முரம்பு – 18

”எம்மா, செல்வி… ஏந்தாயி அய்துனுகீற…?”
விறகுச் சுமையை இறக்கி வைத்துவிட்டு வேகமாக நடந்து, கேட்டுக்கொண்டே போய் செல்வியின் பக்கத்தில் உட்கார்ந்தார் கவுண்டர்.
சட்டென்று தலையைத் திருப்பிக்கொண்ட செல்வி, இன்னும் சத்தமாக அழ ஆரம்பித்தாள்.
”எம்மா செல்வி… என்னானு சொல்லு தாயி ஏங்கிட்ட…?’’
செல்வியின் தோளைப் பிடித்து திருப்பிக் கேட்டார் கவுண்டர்.
அழுதுகொண்டு மெல்ல கவுண்டரின் முகத்தைப் பார்த்து, ”அம்மா… அம்மா… அடிச்சிட்டாங்க’’ என்றாள், ஒவ்வொரு வார்த்தையாக.
காற்றில் மரம் ஆடிக்கொண்டிருப்பது, அசைவுக்கேற்ப நிழல் தரையிலும் அவர்கள் முகத்திலும் பரவுவதைப் பார்த்ததும் தெரிந்தது.
”அம்மாக்காரி ஏந்தாயி ஒண்ண அடிச்சா…?’’
கவுண்டர் கேட்டதும் பதில் சொல்லாமல் மறுபடியும் திரும்பிக்கொண்டு அழுதாள் செல்வி.
”அத நானு சொல்றன் தே…’’
பின்னால் வந்து நின்றுகொண்டு பூரணியம்மா சொல்ல, குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார் கவுண்டர். முறத்தில் எதையோ வைத்துக்கொண்டு மிதமானப் புன்னகையுடன் நின்றிருந்தார்.
”அவுளுக்கு கைல வக்க அயவான வேணுமாம் அயவான… ஒங்க மச்சாரு மவ பூவரசி கூட கூடினு ஊரப்பாக்கம் போயி அம்மாசி ஆயி வூட்ல பறிச்சாரப் போறன்னு… காலிலருந்து ஒரே அமக்களம் பண்ணினு, மோடி வச்சினு கீறா… நானும் எம்மாஞ் சொல்லி பாத்துட்டன், கேக்கள… அதான் ஒண்ணு ஈத்தன்… ஏன்ச்சி இங்க வந்து ஒக்காந்துனு அய்வறமரே நடிப்பு காட்டினு கீறா நடிப்பு.’’
பூரணியம்மா சொன்னதைக் கேட்ட கவுண்டர் செல்வியைப் பார்த்து, ”எம்மா செல்வி… ஒணுக்கு அயவானதான தாயி வேணும்…?’’ என்று கேட்டதுதான், சட்டென்று திரும்பி தலையை வேகமாக ஆட்டி, ”ஆமா’’ என்றாள்.
பக்கத்தில் நின்றிருந்த பூரணியம்மாவைப் பார்த்து கண்களால் புன்னகைத்துவிட்டு, ”நாளமறுநாளு பறிச்சாந்து தர்றன், செரியா…?’’ என்றார்.
மறுபடியும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு தலையை திருப்பிக்கொண்டாள் செல்வி.
பார்த்த பூரணியம்மா, ”அவ இங்கயே அய்துனு கெடந்தாபோறா… வுட்ட்டு ஏன்ச்சி வா தே’’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு முறத்தில் எடுத்துவந்த புண்ணாக்கினை துரிஞ்ச மரத்தடியில் அன்னக்கூடையில் மாட்டுக்கு ஊத்தி வைத்திருந்த கஞ்சித்தண்ணியில் போய் கொட்டிவிட்டு, மரத்தில் சாய்த்துவைத்திருந்த சிறு துடுப்பை எடுத்து கிண்டிவிட்டார்.
செல்வியைப் பார்த்து, ”எம்மா செல்வி, அதான் பறிச்சாந்து தரன்னு சொல்ட்டனே… அப்பறென்ன தாயி…?’’ என்று கேட்டார் கவுண்டர்.
”அந்த பொசக்கெட்ட கைதிக்கி இன்னிக்கே அயவான வேணுமாம்… அதும் இன்னிக்கி ரைக்கே அவ கைல வச்சினுதான் தூங்குவாளாம்.’’
பூரணியம்மா சொன்னது கேட்டுவிட்டு எழுந்த கவுண்டர், செல்வியின் இரு தோளைப் பிடித்துத் தூக்கி நிப்பாட்டி, ”ஒணுக்கு இன்னிக்கி பொசாய்க்குள்ள அயவான வரும்… அய்வாம எங்கூட வாம்மா’’ என்று சொல்லி அவள் கன்னத்தில் வழிந்துவந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, கூட்டிக்கொண்டு சாக்கடையில் போய் கை கால், முகம் கழுவிவிட்டு வீட்டுக்குள் வந்தார்.
எதை எப்படிக் கேட்டால் எப்படி கிடைக்கும் என்று செல்விக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால்தான் பூரணியம்மாவிடம் கேட்டு திட்டும் அடியும் வாங்கிக்கொண்டு வந்து வாசலோர கோழிக்கூண்டு மேல் உட்கார்ந்திருந்தவள், தன் தோழி பூவரசி வீட்டைத் தாண்டி தன் தந்தை விறகு சுமை தூக்கிக்கொண்டு வருவதைப் பார்த்துவிட்டு நைசாக எழுந்து அவர் பார்வையில் படுவதுபோல் பூவரச மரத்தடியில் போய் உட்கார்ந்துகொண்டு அழ ஆரம்பித்தாள்.
கவுண்டரும் அவள் நினைத்ததுபோல் வந்து பார்த்துவிட்டு கேட்க, தன் விருப்பத்தைச் சொன்னவளுக்கு இப்போது அது நிஜமாகப் போவது நினைத்து அவ்வளவு மகிழ்ச்சி.
அதேநேரம், கவுண்டரும் சாதாரண ஆள் கிடையாது. பெரியவன் மாணிக்கம் தொடங்கி சின்னவன் முருகன் வரைக்கும் யார் யார் எதையெதை எப்படியெப்படி வந்து தன்னிடம் கேட்டு அடம்பிடித்து தம் காரியத்தை சாதித்துக்கொள்வார்கள் என்று நன்றாகவே தெரிந்தவர். இருந்தாலும் ஒன்றும் தெரியாதவர்போல் அவர்களிடம் நடித்துக்கொண்டு, அவர்கள் போக்கில் விட்டு அவர்களை எங்கு பிடிக்க வேண்டுமோ அங்கே பிடிப்பதை சாமர்த்தியமாக செய்யக்கூடியவர்.
கிண்ணியில் கவுண்டருக்கு மிகப் பிடித்த முருங்கைக் கீரை சாம்பாரும் சோறும் போட்டு வைத்திருந்தார் பூரணியம்மா. பெரும் பசியில் இருந்தவருக்கு அமிர்தத்தைப் பருக்கைகளாக அள்ளி சாப்பிடுவது போன்றிருந்தது.
பக்கத்தில் ஆளுக்கொரு தட்டு எடுத்து வந்து உட்கார்ந்து, முருகனும் செல்வியும் போட்டி போட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான்கு வாய் சாப்பிட்ட முருகன், சாப்பிடுவதை நிறுத்திவிட்டு விறகு வெட்டப்போன இடத்தில் கொம்புத்தேன் பார்த்ததில் ஆரம்பித்து சுனையில் தண்ணீர் குடித்தது, காவாயில் கழுத்துமூட்டு தண்ணியில் இறங்கி மறுகரைக்குப் போனது, மலையுச்சியில் குரங்குக் கூட்டத்தைக் கண்டது என ஒவ்வொன்றாக செல்வியிடமும் பூரணியம்மாவிடமும் சொல்லிக் கொண்டிருந்தான்.
அவன் கண்களில் தெரிந்த பெருமகிழ்ச்சி, கவுண்டருக்கு அத்தனை மனமகிழ்வை; அத்தனை மனநிறைவை தந்தது.
ஆற அமர உட்கார்ந்து சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவிக்கொண்டு கவுண்டர் எழவும், வெளியில் வந்து நின்று செவடன், ”கவுண்ர’’ எனக் குரல் கொடுத்து கூப்பிடவும் சரியாக இருந்தது.
தோளில் போட்டிருந்த கட்டம் போட்ட துண்டை எடுத்து கையைத் துடைத்துக்கொண்டு வெளியில் வந்த கவுண்டர், செவடனைக் கூட்டிக்கொண்டு போய் துரிஞ்ச மரத்தடியில் அன்னக்கூடையில் வைத்திருந்த கஞ்சித்தண்ணியைத் தூக்கிக்கொண்டு கட்டுத்தெரு மூலையில் கட்டியிருந்த கருப்பு மாட்டிடம் சென்று வைத்துவிட்டு பேசிக் கொண்டிருந்தார். பேச்சு சட்டென பேராமுட்டா கிழவி பக்கம் போனது.
”என்னனே தெர்ல கவுண்ர… ராவுலாம் தூங்காம கத்தினுருந்த கெழ்வி, காலில ஏன்ச்சி எங்க போச்சினே தெரில… பாவம் ஊரவுட்டு இங்க வந்ததுலருந்து படாதபாடு பட்டுருச்சு.’’
செவடன் சொன்னதைக் கேட்டு எதுவும் சொல்லாமல் இருந்த கவுண்டர், மெல்ல குனிந்து கருப்பு மாட்டின் கழுத்திலும் வயிற்றிலும் தடவிக்கொடுத்தார்.
”அங்கிருந்த வரிக்கும் கஞ்சோ கூழோ எதாது ஒண்ணு வயித்தக் கழ்வ கெடச்சிடும்… இங்க வந்ததுக்கப்பறம் அதுக்கும் வக்கில்லாம போனதால… கெழ்விக்கு என்ன பண்றதுன்னு தெரியாம, ‘இந்த வூடும் வேணாம் எடமும் வேணாம்… நாம வூருக்கே போய்டுவம் வாடி’ன்னு இதோட நாலஞ்சி வாட்டி பேத்திக்காரிய கூட்டுனு கெளம்பிருச்சு. அக்கம் பக்கத்துல கீறவங்கதான் பாத்துட்டு… ஒவ்வொரு வாட்டியும் சண்டபோட்டு புத்திமதி சொல்லி வுட்டுக்கீறாங்க. இந்தவாட்டி, அவ பேத்திக்காரிக்கிட்ட கூட சொல்லாம எங்க போச்சின்னு தெர்ல, பாவம்…’’
செவடன் சொல்லிவிட்டு கண் கலங்குவதைப் பார்த்து அவன் பக்கத்தில் வந்து கட்டிலில் உட்கார்ந்த கவுண்டர், ”என்ன பண்றது செவடா… அந்த ஆண்டவன் இப்டி நல்லவுங்குளுக்குதான் பாத்துப் பாத்து சோதன மேல சோதனயா தந்து சோதிக்கறான்’’ என்றார்.
சத்தம் போடாமல் அரணைபோல் கட்டுத்தெருவுக்குள் வந்த செல்வி, கவுண்டரின் பின் பக்கமாக வந்து கட்டிலில் உட்கார்ந்து அவரது தோளை தொட்டுக் கூப்பிட்டு, ”ஐய்யாய்யா, எனுக்கு அயவான…’’ என்றாள்.
திரும்பி செல்வியின் முகத்தைப் பார்த்து, ”ம்’’ கொட்டி தலையை மேலும் கீழும் ஆட்டிய கவுண்டர், தனக்குள் எதையோ நினைத்துக்கொண்டு எழுந்து, ”செரி செவடா… நானு ஆத்துக்கா போயி பாப்பாக்கு அயவான பறிச்சாறன்… நீ வூட்டுக்குப் போயி கெழ்வி எங்க போச்சின்னு பாரு’’ என்றார்.
கூடவே எழுந்த செவடன், ”நானும் கூட வர்றன், கவுண்ர’’ என்றான்.
கீழே குனிந்து சில நொடி யோசித்தவர், சிறுவர்களுக்கு அன்னை அளிப்பதுபோல் பிரியமான புன்னகை காட்டி, ”செரி, வா…’’ என சொல்லிவிட்டு கட்டுத்தெரு வெளியில் வந்தார்.
பின்னாலேயே வந்து கவுண்டரின் கையை இறுக்கமாகப் பிடித்து இழுத்து நிறுத்திய செல்வி, ”நானும் வர்றன்ய்யா’’ என்றாள்.
திரும்பி செல்வியின் முகத்தைப் பார்த்து, ”வேணாந் தாயி… நீ இங்கயே இரு, நானும் செவடனும் போயி பறிச்சாரம்’’ என்றார்.
உடனே செல்வி, ”தம்பிய மட்டும் வெறவு வெட்ட காலில மலக்கி கூட்டுனு போன… என்ன மட்டும் எங்கிமே கூட்டுனு போவ மாட்ற… அப்ப அண்ணங்காரன் சொல்றமாரி நானு இந்த வூட்டுக்கு தவுட்டு புள்ளதானா…?’’ என்று சொல்லிவிட்டு கண்கலங்கி அழ ஆரம்பித்தாள்.
மெல்ல முறுவலித்த கவுண்டர், ”அய்வாம இரு, வர்றன்’’ என சொல்லிவிட்டு இருவரையும் அங்கேயே நிற்க வைத்துவிட்டு வீட்டுக்குள் போய் தாழ்வாரத்தில் சுவரோரமாக உட்கார்ந்து முறத்தில் பச்சரிசி கொட்டி கல் பொறுக்கிக்கொண்டிருந்த பூரணியம்மாவையும், பக்கத்தில் திண்ணைமேல் வெறும் தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த முருகனையும் பார்த்துவிட்டு மென்குரலில், ”ஏன் பூர்ணி, நானு ஆத்துக்கா போயி புள்ளக்கி அயவான பறிச்சாறன்’’ என்றுவிட்டு கீழே குனிந்து முறத்திலிருந்த அரிசியில் பிடி அள்ளி வாயில் போட்டு மென்றுகொண்டு, ”பாப்பாவயும் கூட கூட்டுனு போறன், தேடினு இருக்காத’’ என்று சொல்லிவிட்டு, பூரணியம்மா பதில் சொல்வதற்குள் மாடத்தில் மடித்து வைத்திருந்த மஞ்சள் நிற துணிப்பையில் ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார்.
வெயில் கொஞ்சம் குறைந்தது போலிருந்தது.
செல்வியைக் கூட்டிக்கொண்டு மெதுவாக செவடனோடு பேசிக்கொண்டு முரம்புக் கொல்லிக்கு வடக்கால பக்கமாகப் போய் கிளைக் கால்வாய் தண்ணியில் இறங்கி நடந்த கவுண்டர், அன்வர் பாய் மா மரத்து வழியாக முரம்பு மேடேறி மறுபக்கமாக இறங்கியதும்… அங்கிருந்த பெரிய வேப்ப மரத்தடியில் பேராமுட்டா கிழவி உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, செவடனைக் கூப்பிட்டுக் காட்டினார்.
சத்தம் போடாமல் மெல்ல பக்கத்தில் போன செவடன், எதுவும் பேசாமல் செத்தநேரம் அப்படியே நின்றான்.
வடக்கால பக்கமாகத் திரும்பி உட்கார்ந்து எதையோ வெகுநேரமாக பார்த்துக்கொண்டிருந்த கிழவி, யாரோ பக்கத்தில் வந்து நிற்பதை உணர்ந்து சட்டெனத் திரும்பிப் பார்த்தார். செவடனும் அவனுக்குப் பின்னால் கவுண்டரும் பக்கத்தில் அவர் மகளும் நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு வேகமாக எழுந்தார்.
”ஒக்காரு… ஒக்காரு…’’ என்று சொல்லிக்கொண்டு பக்கத்தில் போன கவுண்டர், தூக்க அசதியில் அவர் முகம் வாடியிருப்பதையும், சின்ன சாக்குப்பையில் எதையோ கட்டி தூக்கிக்கொண்டு வந்து வெயிலில் நடக்க முடியாமல் நிழலில் ஒதுங்கி வைத்துவிட்டு உட்கார்ந்திருப்பதையும் பார்த்து, ஏதோ கேட்க வாயெடுத்தவர் கேட்காமல் நின்றார்.
”எங்க சாமி, புள்ளய கூட்டுனு இந்த மட்டமதேன்த்துல போறீங்க…?’’
பேராமுட்டா கிழவி தன் மென்மையான குரலில் கேட்டு முடிக்கும் முன்னமே செவடன், ”ஏன் கேட்டு நெவுல வரவக்கப் போறியா…?’’ என்றான் நக்கலாக.
”ஏ, வுட்ரா செவடா… பெரிவங்ககிட்ட போயி ஏட்டிக்கி போட்டியா எதுத்து பேசிகினு’’ என்று சொல்லி செவடனைத் தடுத்த கவுண்டர், பேராமுட்டா கிழவியைப் பார்த்து சொன்னார்.
”புள்ள அயவான வேணும்னு ஆசப் பட்டு கேட்டுச்சி… அதான் ஆத்துக்கா போயி ரவ அயவான தய பறிச்சாரலான்னு போறன்.’’
கேட்டுவிட்டு வெற்றிலை பாக்கு போட்டு கறைபடிந்திருந்த தன் ஓலப்பல்லைக் காட்டி சிரித்த பேராமுட்டா கிழவி, ”ஊர்ல எம்மாம்பெரிய ஆளு நீங்க… புள்ளிக்கி அயவான பறிக்க போயி இம்மாந் தொலவுட்டு வந்துகிறீங்க…? யார்ட்டனா சொல்லி வுட்டா போயி பறிச்சாந்து தரப்போறாங்க… ஏன் இந்த செவுட்டு நாயி சொம்மாதான கீறான், சொன்னா போயி பறிச்சாரப் போறான்’’ என்றார் செவடனைப் பார்த்து.
”ஏய் கெழ்வி… செவுட்டு நாயி கீயின்னு இன்னொரு வாட்டி சொன்னன்னு வய்யி… அலாக்கா தூக்கினு போயி ஆத்து மடுவுல போட்டு அய்த்தி வுட்ட்டு வந்துருவன், பாத்துக்க…’’
செவடனைப் பார்த்து முறைத்த பேராமுட்டா கிழவி, ”அய்த்துவடா அய்த்துவ… அன்னிக்கி ஒன் பீ, மூத்தர்த்த வாரி கொட்டினு… என் மாருலயும் தோளுலயும் போட்டு வளத்து ஆளாக்கி வுட்டன்ல… அதுக்கு கைமாறா நீ செஞ்சாலும் செய்வடா’’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு, கவுண்டரைப் பார்த்து சட்டென முகத்தை மாற்றி குறும்பாகச் சிரிக்க, அவரைப் பார்த்து மூவரும் சிரித்தார்கள்.
கண்கள் கலங்க சிரித்த கிழவி, தன் புடவைத் தலப்பை எடுத்து துடைத்துக்கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன் தானாகவே கவுண்டரைப் பார்த்து சொன்னார். ”வூட்ல ஒரு பொட்டு அரிசில்ல சாமி… பாவம் என் பேத்திக்காரி கைப்புள்ளய வச்சினு என்ன பண்ணுவா…? இந்த செவடன்கிட்டதான் இன்னும் எம்மாந் நாளிக்கி போயி கை நீட்டுவன்…? ஊரவுட்டு இங்க வந்தாலும் வந்தம், சொல்லிவச்சமரே ஒருத்தரு கூட கூலி வேலக்கி வான்னு கூப்ட மாட்றாங்க… ஏன்னு கேட்டா, நீங்க அம்மாந்தொலவுட்டுலருந்து ஆடினு வர்றதுக்குள்ள பாதி பொய்து போயிடும்… அதுக்கப்பறம் என்ன வேல செஞ்சி கீப்பீங்கன்னு கேக்கறாங்க. நாங்க என்ன சாமி பண்ணுவம்…? நீங்குளும் அடிமேல அடிவாங்கி இப்பதான் ரவ ரவயா ஏன்ச்சினு கீறீங்க. ஒங்ககிட்டயும் வந்து நிக்க முடியாது… அதான் காலிலயே ஏன்ச்சி மாங்காதோப்புல கீற என் தம்பிக்காரன் வூட்டுக்குப் போயி பதக்க நொய்யி வாங்கியாறன்.’’
கேட்ட கவுண்டருக்கு சட்டென்று கண் கலங்கிவிட்டது. என்ன சொல்வதெனத் தெரியாமல் தலைகுனிந்து நின்றவரை பார்த்த பேராமுட்டா கிழவி, ”வுடுங்க சாமி… எங்க பொழ்ப்பு நாயி பொழ்ப்புதான்… அன்னிக்கி ஒங்க வாயில வவுத்துல அடிச்சி எடத்த புடுங்கினு வுட்டதுக்கு, எங்குளுக்கு இதும் வேணும் இன்னுமும் வேணும்’’ என்றார்.
கேட்ட கவுண்டருக்கு பெரும் சங்கடமாகப் போய்விட்டது.
”இன்னும் அதயே எதுக்கு பேசினு கீற…? யாரும் என் வாயில வவுத்துல அடிச்சி எடத்த புடுங்கினு வுடல… நானாதான் ஒங்குளுக்கு தந்தன், போதுமா…?’’ என்றுவிட்டு பக்கத்தில் வந்து, ”செரி, வுட்ட்டு வெய்யில் தாந்ததும் ஏன்ச்சி வூட்டுக்குப் போ… எல்லாம் அந்த ஆண்டவன் பாத்துப்பான்’’ என்று சொல்லிவிட்டு பள்ளத்தில் இறங்கிய கவுண்டர், சற்று தள்ளியிருந்த பெரிய வெப்பால மரத்துக்குப் பின்னால் தெரிந்த வேப்ப மர கல்லாக்குட்டையைப் பார்த்துவிட்டு, அதனடியில் இருக்கும் பொறடியாத்தாவை மனத்துக்குள் நினைத்து வணங்கிவிட்டு நடந்தார்.
கவுண்டருக்கு எட்டு வயதாக இருக்கும்போது ஊர் பெயர் தெரியாத மத்திம வயது பெண் ஒருவர்… பூ போட்ட பட்டுப் புடவை கட்டிக்கொண்டு நேர் வகுடெடுத்து சீவி, அதன் ஆதியில் பெரிய குங்குமப் பொட்டிட்டு, கை நிறைய வளையலும் தலை நிறைய பூவும் வைத்துக்கொண்டு அப்பக்கமாக யாரையோ தேடி வந்திருக்கிறார்.
அங்கிருந்த பாய்மார் கொல்லியில் தாயும் அவரது பத்து வயது மகளும் உருதுவில் ஏதோ தங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டு, மல்லாட்டைக்கு களை வெட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
பக்கத்திலிருந்த கல்லாக்குட்டையிலிருந்து வந்த பெரிய கட்டுவிரியன் பாம்பு ஒன்று, அவர்களை நோக்கி கடிக்க வேகமாகப் போவதை மரிசிமேல் நடந்து போன அப்பெண் பார்த்துவிட்டு பதறிப்போய் ஓடி அக்குழந்தையைத் தூர தள்ளிவிட்டு, அப்பாம்பிடம் தான் கடி வாங்கி வலியில் கத்திக்கொண்டு தொம்மென கீழே விழுந்திருக்கிறார்.
பார்த்த தாயும் மகளும் கத்தி கூச்சல் போட, அக்கம் பக்கத்து கொல்லியில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்ப்பதற்குள் உடலெங்கும் விஷமேறி வாயில் நுரை தள்ளி அப்பெண் இறந்துபோயிருக்கிறார்.
என்ன செய்வதென ஒருவருக்கும் தெரியவில்லை. உடனே அவர் உடலைத் தூக்கிக்கொண்டு ஊருக்கு வந்து, நேராக கவுண்டரின் வீட்டின் முன்னால் போய் போட்டுவிட்டு கவுண்டர் தந்தையிடம் நடந்ததைச் சொல்லி அழுதிருக்கிறார்கள்.
அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தவர், பக்கத்தில் வந்து அவரது முகத்தையும் நெற்றியில் இருந்த பெரிய பொட்டையும் கையில் பாம்பு கடித்திருந்த இடத்தையும் பார்த்துவிட்டு கையெடுத்து கும்பிட்டு, ”யாரு எவுருன்னு தெரியாத ஒரத்தி வந்து… தான் உயிரத் தந்து நம்மூரு புள்ளிய காபுந்து பண்ணிகீறா… அதால இவள இனி நம்மூருக்கே தாயா நெனச்சி ஊரோட பொறத்துல வச்சி பொறடியாத்தான்னு எல்லாரும் கும்முடுவோம். அதான் இந்தம்மாகாரிக்கு நாம செய்யிற கைமாறு… என்ன சொல்றீங்க…?’’ என்று ஊராரைப் பார்த்து கேட்க… சாதி, மதம் பார்க்காமல் எல்லோரும் கூடி, ”ஆமா, அதான் செரி” என்று சொல்ல, அப்பெண்ணின் உடலை சகல மரியாதையுடன் பாடை கட்டி, அனைத்து சடங்கு சம்பிரதாயங்களும் செய்து தூக்கிப் போய் தென்பெண்ணையாறும் பாம்பாறும் சங்கமிக்கும் இடத்தருகில் உள்ள இடுகாட்டில் அடக்கம் பண்ணிவிட்டு வந்தவர்கள், அடுத்த பத்தாவது நாள் அவருருவில் ஒரு கற்சிலை செய்து, மேலதாளத்தோடு ஊர் கோயிலிலிருந்து ஊர்வலமாக எடுத்துப்போய் பாம்பு கடித்து அவர் உயிர்பிரிந்த இடத்தருகில் இருந்த கல்லாக்குட்டையில் வேப்ப மரத்தடியில் ஊர் காவல் தெய்வமாக வைத்து முப்பூசையிட்டு சாமி கும்பிட்டுவிட்டு வந்திருக்கிறார்கள்.
அதுமுதல் ஊரில் எந்தத் திருவிழா நடந்தாலும் சரி, முதல் பூசை பொறடியாத்தாவுக்கு வைப்பதையும், கவுண்டரின் தந்தைக்குப் பிறகு கவுண்டரிடம் பூசைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்து தந்து ஆண்டு தவறாமல் அக்கொல்லி பாய்மார் பூசை வைக்கச் சொல்லி அவருக்கு நன்றி செலுத்துவதையும், ஊரில் யாருக்காவது பாம்பு கடித்து சாகப்பிழைக்கக் கிடந்தால் மனதார அவரை நினைத்து பிரார்த்திப்பதையும், சரியாகி பிழைத்ததும் தேடிப் போய் நேர்த்திக்கடன் செய்துவிட்டு வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
கழனி மரிசிமேல் மெதுவாக நடந்துபோன கவுண்டர், ஒத்த வேடியப்பன் கோயில் மொடக்கில் வரிசையாக நின்றிருக்கும் உயரமான தென்னை மரங்களையும் அதைச் சுற்றியுள்ள வயல்வெளிகளையும் காற்றசைவில் அவை பச்சை அலைபோல் மிளிர்ந்தாடுவதையும் பார்த்துக்கொண்டு, அங்கிருந்த புளிய மரத்தடி தட்டோடு கொட்டா தாண்டி ஆற்றுக்குள் இறங்கிப் போனார்.
வழியிலிருந்த நான்கைந்து உலுவை மீன்களும் ஒரு ஜிலேபி மீனும் செவடன் இறங்கியதும் வழிவிட்டு ஓடின. சிறு கல்லுக்குப் பக்கத்திலிருந்த கருநிற நண்டைப் பார்த்துவிட்டு பயந்துபோய் இறங்க மறுத்த செல்வியை, ”அது ஒண்ணும் பண்ணாது, வா தாயி’’ என கைப்பிடித்து இறக்கிக் கட்டியிருந்த நீலநிற பாவாடை லேசாக நனைய முட்டிமூட்டு நீரில் நடக்கவைத்து கூட்டிக்கொண்டு மறுபக்கம் போனார் கவுண்டர்.
ஆங்காங்கே நீரையொட்டி வரிசை வரிசையாக கோரைப் புல் முளைத்திருந்தது. பாறையோர குட்டையில் உட்கார்ந்திருந்த நான்கைந்து நாரைகள் காலடிச் சத்தம் கேட்டு ஒரேநேரத்தில் பறந்தோடின.
நடு ஆற்றின் மேல் பக்கமாக புல்மேட்டில் நடந்து, சற்று தூரத்தில் பெரிய பாறையின் நடுவில் சிறு மண் பரப்பில் இரண்டாள் உயரத்திற்கு வளர்ந்திருந்த அழவான மரத்தடியில் போய் நின்று, அதன் கீழ்க் கிளைகளைத் தாழ்த்தி துளிரிலைகளையும் பழுக்காத பசுமையேறிய இலைகளையும் உருவ ஆரம்பித்தார்கள்.
பாறை உச்சியில் ஏறி நின்றுகொண்டு பக்கத்திலிருந்த குட்டையில் நீர் இறைத்து பறியும் ஊத்தாவும் வைத்து மீன் பிடிப்பவர்களையும், மறுபக்கக் கரையோரம் கோவணம் கட்டிக்கொண்டு ஒரு தாத்தா மாடு மேய்ப்பதையும், அவருக்குப் பக்கத்திலிருந்த மணல் பரப்பில் காக்கி டவுசர் போட்ட சிறுவன் ஒருவன் ஊத்துப் பள்ளம் தோண்டி அதில் குனிந்து கையூன்றி வாய் வைத்து தண்ணீர் குடிப்பதையும், கீழ்ப் பக்கத்தில் பக்கத்தூர் சுடுகாட்டுக்குப் போகும் வழியோரம் இருந்த பெரிய பாறையில் மார்வரை பாவாடையை ஏற்றிக்கட்டி நீருக்குள் நின்றுகொண்டு ஐந்தாறு பெண்கள் துணி துவைப்பதையும் பார்த்துக்கொண்டிருந்தாள் செல்வி.
கொண்டுவந்த பை நிறைய அழவான தழை பறித்த செவடனும் கவுண்டரும் அதை செல்வியிடம் காட்டி, ”போதுமா தாயி…?’’ என்று கேட்க, பதிலுக்கு மலர்போல் அவளும் தன் முகத்தை சிரித்துக்காட்டி, ”ம், போதும்யா…’’ என்று சொல்ல, எதையோ நினைத்த கவுண்டர் கையில் வைத்திருந்த பையை அவளிடம் தந்துவிட்டு அழவான மரத்தின் கீழ் கிளையைத் தாழ்த்தி, அதிலிருந்து விரல் அளவுள்ள இரண்டு சிறு குச்சிகளைத் தழைகளோடு சேர்த்து உடைத்தார்.
பார்த்த செவடன், ”அதெதுக்கு கவுண்ர…? அதான் பாப்பா போதுன்னுச்சே…’’ என்றான்.
சிரித்த கவுண்டர், ”வூட்ல கொண்டுனு போயி நட்டுவக்க’’ என்றார்.
அதைக் கேட்டு உற்சாக மிகுதியில் தன் தந்தையைப் பார்த்த செல்வி, பக்கத்தில் வந்து அவர் கையிலிருந்த இரு குச்சிகளை தொட்டுப் பார்த்துவிட்டு கேட்டாள். ”இத கொண்டுனு போயி நட்டுவச்சா மொளச்சி வருமாய்யா…?’’
”ம்’’ என தலையாட்டிய கவுண்டர், அக்குச்சிகளை செவடனிடம் தந்துவிட்டு, செல்வியைக் கூட்டிக்கொண்டு மெல்ல பாறையிலிருந்து கீழே இறங்கி, ஜம்ப முளைத்திருக்கும் புல்வெளி வழியாக நடந்தார்.
”அந்தக் காலத்துலலாம் ஆத்துல எம்மாம் அயவான மரங்க இருக்கும் தெரிமா…? ஊரு போடுமுட்டிங்கலாம் கூடினு வந்து பை பையா உருவினு போவாங்க… இன்னிக்கி என்னடான்னா, அதல காவாசி மரத்தகூட காணாம். எல்லாம் கமினேட்டிங்க வெறவு வெட்றன்னு வந்து எத வெட்றதுன்னுகூட சுதிமதி இல்லாம வெட்டிட்டுகீறாங்க.’’
செவடனைப் பார்த்து சொல்லிவிட்டு கவுண்டர் முன்னால் நடக்க, மொத்த உலகமே தன் முன்னால் திறந்துகிடப்பதுபோல் கண்களை அகலவிரித்து பார்த்துக்கொண்டு செல்வி அவர் பின்னால் வர, கவுண்டர் உடைத்துத் தந்த இரு அழவான குச்சிகளையும் ஒன்றாகச் சேர்த்து எடுத்துக்கொண்டு இருவருக்கும் பின்னால் செவடன் நடந்துவந்தான்.
”ஐய்யாய்யா… எனுக்கு இந்த கொய்யாங்கல்லு வேணும்” கீழே கிடந்த உருண்டையான கொய்யாங்கல்லைப் பார்த்துவிட்டு செல்வி கேட்டாள்.
திரும்பிப் பார்த்த கவுண்டர், குனிந்து அதைக் கையில் எடுத்துப்போய் பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த நீரில் கழுவி வந்து செல்வியிடம் தந்துவிட்டு அவள் கையிலிருந்த அழவான பையை வாங்கிக்கொண்டார்.
சிறு வயதில் தன் தந்தையோடு ஆற்றுக்கு அழவான பறிக்க வந்தபோது எடுத்துப்போய் வீட்டில் வைத்து விளையாடிய கொய்யாங்கல்லையும் கப்பைக் கல்லையும் நினைத்துப்பார்த்த கவுண்டர், செல்வியைக் கை பிடித்து நீரில் இறக்கி மெல்ல நடக்கவைத்து மறுகரைக்குக் கூட்டிவந்தார்.
யாரோ நான்கு சிறுவர்கள் பீ வேல மரத்தடியில் வட்டமாக உட்கார்ந்து சின்னச் சட்டியில் கூட்டாஞ்சோறு ஆக்கி, ஆற்றில் பிடித்து வந்த மீன்களைச் சுட்டு தேக்கு இலையில் வைத்து தின்றுகொண்டிருந்தார்கள்.
மெதுவாக அவர்களைப் பார்த்துக்கொண்டு மேடேறி, புளிய மர கொட்டா வழியாக நடந்து பேசிக்கொண்டு வந்தவர்கள், முரம்பு மேடேறி இறங்கியதும் வெப்பால மரத்தோரம் இருந்த பெரிய எருக்க மரத்தில் போய் பழுத்த மஞ்சள்நிற இலைகளாகப் பார்த்து மூன்றை பறித்து பையில் வைத்துக்கொண்டு, சாயங்காலம் அஜ்ஜான் கூவுவதற்கு முன்னால் வீட்டுக்கு வந்தார்கள்.
மேற்கே அரசங்கல்லுக்குப் பின்னால் சூரியன் புள்ளிபுள்ளியாக இறங்கிக்கொண்டிருந்தது. காலையில் விறகு வெட்டப் போகும்போது, காவாங்கரை மதகுமேல் உட்கார்ந்துகொண்டு புல்லாங்குழல் ஊதிக்கொண்டிருந்த சோலைக்கண்ணன், வெறும் துரிஞ்ச விறகாகப் பார்த்து வெட்டி சுமை கட்டித் தூக்கிக்கொண்டு செயற்கையான மிடுக்குடன் எதையோ உதடசைத்து தனக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் சொல்லிக்கொண்டு நடந்து, வேகமாக கவுண்டரின் வீட்டைத் தாண்டி போய்க்கொண்டிருந்தான்.
வீட்டுக்குள் ஓடிப்போய் தாழ்வாரத் திண்ணையில் உட்கார்ந்து டிப்பிடிப்பி வைத்து அடித்து விளையாடிக்கொண்டிருந்த முருகனிடமும், அடுப்பங்கரையில் உட்கார்ந்து சோறு வடித்துக்கொண்டிருந்த பூரணியம்மாவிடமும், தான் எடுத்துவந்த மழமழ கொய்யாங்கல்லை கையில் தேய்த்துக் காட்டிவிட்டு வந்த செல்வி, வெளித் திண்ணைமேல் கோழிக்கூண்டருகில் அதை வைத்துவிட்டு பூவரசி வீட்டுக்கு ஓடிப்போனாள்.
அங்கே வாசலில் உட்கார்ந்து கனகாம்பரம் பூ கட்டிக்கொண்டிருந்த பூவரசியைக் கையோடு கூட்டிக்கொண்டு செல்வி வருவதற்குள், எடுத்து வந்த அழவான தழையை அம்மியில் போட்டு அத்துடன் பழுத்த எருக்கன் இலையையும் கொட்டப் பாக்கையும் வைத்து அரைக்க ஆரம்பித்திருந்தார் கவுண்டர்.
[இன்னும்]
*