு சொல்லு…?’’

மெல்ல திரும்பி, மாரிமுத்து கவுண்டரை பார்த்து வலிந்து புன்னகை வரவழைத்துக் காட்டிவிட்டு ராமு கவுண்டரிடம் தலையாட்டி, ”தெரில’’ என்றார்.

துளியும் ஏற்கமுடியாத பதிலால் இன்னும் கோபமான ராமு கவுண்டர், ”ஒனுக்கு கிறுக்கு கிறுக்கு எதனா புடிச்சிப் போச்சாடா…?’’ என்று கேட்டார்.

ராமு மாமா கேட்டதற்கு பதில் சொல்லாமல் மாரிமுத்து கவுண்டரிடம், ”செரி மாரிமுத்து, நாங்க போயி வர்றம்’’ என்று சொல்லிவிட்டு, பின்னால் வந்த பூரணியம்மாவையும் இசைவள்ளியையும் கூட்டிக்கொண்டு, தெருவோர வாழை மரத்தில் கண்ணாடி இலை விட்டிருப்பதையும், அதனருகிலிருந்த புதிதாக கட்டிய மெத்தை வீட்டின் காத்துவாரியில் யாரோ நீளமான கேசட் ரீலு கட்டியிருப்பதையும் பார்த்துவிட்டு, ஊர்நோக்கி நடந்து வந்தார் கவுண்டர்.

வேப்ப மரத்தடி நிழலில் குத்துக்காலிட்டு உட்கார்ந்த கவுண்டர், ‘நாம பாட்டுனு எடுத்தங் கவுத்தம்னு பூர்ணிகிட்ட கொல்லிய விக்கப்போறம்னு சொல்லிட்டு வந்துட்டமே… பாவம், அவ மனுசு என்னா பாடுபட்டுச்சோ…? ‘நானு இத கொல்லியா பாக்கல தே, செத்துப்போன நம்ம புள்ளயாதான் பாக்கறன்’னு சொன்னாளே… அதபோய் விக்கறதா சொன்னத எப்பிடி எடுத்துக்கிட்டாளோ தெர்லயே… நம்ம புள்ளிங்க என்ன நெனப்பாங்களோ… இத செவடன் எப்பிடி தாங்கிக்கப்போறானோ… இந்த ஊருகாரங்குளுக்கு தெரிஞ்சா என்னலாம் சொல்லி போவவுட்டு பேசப்போறாங்களோ… அந்த லாகாசி அம்மாசி கெழ்வி என்னென்னலாம் சொல்லி ஓத்தாமுட்டு வுடப்போறாளோ…’ என்று வரிசையாக தன்னைத் தானே கேட்டுக்கொண்டிருந்தார்.

யாரிடமும் போய் எதுவும் சொல்லாமல் தனக்குள் அழுதுகொண்டு அங்கேயே உட்கார்ந்திருந்த பூரணியம்மா, ‘நானு அன்னிக்கி நெனச்சமரே, எங்க கையவுட்டு மொரம்புக் கொல்லி போவப்போதுல்ல…? எது நடக்கக் கூடாதுன்னு தெனந்தெனம் கெடந்து அடிச்சிக்கிட்டனோ… அதுவே இப்ப நடக்கப்போதில்ல…? ஏன்தான் இந்த ஆண்டவன் எங்குளுக்கு மட்டும் இப்டி சோதன தர்றானோ தெர்லயே. நாங்க என்ன பாவம் பண்ணோம்…? எங்குளுக்குன்னு கீற ஒத்த பூமி… அத வித்துதான் பொண்ணு கலியாணத்த பண்ற நெலமிக்கி எங்கள கொண்டாந்து வுட்டுட்டானே. போக்கத்த நாங்க… இனி எங்க போவோம், என்ன பண்வோம், யாருகிட்ட போயி நிப்போம்…?’ என்று ஏதேதோ சொல்லி தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தார்.

‘போன காரியம் என்னாச்சி…?’ என கேட்டுத் தெரிந்துகொள்ள வந்த செல்வி, பூரணியம்மா கட்டிலில் கலங்கிபோய் உட்கார்ந்திருக்கும் காட்சியைக் கண்டதும் என்ன நடந்திருக்கும் என ஓரளவு யூகித்துவிட்டாள். இருந்தாலும் அதைத் தன் அம்மா வாயால் கேட்டறிய வேண்டும் என நினைத்து மெல்ல பக்கத்தில் வந்து, ”என்னம்மா இங்க வந்து ஒக்காந்துனு கீற…?’’ என்று சகஜக் குரலில் கேட்டாள்.

சட்டென முகத்தில் வடியும் வியர்வையை துடைப்பதுபோல் கண்களைத் துடைத்துக்கொண்டு, மெல்ல திரும்பி இதழை விரித்துக்காட்டிய பூரணியம்மா, ”சொம்மாதான் செல்வி’’ என்றார்.

”ஏம்மா மொகம்லாம் ஒருமாரி கீது…?’’

செல்வி கேட்டதற்கு என்ன பதில் சொல்லலாம் என தனக்குள் யோசித்துக்கொண்டு, சற்று தள்ளியிருந்த மூங்கில் படலில் ஏறியிருந்த முஷ்டக் கொடியைப் பார்த்த பூரணியம்மா, ”அது ஒண்ணுல்ல தாயி, வெயில்ல நடந்து வந்தம்ல… அதான் தலலாம் கிருகிருன்னு சுத்திச்சி. இங்க வந்து நெவுலுக்கா ஒக்காந்தன்’’ என்று ஒருவாறு நம்புவதுபோல் சொல்லி சமாளித்தார்.

”புதூருக்கு போனீங்கிளே… என்னம்மா சொன்னாங்க…?’’

பெரும் தயக்கத்தோடுதான் செல்வி இதைக் கேட்டாள்.

எதுவும் சொல்லாமல் கீழே குனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்த பூரணியம்மாவைப் பார்த்துவிட்டு, ”நானுதான் அப்பயே சொன்னனேம்மா… அவுங்கள பாத்தா பெரிய பணக்காரங்கமரே கீது. நகநட்டுலாம் நறயா போட சொல்லி கேப்பாங்க… நம்மளால அத போடமுடியாது. அதான் அன்னிக்கே வேணாம்னு சொன்னன். நீங்கதான் கேக்கள’’ என்றாள்.

மெல்ல தலையை நிமிர்த்தி செல்வியின் கண்கள் லேசாக கலங்கியிருப்பதை கண்ட பூரணியம்மா, ”போன காரியம் நல்லபுடியா முடிஞ்சிருச்சி, போருமா…?” என்றுவிட்டு, பின்னால் சாக்கடையிலிருந்த பெரிய பானையில் காகம் ஒன்று தலையை நுழைத்து தண்ணீர் குடிப்பதை திரும்பிப் பார்த்துவிட்டு, ”இந்த மாசமே நடுகூறு தாண்டி பரியம் போட்டுட்டு… அதுக்கடுத்த முவூர்த்தத்துலயே கலியாணத்த வச்சிக்கிலாம்னு கீறம்’’ என்றார்.

கேட்ட செல்விக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அதோடு, அவளால் பூரணியம்மா சொன்னதை நம்பவும் முடியவில்லை. உள்ளுக்குள் துள்ளிக் குதித்துக்கொண்டு மாப்பிள்ளையின் முகத்தை மனத்தாளில் புரட்டிப்பார்த்துவிட்டு, பூவரசி சற்றுமுன் சொல்லிவிட்டு போனதை நினைத்துப் பார்த்தாள்.

அதுவும் காலை பத்து மணி வாக்கில் ஏழுமலையும் மாணிக்கமும் வீட்டிலிருந்து கிளம்பிப் போனதும் சின்ன படி நிறைய அவித்து காயவைத்து பெரிய பானைக்குள் கொட்டிவைத்திருந்த மால்லாட்டையை தாயம் விளையாடிக்கொண்டு தின்பதற்கு எடுத்து வந்திருந்த பூவரசியிடம், தாழ்வாரத் திண்ணையில் உட்கார்ந்து பல்பங்கல்லால் கோடு கிழித்துக்கொண்டிருந்த செல்வி சொன்னாள்.

”ஏய் பூவு, எனுக்கு என்னுமோ ரொம்ப பயமா கீதுடி.’’

”ஏன், என்னாச்சிடி…?’’ என்று கேட்டாள் பூவரசி.

”இல்ல பூவு. இந்த மாப்பள வூட்டுக்காரங்க என்ன சொல்வாங்கன்னு தெர்ல. அத நெனச்சாதான்…’’

”செரி, அதிருக்கட்டும். ஓன்கிட்ட ஒண்ணு கேப்பன்… உண்மய மறக்காம சொல்லணும், செரியா…?’’

கையில் வைத்திருந்த படியை திண்ணையில் வைத்துவிட்டு, அருகில் உட்கார்ந்து கேட்டாள் பூவரசி.

கோடு கிழித்த கல்லை சுவரோரமாகப் போட்டுவிட்டு, படியிலிருந்த மல்லாட்டையில் கொஞ்சத்தை கீழே கொட்டி, அதில் ஒரு மல்லாட்டையை உரித்துத் தின்ன கையில் எடுத்துக்கொண்டு, ”என்னடி கேக்கப்போறவ…? கேளு, சொல்றன்’’ என்றாள் செல்வி.

”அன்னிக்கி வந்தாரே புதூரு மாப்பள… அவுர ஒனுக்கு நெஜமாலுமே புடிச்சிகீதா, இல்லியா…?’’

பூவரசி கேட்டதும் செல்வியின் முகம் வெட்கத்தில் சிவந்துவிட்டது. அதைப் பார்த்து அவள் சொல்லாமலேயே பதிலைத் தெரிந்துகொண்ட பூவரசி, ”செரி செரி, ஒனுக்கு அவுர எம்மாம் புடிச்சிக்கீதுன்னு ஒன் மொகரகட்டய பாத்தாலே தெர்து… நல்லா தொடச்சிக்கோ, இல்லனா தெருவு வரிக்கும் வய்ஞ்சி போய்டபோது’’ என்று சொல்லிவிட்டு, சத்தமாகச் சிரித்தாள்.

இதை தனக்குள் நினைத்து சத்தமின்றி சிரித்துக்கொண்ட செல்வி தன் மெல்லிய குரலில் பூரணியம்மாவிடம், ”நகநட்டுலாம் எம்மாம்மா கேட்டாங்க…?’’ என்று கேட்டாள்.

கட்டிலிலிருந்து சட்டென்று எழுந்து செல்வியின் சந்தோச முகத்தை பார்த்த பூரணியம்மா, ”அதலாம் ஒனுக்கெதுக்குடி புள்ள… நல்லபுடியா முடிஞ்சிருச்சி, அவ்ளோதான். போயி வேலயப் பாரு’’ என்று சொல்லி சிரித்துவிட்டு, அங்கிருந்து மகிழ்ச்சியின்றி நடந்து தனக்குள் கலங்கிக்கொண்டு வீட்டுக்குள் வந்தார்.

மதிய வெயில் விட்டால் ஆளையே எரித்துவிடும் அளவுக்கு கோரமாக அடித்துக்கொண்டிருந்தது. அதற்கேற்ப காற்றும் அனலாய் வீசிக்கொண்டிருந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் கவுண்டரை தேடி வீட்டுக்கு வந்த செவடன், அவர் அங்கே இல்லாததை பூவரச மரத்தடியில் உட்கார்ந்து கனவில் மிதந்துகொண்டிருந்த செல்வியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, சந்தேசகத்தோடவே முரம்புக் கொல்லிக்குச் சென்று பார்த்தான்.

மேட்டுத் துண்டு மரிசியிலிருந்த வேப்ப மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு ஏதோ ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்த கவுண்டரை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டு, சத்தம் போடாமல்  போய் பக்கத்தில் அமர்ந்துகொண்டான் செவடன்.

செத்தநேரம் கழித்து எதேச்சையாக திரும்பிப் பார்த்த கவுண்டர், செவடன் வந்து அருகில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு பல் தெரியாமல் சிரித்து, ”நீ எப்படா செவடா வந்த…?’’ என்று கேட்டார்.

பதிலுக்கு பல்தெரிய சிரித்த செவடன், ”ரவ முன்னாலதான், கவுண்ர’’ என்றான்.

கேட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் பக்கத்திலிருந்த வேப்ப மரத்தையும் அதன் அடியையும் பார்த்துக்கொண்டிருந்த கவுண்டரிடம், ”ஏன் கவுண்ர, இந்த வெய்யில்ல வந்து இங்க ஒக்காந்துனு கீற…?’’ என்று கேட்டான் செவடன்.

சட்டென்று திரும்பி, ”சொம்மாதான் செவடா’’ என்று லேசாகக் கண்கலங்கி சொல்லிவிட்டு, தெக்காலப் பக்கம் கட்டுவா மரத்தருகில் ஊரப்பாக்கம் போய் நெல்குத்தி வெயிலுக்குத் தோதாக துண்டை விரித்து தலைமேல் போட்டுத் தூக்கிக்கொண்டு, ஏதோ தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டு வீட்டுக்குப் போகும் பேராமுட்டா கிழவியையும் அவர் பேத்தியையும், செவடன் மனைவியையும் பார்த்தார் கவுண்டர்.

புரிந்துகொண்ட செவடன், ‘செரி, அவுரா என்னான்னு சொல்ற வரிக்கும்… எதும் கேக்காம கம்முனுருப்போம்’ என தன்னைத் தானே சொல்லிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

எதுவும் பேசாமல் சில நொடிகள் மெளனமாக வேப்ப மரத்தையும் முரம்புக் கொல்லியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்த கவுண்டர், மெல்ல எழுந்து வேப்பமரத்தின் சிறு கிளையை இறுகப் பிடித்துக்கொண்டு, ”இந்த மொரம்புக் கொல்லிய வித்தரலான்னு கீறன், செவடா’’ என்றார்.

பக்கத்தில் நத்தை ஒன்று கீழே உதிர்ந்துகிடந்த வேப்ப இலையை கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்து உண்பதைத் தன்னை மறந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த செவடனுக்கு, கவுண்டர் சொன்னதைக் கேட்டதும் யாரோ ஓங்கி நடுமண்டையில் வாச்சால் வெட்டியது போலிருந்தது.

துடிதுடித்துப் போய் எழுந்தவன், ”என்ன கவுண்ர சொல்றீங்க…?’’ என்றான் அதிர்ச்சியோடு.

மெல்லமாகத் தலையாட்டி, ”ஆமாஞ் செவடா… நம்ம செல்வி கலியாணத்த நடத்த எனுக்கு வேற வழி தெர்லடா’’ என்றார் கண்களைத் தன் பின் விரல்களால் துடைத்துக்கொண்டு.

இதை சற்றும் எதிர்பார்த்திராத செவடன், கண்கலங்கிக் கொண்டு கவுண்டரின் பக்கத்தில் வந்து கேட்டான்.

”நமுக்குன்னு கீறது, இந்த கொல்லி மட்டுந்தான். இதயும் இப்ப வித்துட்டா… என்னாவுறது கவுண்ர…?’’

பதிலேதும் சொல்லாமல் வேப்ப மரத்தையே பார்த்துக்கொண்டிருந்தார் கவுண்டர்.

”பொண்ணு கல்யாணத்தப் பத்தி ஓசன பண்ணீங்களே… மூணு பசங்க கீறாங்களே, அவுங்கள கொஞ்சமாது நெனச்சிப் பாத்தீங்களா கவுண்ர…?’’

கேட்டுவிட்டு மென் சத்தத்தில் அழுதான் செவடன்.

”ஏன் கவுண்ர, இப்டியொரு முடுவ எடுத்தீங்க…?’’

கன்னத்தில் வழிந்து வந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கேட்டான்.

”அத நானு சொல்றன், செவடா…’’

கூழ் கரைத்து படி சொம்பில் ஊற்றி கவுண்டருக்கு எடுத்துக்கொண்டு வந்திருந்த பூரணியம்மா, பின்னால் நின்றிருந்தார்.

பூரணியம்மாவின் குரல்கேட்டு திடுக்கிட்டுத் திரும்பிய செவடன், ‘ம், சொல்லுங்க’ என்பதுபோல் அவர் முகத்தைப் பார்த்தான்.

அருகில் வந்த பூரணியம்மா கவுண்டரை பார்த்துவிட்டு, ”எங்கள பத்தி… எங்க நெலமிய பத்தி… எங்கள வுட ஜாஸ்தியா ஓசனப் பண்றவ செல்வி. அவ கலியாணத்த நல்லபுடியா நடத்தி பாக்கணும்னு ஆசப்பட்டம். அதான் எங்க புள்ளயா நெனச்ச… எங்க உசுரா நெனச்ச… இந்த கொல்லிய வித்தரலான்னு முடுவு பண்ணிட்டோம்’’ என்றார்.

பூரணியம்மா அவ்வளவு உறுதியாக சொன்னதைக் கேட்டதும், தன் அத்தனை கேள்விக்குமான விடையும் ஒற்றைப் பதிலில் கிடைத்ததாக உணர்ந்தான் செவடன்.

உடனே மரத்தருகில் நின்றிருந்த கவுண்டரை திரும்பிப் பார்த்தான். மிதமான புன்னகையுடன் பூரணியம்மாவைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

”இந்தா தே, ரவ கூழ் குடி.’’

கையில் வைத்திருந்த கூழ் சொம்பை கவுண்டரிடம் நீட்டினார் பூரணியம்மா.

தலையாட்டி, ”வேணாம் பூர்ணி’’ என்றார் கவுண்டர்.

”காலில ரவ நீசத்தண்ணி குடிச்சதோட செரி… வெறும் வவுத்தோட எம்மாம் நேரந்தான் இருப்ப, தே…?’’

கவுண்டரிடம் தந்துவிட்டு செவடனைப் பார்த்தார் பூரணியம்மா.

எதுவும் சொல்லாமல் கிழக்குப் பக்கம் திரும்பி நின்று, முடியனூரான் கொல்லி முடக்கிலிருக்கும் கிளை கால்வாயிலிருந்து சனிமூலை துண்டு காணிக்கல் வரைக்கும் தோண்டி வந்த கால்வாயை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு, ‘இம்மாம் வலிய வுள்ளார வச்சிக்கினு… எப்பிடிதான் இந்த கவுண்ரும், பூர்ணிம்மாவும் ஒண்ணும் நடக்காதமாரி கீறாங்களோ தெர்லயே. ஆத்துல வெள்ளம் வந்து வூடில்லாம நின்ன எங்குளுக்காக… தான் வச்சிருந்த மோட்டு கொல்லிய தந்தாரு. இப்ப பொண்ணு கல்யாணத்துக்காக… கீற மொரம்புக் கொல்லியயும் விக்கப்போறன்றாரு. ஒண்ணுத்துக்கும் வக்கில்லாத நானு, என்ன பண்ணுவன்…? யாரு ஒருத்தருக்கும் கெடுதுலு நெனக்காத இந்த மனுசனுக்கு மட்டும்… ஏன்தான் இப்பிடிலாம் சோதன மேல சோதனயா வர்தோ, தெர்லயே…? ‘இது வெறும் கொல்லில்ல செவடா… செத்துப்போன என் சின்ன மவன்’னு அன்னிக்கி சொன்னாரே. இன்னிக்கந்த மவன பொதச்ச எடத்துல நின்னுனு… இத விக்கப்போறன்றாரே. எம்மாம் வலில மனுசன் இத சொல்லிருப்பாரோ…? எப்பிடிலாம் இந்த பூமிய தாயா புள்ளயா நெனச்சி பயிரு வச்சாரு… இதில்லாம இனிமேலு எப்பிடி இருக்கப்போறாரோ, தெர்லயே…? நானு கும்படற ஒத்த கை முனியா… எதாது பண்ணி, கவுண்ரு கைலருந்து இந்த மண்ண போவ வுடாம பண்ணு சாமி… சாவர வரிக்கும் ஒனுக்கு பிச்ச எடுத்தாது வருசா வருசம் வந்து சேவலு வெட்டி பொங்குலு வக்கிறன்.’ என்றெல்லாம் சொல்லி தனக்குள் அழாமல் அழுதுகொண்டிருந்தான் செவடன்.

பசியின்றி பாதி சொம்பு கூழை மட்டும் குடித்த கவுண்டர், மீதத்தை அப்படியே பூரணியம்மாவிடம் தந்துவிட்டு, ”நீ வூட்டுக்கு போ பூர்ணி… நானு ஊரப்பாக்கத்துக்கா போயி, ஊரு தலிவன பாத்துட்டு வர்றன்’’ என்றார்.

‘சரி’ என தலையாட்டிய பூரணியம்மா, பக்கத்திலிருந்த சிறு வேப்ப மரத்தையும் கொல்லியையும் பார்த்துவிட்டு, ”செரி தே, நீ போயி பாத்துனு வா. நானு செத்தநேரம் நம்ம புள்ளய பொதச்ச இந்தெடத்துல… தனியா ஒக்காந்துட்டு போறன்’’ என்றார், விழியோரம் வழிந்து வந்த கண்ணீர்த் துளியைத் துடைத்துக்கொண்டு.

கேட்ட கவுண்டருக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. ”செரி பூர்ணி’’ என்றுவிட்டு செவடனை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு, அங்கிருந்து கிழக்குப் பக்கமாக நடந்து முடியனூரான் கொல்லி முடக்கில் வளைந்து, தவுலத்கான் சாயுபு வீட்டு முன்னால் வாசலோரமாக இருபக்க கூருடைய கடப்பாரையை மண்ணில் செருகி வைத்து அதன் ஒருமுனையில் குத்தி வேகவேகமாக தேங்காய் உரித்துக்கொண்டிருந்த இருவரை போகிற போக்கில் பார்த்துவிட்டு, முரம்புக் கொல்லியைப் பற்றியும் செல்வியின் திருமணம் பற்றியும் மாறி மாறி யோசித்துக்கொண்டு ஊர் தலைவர் வீட்டுக்கு வந்தார் கவுண்டர்.

இரண்டு மணி நேரத்திற்கு மேல் பேசியிருப்பார்கள். முரம்புக் கொல்லியை விற்கவேண்டாமென தலைவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் விற்கப்போவதாகச் சொல்லி வாங்கிக்கொள்ள சொன்ன கவுண்டர், மறுநாள் காலையில் தானே கொல்லிக்கு பாண்டு பத்திரத்தோடு வந்து பேசிய முப்பதாயிரம் ரூபாய் பணத்தை தந்துவிட்டு வாங்கிக்கொள்வதாக அவர் சொன்னதற்கு, ‘சரி’ என சம்மதம் சொல்லி கையெடுத்து கும்பிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வந்தார்.

மேற்கே அரசங்கல்லின் பின்னால் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி, கடைசியில் சிறு புள்ளியாகி மறைந்தது. நடைப்பிணம் போன்று மெதுவாக நடந்து மேட்டுக் கொல்லியைப் போல் இப்போது முரம்புக் கொல்லியும் தன்னைவிட்டு போகப்போவது நினைத்து கலங்கியும், தன் மகள் செல்விக்கு ஊரே வாய்மேல் விரல்வைத்து பார்க்கும் அளவுக்கு நல்ல வசதியான இடத்தில் சீர்செனத்தி செய்து திருமணம் செய்யப்போவது நினைத்து மகிழ்ந்தும் கையெழுத்து மறைவதற்கு முன்னால் வீட்டுக்கு வந்தார் கவுண்டர்.

இரைதேடி காலையில் பறந்து போயிருந்த பறவைகள் கூட்டம் கூட்டமாக மகிழ்ச்சியோடு தன் கூடு தேடியும், கூட்டில் விட்டுவிட்டுப் போன தம் குஞ்சுகளைத் தேடியும் திரும்பி வந்துகொண்டிருக்க… வீட்டு வாசலில் தன் தந்தையை எதிர்நோக்கி கட்டில் எடுத்துவந்து போட்டு மாணிக்கமும் ஏழுமலையும் முருகனும் வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள், வினாமுகத்தோடு.

[இன்னும்]

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=