முரம்பு – 19

கட்டுத்தெரு மூலையிலிருந்த பாறக்குச்சியை எடுத்துப் போய் வீட்டின் பின்னால் சாக்கடை பக்கத்திலிருந்த காலியிடத்தில் உடைத்துவந்த இரு குச்சிகளையும் அருகருகில் நட்டுவிட்டு செவடன் வருவதற்குள், அழவானையை நன்கு பதமாக அரைத்து முடித்திருந்தார் முத்துசாமிக் கவுண்டர்.
”ஏ, பூவு… இங்க பாத்தியா எங்கூட்ல எம்மாம் அயவான…? நாங்க தூர்ர்ர்ர்ரம்ம்ம்மா ஆத்துக்கு போயி பறிச்சாந்தம் தெரியுமா…? அங்க கல்லுக்கு நடுவுல அயவான மரம் வூட்டு ஒயரத்துக்கு பெருசா இருந்துச்சி… அப்பறம் மீனுலாம் பாத்தம்… நறயா பேரு வலலாம் வச்சி மீனு புடுச்சினுருந்தாங்க. பசங்க ஒரெடத்துல ஒக்காந்து மீனு சுட்டு தின்னுனுருந்தாங்க. நானு, அங்கருந்து கொய்யாங்கல்லு எடுத்தாந்தன்… வேணுன்னா எங்கய்யாகிட்ட கேட்டுப்பாருடி.’’
பூவரசியைக் கூட்டி வந்து அம்மி பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு சொல்லிக்கொண்டிருந்தாள் செல்வி.
அரைத்த அழவானையை நன்கு வழித்து, அதில் பாதியை எடுத்து ஒரு கொட்டாங்குச்சியில் போட்டு பூவரசியிடம் தந்தனுப்பிய கவுண்டர், மீதிப் பாதியை இன்னொரு பெரிய கொட்டாங்குச்சியில் வைத்து எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் போய் சீமெண்ணெய் விளக்கு ஏற்றச் சொல்லி அதன் வெளிச்சத்தில் உட்கார்ந்து செல்வியின் இரு கைகளிலும் மகிழ்வோடு வைத்துவிட்டார்.
அவ்வளவு சந்தோஷம் செல்விக்கு. அதுவும் தனக்குப் பிடித்ததுபோல் உள்ளங்கையிலும் விரலிலும் முதலில் வைத்துவிட்டு, முன்கை வரைக்கும் வைத்துவிட்டது நினைத்து எகிரி குதிக்காத குறைதான்.
ஏக்கத்தோடு பக்கத்தில் வந்து உட்கார்ந்த முருகன், தன் இரு கைகளையும் அகல விரித்து மெல்ல அசைத்துக் காட்டி தனக்கும் வைத்துவிடுமாறு சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தான்.
பார்த்த செல்வி, ”ஒனுக்குலாம் அயவான கெடயாது, போடா’’ என அவனிடம் சொல்லிவிட்டு கவுண்டரைக் கூப்பிட்டு, ”ஐய்யாய்யா, இவன பாருய்யா… பொட்டப்புள்ளமரே வந்து கைய காட்டினு ஒக்காந்துனு கீறான்’’ என்றாள்.
”தம்பிய அப்டிலாம் சொல்லக்கூடாது, தாயி’’ என்று செல்வியை அன்பாகக் கண்டித்துவிட்டு முருகனைப் பார்த்து மிதமாகப் புன்னகைத்த கவுண்டர், ”எய்யா சாமி… ஒனுக்கும் அயவான வச்சிவுடனுமாய்யா…?’’ என்று கேட்டார்.
கரும்பு சோக்கை கையைக் கிழித்தது போல் முகத்தைப் பாவமாக வைத்திருந்தவன் சட்டென சொம்பு நிறைய ஆலப்பால் கிடைத்ததுபோல் வேகமாகத் தலையாட்டி, ”ஆமா” என்றதைப் பார்த்துவிட்டு, அவன் இடது கையை நீட்டச்சொல்லி நடு உள்ளங்கையில் வட்டமாக பெரிதாக ஓரிடத்திலும் அதைச் சுற்றி ஐந்திடத்தில் சின்னச் சின்னதாகவும் கட்டைவிரல் நடுவில் ஓர் இடத்திலும் மற்ற விரல்களில் ஈரிடத்திலும் வைத்துவிட்டு, கடைசியாக எல்லா விரல் நுனியிலும் நகத்தோடு சேர்த்து தொப்பிபோல் அப்பிவிட்டார்.
தன் மொத்த பற்களையும் காட்டிக்கொண்டு வேகமாகத் தலையாட்டி செல்வியைப் பார்த்து, ”பாத்தியா… எனுக்கு ஒன்னவுட அயவா ஐயா வச்சிவுட்டாரு… ஐ, ஜாலி ஜாலி’’ என்று சொல்லி பைசி காட்டிய முருகன், தன் இன்னொரு கையிலும் அதேபோல் அழவான வைத்துவிட நீட்டினான்.
பார்த்துவிட்டு கண்ணடித்து சத்தமின்றி சிரித்த கவுண்டர், ”போதுஞ் சாமி… ஆம்பளப் புள்ளிங்க சோத்து கைல அயவான வக்கக்கூடாது, செரியா…?’’ என்றார்.
ஏன் எதற்கென்று கேட்டு நச்சரிக்காமல், ‘சரி’ என தலையாட்டிவிட்டு எழுந்து போனவன், அடுப்பங்கரையில் உட்கார்ந்து சோறு கிண்டிக்கொண்டிருந்த பூரணியம்மாவிடம் போய் முதலில் தன் கையைக் காட்டிவிட்டு, பள்ளியிலிருந்து வந்ததும் பையைத் திண்ணைமேல் வைத்துவிட்டு ராமு கவுண்டர் வீட்டு வாசலில் இருட்டும் வரைக்கும் கோலி குண்டு விளையாடிக்கொண்டிருந்துவிட்டு வந்து தாழ்வாரத் திண்ணையில் உட்கார்ந்திருந்த மாணிக்கத்திடமும் ஏழுமலையிடமும் காட்டிவிட்டு வந்தான்.
எழுந்து வெளியில் வந்த கவுண்டர், சாக்கடையில் போய் கை கால், முகம் கழுவிவிட்டு வந்து சுவரோரம் சாய்த்து வைத்திருந்த கட்டிலை எடுத்து வாசலில் போட்டு உட்கார்ந்து எட்டு மணி அஜ்ஜான் கூவும் வரைக்கும் செவடனுடன் பேசிக்கொண்டிருந்தார்.
பூரணியம்மா டீப்பனியில் போட்டுத் தந்த கஞ்சிசோற்றை வாங்கிக்கொண்டு செவடன் வீட்டுக்குப் போனதும் எழுந்து போய் நடுவீட்டுக்குள் உட்கார்ந்து கவுண்டர் செல்விக்கும் பூரணியம்மா முருகனுக்கும் ஊட்டிவிட, கதைகள் பேசிக்கொண்டு எல்லோரும் சாப்பிட்டுவிட்டு படுக்கப்போனார்கள்.
பிள்ளைகள் தூங்கும் வரை வெறுமே கட்டிலில் படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த கவுண்டர், மெல்ல எழுந்துவந்து நடுவீட்டு நெடுங்கால் பக்கத்தில் படுத்திருந்த பூரணியம்மாவை எழுப்பி தாழ்வாரத்துக்கு கூட்டிவந்து உட்காரவைத்து, ராந்தல் வெளிச்சத்தைக் கூட்டிவிட்டு வெளியில் போய், அம்மியின் பின்னால் இன்னொரு கொட்டாங்குச்சியில் தனியாக யாருக்கும் தெரியாமல் எடுத்து மறைத்து வைத்திருந்த அழவானையை எடுத்துக்கொண்டு, மென் அசைவுகளுடன் ஓர் இறகு மிதந்து பறந்து வருவதுபோல் வந்து பூரணியம்மாவின் பக்கத்தில் அமர்ந்து இரு கைகளையும் நீட்டச்சொல்லி ஒவ்வொரு கையாக ரசித்து ரசித்து வைத்துவிட்டார்.
கவுண்டரின் ஆர்ப்பாட்டமில்லாத அன்பில் நனைந்துபோய் சொல்லற்று ஆனந்தித்து உள்ளுக்குள் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த பூரணியம்மா மெல்ல கவுண்டர் காதருகில் வந்து, ”ஏந்தே, நானு ஒண்ணு கேப்பன்… மறைக்காம நெசத்த சொல்லணும்’’ என்றார்.
நிமிர்ந்து மெதுவாக பூரணியம்மாவின் முகத்தைப் பார்த்து, ”ம்’’ கொட்டி தலையாட்டினார் கவுண்டர்.
ராந்தல் வெளிச்சத்தில் ஒளிரும் ஒளிவிழிகளால் பேசிக்கொண்டு, ”புள்ள கேட்டுச்சேன்னு அயவான பறிச்சார போனீங்களா…? இல்ல, எனுக்கு வச்சிவுட நெனச்சி பறிச்சார போனீங்களா…?’’ என்று கேட்டார்.
பூரணியம்மாவின் கண்களிலிருந்து சட்டென ஏதோ ஒன்று வந்து தன் விழிவழியாக உள்நுழைந்து ஆர்ப்பரித்தது போலிருந்தது கவுண்டருக்கு.
இது சற்றும் எதிர்பாராத கேள்வி என்பதால் என்ன சொல்வதெனத் தெரியாமல் மெல்ல உதடசைத்துப் புன்னகைத்துவிட்டு, ”பாத்தா ஒனுக்கு எப்டி தெர்து, பூர்ணி…?’’ என்று கேட்டார்.
கவுண்டரின் சாமர்த்தியமான பதில்கேள்வியைக் கேட்டு பல் தெரியாமல் இதழ்விரித்து சிரித்த பூரணியம்மா, ”எனுக்கென்னமோ, எனுக்காவே போயி பறிச்சாந்த மாரி கீது தே’’ என்றார்.
இரு கைகளிலும் வைத்து சிறிதளவு மீதமிருந்த அழவான கொட்டாங்குச்சியை சுவரோரம் வைத்துவிட்டு, ராந்தல் வெளிச்சத்தை லேசாகக் குறைத்துவிட்டு மென் சத்தத்தில் பூரணியம்மாவின் முகம் பார்த்து சிரித்த கவுண்டர், நடுவீட்டுக்குள் குத்துரல் ஓரமாகப் படுத்துக்கொண்டு… தன்னிரு அழவான வைத்த கைகளையும் தலைக்கு மேல் வைத்து தூங்கிக்கொண்டிருந்த செல்வியைப் பார்த்துவிட்டு, ”அப்டிதான்னும் வச்சிக்க பூர்ணி’’ என்று சொல்லி பல் தெரிய புன்னகைத்துவிட்டு, எழுந்து வேகமாக வெளியில் வந்தார்.
நிலவொளி தன் ஒளிக்கரங்களால் பூமியை மெல்லத் தொட்டு வருடிக்கொண்டிருந்தது. வாசலோரத் திண்ணையில் வைத்திருந்த ஒடுக்கு விழுந்த தோண்டியில் இருந்த தண்ணீரில் கை கழுவிக்கொண்டு போய் கட்டிலில் கிழக்கு பார்த்து உட்கார்ந்த கவுண்டரின் பக்கத்தில் பின்னாலேயே எழுந்து வந்த பூரணியம்மா சென்று நின்று, ”நம்ம புள்ள மட்டும் சாவாமருந்தா… அவன் கைலயும் வச்சி வுட்றப்பல்ல, தே…?’’ என்று கேட்டார்.
குரல் கேட்டு திரும்பி, மெல்லிய வெளிச்சத்தில் வெண்நிலவுக்குப் போட்டியாக பூமியில் உதித்த பெண்நிலவு போலிருந்த பூரணியம்மாவின் வட்டமுகத்தைப் பார்த்து தனக்குள், ”ம்” கொட்டி மேலும் கீழும் தலையாட்டினார்.
செத்த நேரம் எதுவும் பேசாமல் கவுண்டரின் முகத்தைப் பார்த்த பூரணியம்மா, ”எனுக்கென்னமோ நம்ம புள்ளயோட உசுரு… நம்ம மொரம்புக் கொல்லிலதான் கீதுன்னு படுது தே…’’ என்றார்.
ஓர் அசைவுமின்றி பூரணியம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தார் கவுண்டர்.
சற்று நேரம் கழித்து, ”அது எப்பயுமே அங்கதான் இருக்கும்ன்னும் படுது தே…’’ என்று சொல்லிவிட்டு திரும்பி கிழக்காலப் பக்கமாக பார்த்துவிட்டு, ”தெனம் ராவுல, அவன் என்ன அம்மா… அம்மான்னு கூப்பட்றமரே கொரலு கேக்குது தே…’’
பூரணியம்மாவின் கண்கள் கலங்கியிருப்பதை அவரது கம்மிய குரலில் உணர்ந்த கவுண்டர், மெதுவாக அவர் தோளைப் பிடித்து கட்டிலில் தன் பக்கத்தில் உட்கார வைத்தார்.
”நானும் தெனக்கியும் தூக்கத்துல அவன் கொரலக்கேட்டு… அலண்டுபோய் ஏன்ச்சி ஒக்காந்து, தவியா தவிக்கறன் தே…’’
சொல்லிவிட்டு ஏதோ நினைத்தவர் திரும்பி வீட்டுக்குள் பார்த்துவிட்டு, ”எங்க இத சொன்னா கலங்கிடுவியோன்னுதான் இம்மாந்நாளா சொல்லல தே’’ என்றார்.
உடனே கவுண்டர், பூரணியம்மாவின் கையை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டார்.
கொஞ்சம் கொஞ்சமாக நிலவு உச்சிவான் நோக்கி ஏறி வந்துகொண்டிருந்தது. கவுண்டரின் முகத்தைப் பார்த்த பூரணியம்மா, எதையோ கேட்க வந்து வேண்டாமென நிறுத்திவிட்டார்.
அதைக் கண்டுகொண்ட கவுண்டர், ”சொல்லு பூர்ணி’’ என்றார்.
”எதுவுல்ல தே.’’
”இல்ல, எதயோ சொல்ல வந்த… என்னானு சொல்லு.’’
திரும்பி முரம்புக் கொல்லி பக்கம் சில நொடி பார்த்தவர், ”நானு இதுவரிக்கும் எனுக்குன்னு எதயும் கேட்டதில்ல தே” என்றார்.
‘ஆமாம்’ என்பதுபோல் தலையாட்டினார் கவுண்டர்.
”மொத மொதலா ஒண்ணு கேக்கணும்னு நெனக்கறன் தே’’
‘கேளு’ என்பதாய்த் தலையாட்டினார்.
”என்னிக்கி எந்த நெலமிக்கி போனாலும்… நாம நம்ம மொரம்புக் கொல்லிய மட்டும் விக்கக்கூடாது தே.’’
பூரணியம்மா இதைச் சொல்ல ஆரம்பிக்கும்போதே அழ ஆரம்பித்துவிட்டார்.
நெட்டி முறிப்பதுபோல் எதையும் தன் அன்பால் முறித்துவிடும் கவுண்டர், மெல்ல பூரணியம்மாவின் தோளைப் பிடித்து தன்மேல் சாய்த்துக்கொண்டு தன் ஈரக்குரலில், ”செரி பூர்ணி’’ என்றார்.
”இம்மாந்நாளு வெறுங் கொல்லியா தெரிஞ்சது… இப்பலாம் என் கண்ணுக்கு நம்ம புள்ளயாதான் தெர்து தே.’’
சட்டென்று ஒரு பெரும் முகமூடி தாக்குதலுக்கு ஆளானதுபோல் உணர்ந்தார் கவுண்டர்.
இதே வார்த்தையை இருதினங்களுக்கு முன் கால்வாய் தோண்டும்போது செவடனிடம் சொல்லிவிட்டு, தான் கலங்கியதை மெல்ல தனக்குள் ஓட்டிப் பார்த்தார்.
அதுவும், ”ஆமாஞ் செவடா… எனுக்கென்னமோ எம்புள்ள உசுரு அவன பொதச்ச எடத்துலதான் சுத்தினு கீதுன்னு படுது’’ என்று சொல்லிவிட்டு மண்வெட்டியை அப்படியே பள்ளத்துக்குள் போட்டுவிட்டு நிமிர்ந்து மேலே கடப்பாரையால் குத்தி மண்ணை பேர்த்துக்கொண்டிருந்த செவடனைப் பார்த்தார்.
எதுவும் சொல்லாமல் மண்ணுக்குள் குத்திய கடப்பாரையைப் பிடித்துக்கொண்டு தலையை மேலும் கீழும் ஆட்டி, ‘ஆமாம்’ என்றான்.
”எங்கய்யா கிட்டருந்த பூமி, இன்னிக்கி ஏங்கிட்ட கீது… நாளிக்கி ஏம்புள்ளிங்ககிட்ட இருக்கும்… அதுக்கப்பறம் அவுங்க புள்ளிங்ககிட்ட…’’
கவுண்டர் உடைந்த குரலில் சொல்லிக்கொண்டு முரம்புக் கொல்லியை வலியோடு பார்த்தார்.
”அந்த ஆண்டவங்கிட்ட நானு கேக்கறதுலாம் ஒண்ணுதான் செவடா… என்னிக்கும் இந்த பூமி, எங்கள வுட்டு போவக்கூடாது… அதான்…’’
நிலத்தைப் பார்த்து கண்கலங்கி நின்று கவுண்டர் சொல்வதைப் பார்த்துவிட்டு கடப்பாரையை அப்படியே விட்டுவிட்டு பக்கத்தில் வந்த செவடன், மெல்ல அவர் கையைப் பிடித்தான்.
சட்டென நினைவு வந்தவராய் செவடனைப் பார்த்து துளிர்த்து வந்த கண்ணீரைத் தன் முன்கையால் துடைத்துக்கொண்டு வராத புன்னகையை மெல்ல வரவழைத்துக் காட்டிய கவுண்டர், ”இது வெறும் கொல்லில்ல, செவடா… எம்புள்ள’’ என்றார்.
எதுவும் சொல்லாமல் கண்கலங்கி, ‘ஆமாம்’ என தலையாட்டினான் செவடன்.
பூரணியம்மா எதுவும் பேசாமல் கலங்கி அழுவதைப் பார்த்த கவுண்டர்… கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து, மெல்ல அவரைத் தன் மடியில் சாய்த்து படுக்கவைத்து, கண்களை துடைத்துவிட்டு தலைகோதி விட்டார்.
ஓர் அரைமணி நேரம் சென்றிருக்கும். எதுவும் பேசாமல் படுத்திருந்த பூரணியம்மா, கவுண்டரின் மெதுமெதுப்பில், தலைகோதலில் அப்படியே உறங்கிப்போனார்.
தலை கோதுவதை மெல்ல நிறுத்திவிட்டு மேக மெத்தைக்குப் பின்னாலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தெளிவானுக்கு வந்துகொண்டிருந்த நிலவையும், சற்று தள்ளியிருந்த மினுமினுக்கும் நட்சத்திரத்தின் கீற்று முனை அழகையும் ரசித்துக்கொண்டு, பூரணியம்மா தன் வாழ்வில் வந்த தித்திப்பு தருணத்தை மனத்திரையில் மீட்டிப்பார்த்தார்.
”முந்திப் பிறந்தவனே –
முக்கண்ணன் தன்மகனே..
கந்தருக்கு முன்பிறந்த –
கணபதிய முன்னிடவா…’’
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் ஊரிலிருந்து கிழக்குத் திசையில் தென்பெண்ணையாற்றின் வடகரையில் உள்ள அல்லப்பனூருக்குச் சென்று, இருபக்கமும் திண்ணை வைத்திருந்த ஒரு கூரை வீட்டின் முன்னால் இப்பாடலைத் தன் கணீர் குரலில் முழுதாகப் பாடிவிட்டு, ‘டண்டாங் கட்டிங்… டண்டாங் கட்டிங்’ என ஓங்கி ஒலித்த பறையொலிக்குப் போட்டியாகத் தனது காலில் கட்டியிருந்த சலங்கை ஒலிக்க, இடது கையில் மூங்கிலால் செய்த வில்லைப் பிடித்துக்கொண்டு ஆடியதை தனதம்மாவின் பின்னால் நின்றுகொண்டு, கட்டியிழுக்கும் விழியால் பார்த்தபோதுதான் பூரணியம்மாவை முதல் தடவையாகப் பார்த்தார் கவுண்டார்.
அதுவும் தனக்குப் பிடித்த பாவாடை தாவணியில், தலைநிறைய கனகாம்பரம் பூ வைத்து, நெற்றியில் சிறு சாந்துப் பொட்டிட்டு, சேற்றில் முளைத்த செங்கமலப் பூ போன்ற தன் அழகிய வட்டமுகம் காட்டி, அப்படியே தனது பாட்டில் வரும் ரதிதேவிபோல் இருப்பதாக உள்ளுக்குள் நினைத்துக்கொண்டார்.
‘முத்துசாமி கவுண்ரு வேசம் கட்டி ஆடனாருன்னா… ஊல மூக்கு ஒழ்வற போடுமுட்டிங்கலருந்து, பல்லு வீந்த கெழகட்டிங்க வரிக்கும் ஆ’ன்னு வாயத்தொறந்து பாக்காதவுங்களே இருக்க மாட்டாங்க’ என்பார்கள் ஊரில். அப்படி ஆடுவார். அப்படி பாடுவார்.
அதிலும் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று ஊரில் நடக்கும் பிரசித்தி பெற்ற மன்மதன் தகனத்திற்கு முன்னால் பத்து நாட்களுக்கு வேஷம் கட்டிக்கொண்டு ஊர் ஊராகப் போய் வீடு வீடாக ஆடிப் பாடி அரிசி, நெல், கம்பு, கேழ்வரகு, சாமை, மல்லாட்டை, பருப்பு, புளி, காசு… எல்லாம் வசூல் செய்து வந்து திருவிழா நடத்துவது வழக்கம்.
அப்படி மூன்றாம் நாள் காலையில் அல்லப்பனூருக்கு ஆண் வேசம் கட்டிக்கொண்டு தன் ஜமாவோடு போய் ஆடிய கவுண்டர், பூரணியம்மாவைப் பார்த்ததும் பிடித்துப் போய் கட்டினால் அவரைதான் திருமணம் கட்டுவேன் என அப்போதே முடிவு செய்துவிட்டார்.
ஊர் முழுக்க ஆடிவிட்டு கிளம்பும்போது, தன் மனத்திலிருந்த விருப்பத்தை மெல்ல தயங்கித் தயங்கி தன் மச்சானிடம் கவுண்டர் சொல்ல… சற்றும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி ஒன்றை உடனே பதிலாகத் தந்தார் அவருக்கு.
பூரணியம்மா அவருக்கு தூரத்து சொந்தம். அதுவும் தங்கை முறை.
”எங்கிட்ட சொல்லிட்டல்ல… இனி வுட்டுட்டு வந்த வேலய பாரு. மத்தத நானு பாத்துக்கறன்’’ என்று கவுண்டரிடம் சொல்லிவிட்டு எழுந்து போன ராமு கவுண்டர், நேராக அவர் வீட்டுக்குப் போய் நலம் விசாரித்துவிட்டு வருவதுபோல் திண்ணையில் உட்கார்ந்து பக்கத்து வீட்டு பாப்பாவுக்கு சடை பின்னிக்கொண்டிருந்த பூரணியம்மாவிடம் விஷயத்தைச் சொன்னதும் கேட்டு ஆச்சரியத்தின் உச்சிக்குப் போனவர், ”எனுக்கும் அவர பாத்ததும் புடுச்சுப் போச்சிண்ணா’’ என்று தன் விருப்பத்தை வெட்கம் ததும்ப பதிலாகச் சொல்லியிருக்கிறார்.
நடப்பது கனவா நிஜமா என நம்ப முடியாத ராமு கவுண்டர், அதை வந்து அப்படியே கவுண்டரிடம் சொல்லிவிட்டு அடுத்த நாளே பெரியவர்களைக் கூட்டிக்கொண்டு போய் பேசி பரிசம் போட்டுவிட்டு வந்துவிட்டார்.
”நாங்க ரண்டுபேரும் சேரப்போறது… அந்த ஆண்டவன் வெளாடுன வெளாட்டுனாலதான்’’ என சொல்லிக்கொண்ட கவுண்டருக்கும் பூரணியம்மாவுக்கும் அன்று தொடங்கி இருபதாவது நாள் காலையில், ஊரிலுள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து திருமணம் நடந்தது.
‘தன் வாழ்வின் பெரும் பொக்கிஷம் பூரணியம்மா’ என்று கவுண்டரும், ‘தன் வாழ்நாளின் மொத்த அர்த்தமே கவுண்டர்தான்’ என்று பூரணியம்மாவும் நினைத்துக்கொண்டார்கள்.
மகிழ்ச்சி வெள்ளத்தில் தளும்பத் தளும்ப நனைந்துபோய் அன்றிரவு தன் மடியில் படுத்துக்கொண்டிருந்த பூரணியம்மாவிடம் கவுண்டர் கேட்டார், ”ஏன் பூர்ணி… உண்மயாலுமே அன்னிக்கி என்ன பாத்ததும் புடிச்சிப் போச்சா, ஒனுக்கு…?’’
வான்வெளியில் மிதக்கும் பறவைபோல் கவுண்டரின் மடியில் படுத்துக்கொண்டிருந்த பூரணியம்மா, மெல்ல அவர் முகத்தைப் பார்த்து தன் இரு கண்களையும் வேகமாக ஒருதடவை மூடி சிரித்துவிட்டு, ”ஆயிரவாட்டி இத கேட்டாலும், ஆமான்னுதான் சொல்வன் தே’’ என்று சொல்லிவிட்டு, கவுண்டரின் கையை இறுக பற்றிக்கொண்டார்.
மேனியில் ஒருவித சில்லிப்பும் சிலிர்ப்பும் துளிர்க்க, ”அப்ப ஆயிரத்தி ஒண்ணாதுவாட்டி கேட்டா இல்லன்னுவியா பூர்ணி…?’’
கவுண்டர் குறும்பாகக் கேட்டுவிட்டு சிரிப்பதை உள்ளுக்குள் ரசித்த பூரணியம்மா, தன் உள்ளம் பீரிட்டு வந்த பரவசத்தை முகத்தில் காட்டாமல் கவுண்டரை வம்பியுக்கும் நோக்கில் மூன்று தடவை மேலும் கீழும் தலையாட்டிவிட்டு, ”ஆமா’’ என சொல்லி சிரித்தார்.
சட்டென எதையோ நினைத்து தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்த பூரணியம்மா, கவுண்டரின் மடியில், அதுவும் வீட்டுக்கு வெளியில் வாசலில் போட்டிருந்த கட்டிலில் படுத்துக்கொண்டிந்ததைப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் செத்தநேரம் இருந்துவிட்டு, ”நானு வூட்டுவுள்ள போயி படுக்கறன் தே… நீ படுத்துத் தூங்கு’’ என்று சொல்லிக்கொண்டு இறங்கி நடந்து வேகமாக வீட்டுக்குள் போய், முருகனின் பக்கத்தில் படுத்துக்கொண்டார்.
நினைவிலிருந்து மெல்ல நிஜத்துக்கு வந்த கவுண்டர், காலத்தின் பெரிய முள்ளும் சிறிய முள்ளும் வெகுவாகச் சுற்றிவிட்டதை உணர்ந்து எழுந்துபோய் வீட்டுக்குப் பின்னால் சிறுநீர் கழித்துவிட்டு வந்து தானும் படுத்துக்கொண்டு செத்தநேரத்தில் அசதியில் உறங்கிப்போனார்.
செப்புல் பிரிவதற்கு முன்னாலேயே எழுந்த கவுண்டர்… கட்டிலைத் தூக்கிப்போய் சுவரோரமாகச் சாய்த்து வைத்துவிட்டு, கட்டுத்தெரு வாசப்படியில் செவடன் வரும் வரைக்கும் உட்கார்ந்திருந்துவிட்டு, அவன் வந்ததும் கூட்டிக்கொண்டு கொல்லிக்கு வந்தார்.
போட்ட எல்லா பயிரும் நன்றாக முளைத்து வந்திருப்பதைப் பார்த்துவிட்டு உள்ளுக்குள் அவ்வளவு மகிழ்ந்தார் கவுண்டர்.
”இந்தவாட்டி போட்ட பயிருலாம்… நல்லா மொளப்பு வுட்டு வந்துகீது, கவுண்ர’’ என்றான் செவடன்.
‘ஆமாம்’ என தலையாட்டிவிட்டு, கீழே குனிந்து உட்கார்ந்து மண்ணை பிளந்துகொண்டு வந்திருந்த ஒரு மல்லாட்டை முளப்பை மெல்ல தொட்டுப் பார்த்த கவுண்டர், ”நாளிக்கி காலில மொத தண்ணி காட்டிடலாம், செவடா’’ என்றார்.
உடனே, ”செரி, கவுண்ர’’ என்ற செவடன், பக்கத்திலிருந்த உண்ணிமில் புதருக்குள் ஏதோ சறுகுகளின் சலசலப்பு சத்தம் கேட்பதைப் பார்த்துவிட்டு குனிந்து கீழே கிடந்த சிறு மண்கட்டி ஒன்றை எடுத்து அதனுள் போட்டான்.
நான்கைந்து நொல்லக் குருவிகள் ஒரே நேரத்தில் கத்திக்கொண்டு தவுலத்கான் சாயுபு கொட்டா பக்கமாகப் பறந்தோடின.
மெதுவாக பேசிக்கொண்டு மரிசிமேல் நடந்துபோய் பயிர் போட்ட ஆறு துண்டுகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு மேற்கால துண்டுக்கு வந்து, வெப்பால மரத்தின் பக்கத்திலிருந்த வேப்ப மரத்தின் கீழ்க் கிளையைத் தாழ்த்தி, ஆளுக்கொரு பல்லுக்குச்சி உடைத்து பல் துளக்கிக்கொண்டு மெல்ல மேடேறி வீடு நோக்கி நடந்தார்கள்.
”ஏன் கவுண்ர… இன்னும் ஏன் மேக்கால துண்ட மட்டும் ஓட்டாம கரம்பாவே வுட்டுகீறம்…?”
முன்னால் நடந்த செவடன், பாதையோரம் இருந்த சிறு கொடுக்காய்ப்புளி மரத்தருகே நின்று திரும்பி மேற்குத் துண்டை காட்டிக் கேட்டான்.
மற்ற ஆறு துண்டுகளைக் காட்டிலும் அத்துண்டு கால்வாய் தண்ணி ஒருபோதும் ஏறாத அளவுக்கு மேட்டிலிருந்தது. அதோடு, சமதளமாக இல்லாமல் ஒழுங்கின்றி மேடும் பள்ளமுமாகவும் கல்லும் கரடுமாகவும் இருந்தது.
”ஒழவு மழ பேன்ச்சின்னா… ஓட்டி சாம வெறக்கலான்னு கீறன் செவடா’’ என்றார் கவுண்டர்.
”நானே சொல்லான்னு இருந்தன் கவுண்ர… நம்மளமாரி மானம்பாத்த மண்ண வச்சிக்கீறவுங்குளுக்கு சாமதான அரிசி.’’
செவடன் சொன்னதைக் கேட்டுவிட்டு மெல்ல புன்னகைத்தார் கவுண்டர்.
இயற்கையையும் மனிதர்களையும் பாரபட்சமின்றி நேசிக்கும் எளிய மனிதராகத் தன் வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்த கவுண்டர், தன்னை இயல்புதான் எப்போதும் வழிநடத்துவதாக நினைத்துக்கொள்வார். அதனால்தான் எல்லாவற்றையும் அதனதன் போக்கில் விட்டுவிடுவதை எந்நாளும் தன் வாழ்வின் சாராம்சமாகக் கொண்டிருக்கிறார்.
துளிர்த்தல் எப்படியோ அதுபோலத்தான் உதிர்தலும் என்றும், தேவையில்லாத இலைகள் மரத்திலிருந்து உதிர்வதுபோல், தேவையில்லாத இறகுகள் பறவையிலிருந்து உதிர்வதுபோல், தேவையில்லாததெல்லாம் தன் வாழ்விலிருந்து உதிரும் என்றும், தேவையானதெல்லாம் துளிர்க்கும் என்றும் நம்பிக்கை கொண்டிருந்த கவுண்டர், அந்நம்பிக்கைதான் இப்போது மல்லாட்டப் பயிர்களாய் தன் முரம்புக் கொல்லியெங்கும் முளைத்து வந்திருப்பதாக உள்ளத்துள் நினைத்து மகிழ்ந்துகொண்டு வீட்டுக்கு வந்தார்.
மறுநாள் விடிகாலையிலேயே சீக்கிரம் எழுந்து கட்டுத்தெரு மூலையிலிருந்த பெரிய மண்வெட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்ட கவுண்டரும் செவடனும் முடியனூரான் கொல்லி மொடக்கிலிருந்த கிளைக் கால்வாயிலிருந்து மடை திறந்து, தோண்டிய புது கால்வாய் வழியாக முரம்புக் கொல்லிக்கு தண்ணீர் கொண்டுவந்து சனிமூலை துண்டில் முதலில் காட்டியவர்கள்… ஒவ்வொரு துண்டாக பாய்ச்சிக்கொண்டு வந்தார்கள்.
”என் எத்தன வருச ஆச இது…? இன்னிக்கிதான் நடந்துகீது.’’
மடை வெட்டிவிட்டுக்கொண்டிருந்த செவடனைப் பார்த்து கவுண்டர் சொன்னார்.
”எனுக்குன்னு இப்ப கீற ஒரே பூமி இதான் செவடா… இன்னிக்கி இதல காவா தண்ணி வந்து பாயுதுண்ணா… அதுக்கு காரணம் நீதான். ஒன்ன என் உயிர்கீற வரிக்கும் மறக்க மாட்டன்டா…’’
கவுண்டர் உணர்ச்சிப் பெருக்கில் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியில் கண்கலங்கிக்கொண்டு அவர் பக்கத்தில் வந்த செவடன், ”இன்னிக்கி மட்டுல்ல கவுண்ர… இது என்னிக்கும் ஒங்க பூமிதான்…’’ என்றுவிட்டு, கையில் வைத்திருந்த மண்வெட்டியைக் கீழே வைத்துவிட்டு பிடி மண்ணை அள்ளி அவர் கையை நீட்டச்சொல்லி அதில் போட்டு, ”நீங்க போட்ட சோத்த தின்னு வளந்தவன் கவுண்ர, நானு… ஒங்குளுக்காக செஞ்ச பொட்டு கைமாறுதான் இது’’ என்றான்.
கேட்டுவிட்டு கண்கலங்கிய கவுண்டர், கையில் வாங்கிய மண்ணை செத்தநேரம் பார்த்துவிட்டு எடுத்துப்போய் கால்வாயில் வந்த நீரில் இறங்கி நின்று குனிந்து காட்டினார். நொடியில் அது கரைந்து நீரோடு போய் பயிர்களுக்குப் பாய்ந்தது.
இரு கைகளையும் நன்கு கழுவிக்கொண்டு மரிசிமேல் ஏறி நின்று தண்ணீர் பாய்ந்துகொண்டிருந்த தெக்கால காட்டுவா மரத்துண்டை பார்த்த கவுண்டர், திரும்பி தண்ணீர் பாய்த்துவிட்டு வந்த எல்லா துண்டுகளையும் பார்த்துவிட்டு தன் கண்முன்னால் மூடிக்கிடந்த எல்லா வாசல்களும் சட்டென திறந்துகொண்டதுபோல் உணர்ந்தார்.
கடைசி துண்டின் கடைசி பட்டையில் தண்ணீர் மாற்றி விட்டுவிட்டு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு கிளைக் கால்வாய்க்கு தண்ணீர் மறித்துக் கட்ட செவடன் போன செத்த நேரத்திலேயே… துரிஞ்சி மர வழியாக அவிழ்ந்து வந்த தன் காக்கி டவுசரை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, ”ஐய்யாய்யா’’ என கூப்பிட்டுக்கொண்டு வேகமாக ஓடிவந்தான் முருகன்.
[இன்னும்]
*