முரம்பு – 20

”ஐய்யாய்யா… அம்மா உன்ன கையோட கூட்டுனு வர சொல்ச்சு…’’
ஓடிவந்த முருகன், பக்கத்தில் வந்து நின்று மூச்சுவாங்க சொன்னான்.
ஆனந்தத்தின் உச்சத்திலிருந்தவர் சட்டெனப் பதட்டமாகி, ”ஏஞ்சாமி, என்னாச்சு…?’’ என்று கேட்டார்.
”அக்காக்கு என்னுமோ ஆச்சிய்யா… அதான் கட்டுத்தெருல ஒக்காரவச்சிட்டு… என்ன போயி பாக்கூடாதுன்னு சொல்ட்டு… உன்ன கையோட கூட்டுனு வர சொன்னாங்க’’ என்றான்.
திரும்பி முடியனூரான் கொல்லி மொடக்கிலிருந்த கிளைக் கால்வாயில் மடை மறித்து கட்டிவிட்டு செவடன் வந்துகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, ”செரிய்யா, நீ இங்கயே நின்னு… செவடன் வந்துதும் கூட்டுனு வா… நானு போயி என்னானு பாக்கறன்’’ என்று முருகனிடம் சொல்லிவிட்டு, மரிசிமேல் இருந்த சிறு மூங்கில் குச்சியைக் குனிந்து கையில் எடுத்துக்கொண்டு துரிஞ்சி மர வழியாக நடந்து கிடுகிடுவென மேடேறி வந்தார்.
வெயில் நன்றாகவே கொளுத்த ஆரம்பித்திருந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் ஊர் அல்லாகோயிலில் மதியம் ஒரு மணி அஜ்ஜான் கூவினார்கள்.
கட்டுத்தெரு முன்னால் நின்றுகொண்டு தன் மச்சான் மனைவி இசைவள்ளியுடன் பூரணியம்மா பதட்டத்தோடு ஏதோ பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த கவுண்டர், முருகன் சொன்னதை வைத்து ஒருவாறு என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துவிட்டார். இருந்தாலும் அதை நேரில் உறுதிப்படுத்தவேண்டும் என தனக்குத் தானே சொல்லிக்கொண்டு பக்கத்தில் வந்து நின்றார்.
பதட்டமும் பூரிப்பும் ஒன்றுகூடிய முகத்துடன் கவுண்டரைப் பார்த்த பூரணியம்மா, ”ஏந்தே… நம்ம பொண்ணு செல்வி, வயிசுக்கு வந்துட்டா தே’’ என்றார்.
கேட்ட கவுண்டருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. உலகின் மொத்த சந்தோஷமும் கை கால் முளைத்து வந்து கூடி நின்று உரைத்ததுபோல் இருந்தது. என்ன சொல்வதெனத் தெரியாமல் அப்படியே மெய்மறந்து போய் நின்றார்.
அதற்குள், மேற்காலப் பக்கமிருந்து ராமு கவுண்டரும் ரவியும், கிழக்கால முரம்புக் கொல்லியிலிருந்து செவடனும் முருகனும் வந்தார்கள்.
”அண்ணிக்காரி இன்னிக்கே புள்ளக்கி தண்ணிவூத்திட்டு… பக்கத்துல கீற நல்லநாளா பாத்து தெரட்டி சுத்தலான்னு சொல்றாங்க தே.’’
பூரணியம்மா சொல்ல வந்ததில் பாதியை மட்டும் சொல்லிவிட்டு கவுண்டரின் முகத்தைப் பார்த்தார்.
”ஆமா முத்துசாமி… வள்ளி சொல்றதான் செரி, தெரட்டி சுத்திரலாம்’’ என்றார் ராமு கவுண்டர், பக்கத்தில் வந்து கவுண்டரின் தோளைத் தொட்டு.
மாட்டு வண்டியில் மஞ்சம்புல் ஏற்றி வந்து, எதிரிலிருந்த கரம்பில் நெடுங்கால் நட்டும் தூளம் வைத்தும் குறுக்குக் கழி போட்டு வரிசையாகக் கூரை வீடு கட்டிக்கொண்டிருந்த இடத்தில் நான்கு பேர் இறக்கிக்கொண்டிருந்தார்கள். சற்று தள்ளியிருந்த சேந்துக்கிணறோர கருங்காட்டுவா மரத்தடியில், வெயிலுக்கு இதமாக ஒதுங்கி தரையில் துண்டை விரித்துப் போட்டு இருவர் படுத்திருந்தார்கள்.
எதுவும் சொல்லாமல் தனக்குள் எதையோ யோசித்தவர், பூரணியம்மாவை தனியாகக் கூட்டிக்கொண்டு போய் கட்டுத்தெரு பின்னாலிருந்த துரிஞ்ச மரத்தடியில் நின்றுகொண்டு, ”ஏன் பூர்ணி, நாம இப்ப கீற நெலமில… ஊர கூப்ட்டு வச்சி தெரட்டி சுத்தறது எனுக்கென்னுமோ சரியாப் படல’’ என்றார்.
கேட்டுவிட்டு ‘ஆமாம்’ என தலையாட்டிய பூரணியம்மா, ”எனுக்கும் அதான் தே படுது… அண்ணிக்காரியும் அண்ணனும்தான் வுடாப்புடியா சுத்தியே ஆவனுன்னு சொல்றாங்க. நானும் எம்மாஞ் சொல்லி பாத்துட்டன். கேக்கறமரே தெர்ல’’ என்றார்.
டப்பென பாதி கடித்துப்போட்ட கொய்யாக்காய் ஒன்று வந்து கவுண்டரின் தோள்மேல் விழுந்தது. என்னமோ ஏதோ என ஒருநொடி பதறிப்போனவர், கீழே பார்த்துவிட்டு மெல்ல குனிந்து அக்காயை கையில் எடுத்துக்கொண்டு மரத்தின் மேலே அண்ணாந்து பார்த்தார். ஓர் அணில் அவரையும் அவர் கையிலிருந்த கொய்யாக் காயையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தது. எங்கிருந்தோ எடுத்துவந்து உச்சிக்கிளையில் உட்கார்ந்து தின்றுகொண்டிருந்த அணிலின் கையிலிருந்து தவறி தன்மேல் அது விழுந்துவிட்டதைப் புரிந்துகொண்டவர், உடனே எடுத்துப்போய் மரத்தின் கீழ் கிளை கவைமேல் வைத்துவிட்டு வந்து பூரணியம்மாவிடம் சொன்னார்.
”அவுங்க அப்டிதான் பூர்ணி சொல்வாங்க… நாமதான் நல்லா ஓசன பண்ணி முடுவு பண்ணனும்.’’
கவுண்டர் சொல்லிவிட்டு பூரணியம்மாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டு அமைதியாக நின்றார்.
நின்று நின்று பார்த்த முருகன், நைசாகப் போய் கட்டுத்தெருவுக்குள் எட்டிப் பார்த்தான். சுவரோரமாக கட்டிலுக்குப் பக்கத்தில் பின்னிய தென்னங்கீற்றுமேல் உட்கார்ந்து குசுகுசுவென பூவரசியிடம் ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள் செல்வி.
பார்த்துவிட்டு பின்னாலேயே வந்து முதுகில் ஒன்று வைத்த அவன் அத்தை இசைவள்ளி, ”ஏன்டா பொசகெட்டவன… எத செய்யாதன்னு சொல்றமோ, அததான் செய்வியா நீ…? இரு ஒன் அம்மாக்காரி வரட்டும், கால்லயே நல்லா சூடுவக்க சொல்றன்’’ என்று சொல்லிவிட்டு அவனை அங்கிருந்து இழுத்துவந்தார்.
”வேணும்னா ஒண்ணு பண்லாம் பூர்ணி…’’
சட்டென எதையோ சொல்ல வந்து சொல்லாமலேயே நிறுத்திவிட்ட கவுண்டர், திரும்பி கட்டுத்தெரு முன்னால் நின்றிருந்த அவர் மச்சானையும் அவரது மனைவியையும் பார்த்துவிட்டு சொன்னார்.
”ஊரலாம் கூப்டாம, இப்ப நம்ம சத்துக்கு ஏத்தமாரி புள்ளக்கி தண்ணி வூத்திட்டு… மேலக்கி கல்லியாணம் பண்ணும்போது, கல்யாணத்துக்கு முந்தநாளு தெரட்டி சுத்திக்கலாம்… நீ என்ன சொல்ற பூர்ணி…?’’
பூரணியம்மாவுக்கும் அதுதான் சரியெனப் பட்டது. மேட்டு நிலத்தை ஊராருக்குத் தந்தது, பிள்ளையைப் பறிகொடுத்தது, ஊரிலிருந்த வீட்டை விற்றுவிட்டு முரம்புக் கொல்லிக்கு குடுத்தனம் வந்தது, இதெல்லாம் நடக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் ஊரைக் கூட்டி தடல்புடலாக தெரட்டி சுற்றியிருக்கலாம் என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டார்.
கூடவே, ஓராண்டுக்கு முன்னால் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து ஆட்டுக்காரம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கையில், செல்வி வந்து தன்னிடம் கேட்டதும் நினைவுக்கு வந்துபோனது.
அதுவும் ஊரிலுள்ள நடுத்தெரு ரோஜா பாட்டியின் சின்னப் பேத்தி கல்பனா வயதுக்கு வந்திருந்தபோது, பூரணியம்மாவுடன் அவள் வீட்டுக்கு தண்ணீர் ஊற்றப் போயிருந்த செல்வி… கல்பனாவுக்கு பெண்கள் கூடி நின்று தண்ணீர் ஊற்றி புத்தாடை அணிவித்தது தொடங்கி, தாய்மாமன் பசுந்தென்னை மட்டை வெட்டிவந்து பின்னி வீட்டின் பின்பக்க தாழ்வாரத்தில் குடிசை கட்டி அதற்குள் உட்காரவைத்தது, தினந்தோறும் சொந்தக்காரர்கள் வந்து வடை பாயசத்தோடு வகை வகையாக அவளுக்கு ஆக்கிப்போட்டது, அதன்பின் ஊருக்கெல்லாம் சொல்லி வீட்டு வாசலில் பந்தல் போட்டு ரேடியோ கட்டி சீரியல் பல்பு தொங்கவிட்டு மேலதாளத்தோடு ஊர்வலமாக சீர்வரிசை எடுத்து வந்து அவளை அலங்கரித்து பந்தலில் உட்காரவைத்து தெரட்டி சுத்தியது எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்து திண்ணையில் உட்கார்ந்திருந்த தன் அம்மாவிடம், ”எம்மாம்மா… நானு வயிசுக்கு வந்தா, கல்பனாக்காக்கு பண்ணமரே எனுக்கும் பண்ணுவீங்களாம்மா…?’’ என்று கேட்டாள்.
தன் பக்கத்தில் அழைத்து உட்காரச் சொல்லி அவளது கள்ளம் கபடமற்ற ஏக்க முகத்தைப் பார்த்த பூரணியம்மா, ”இதுமரே என்ன… இதவுட இன்னும் தடபுடலாவே பண்ணுவம்டி பொண்ண…’’ என்று சொல்லிவிட்டு, தன் கையால் அவளுக்கு திருஷ்டி சுற்றி நெட்டி முறித்தார்.
கண்கள் மூடி சில நொடி தனக்குள் அதை காட்சியாக்கிப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் மெல்ல கண் திறந்து தன் அம்மாவின் முகத்தைப் பார்த்து அவர் கையைப் பிடித்துக்கொண்ட செல்வி, ”நெஜமாலுமேவாம்மா…?’’ என்று கேட்டாள்.
”ஆமாந் தாயி’’ என்ற பூரணியம்மா, பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆட்டுக்காரம்மாவைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்துவிட்டு, ”நீதான் எங்குளுக்கு ஒத்த பொண்ணாச்சே… உனுக்கு செய்யாம, வேற யாருக்கு தாயி நாங்க செய்யப்போறம்…’’ என்றார்.
தன் அம்மா சொன்னதைக் கேட்டுவிட்டு, இறுக்கி அவரை கட்டிக்கொண்டாள் செல்வி.
மெல்ல இச்சம்பவத்தைத் தன்னுள் நினைத்துப்பார்த்த பூரணியம்மா, ”புள்ளதான் பாவம் தே… என்னலாம் ஆசப்பட்டுச்சோ, தெர்ல தே’’ என்றார், கவுண்டரிடம் தயங்கித் தயங்கி.
மெல்ல தலையாட்டிய கவுண்டர் நிதானமான குரலில், ”அவ சின்னப் பொண்ணு பூர்ணி… நாமதான் நெலமிய எடுத்துசொல்லி புரியவக்கணும்’’ என்று சொல்லிவிட்டு, ”செரி வா, போவலாம்’’ என்று கூட்டிக்கொண்டு வந்து ராமு கவுண்டரிடமும் அவர் மனைவி இசைவள்ளியிடமும் தங்கள் முடிவைச் சொல்லிவிட்டு, மிக எளிய முறையில் செல்விக்கு தண்ணீர் ஊற்றினார்கள்.
தன் ஒரே மகளுக்கு ஊர்கூட்டி தெரட்டி சுற்ற முடியவில்லையே என்பதில் பூரணியம்மாவைக் காட்டிலும் கவுண்டருக்கு வருத்தம் அதிகம்தான் என்றாலும், அதை அவர் கொஞ்சம் கூட வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஒரேயொரு தடவை, அதுவும் செட்டியார் கிணத்துக்கு குளிக்கப்போயிருந்தபோது, பேச்சுவாக்கில் தன் மச்சானிடம் சொல்லியிருக்கிறார். அதைத்தாண்டி யாரிடமும் ஒருவார்த்தைகூட பேசவில்லை.
இரண்டு வாரம் கழித்து மல்லாட்டப் பயிருக்கு இரண்டாவது தண்ணீர் காட்டிவிட்டு, மண்வெட்டியை எடுத்து வந்து கட்டுத்தெருவில் வைத்துவிட்டு தன்னோடு பேசிக்கொண்டு கால்வாய்க்கு குளிக்க வந்த கவுண்டர்… தனக்குள் எதையோ நினைத்துக்கொண்டு ஒருமாதிரி இறுக்கமாக இருப்பதைப் பார்த்துவிட்டு, மனசு கேட்காமல் செவடன் கேட்டான்.
”மதியானத்துலருந்து ஏன் கவுண்ர, ஒருமாரியாவே கீறிங்க…?’’
காவாங்கரையோர புளியமரத்தடியில் நின்றுகொண்டு காற்று வீசாமல் ஓரிலையும் அசையாமல் பூரண மவுனம் அங்கே நிலவுவதைப் பார்த்துவிட்டு மெல்ல உதடசைத்துக் காட்டிய கவுண்டர், ”அதலாம் ஒண்ணுல்ல செவடா’’ என்று சொல்லிவிட்டு, தன் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு சோமத்தையும் உள்ளே போட்டிருந்த பழுப்பு நிற டவுசரையும் அவிழ்த்து மடித்து எடுத்துப்போய் மதகு கட்டைமேல் வைத்துவிட்டு வந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, வேகமாக ஓடிப்போய் சர்ரென எகிரி நடுகால்வாய்க்குள் சொரப்பானம் விட்டார்.
எப்போதும் எதையும் அவராகச் சொல்லும்வரை காத்திருக்கும் செவடன், ‘அவுசரப்பட்டு கேட்டுட்டமோ…?’ எனும் சங்கடத்தோடு இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு, கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து ஓரமாக வைத்துவிட்டு, மதகுப் படிக்கட்டு வழியாக மெதுவாக இறங்கிப்போய் கழுத்துமூட்டு நீரில் நின்றுகொண்டு கவுண்டரைப் பார்த்தான்.
நடு கால்வாய்க்குள் செத்தநேரம் சிலைபோல் நின்றுகொண்டு தண்ணீரையே பார்த்த கவுண்டர்… சட்டென எதிர்ப்பக்கமாக நீரை எதிர்த்துக்கொண்டு நீந்தி, சற்றுதூரம் போய்விட்டு திரும்பி அங்கிருந்து உள்ளேயே தம்கட்டி மூச்சுப் பிடித்துக்கொண்டு படிக்கட்டு வரைக்கும் வந்து மேலே ஏறி கரைக்கு வந்தார்.
எதிலும் மனம் ஒன்றாமல் சஞ்சலத்திலிருந்த கவுண்டருக்கு, இப்படி எதிர் நீச்சலடித்துப்போய் அங்கிருந்து நீருக்குள் மூழ்கி நீண்ட தூரம் உள்ளேயே வந்தது சற்று ஆறுதலாக இருந்தது.
கால்வாய் தண்ணீரில் காய்ந்த பெரிய பீ வேல முள் மிலார் ஒன்று அடித்துவருவதைப் பார்த்த செவடன், ஒதுங்கி நின்று கிட்டே வந்ததும் அதை நேக்காகப் பிடித்து இழுத்துப்போய் மறுபக்கக் கரையிலிருந்த உண்ணிமில் புதர்மேல் தூக்கிப் போட்டுவிட்டு வந்தான்.
வடக்கால பக்கத்திலிருந்து யாரோ ஒரு பெரியவர் ஐந்து வயது சிறுவன் ஒருவனை தன்னுடன் கூட்டிக்கொண்டு காவாங்கரையில் நடக்க முடியாமல் நடந்து வந்துகொண்டிருந்தார். மெல்ல பக்கத்தில் வந்தவர், கவுண்டர் அங்கே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அருகில் வந்து, ”கும்படறன் கவுண்ர’’ என்றார்.
பதிலுக்கு ‘கும்பிடுவது’ போல் தலையாட்டிவிட்டு, ”யாரு நீங்க…?” என்று கேட்டார் கவுண்டர்.
”தெவுடியாகுப்பத்துலருந்து வர்றன் நானு… ஒங்க கூட்டாளி மாரிமுத்து கீறான்ல… அவுனுக்கு சித்தப்பங்காரன் மொற வேணும் நானு. அவன் சொல்லிதான் ஒங்கள தேடி வந்தன். நல்லவேள நீங்க இங்கியே கீறிங்க’’ என்றுவிட்டு, வந்த விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
”வூட்டுல கீற பசுமாடு ஒண்ணு… நேத்து காலில செப்புலு பிரிர நேரத்துலதான் தலச்சன் கன்னு போட்டுச்சு. செரியா தண்ணிவண்ணி இல்லாத்துனால… கன்னுக்குட்டி சத்தில்லாம எடக்கொறச்சியா போட்டு… ஏன்ச்சி நடக்கமுடியாம, அசயக்கூட முடியாம கீது… நாங்குளும் என்னன்னமோ பண்ணிப் பாத்துட்டம்… ஒண்ணும் ஆவல. அதான் ஒருவார்த்த கலந்துனு போலான்னு வந்தன்.’’
பெரியவர் சொன்னதைக் கேட்டுவிட்டு திரும்பி நடு கால்வாய்க்குள் நின்றுகொண்டு மறுகரை புதரிலிருந்து ‘கர கர கர’வென்று கர்ண கடூரமான குரலில் தவளை ஒன்று கத்திக்கொண்டிருப்பதை எரிச்சலோடு கேட்டுக்கொண்டிருந்த செவடனை பார்த்துவிட்டு, ”கன்னுக்குட்டி போட்டு எத்தன நாளு ஆவுதுன்னு சொன்னீங்க…?’’ என்று இன்னொரு தடவை கேட்டுத் தெரிந்துகொண்டார்.
சிலநொடி தனக்குள் யோசித்து மெல்ல தலையாட்டிய கவுண்டர், ”ஒண்ணும் பயிப்புட வேணாம்… போயி என்ன பண்றீங்க… ஆட்டுக்குட்டி மூடி வக்கிற பெரிய கொடாப்பு கீதுல்ல கொடாப்பு… அத தலகீள திருப்பிப் போட்டு… அதல அஞ்சாறு கைப்புடி நறயா பருத்தி கொட்ட அள்ளியாந்து கொட்டிவுட்டு… கன்னுக்குட்டிய அதுமேல படுக்க வைங்க… அது கன்னுக்குட்டியோட ஒடலு சூட்ட அப்டியே இருக்கவச்சி… கொஞ்ச கொஞ்சமா தெம்பு வந்து, அதுவா தானா ஏன்ச்சி நிக்க ஆரம்பிச்சிடும்… அப்பறம், ரண்டுமூணு நாளில நல்லாவே நடமாட ஆரம்பிச்சிடும்” என்று சொல்லிவிட்டு திரும்பி மீண்டும் செவடனைப் பார்த்தார்.
தண்ணீருக்குள் மூழ்கி ஒரு கல்லை எடுத்து, விடாமல் வெகுநேரமாக தவளை கத்திக்கொண்டிருந்த சூரப் புதருக்குள் வீசினான். சட்டென கத்தல் நின்று அவ்விடமே நிசப்த வெளியாக மாறியது.
கவுண்டரைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டுவிட்டுப் போன பெரியவர், நான்கடி எடுத்துவைத்து போனதும் எதையோ தவறவிட்டுப் போனவர் போல் திரும்பி வந்து, ”இன்னொண்ண கூடவே கேக்கணும்னு நெனச்சன்… மறந்துட்டன் கவுண்ர’’ என்று சொல்லிவிட்டு, தன் புகையிலை போட்டு கறைபடிந்திருந்த பற்கள் காட்டி சிரித்துவிட்டு, ”எம் பேத்திக்காரி, ரண்டுமூணு நாளா காயலாக்கெடந்து நேத்துதான் நல்லானா… காலில ஏன்ச்சி வந்து ‘தாத்தா தாத்தா, ஒடம்புலாம் ஒரே வலியா கீது தாத்தா… எதனா வைத்தியஞ் சொல்லு தாத்தா…?’ன்னு கேட்டா… என்ன சொல்லட்டும் கவுண்ர…?’’ என்று கேட்டார்.
கேட்டுவிட்டு கீழ் உதடு கடித்து லேசாக பல் தெரிய சிரித்த கவுண்டர், பெரியவரையும் அவர் பக்கத்தில் கருப்பு டவுசர் போட்டுக்கொண்டு தன் கருக்காப் பல் காட்டி சிரித்துக்கொண்டிருந்த அவர் பேரனையும் பார்த்துவிட்டு சொன்னார்.
”ஒண்ணும் பெருசா பண்ண வேணாம். போற வழில எங்கனா நீலகிரி மரம் இருந்துச்சினா… அதல நாலு கொத்து ஒடச்சினு போயி… நல்லா கொதிக்கிற சுடுதண்ணில தயய மட்டும் உருவிப் போட்டு கொதிக்கவுட்டு… புள்ள ஒடம்புல கதகதன்னு வெலாசி ஊத்திவுட சொல்லுங்க… சட்டுனு கேக்கும்.’’
கேட்டதும் பெரியவருக்கு அப்படியொரு சந்தோசம். சட்டென கவுண்டரைப் பார்த்து, ”ஒங்குளுக்கு புண்ணியமா போவும் கவுண்ர… நானு வர்றன்’’ என்று சொல்லிவிட்டு போனவரை மைல்கல் தாண்டியுள்ள வெப்பால மரத்தருகில் போகும் வரைக்கும் பார்த்துவிட்டு வந்து, மதகுமேல் அவிழ்த்து வைத்திருந்த தன் சோமத்தை எடுத்து கட்டிக்கொண்டு உள்ளே டவுசர் போட்டுக்கொண்டு இடுப்பில் கட்டியிருந்த ஈரத் துண்டை எடுத்துப்போய் படிக்கட்டில் இறங்கி நின்று நன்கு அலசிப் பிழிந்துகொண்டு வந்து கரையில் நின்றார்.
பின்னாலேயே கரையேறி வந்த செவடன்… சற்று தள்ளியிருந்த தித்திப்பு புளியமரத்தின் அடியில் வந்து நின்று, தெக்காலப் பக்கம் திரும்பி பார்த்துக்கொண்டு சோலைக்கண்ணன் சத்தமாக பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, கவுண்டரிடம் கூப்பிட்டுக் காட்டினான்.
”எம்மாம் நாளிக்கிதான்டா என் வாயில வவுத்துல அடிப்பீங்க…? இன்னும் எம்மாம்பேத்து வாயிலதான் பூல எடுத்து வப்பிங்களோ நானும் பாக்கறன்டா…’’
அவன் பேசுவதில் பாதிக்குமேல் கேட்கவில்லை. கேட்டதும் அறையும்குறையுமாகத்தான் கேட்டது.
”எந்த லவடிக்க பாலாருந்தாலும் வுடமாட்டன்… ஒரே ஈரு ஈத்துவச்சி, வெட்டி பொலிபோட்ட்டு போயினேருப்பன்…’’
என்ன நினைத்தாரோ கவுண்டர், சட்டென கால்வாய் பக்கம் திரும்பிக்கொண்டார்.
”கத்தாத காக்காவ பாத்து கான்னானாம்… கொலிக்காத நாயப் பாத்து லொல்ன்னானாம்’’ என்று சொல்லிவிட்டு திரும்பிய சோலைக்கண்ணன், ‘கத்தாத காக்காவ பாத்து கான்னானாம்… கொலிக்காத நாயப் பாத்து லொல்ன்னானாம்’ என தனக்குள் முணுமுணுப்பதுபோல் சொல்லிக்கொண்டு வேகமாக நடந்து வந்து மேடேறி, இடதுபக்கம் திரும்பி கவுண்டரையும் செவடனையும் பார்த்தும் பார்க்காமல் காவாங்கரையில் நடந்துபோனான்.
அவன் போகும்வரை அங்கேயே நின்றுவிட்டு மெல்ல திரும்பி நடந்த கவுண்டர், எதுவும் பேசாமல் அவன் நின்றிருந்த புளிய மரத்தருகில் வந்து நின்று செவடனின் முகத்தை பார்த்து, ”பொண்ணுக்கு எப்டியெப்டிலாம் தெரட்டி சுத்தலான்னு நெனச்சிருந்தன் செவடா… கடசில ஒண்ணும் பண்ண முடியாமப் போச்சு பாரு’’ என்று நா தழுதழுக்கச் சொல்லிவிட்டு, பக்கத்திலிருந்த மல்லாட்டக் கொல்லியைப் பார்த்துவிட்டு, ”நாம ஒரு கணக்குப் போட்டா… அந்த ஆண்டவன் ஒரு கணக்கு போடறான்ல…’’ என்று சொன்னார்.
பதிலுக்கு எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றான் செவடன்.
”எங்க வகறாவுலயே நாலு தலமொறக்கி அப்பறம் பொறந்த பொண்ணு செல்வி… அதுக்கு போயி ஒரு நல்லது கெட்டது பண்ண முடியாமப் போச்சிபாரு’’
வானம் சுருங்கியதுபோல் இருந்தது கவுண்டருக்கு. வருத்தத்தோடு சொல்லிவிட்டு கோனாமூட்டு தென்னந்தோப்புக்குள் நடந்தார்.
”முந்தாநேத்து காலில முருகன கூட்டுனு போயி… ஊரு மாரியாத்தா கோயில்ல அடுப்பு மூட்டி பொங்குலு வச்சினிருந்தன். எங்கருந்துதான் வந்துச்சினே தெர்ல, அம்மாசி கெழ்வி. வந்து பின்னால நின்னுனு… ‘ஏன்டா முத்துசாமி… இது ஒனுக்கே அடுக்குமாடா…? இப்டி ஒத்த பொட்டப்புள்ளய பெத்துட்டு, அவுளுக்கு ஒரு நல்லது கெட்டது பண்ணாம கீறியே… இதலாம் நாயமா சொல்லு…? யாரு எவுருனு தெரியாத வூரானுக்குலாம் தூக்கி இந்தான்னு கொல்லிய தந்துட்டு வந்தியே… நீ பெத்த புள்ளிக்கி ஒரு தெரட்டி சுத்தனுன்னு தோனல பாத்தியா ஒனுக்கு…? அதுவும் சொம்மா வூத்தனுமேன்னு கடனுக்கு தண்ணிவூத்தி வூட்டுவுள்ளார ஒக்காரவச்சிகீற பாரு… ஊரு ஒலகத்துல எந்த சம்சேரியாது இப்பிடிலாம் பண்ணுவானா…? ஒன் புள்ள நீ என்ன வேணாலும் பண்ணுவன்னு… இந்த சுதிமதி கெட்ட ஊரானுங்க வேணா வந்து எதுவுங் கேக்காம வாயயும் சூத்தயும் மூடினிருக்கலாம்… ஆனா, நானு வுடமாட்டன்டா ஒன்ன… நல்லா நாக்கப் புடிங்கிக்கிற மாரி நாலு கேக்காம போவமாட்டன்டா ஒன்ன’னு வாயில வந்தமாரிலாம் ஓத்தாமுட்டு வுட்டுட்டு திரும்பிப் பாக்காம போய்டுச்சு செவடா…’’
கவுண்டர் சொல்லிவிட்டு, வளைந்த தென்னை மரம் ஒன்றின் பக்கத்தில் வந்து நின்று திரும்பி செவடனின் முகத்தை பார்த்து, ”செரி, ஏம்மேல கீற கோவத்துல சொல்லிச்சினே வச்சிக்கினாலும்… அத சின்னப்புள்ள முன்னால வந்து சொல்லிட்டு போனததான் என்னால தாங்கிக்க முடிலடா செவடா… பாவம் புள்ள, அவன் மனுசு என்னா பாடுபட்டுச்சோ தெர்ல…’’ என்று சொல்லிவிட்டு கண்கலங்கியபடி நடந்தார்.
அதைப் பார்த்த செவடனுக்கு, தன்னையறியாமல் இரு கண்களும் ஒருசேர கலங்க ஆரம்பித்துவிட்டது. மெல்ல தன் இடது கையால் துடைத்துக்கொண்டு, கவுண்டரின் பின்னாலேயே நடந்துபோனான்.
‘நாம எம்மாங் கஷ்டத்துல கீறம்னாலும்… பொட்டப்புள்ளிக்கி கடனவொடன வாங்கியாது ஒரு தெரட்டி சுத்திரனும்’ என்பார்கள் ஊரில். கவுண்டரிடம் கேட்டாலும் இதைத்தான் சொல்லியிருப்பார். என்றபோதும், ‘புள்ள செத்த வாசங்கூட இன்னும் போவல… அதுக்குள்ள ஊரக்கூப்புட்டு எப்டி பொண்ணுக்கு தெரட்டி சுத்தரான் பாரு இந்த கவுண்டன்னு, ஊருல நாலுபேரு நாலுமாறி பேசுவாங்க’ என்று பூரணியம்மா சொன்னதைக் கேட்டுவிட்டுதான் ராமு கவுண்டரும் அவர் மனைவி இசைவள்ளியும் எவ்வளவு சொல்லியும் முடியவே முடியாது என மறுத்துவிட்டார் கவுண்டர்.
மெல்ல நடந்து பொர்ச மர வழியாக மேடேறி ராமு கவுண்டர் வீட்டை தாண்டி வந்த கவுண்டர், நேராக கட்டுத்தெரு பின்னால் போய் அடுக்கிவைத்திருந்த விறகுக் கட்டுமேல் ஈரத்துண்டை உதறி காயப் போட்டுவிட்டு சற்று தள்ளியிருந்த பூவரச மரத்தடியில் தென்னங்கீற்றில் உட்கார்ந்துகொண்டு பூவரசியுடன் மண்ணில் கோடு கிழித்து கல்லும் புளியங்கொட்டையும் வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த செல்வியின் பின்னால் போய் நின்றார்.
”ஏய் செல்வி, ஒங்க ஐய்யாடி.’’
கவுண்டரைப் பார்த்துவிட்டு பூவரசி சொன்னதும் விளையாடுவதை விட்டுவிட்டு வேகமாக எழுந்து அவர் பக்கத்தில் வந்த செல்வி, தன் தந்தையின் முகம் வாடியிருப்பதைப் பார்த்து, ”ஏன்ய்யா, ஒடம்புகிடம்பு எதனா சரில்லய்யா…? மொகம்லாம் ஒருமாரி கீது, ஒனுக்கு…?’’ என்று எட்டி நெற்றியையும் கழுத்தையும் தொட்டுப் பார்த்துவிட்டு கேட்டாள்.
‘இல்லை’ என தலையாட்டிவிட்டு மென்மையாக உதடசைத்து புன்னகைத்த கவுண்டர், ”அதல்லாம் ஒண்ணுல்ல தாயி… நானு நல்லாதான் கீறன், நீ போயி வெளாடு’’ என்று சொல்லிவிட்டு, திரும்பி செவடனைக் கூட்டிக்கொண்டு கட்டுத்தெருவுக்கு வந்து நெடுங்காலில் கட்டியிருந்த கருப்பு மாட்டிடம் போய் நின்று அதன் முகம், கழுத்து, தோள்பட்டை, வயிறு எங்கும் தடவிக் கொடுத்தார்.
பின்னால் விளையாடிக்கொண்டிருந்த பூவரசி செல்வியிடம், ”ஏன் செல்வி, உண்மயாலுமே ஒனுக்கு கல்பனாக்காக்கு சுத்தனமாரி மஞ்சாதண்ணி சுத்தாத்து கஷ்டமால்லய்யா…?’’ என்று கேட்டாள்.
உடனே செல்வி தன் கீச்சுக் குரலில், ”போடி இவள… எங்க ஐய்யாவும் அம்மாவும் கூட கீற வரிக்கும், எனுக்கு எதுமே கஷ்டமில்லடி’’ என்று சொல்லிவிட்டு எழுந்து, ”நானு வூட்டுக்குப் போறன், வாடி நாளிக்கி வந்து வெளாடலாம்’’ என்று சொல்லிக்கொண்டு வீட்டுக்குப் போனாள்.
செல்வி சொன்னது கேட்டு கவுண்டரின் கண்கள் கலங்குவதைப் பார்த்துவிட்டு, மெதுவாக நடந்து கட்டுத்தெரு வெளியில் வந்தான் செவடன்.
தேய்த்துவிடுவதை சட்டென நிறுத்திவிட்டு, தன் மகள் சொல்லிவிட்டுப் போனதை தனக்குள் நினைத்துக்கொண்டிருந்த கவுண்டரை… தலை திருப்பி மெல்லப் பார்த்துவிட்டு, அவர் கையில் தனது நாவால் நக்கிவிட்டது கருப்பு மாடு.
[இன்னும்]
*