முரம்பு – 28

ஆடி முடிந்து ஆவணி மாதம் பிறந்துவிட்டது. மாரிமுத்து கவுண்டர், அதிகாலையிலேயே சீக்கிரம் எழுந்து இருட்டோடு இருட்டாக நடந்து, சூரியன் உதிக்கும் முன்னமே முத்துசாமிக் கவுண்டர் வீட்டுக்கு வந்திருந்தார்.
தாழ்வாரத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு காசிரிக்கா நார் வைத்து கயிறு திரித்துக்கொண்டிருந்த கவுண்டரிடம், ”என்ன முத்துசாமி… காலிலயே ஏன்ச்சி ஒக்காந்து கவுறு திரிச்சினு கீறவன்…?’’ என்று வந்ததும் வராததுமாகக் கேட்டுக்கொண்டே உள்ளே வந்து பக்கத்தில் உட்கார்ந்த மாரிமுத்து கவுண்டர், ”அன்னிக்கி சொன்னன்ல, மாப்பள வூட்டுக்காரங்க… அவுங்க இன்னிக்கே பொண்ணு பாக்க வர்றாங்களாம்… நேத்து சாங்காலந்தான் சொன்னாங்க. அதான் காத்தாலயே ஏன்ச்சி சொல்லலாம்னு வந்துட்டன்’’ என்றார்.
கேட்டதும் அதிர்ந்துபோய் கயிறு திரிப்பதை நிறுத்திய கவுண்டர், ”என்னடா திடுதிப்புனு வந்து, இன்னிக்கே வர்றாங்கன்னு சொல்றவன்…?’’ என்று கேட்டார்.
அப்போதுதான் தூங்கி எழுந்து படுத்திருந்த கோரைப் பாயை மடித்து குத்துரல் ஓரமாக சுவரில் சாய்த்து வைத்துவிட்டு வெளியில் வந்த முருகனை பார்த்து லேசாகப் புன்னகைத்த மாரிமுத்து கவுண்டர் சொன்னார்.
”ஆமா முத்துசாமி, நம்ம பொண்ணப் பத்தி சாரதா சொல்லிக்கீறா… அவுங்குளுக்கு ரொம்பப் புடிச்சிப்போச்சி… அதான் நல்ல விசியத்த எதுக்கு தள்ளிப்போடணும்னு, மாச மொதநாளு இன்னிக்கே வர்றன்னிட்டாங்க.’’
எதுவும் புரியாமல் விழித்த கவுண்டருக்கு, சட்டென என்ன செய்வதெனத் தெரியவில்லை. கையில் வைத்திருந்த காசிரிக்கா நாரையும் பாதி திரித்த கயிறையும் அப்படியே திண்ணைமேல் வைத்துவிட்டு, ”செரி, இங்கயே ஒக்காந்துனுரு… தோ, வர்றன்’’ என்று சொல்லிவிட்டு எழுந்து வேகமாக வெளியில் வந்து, வீட்டின் பின்னால் சாக்கடையில் உட்கார்ந்து ஏனம் விளக்கிக்கொண்டிருந்த பூரணியம்மாவிடம் போய், ”ஏன் பூர்ணி, மாரிமுத்து வந்துகீறான். அதான் அன்னிக்கி அந்த மாப்பள வூட்டுக்காரங்க பத்தி சொன்னான்ல… அவுங்க இன்னிக்கே செல்விய பாக்க வர்றாங்கலாம்’’ என்றார்.
பகீரென்றது பூரணியம்மாவுக்கு. கையில் வைத்திருந்த டீப்பன் மூடியை டம்மென கீழே போட்டுவிட்டு, ”இன்னிக்கேவா தே…?’’ என்று அதிர்ச்சியில் கேட்டபடி எழுந்தார்.
‘ஆமாம்’ என தலையாட்டினார் கவுண்டர்.
”இதென்ன தே, திடுதிப்புனு வர்றாங்க…?’’
பூரணியம்மா கேட்டுக்கொண்டு பக்கத்தில் வந்து எட்டித் தொடும் தூரத்தில் நின்றார்.
”ஆமா பூர்ணி, எனுக்கும்தான் ஒண்ணும் புரியில’’ என்றுவிட்டு கீழே குனிந்து சில நொடிகள் யோசித்தவர், ”செரி பூர்ணி, நீ போயி வள்ளிகிட்ட சொல்லிட்டு வா… சட்டுனு ஆவவேண்டித பாப்பம்’’ என்றார் கவுண்டர்.
”செரி தே, ஆனா…’’ என எதையோ சொல்ல வந்து சொல்லாமல் நிறுத்திய பூரணியம்மா, கவுண்டரின் முகத்தை கேள்வியோடு பார்த்தார்.
அதைப் புரிந்துகொண்ட கவுண்டர், ”என்ன பூர்ணி, சொல்லு’’ என்றதும் தயக்கத்துடன் சொன்னார் பூரணியம்மா.
”அது ஒண்ணுல்ல தே… எனுக்கென்னுமோ பயமா கீது தே… அவுங்க பாட்டுனு திடுதிப்புனு வர்றாங்க. நல்ல வசதியானவுங்க, பையன் வேற பெரிய அழ்வு அது இதுன்னு சொல்றாங்க. வந்து நம்ம புள்ளிய பாத்து ஆசய வளத்துட்டு போயி… நம்ம சத்திக்கி மீறி நகநட்டு செய்யச் சொல்லி கேக்கப்போறாங்க. நாம கீற நெலமிக்கி, நம்ம கைய மீறிப் போனா நம்முளால என்ன தே பண்ணமுடியும்…?’’
என்ன சொல்வதெனத் தெரியாமல் வீட்டின் பின்பக்க சுவரோரமாக சாய்த்து வைத்திருந்த ஏர்கலப்பையையும், நுகத்தடியையும், சற்று தள்ளி பக்கத்தில் வரிசையாகக் கட்டியிருந்த மூங்கில் படலையும் பார்த்துக்கொண்டு நின்ற கவுண்டர், ”நடக்குறது நடக்கட்டும் பூர்ணி. நீ போயி ஆவவேண்டித பாரு’’ என்றார் மெல்ல திரும்பி பூரணியம்மாவின் முகத்தைப் பார்த்து.
”செரி தே’’ என்று தனக்கு மட்டும் கேட்கும் மென்குரலில் சொல்லிவிட்டுப் போன பூரணியம்மா, எதிர்வீட்டு பொன்னுசாமி ஆச்சாரியின் வீட்டுக்குப் பின்னாலிருந்த சேந்து கிணற்றில் போய் தண்ணீர் சேந்தி அரக்கபரக்க குளித்துவிட்டு வந்து பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்த முருகனுக்கு பழைய கஞ்சிசோறு கின்னத்தில் போட்டுத் தந்த செல்வியிடம், ”எம்மா செல்வி, செத்த போயி சாக்கடயில கீற ஏனத்த சட்டுனு வெளக்கியாந்து கவுத்து வைய்யி… நானு அத்த வூட்டு வரிக்கும் போயி வர்றன்’’ என்று படபடப்புடன் சொல்லிவிட்டு, திண்ணையில் உட்கார்ந்திருந்த மாரிமுத்து கவுண்டரைப் பார்த்து பொய்ப்புன்னகை காட்டிவிட்டு வெளியில் வந்து கிடுகிடுவென நடந்து, ராமு கவுண்டர் வீட்டின் எதிரில் சற்று தள்ளி உண்ணிமில் புதரோரம் நின்றுகொண்டு வெயிலில் காயவைத்து துணி கயிறு போட்டு கட்டிவைத்திருந்த பூந்துடைப்பம் குச்சியில் பிடி எடுத்து சிறு துரிஞ்சி குச்சி ஒன்று வைத்துத் தட்டி ஊம்பல் அடித்துக்கொண்டிருந்த இசைவள்ளியிடம் போய் பதட்டத்தோடு விஷயத்தைச் சொன்னார்.
மெல்ல தலையாட்டி கேட்டுக்கொண்டவர், ”செரி பூர்ணி, நீ ஒண்ணும் கவலப்படாத… எல்லாம் நல்லபுடியா நடக்கும். போயி புள்ளய தயாரு பண்ணினிரு, பின்னாலயே வர்றன்’’ என்று சொல்லி பூரணியம்மாவை அனுப்பிவிட்டு, கையில் வைத்திருந்த ஊம்பலடித்த துடைப்பங்குச்சியையும் கீழே ஊம்பல் அடிக்காமல் வைத்திருந்த குச்சியையும் தனித்தனியாகக் கட்டி திண்ணைமேல் வைத்துவிட்டு, சாக்கடையில் போய் கை கால், முகம் கழுவிக்கொண்டு வந்து அடுப்புத் திட்டுமேல் பெரிய டீப்பனி நிறைய மூடிவைத்திருந்த பாலில் பாதியை சின்ன அடுக்கு சட்டியில் ஊற்றி எடுத்துக்கொண்டு, ரவியைக் கிளப்பி பள்ளிக்கூடம் போகச் சொல்லிவிட்டு, கவுண்டர் வீட்டிற்கு வந்தார்.
நன்றாகவே வெயில் ஏறியிருந்தது. பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத ஏழுமலையும், தேர்ச்சி பெற்றும் மேலே படிக்க வசதியின்றி படிப்பை நிறுத்திக்கொண்ட மாணிக்கமும், தமக்குப் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுத்து மிக மகிழ்ச்சியாக அதில் ஈடுபட்டும் வந்தார்கள்.
அதிலும் குறிப்பாக மாணிக்கம், தினமும் காலையில் எழுந்து குளித்துக் கிளம்பி வீட்டிலிருக்கும் கஞ்சோ கூழோ குடித்துவிட்டு பொடிநடையாக நடந்து ஊரப்பாக்கத்தில் ஆற்றங்கரையோர பள்ளத்துத் தெருவில் இருக்கும் தனபால் அண்ணன் வீட்டுக்குப் போய் தையல் கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான்.
அவனின் இந்த ஆர்வம்தான் ஒவ்வொரு நாளும் அவனை புதிது புதிதாக கற்கத் தூண்டி தனபால் அண்ணனே வியக்கும் அளவுக்கு வெகு சீக்கிரத்தில் தையல் கலையை முழுதும் கற்கவைத்து, ”டேய் தம்பி… நீ இம்மாஞ் சீக்கிரம் துணி தெக்க கத்துப்பனு கொஞ்சம் கூட நெனச்சிப் பாக்கலடா. நீ மட்டும் ஒரு டெய்லர் கட ஊருல வச்சிட்டன்னா போரும், ஒனுக்கு காலத்துக்கும் நீ கத்துக்கிட்ட இந்த தொழ்லு சோறுபோடும்டா…’’ என்று அவர் வாயாலேயே சொல்லவும் வைத்தது.
அதேபோல் ஏழுமலை, தன்னிரு ஆடுகளை சேவிக் கவுண்டரோடும் மாரி தாத்தாவோடும் சேர்ந்து ஓட்டிக்கொண்டு சில தினங்கள் மட்டுமே போனவன், ஆடு மேய்ப்பதில் உள்ள சூட்சுமங்களையும், ஆடு எதைத் தின்னும் எதையெல்லாம் தின்னாது என்னும் அறிதலையும் தனக்குள் உருவாக்கிக்கொண்டான்.
அதோடு, தன் வயதொத்த தனது எண்ணத்தையொத்த நண்பன் ஒருவனையும் தன்னுடன் ஆடு மேய்க்க துணையாக சேர்த்துக்கொண்டான்.
காலை பத்து மணியிருக்கும். ஏழுமலையும் மாணிக்கமும் வீட்டிலிருந்து புறப்பட்டுப் போன பிறகு, செல்வியை குளித்துவிட்டு வரச் சொல்லி வேக வேகமாக அவளுக்கு பச்சை நிற சிறு பூ போட்ட புடவை கட்டிவிட்டுத் தயார் படுத்தினார்கள் பூரணியம்மாவும் இசைவள்ளியும்.
என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டத்தோடவே அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்த கவுண்டர்… தன் நண்பர் மாரிமுத்து கவுண்டரை உடன் கூட்டிக்கொண்டு, அதிகாலையிலேயே எழுந்து செட்டியார் கொல்லிக்கு மாட்டுக்கு மல்லாட்டை கொடி கட்டி தூக்கிவரப் போயிருந்த ராமு கவுண்டரை தேடிக்கொண்டு போய், அவரிடம் தகவலைச் சொல்லி அழைத்துக்கொண்டு, அங்கிருந்த கிணற்றில் அவசர அவசரமாக இறங்கி குளித்துவிட்டு, வேடியப்பன் கோயில் வழியாக மனத்துள் கையெடுத்துக் கும்பிட்டு வேண்டிக்கொண்டு, நடந்து குட்டைக்கிணறு தாண்டி வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.
இருபக்கமும் நெல் நட்டு புல் முளைத்திருந்த வயல் மரிசிமேல் பாம்புக்காக காத்திருந்த கீரிப்பிள்ளை ஒன்று, ஆட்கள் வருவதை தூரத்திலேயே பார்த்துவிட்டு வேகமாக ஓடிப்போய் வயலுக்குள் பதுங்கிக்கொண்டது.
எதுவும் பேசாமல் தனக்குள் ‘கேட்கலாமா, வேண்டாமா…?’ எனும் யோசனையோடவே வந்த கவுண்டர், பின்னால் நடந்து வந்த மாரிமுத்து கவுண்டரிடம் நின்று திரும்பி கேட்டார்.
”ஏன் மாரிமுத்து… நம்ம பொண்ணுக்கு, இந்த சம்மந்தம் செரியா வருமுன்னு நெனிக்கிற…?’’
சற்று தள்ளியிருந்த நுணா மரத்தடியில் தவுலத்கான் சாயுபு கையில் செவ்விளநீர் ஒன்று வைத்துக்கொண்டு நின்றிருப்பதையும், அவர் பக்கத்தில் யாரோ ஒரு கோவணம் கட்டிய பெரியவர் கையை காட்டிக் காட்டி ஏதோ பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்துக்கொண்டு வந்த மாரிமுத்து கவுண்டர், சட்டென்று நின்று கவுண்டரின் முகத்தைப் பார்த்து, ”ஏன் செரியா வராது…?’’ என்று பதில்கேள்வி கேட்டார்.
”இல்ல… நல்ல வசதியான பையன்னு சொன்ன… எம்மாம் சீருசெனத்தி கேப்பாங்கன்னு தெர்ல… அதான் பயமா கீது.”
கேட்ட மாரிமுத்து கவுண்டர், கீழ்உதடு கடித்து தனக்குள் எதையோ நினைத்து மெல்ல தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டு பின்னால் திரும்பி கேட்டும் கேட்காததுபோல் நின்றிருந்த ராமு கவுண்டரைப் பார்த்துவிட்டு, ”எல்லாம் செரியா வருமுன்னுதான்… அவுங்கள வர சொல்லிகீறன்’’ என்றார் கவுண்டரிடம்.
”அதுக்கில்ல… நாம கீற நெலமில, அவுங்க கேக்குறத செய்ய முடியாமப் போச்சின்னா என்ன பண்றது…? அதான் கேக்குறன்.’’
கவுண்டர் கவலை தோய்ந்த குரலில் சொல்லிவிட்டு பதிலுக்காக நிற்பதைப் பார்த்து, ”நீ பாட்டுனு எதயும் நெனிக்காம கம்முனு நட முத்துசாமி. அதுபாட்டுனு எல்லாம் நல்லபுடியா நடக்கும்’’ என்றுவிட்டு, திரும்பி மறுபடியும் ராமு கவுண்டரைப் பார்த்தார்.
எதையோ சொல்ல வாயெடுத்த ராமு கவுண்டர், எதுவும் சொல்லாமல் திரும்பி மேற்காலப் பக்கமிருந்த கிணத்து மேட்டோர சவுண்டல் மரத்தில் உட்கார்ந்து கூவிக்கொண்டிருந்த குயிலை சிறுபிள்ளை போல் வேடிக்கை பார்த்துவிட்டு, ”போவலாம்’’ என சொல்லிக்கொண்டு நடந்தார்.
செல்வியைத் தயார் செய்துவிட்டு வெளியில் வந்த பூரணியம்மா, கட்டுத்தெரு முன்னால் வந்து செவடன் நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு அவன் அருகில் போனார்.
”கவுண்ரு, இல்லயாம்மா…?’’
பூரணியம்மாவின் முகம் ஏதோ மாதிரி இருப்பதைப் பார்த்து செவடன் கேட்டான்.
‘இல்ல’ என தலையாட்டிவிட்டு, பின்னால் திரும்பி வீட்டு வாசப்படியோரம் வந்து நின்று, ‘யார்?’ என வெளியில் எட்டிப்பார்த்த செல்வியைப் பார்த்துவிட்டு, ”செல்விய இன்னுங் கொஞ்ச நேரத்துல… புதூருலருந்து பொண்ணு பாக்க வர்றாங்க. அதான் அவுரு அவுங்க மச்சார கூட்டுனு வர போயிக்கீறாரு’’ என்றார்.
‘ம்’ என தலையாட்டிய செவடன், ”செரிம்மா, நீங்க போயி அப்ப வேலயப் பாருங்க… நானு கட்டுத்தெருல ஒக்காந்துனு கீறன்’’ என்றான்.
”செரி, செவடா’’ என குரலில் சத்தின்றி சொல்லிவிட்டு, நான்கு நாட்களுக்கு முன்னால் கிரீன் குட்டைக்கு துணி துவைக்கப் போயிருந்தபோது… செல்வி தன்னிடம் சொன்ன வார்த்தைகளை மனத்துள் அசைபோட்டுக்கொண்டு வீட்டுக்குள் வந்தார் பூரணியம்மா.
அதுவும் அன்று இடுப்புமூட்டு தண்ணீரில் நின்றுகொண்டு,
”எம்மா, நானு ஒண்ணு சொன்னா என்ன திட்டமாட்டியே…?’’ என்று கேட்ட செல்வியிடம், கிரீன் குட்டையின் மறுபக்கம் உட்கார்ந்து பூவரசியுடன் பேசிக்கொண்டு துணி துவைத்துக்கொண்டிருந்த இசைவள்ளியைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, ”கேளு புள்ள’’ என்றார் பூரணியம்மா.
”எனுக்கந்த புதூரு மாப்பள வேணாம்மா.’’
‘இவ என்ன சொல்லப்போறா?’ என ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த பூரணியம்மாவுக்கு, செல்வி சொன்னதைக் கேட்டதும் முதலில் திடுமெனத் தூக்கிவாரிப்போட்டது.
‘இன்னும் அவுங்க வந்து பொண்ணே பாத்துட்டுப் போவல… அதுக்குள்ள இவ எதுக்கு என்னுமோ எல்லாம் பேசி முடிச்சி, நாளு குறிச்சி பத்திரிக்கலாம் அடிச்சிட்டமரே வேணான்னு சொல்லறா…?’ என்று தனக்குள் கேட்டுக்கொண்டு செல்வியைப் பார்த்து, ”ஏன் தாயி…?’’ என்று கேட்டார்.
”எனுக்கு புடிக்கலம்மா.’’
இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை பூரணியம்மா. அதனால், இம்முறை அதிர்ச்சியோடு சேர்த்து கூடவே சிரிப்பும் வந்தது அவருக்கு.
பல்தெரிய சத்தமின்றி சிரித்துவிட்டு, ”இன்னும் பையன் எப்பிடியிருப்பான்னு நாங்குளும் பாக்கள, நீயும் பாக்கள… அதுக்குள்ள பையன புடிக்கலன்னா என்னடி அர்த்தம்…?’’ என்று கேட்டார்.
நீரிலிருந்து மார்வரை தூக்கிக் கட்டியிருந்த பாவாடையைக் கையால் பிடித்துக்கொண்டு வேகமாக மேலே ஏறி வந்து பக்கத்திலிருந்த துணி துவைக்கும் பலவக்கல் மேல் உட்கார்ந்து பூரணியம்மாவின் கையை பிடித்த செல்வி, ”நானு சொன்னுது பையனல்லம்மா… இந்த சம்மந்தத்தியே’’ என்று சொன்னாள்.
அதிர்ச்சியும் ஆர்வமும் ஒருங்கு கலந்த குரலில், ”ஏன்டி?’’ என்று கேட்டார் பூரணியம்மா.
யாரோ இரு குருவிக்காரர்கள் கையில் உண்டிவில்லும் சில்லாக்கோலும் எடுத்துக்கொண்டு, தோளில் பை ஒன்று மாட்டிக்கொண்டு, தெக்காலப் பக்க கிரீன்குட்டை மேட்டிலிருந்து இறங்கி புளியமரம் நோக்கி ஏதோ தங்களுக்குள் வேடிக்கையாகப் பேசி சிரித்துக்கொண்டு நடந்து போனார்கள்.
”அவுங்க பெரிய பணங்காரங்கன்னு… நம்மய்யா கொல்லன் மாமாகிட்ட பேசனத கேட்டன். நாம கீற நெலமில, நமுக்கெதுக்கும்மா இந்த பணக்கார சம்மந்தலாம்…? வந்து பாத்துட்டு போயி… நாளிக்கி அதுவேணும் இதுவேணும்னு இஸ்டத்துக்கு கேப்பாங்க. நாம அதுக்குலாம் எங்கம்மா போவமுடியும்…? அதான் இப்பியே வேணான்றன்.’’
செல்வி சொன்னதைக் கேட்டதும் தன்னையறியாமல் இரு கண்களும் கலங்கி பொலபொலவென கண்ணீர் கொட்ட ஆரம்பித்துவிட்டது பூரணியம்மாவுக்கு. அதை செல்வியிடம் காட்டக்கூடாதென நினைத்து சட்டென திரும்பிக்கொண்டு எழுந்தவர், ”ஏன்ச்சி போயி சீக்கிரமா குளிச்சிட்டு கரமேல ஏறுடி… சொம்மா எதனா வந்து கிறுக்கிச்சி மாரி பேசினு’’ என்று அதட்டலாகச் சொல்லிவிட்டு, துவைத்து அலசிப் புழிந்து பக்கத்திலிருந்த பெரிய கல்மேல் வைத்திருந்த துணியையும் துப்பிட்டியையும் எடுத்துப்போய் பூவரசியும் அவள் அம்மாவும் துணிதுவைக்கும் இடத்தருகில் இருந்த பெரிய பாறைமேல் உதறி ஒவ்வொன்றாகக் காயவைத்துவிட்டு, காற்றில் அவை பறக்காமல் இருக்க சிறுசிறு கற்களை எடுத்து அவற்றின் மேலே வைத்தார்.
அடுத்த அரைமணி நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்தார்கள். செல்வியைப் பார்த்ததுமே எல்லோருக்கும் பிடித்துவிட்டது. அதிலும் குறிப்பாக மாப்பிள்ளைக்கு. கட்டினால் செல்வியைத்தான் கட்டுவேன் என்ற முடிவுக்கே கிட்டத்தட்ட வந்திருந்தான்.
செத்தநேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவர்கள், மெல்ல ஒவ்வொருவராக எழுந்து வெளியில் வந்து வீட்டின் பின்னாலிருக்கும் இடத்தையும், மரங்களையும், கட்டுத்தெருவையும், ஆட்டுப்பட்டியையும் பார்த்துவிட்டு, மாரிமுத்து கவுண்டரை தனியாகக் கூட்டிப்போய் பூவரச மரத்தடியில் நின்று, ”நாளிக்கே நாளு நல்லாகீது… அவுங்கள வந்து எங்க வூட்ட பாக்கச் சொல்லுங்க’’ என்று சொல்லிவிட்டு வந்து, தாழ்வாரத்தில் உட்கார்ந்திருந்த கவுண்டரிடமும் அவர் மச்சானிடமும், பக்கத்தில் நின்றிருந்த பூரணியம்மாவிடமும் இசைவள்ளியிடமும் தனித்தனியாக சொல்லிவிட்டு கிளம்பிப் போனார்கள்.
ஒருபக்கம் கவுண்டருக்கு இவ்வளவு வேகமாக எல்லாம் நடப்பது நினைத்து உள்ளுக்குள் பயமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் சொல்லமுடியாத அளவுக்கு ஏனோ மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அதிலும், ”ஒங்க பொண்ணு செல்விய எங்க எல்லாத்துக்கும் ரம்ப புடிச்சிப்போச்சி. எதுக்கும் கவலப்படாம எங்க பையனுக்கு கட்டித்தரலாம். நாங்க பெத்த பொண்ணுமரே ஒங்க பொண்ண உள்ளங்கைல வச்சி பாத்துப்போம். நாளிக்கே எங்க வூட்டுக்கு வந்து பாருங்க… ஒங்குளுக்கு புடிச்சிருச்சின்னா மேக்கொண்டு பேசவேண்டித பேசிடலாம்’’ என்று மாப்பிள்ளையின் தந்தை போகும்போது சொல்லிவிட்டுப் போனது கவலையில் அல்லாடிக்கொண்டிருந்த கவுண்டருக்கும் பூரணியம்மாவுக்கும் சற்று ஆறுதலாக இருந்தது.
மாப்பிள்ளை வீட்டார் போன பிறகு, மாரிமுத்து கவுண்டரோடும் ராமு கவுண்டரோடும் திண்ணையில் உட்கார்ந்து ஆளுக்கொரு சொம்பில் கூழ் ஊற்றி எடுத்துவர சொல்லி ஆதண்டங்காய் வற்றல் கடித்துக்கொண்டு குடித்த கவுண்டர்… எழுந்து நடுவீட்டுக்குள் போய் சுவரோர அடுக்குப்பானையில் வைத்திருந்த சாமை அரிசியில் பெரிபடி அள்ளி ஒரு துணிப் பையில் கொட்டி காசிரிக்கா நாரு போட்டு கட்டி எடுத்துவந்து மாரிமுத்து கவுண்டரிடம் தந்து அனுப்பிவிட்டு, ஆசுவாசமாய் உட்கார்ந்தார்.
பூரணியம்மா படி சொம்பில் தண்ணீர் மொண்டுவந்து தந்துவிட்டு சொன்னதும்தான், செவடன் வந்து வெகுநேரமாக கட்டுத்தெருவில் உட்கார்ந்திருப்பது நினைவுக்கு வந்தது கவுண்டருக்கு.
சட்டென்று எழுந்து வெளியில் வந்து, கட்டுத்தெரு கட்டிலில் உட்கார்ந்திருந்த செவடனைக் கூட்டிக்கொண்டு மெல்ல வெப்பால மர வழியாக இறங்கி நடந்து முரம்புக் கொல்லிக்கு வந்த கவுண்டர்… சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மேட்டுத்துண்டு மரிசிமேல் குழந்தையைப் புதைத்த இடத்தில் நட்டு வளர்ந்திருந்த சிறு வேப்ப மரத்தடி நிழலில் போய் எதுவும் பேசாமல் உட்கார்ந்துகொண்டார்.
கவுண்டராகப் பேசும்வரை எதுவும் பேசாமல் அமைதியாக இருப்போம் என நினைத்த செவடன், துரிஞ்ச மர வழியாக புடவையிலிருந்து பாவாடை தாவணிக்கு மாறி பூவரசியை துணைக்குக் கூட்டிக்கொண்டு, சத்தம்போடாமல் வெயிலில் நடந்து வந்து பக்கத்தில் நின்ற செல்வியை பார்த்துவிட்டு, ”கவுண்ர’’ என்று கூப்பிட்டான்.
‘மாரிமுத்து எது செஞ்சாலும் நம்ம நல்லதுக்குதான் செய்வான். அவன் ஒரு பையன காமிச்சான்னா… அது செரியான எடமாதான் இருக்கும். பாத்தா நல்ல குடும்பமாதான் தெருது. பையனும் நல்லாதான் கீறான். சீருதான் எம்மாங் கேப்பாங்கன்னு தெர்ல…?’ என செல்வியின் திருமணம் குறித்து ஏதேதோ தனக்குள் யோசித்துக்கொண்டு, கையில் வைத்திருந்த சிறு குச்சியால் கீழே குனிந்து மண்ணைக் கீறிக்கொண்டிருந்த கவுண்டர், செவடனின் குரல் கேட்டு மெல்லத் திரும்பி ‘என்ன?’ என்பதுபோல் அவனைப் பார்த்தார்.
”பாப்பா வந்துகீது…?’’ என்றான், பக்கத்தில் நின்றிருந்த செல்வியைப் பார்த்து.
சட்டென்று திரும்பிய கவுண்டர், சற்றுதள்ளி மரிசிமேல் பூவரசியுடன் நின்றிருக்கும் செல்வியைப் பார்த்துவிட்டு, ”என்ன தாயி…?’’ என்று கேட்டுக்கொண்டு கையில் வைத்திருந்த குச்சியை கீழே போட்டுவிட்டு வேகமாக எழுந்தார்.
எதையோ சொல்ல வந்து தயங்கிய செல்வி, ”எனுக்கந்த மாப்பள வேணான்யா’’ என்றாள்.
”ஏன், என்னாச்சிம்மா…?’’
”இல்லய்யா… வந்தவுங்களலாம் பாத்தா, பெரிய பணக்காரங்க மாரி கீது. நமுக்கு செரிபட்டு வராதுய்யா.’’
செல்வி லேசாகக் கண்கலங்கிக்கொண்டு சொன்னதைப் பார்த்த கவுண்டர், மெல்ல அருகில் போய் நின்று அவள் முகத்தைப் பார்த்து, ”பையன ஒனுக்கு புடிச்சிகீதாம்மா…?’’ என்று கேட்டார்.
எதுவும் சொல்லாமல் தலை குனிந்து நின்றாள் செல்வி.
திரும்பி பின்னால் நின்றிருந்த செவடனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்துவிட்டு, ”செரி தாயி, நீ வூட்டுக்கு போ… நாளிக்கி போயி அவுங்க வூட்ட பாத்துட்டு வர்றம்… அப்பறம் அந்த ஆண்டவன் வுட்ட வழி’’ என்று சொல்லி செல்வியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, பக்கத்திலிருந்த வேப்ப மரத்தின் சிறு கிளையை இறுகப் பற்றிக்கொண்டார் கவுண்டர்.
மறுநாள் காலை கருக்கலில் எழுந்து குளித்துவிட்டு கவுண்டரும் பூரணியம்மாவும், ராமு கவுண்டரும் இசைவள்ளியும் கிளம்பி பொடிநடையாக நடந்து, மேற்குப் பக்கம் ஏரி வழியாக தேவரடியார்குப்பம் போய், வீட்டுத் திண்ணையில் கிளம்பி தயாராக உட்கார்ந்திருந்த மாரிமுத்து கவுண்டரையும் அவர் மனைவி சாரதாம்மாவையும் உடன் கூட்டிக்கொண்டு, ஒத்தையடிப் பாதை வழியாக மலமஞ்சனூர் சென்று ஊரைத் தாண்டி மலைக்குப் பின்பக்கமாக இருந்த புதூருக்குப் போனார்கள்.
மாரிமுத்து கவுண்டர் சொன்னதுபோல் மாப்பிள்ளை வீட்டார், வீடு வாசல் நிலபுலனோடு நல்ல வசதியாகவே இருந்தார்கள். கவுண்டருக்கும் பூரணியம்மாவுக்கும் மிகப் பிடித்துவிட்டது. அவர்கள் என்ன சீர்செனத்தி கேட்பார்களோ என்பது பற்றி மட்டுமே இப்போது இருவருக்கும் கவலையாக இருந்தது.
திண்ணையில் உட்கார்ந்திருந்த ராமு கவுண்டர்தான் முதலில் சீர்செனத்தி பற்றிய பேச்சை ஆரம்பித்தார்.
”அப்பறென்ன… பொண்ணு மாப்பள ரண்டுபேத்தயும் பாத்தாச்சி. வூடு வாசலயும் பாத்துட்டம். எல்லாருக்கும் புடிச்சும் போச்சி. மேக்கொண்டு பேசவேண்டித சட்டுபுட்டுனு பேசிட்டா… நல்லநாளு குறிச்சி, தட்டுமாத்தி கைய நனச்சிரலாம்.’’
தன் மச்சான் கேட்டதும் என்ன சொல்லப் போகிறார்களோ என மனம் அடியாய் அடித்துக்கொண்டது கவுண்டருக்கு.
மாப்பிள்ளையின் தந்தை, பக்கத்தில் உட்கார்ந்திருந்த வெள்ளை மீசைக்காரரிடம் எதையோ குசுகுசுவென பேசிவிட்டு, மெதுவாக தலையை ஆட்டிக்கொண்டு ராமு கவுண்டரை பார்த்து, ”நாங்க என்னத்த பெருசா கேட்டுரப்போறம்…? எங்குளுக்கு ஒரே பையன். நெலபொலம் பம்ப்புசெட்டுன்னு எட்டு ஏக்கரா மேல கீது. தானிப்பாடில ஒரு வூட்டு மன வேற வாங்கி போட்டுக்குறம். சொந்தமா இங்க வூருல இந்த வூடும்… பக்கத்துலயும் பின்னாலயும் இருவது சென்ட்டு காலி எடமும் கீது. யாரு வம்பு தும்புக்கும் போவாம… கவுரவமா வாந்துனு கீறம்’’ என்றுவிட்டு, வீட்டுக்குள் தாழ்வாரத்தில் கதவோரம் உட்கார்ந்திருந்த அவர் மனைவியைப் பார்த்துவிட்டு, ”ஒங்க பொண்ணுக்கு எட்டு பவுனு… எங்க பையனுக்கு ரண்டு பவுனு… மொத்தமா சேத்து பத்துப் பவுனு போடுங்க. அப்பறம் ஏனபானன்னு சீர்செனத்தி செய்யவேண்டித செய்யிங்க. இதுக்குமேல நாங்க என்னத்த பெருசா கேட்டுரப்போறம்’’ என்றார்.
கேட்ட கவுண்டருக்கும் பூரணியம்மாவுக்கும் பக்கென தூக்கிப்போட்டது. வெளியில் அதை காட்டிக்கொள்ளாமல் முகத்தை எப்போதும்போல் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
திரும்பி கவுண்டரைப் பார்த்த ராமு கவுண்டர், பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாரிமுத்து கவுண்டரைப் பார்த்துவிட்டு மாப்பிள்ளையின் தந்தையிடம், ”பவுன கொஞ்சம் கொறச்சி கிறிச்சி சொன்னீங்கன்னா…’’ என்று சொல்லி முடிக்கும் முன்னமே அவர் தோளைத் தொட்டு கை காட்டி நிறுத்தச் சொன்ன கவுண்டர், வேகமாக எழுந்து நின்று தாழ்வாரத்தில் உட்கார்ந்திருந்த பூரணியம்மாவை ஒருதடவை பார்த்துவிட்டு, ”செரி நீங்க கேட்டத செய்யிறம்… மேக்கொண்டு ஆவவேண்டித பாருங்க’’ என்றுவிட்டு, எல்லோரையும் எழுந்து வர சொல்லி கூட்டிக்கொண்டு, ”செரி, அப்ப நாங்க போயி வர்றம்’’ என்று கையெடுத்துக் கும்பிட்டு எல்லோருக்கும் பொதுவாக சொல்லிவிட்டு, முன்தினம் மதியம் முரம்புக் கொல்லியில் வந்து செல்வி தன்னிடம் சொன்ன வார்த்தைகளை திரும்பத் திரும்ப மனத்துள் ஓட்டிப் பார்த்துக்கொண்டு ஊர்நோக்கி நடந்துவந்தார்.
[இன்னும்]
*