முரம்பு – 7

விடிந்தால் மார்கழி முதல்நாள். முன்தினம் மாலையே ஊர் கவுண்டர் வீட்டிலிருந்து ரேடியோசெட்டு எடுத்து வந்து மாரியம்மன் கோயில் ஆலமரத்தின் உச்சிக்கிளையில் கட்டிவிட்டார்கள். இனி, காலை மாலை எப்போதும் இடைவிடாது பாடிக்கொண்டிருக்கும். பேருக்கு அரை மணி நேரம் பக்திப் பாடல் ஒலிக்கும், மற்ற நேரமெல்லாம் சினிமா பாடல்கள்தான். அதிலும் குறிப்பாக எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் ரசிகர் பட்டாளம் அதிகம் என்பதால் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சரி, பொங்கல் கழிந்து தைப்பூச தேர்த் திருவிழா முடியும் வரைக்கும் இருவர் பாடலைத்தான் கேட்டாக வேண்டும். அதுவும் போட்ட பாட்டையே தேயத்தேய, திரும்பத் திரும்பப் போட்டு படுத்தி எடுத்துவிடுவார்கள்.
அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்த முத்துசாமிக் கவுண்டர் எங்கேயோ சென்று இருட்டில் இரண்டு பூசணிப் பூ பறித்து வந்தார். அதற்குள் பூரணியம்மா, கட்டுத்தெருவுக்குப் போய் சாணி எடுத்துவந்து கரைத்து வாசல் தெளித்து கூட்டிப் பெருக்கியிருந்தார். முன் நாள் மதியமே வீடு மொழுகிவிட்டதால், குளிருக்கு இதமாக பிள்ளைகள் நடுவீட்டில் வரிசையாக இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தார்கள். செல்வி மட்டும் அம்மாவுக்கு ஒத்தாசையாக கூடவே எழுந்து அருகாலிலும் வாசப்படியிலும் சிறுசிறு கம்பிக் கோலமாகப் போட்டுவிட்டு, கடைசியாக வாசலில் பெரிய இருவது புள்ளிக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
பறித்து வந்த பூசணிப் பூவை திண்ணை மேல் வைத்த கவுண்டர், உள்ளே போய் மகன்கள் மூவரையும் எழுப்பிவிட்டு வந்து கீழே ஓரமாக வைத்திருந்த சாணத்தில் பிடி எடுத்து ஓர் உருண்டை பிடித்து கோலத்தின் மையத்தில் வைத்து, அதன்மேல் பூசணிப் பூவில் ஒன்றை காம்பை அடியோடு கிள்ளி அழுந்த வைத்துவிட்டு, அதன் நடுவில் உள்ள பொத்தலில் மற்றொரு பூவைச் செருகினார்.
பிறகு அதன் பக்கத்தில் சிறு பிள்ளையார் உருண்டை ஒன்றைப் பிடித்துவைத்து, மஞ்சளிட்டு, அதன்மேல் சிவப்பு வைத்து, அருகம்புல் செருகி, கெதம்பொடி தூவி, வெற்றிலை பாக்கு, காமாட்சியம்மன் விளக்கு எல்லாம் கொண்டுவந்து கற்பூரமும் வத்தியும் ஏற்றி, தேங்காய் உடைத்து, சரியாக சூரியன் உதிக்கும்போது சாமி கும்பிட்டார்கள்.
மார்கழி மாதம் முழுக்க வாசலில் கோலம் போட்டு பூசணிப் பூ வைப்பது வழக்கம் என்றாலும், முதல் நாள் சற்று கூடுதலாக, சிலர் வரிசையாக ஐந்து அல்லது மூன்று பூக்களும், சிலர் போடும் கோலத்திற்கேற்ப நடுநடுவில் வைத்தும் விமரிசையாகக் கொண்டாடுவதுண்டு. இதில் ஆச்சரியம் என்னவென்றால் எங்கிருந்துதான் மார்கழி மாதத்தில் மட்டும் இவ்வளவு பூசணிப்பூக்கள் பூக்குமோ தெரியாது. கிட்டத்தட்ட எல்லோருக்கும் கிடைத்துவிடும். அரிதாக கிடைக்காதவர்கள், பூசணிப் பூவுக்குப் பதிலாக பூவரசம் பூ பறித்து வைப்பதையும் பார்க்கலாம்.
மார்கழி பாதி கொண்டாட்டம் என்றால் தை முழுக் கொண்டாட்டம் எனலாம். தை மாதம் நெருங்க நெருங்க கொண்டாட்ட மனநிலை வயது வித்தியாசமின்றி இளசு முதல் பெருசு வரை எல்லோருக்கும் வந்துவிடும். குறிப்பாக, இளந் தமட்டைகள் ஜமா சேர்ந்துகொண்டு போய் சின்ன அன்னக்கூடையிலும் தட்டுக்கூடையிலும் புட்டுக்கூடையிலும் செம்மண் தோண்டி எடுத்துவந்து உடைந்த சுவர், திண்ணை, வாசல், அடுப்புத் திட்டு, மாடம் எங்கும் குழைத்துப் பூசி, கொய்யாங்கல் கொண்டு தேய்த்து வழவழப்பாக்குவதும், வீட்டையும் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களையும் சுத்தம் செய்து சுண்ணாம்பு அடிப்பதுமாகவும் இருக்க, இளம் பெண்கள் தங்கள் பங்குக்கு நான்கைந்து பேர்களாகக் கூடிக்கொண்டுபோய் மேடு பள்ளமான புஞ்சை நிலங்களில் ஆங்காங்கே கிடக்கும் கோலமாவு கற்களைப் பொறுக்கி சின்னச் சின்னதாக உடைத்து எடுத்துவந்து குத்துரலில் போட்டு கடப்பாரையால் இடித்துத் தூளாக்கி பானையில் நிறைத்து வைப்பதுமாகவும் இருக்க ஊரே களை கட்டிக்கொண்டிருந்தது.
முருகன் மட்டும் பொங்கல் வந்தும் உற்சாகமின்றி யாருடனும் பேசாமல் காலையிலிருந்து உம்மென இருப்பதைப் பார்த்த பூரணியம்மா, ”எப்பா சாமி, என்னாச்சுயா…?’’ என இரண்டு மூன்று தடவை கேட்டுப் பார்த்துவிட்டார். வாய் திறக்கவில்லை.
கவுண்டர் ஆற்றில் குளித்துவிட்டு கோயிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்ததும், முதல் வேலையாக செல்வி ஓடிப் போய் சொன்னாள் .
கேட்ட கவுண்டர், கொண்டு வந்த பொங்கல் சாமானை செல்வியிடம் தந்துவிட்டு, திண்ணையில் உட்கார்ந்து எதிர் வீட்டின் கட்டுத்தெருவோரம் இருந்த வாதநாராயண மரத்தில் இரு அணில்கள் ஏறி விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த முருகனிடம் போய், ”எய்யா முருகா… என்ன சாமி ஆச்சி…? அண்ணனுங்க யார்னா அடிச்சிட்டாங்களா…?’’ என்று கேட்டார்.
எந்தப் பதிலும் இல்லை.
”அம்மாக்காரி எதனா சொன்னாளா…?’’
அப்போதும் பதில் இல்லை.
உடனே கவுண்டர், ”எதனா வேணுமாய்யா…?’’ என்றார்.
தன் ஐயா எப்படியும் செத்தநேரத்தில் இக்கேள்வியைக் கேட்பார் என எதிர்பார்த்த முருகன் மெல்ல தலையாட்டி, ”ஆமா” என்றான்.
கேட்டுவிட்டு சிரித்த கவுண்டர், ”என்னய்யா வேணும்…?’’ என்று கேட்டார்.
திரும்பி உட்கார்ந்துகொண்டு கவுண்டரின் முகத்தைப் பார்த்து, ”எனுக்கு வர்ணக்கோலு வேணும். ஒண்ணு… ரண்டு… மூணு… மூணு வர்ணக்கோலு வேணும்’’ என்றான், விரல்விட்டு எண்ணிக் காட்டி.
முருகன் சொன்னதைக் கேட்டு இன்னும் சத்தமாகச் சிரித்த கவுண்டர், ”அட ராஸ்கோலு பையா… வர்ணக்கோலு கேட்டுதான் பெரும்பொங்கலும் அதுவுமா காலிலயே மோடி வச்சினு ஒக்காந்துனுகீறயா…? செரி, போயி குளிச்சிட்டு சாப்டு… பொறக்கிமேல கொல்லிக்கி போயி செஞ்சாரன்’’ என்றார்.
கேட்டு மறுபடியும் முகத்தை பழையபடி தூக்கி வைத்துக்கொண்டு திரும்பி உட்கார்ந்துகொண்டான்.
‘என்னடா இது…?’ என நினைத்த கவுண்டர் எட்டி தலை சாய்த்து அவன் முகத்தைப் பார்த்து, ”அதான் செஞ்சாந்து தரன்னு சொன்னனே… அப்றம் என்ன சாமி…?’’ என்று கேட்டார்.
திரும்பி கவுண்டரைப் பார்த்து, ”நானும் கூட வருவன்… என்னயும் கூட்டுனு போயி என் முன்னாலயே செய்யிணும்’’ என்றான்.
”செரி’’ என தலையாட்டிச் சொன்ன கவுண்டர், வீட்டுக்குள் போய் தனக்குப் பிடித்த கிண்ணியில் பூரணியம்மா பொங்கச்சோறு போட்டுத் தர, மல்லாட்டச் சட்னியுடன் கலந்து பிசைந்து சாப்பிட்டுவிட்டு, முருகனைக் கூட்டிக்கொண்டு மெதுவாக அவனோடு நடந்து கதைகள் பேசிக்கொண்டு முரம்புக் கொல்லிக்கு வந்தார்.
வர்ணக்கோல் இல்லாமல் பொங்கல் இல்லை என்னுமளவுக்கு ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் அதிலும் குறிப்பாக ஆடுமாடு வைத்திருப்போர் வீட்டில் ஆண்டுதோறும் பொங்களுக்கு முன்னான நாட்களில் தவறாமல் வர்ணக்கோல் செய்வது வழக்கம். அதுவும் நேரான துரிஞ்சி மர குச்சியாகப் பார்த்து வெட்டி, அதன் அடி முதல் நுனி வரைக்கும் சூழல் சூழலாகக் கொடுவாளால் ஓரங்குளத்திற்கு நேர்த்தியாகக் கீரி தோல் உரித்தெடுத்து, செத்த நேரம் ஒணரவிட்டு நெருப்பு கொளுத்தி உரித்த பகுதியை அதில் லேசாகக் காட்டி, வாட்டிக் கருமையாக்கி, பின் உரிக்காத தோல் பகுதியை உரித்தால் வெண்மையாக இருக்கும். பார்க்க அவ்வளவு அழகாகக் கருமையும் வெண்மையும் கலந்திருக்கும் வர்ணக்கோல் பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள்.
அதுவும் மாட்டுப் பொங்கலன்று கட்டுத்தெருவில் மாட்டின் முன்னால் வைத்து பொங்கலிட்டு வணங்கிவிட்டு, வீட்டிலோ கட்டுத்தெருவிலோ கொண்டுபோய் எறவானத்தில் செருகி வைத்தால் மிக நல்லது, அவ்வாண்டு முழுக்க மண்ணும் மக்களும் ஆடுமாடுகளும் நல்ல வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பது பெரியோர்கள் வாக்கு.
சிலரோ, வர்ணக்கோலை அழகுக்காகச் செய்து சாட்டிக்கோலாகவும், ஆடுமாடு மேய்க்க எடுத்துப்போகவும், சிறுவர்கள் கோட்டிப் புல் செய்து விளையாடவும், குச்சியாட்டம் ஆடவும், தூண்டில் கோலாகவும் பயன்படுத்துவதுண்டு.
முருகனுக்கு வர்ணக்கோல் எடுத்துப்போய் பக்கத்துவீட்டு குமாரிடம் காட்ட வேண்டும். அதுவும் அவன் தன் அப்பா செய்து தந்த வர்ணக்கோலை தொடக்கூட விடாமல் அவமதித்ததை மனத்தில் வைத்திருந்து, பதிலுக்குப் பதில் வங்கறுப்பு செய்ய வேண்டும். அதற்காகவே தன் தந்தையிடம் ஒன்றல்ல, இரண்டல்ல… மூன்று வர்ணக்கோல் செய்து தரும்படி கேட்டிருக்கிறான்.
நேராக கொட்டாவுக்குள் போய் சாக்குப் பையில் காசிரிக்கா நார் போட்டு கட்டி வைத்திருந்த மல்லாட்டப் புண்ணாக்கில் கை அள்ளி வந்து வீட்டிலிருந்து பெரிய அடுக்குச் சட்டியில் தூக்கி வந்த கஞ்சிச் தண்ணியில் போட்டு, குச்சியால் நன்கு கலக்கி எடுத்துப்போய் கட்டுத்தெருவில் கட்டியிருந்த கருப்பு மாட்டுக்கு வைத்தார் கவுண்டர்.
பெரும் தாகத்தில் இருந்திருக்கும் போல, மொடமொடவென வேகமாகக் குடித்தது. பக்கத்தில் போய் நின்று அதன் கழுத்து, தோள்பட்டை, வயிறு எங்கும் வருடிக்கொடுத்த கவுண்டர், சற்றுநேரம் கழித்து எறவானத்தில் செருகியிருந்த கொடுவாளை எடுத்துக்கொண்டு முருகனைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு தெற்கால துண்டு வேலியோரம் இருந்த துரிஞ்ச மரத்தில் வாகாக இருக்கும் மூன்று கோலாகப் பார்த்து வெட்டிக்கொண்டு, மேட்டுத் துண்டில் வேப்ப மரத்தடி நிழலில் போய் உட்கார்ந்து சுழல் சுழலாகத் தோலுரித்து, பின் பக்கத்திலிருந்த கல்லாக்குட்டையில் சுள்ளி விறகு பொறுக்கி வந்து நெருப்பு மூட்டி வாட்டியெடுத்து, மீதமிருக்கும் தோலினை உரித்து சுடச்சுட வர்ணக்கோல் செய்து முருகனிடம் ஒவ்வொன்றாகத் தந்தார்.
அவ்வளவு மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டு, ”ஐய்யா… ஜாலி ஜாலி, எனுக்கு மூணு வர்ணக்கோலு… ஜாலி ஜாலி’’ என்று சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான். திரும்பத் திரும்ப ‘ஒண்ணு… ரண்டு… மூணு…’ என எண்ணி மகிழ்ந்தான்.
சரியாக அந்நேரம் யாரோ வந்து கொட்டாயின் முன்னால் நின்று, ”ஐயா… ஐயா…’’ என்று கூப்பிடும் குரல் கேட்டது. எழுந்து பார்த்தார் கவுண்டர். புதுமுகம். அதுவும் இதற்குமுன் பார்க்காத வெளியூர் முகம்.
சேடை ஓட்டிவிட்டு அப்படியே வேகவேகமாக கை, கால், முகம் கழுவிக்கொண்டு நேராக பொடிநடையாக நடந்து வந்தவனாக இருக்க வேண்டும். சட்டை இல்லாமல் சேறு படிந்த பூ போட்ட லுங்கி கட்டிக்கொண்டு, தோளில் பச்சை நிற சிறு துண்டொன்று போட்டிருந்தான். கருத்த, கட்டுமஸ்தான உடம்பு. வயது இருபதுக்குள்தான் இருக்க வேண்டும்.
பக்கத்தில் போய் நின்று, ”யாருப்பா நீ…?’’ என்றார்.
கவுண்டரைப் பார்த்துவிட்டு ‘இவருதான் நாம தேடிவந்த முத்துசாமிக் கவுண்ரா…?’ எனும் சந்தேகத்தோடு, ”முத்துசாமி கவுண்ருதான…?’’ என்று கேட்டான்.
மெல்ல உதடசைத்து சிரித்த கவுண்டர், ‘ஆமாம்’ என தலையாட்டினார்.
உடனே, ”கும்பட்றன்யா… என்பேரு தொரசாமி… தெவுடியாக்குப்பத்துலர்ந்து வர்றன். மாரிமுத்து கவுண்ரோட பெரிய மவன்’’ என்றான்.
மாரிமுத்து கவுண்டரின் பெயரைக் கேட்டதும் கவுண்டருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. சட்டென அவர் முகம் மலர்ந்துவிட்டது.
தேவரடியார்குப்பம், மேற்கே ஏரி தாண்டியுள்ள நாப்பதம்பது வீடுகள் கொண்ட அண்டையூர். மக்கள் நாவில் தினந்தோறும் புழங்கி அடிபட்டுச் சிதைந்து மருவி தேவரடியார்குப்பம் தெவுடியாக்குப்பம் ஆகிவிட்டது. சாராயத்துக்கு பேர்போன ஊர். பனங் கள்ளுக்கும்தான்.
முத்துசாமிக் கவுண்டர் சிறுவயது முதல் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர் என்பதால் தன் தந்தைக்குப் பிறகு கோயில் பூசாரியாகப் பொறுப்பேற்று தைப்பூசத் தேர்த்திருவிழா, சித்திரா பெளர்ணமி மன்மதன் தகனம் போன்ற பெருவிழாக்கள் மட்டுமின்றி வாரந்தோறும் வெள்ளி செவ்வாய்களில் சாமியை குளிப்பாட்டி சோடித்து, பொங்கல் வைத்துப் பூசையிடுவதையும் வாடிக்கையாக வைத்திருப்பவர்.
அதேபோல் தேவரடியார்குப்பத்தில் மாரிமுத்து கவுண்டரைச் சொல்லலாம். இருவருக்கும் கிட்டத்தட்ட சம வயது. எட்டு வயதாக இருக்கும்போது மன்மதன் தகனத்தன்று இரவு, கணவன் மன்மதனை இழந்த ரதி தேவிக்கு தன் ஊரிலிருந்து கோடித்துணி எடுத்துவந்தபோது நண்பரானவர்கள்.
”ஓ, மாரிமுத்து மவனா… வா வா. ஒன் அப்பன்காரன் நல்லாகீறானா…?’’ என்றார் கவுண்டர்.
உடனே பதில் சொல்லாமல் சிலநொடி தயக்கத்துக்குப் பின், ”எதோ கீறாரு…” என இழுத்தவன், கடந்த இரண்டு மூன்று நாட்களாக வயிற்று வலி தாங்காமல் தன் தந்தை பெரிதும் அவதிப்படுவதாகவும், தங்களுக்குத் தெரிந்த எல்லாம் செய்து பார்த்தும் சரியாகவில்லை என்ன செய்வது எனத் தெரியாமல் தன் தந்தை சொல்லி வைத்தியம் கேட்டுப் போக தான் வந்ததாகவும் சொன்னான்.
கேட்ட கவுண்டர் மெல்ல தலையாட்டிவிட்டு, ‘மாரிமுத்துக்கு வவுத்துவலியா…?’ என தனக்குள் எதையோ யோசித்தபடி ஒரு தடவை சொல்லிக்கொண்டு, ”செரி வா… வந்து கட்டுல்ல ஒக்காந்துனிரு. தோ… வந்துட்றன்’’ என துரைசாமியை கூட்டிப் போய் கட்டுத்தெருவுக்குள் போட்டிருந்த கட்டிலில் உட்கார வைத்துவிட்டு, கொட்டாயின் பின்னால் போய் உரித்துப் போட்டிருந்த தேங்காய் மட்டையில் அதிக நாராக இருக்கும் நான்கைந்து மட்டையாகப் பார்த்து எடுத்து வந்து, நாரை உரித்து அதிலுள்ள தூளை நன்றாக உதிர்த்துக் கூட்டி நெருப்பிட்டு எரிக்காமல் பொசுக்கிக் கரியாக்கி, அதில் பிடி அள்ளி உள்ளங்கையில் வைத்துக் காட்டி அவனிடம் விவரமாகச் சொன்னார்.
”தோ பாருய்யா… இதுமாரி தேங்கா நார நல்லா உரிச்சி தூள மட்டும் தனியா எடுத்து பொசுக்கி கரியாக்கி… அதுகூட ரவ தேன வுட்டு கொழப்பி ரண்டு நாளிக்கி கால மால வெறும் வவுத்துல உள்ளுக்குத் தந்தம்னா போரும்… பட்டுனு சரியாப்புடும்.’’
கவுண்டர் சொன்னதை கவனமாகக் கேட்டு, ‘நன்றி’ சொல்வதுபோல் எழுந்து கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு புறப்பட்டு கொட்டா தாண்டிப் போன துரைசாமியை எதையோ நினைத்துக் கூப்பிட்டு நிற்கச் சொன்ன கவுண்டர், ஓடி கொட்டாய்க்குள் எறவானத்தில் மாட்டிவைத்திருந்த பொனக்கட்டையை எடுத்து அதனுள் பெரிய கண்ணாடி பாட்டிலில் மூடி வைத்திருந்த தேனிலிருந்து பேர்பாதியை காலியான இன்னொரு பாட்டிலில் ஊற்றி வந்து, ”இந்தாய்யா, இத எடுத்துனு போ… நானு பாட்டுனு எதோ நாவகத்துல தேனு கீதா இல்லியான்னுகூட கேக்காம வைத்தியம் சொல்லிவுட்டன்’’ என தந்தனுப்பினார்.
சற்று தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்த முருகன் மெல்ல பக்கத்தில் வந்து, ”தேங்கா மட்ட பெரிய மருந்தாய்யா…?’’ என்று கேட்டான்.
அவனது கேள்வியையும் கேட்ட விதத்தையும் பார்த்து சத்தமின்றி சிரித்த கவுண்டர், ”தேங்கா மட்ட மட்டுல்ல… நம்மள சுத்தி கீற மரஞ்செடிகொடி எல்லாமே மருந்துதான். சிலத தெரிஞ்சி வச்சிகீறோம்… பலத தெரியாம கீறோம்… அவ்ளோதான்’’ என்றார்.
எதையோ யோசித்த முருகன் ஏதோ செய்யக்கூடாத தவற்றைச் செய்துவிட்டதுபோல் முகத்தை சோகமாக மாற்றிக்கொண்டு, ”மருந்துன்னு தெரியாம… நேத்து காலில நானும் சின்ன அண்ணனும் வூட்டுக்குப் பின்னால போட்டுகீற தேங்கா மட்டய நெருப்புல போட்டு குளுரு காஞ்சிட்டம்… அது தப்பாய்யா…?’’ என்று கேட்டான்.
கேட்டுவிட்டு கவுண்டர் சத்தமாகச் சிரிக்கவும், அடுக்குச் சட்டியில் வைத்துவிட்டு வந்த கஞ்சித்தண்ணியை பொட்டு வைக்காமல் முழுதாகக் குடித்துவிட்டு கருப்பு மாடு கத்தவும் சரியாக இருந்தது.
”அட மடயா… அப்டி பாத்தம்னா நாம ஒண்ணுமே இந்த பூமில பண்ண முடியாது, பாத்துக்க’’ என்றுவிட்டு, மெல்ல முருகனின் முன்னால் கீழே குனிந்து கால்களை மடித்து உட்கார்ந்தார் கவுண்டர்.
”மண்ணக் கீறி ஏரு ஓட்டனா பூமிக்கு வலிக்குமேன்னு பாத்தா… ஏரும் ஓட்ட முடியாது, எந்தப் பயிரும் வக்க முடியாது. அதேமாரி நெல்ல வெயிச்சி காயவச்சி எடுத்துனு போயி குத்தினு வந்தா பயிருலாம் மொளக்காமப் போவுமேன்னு நெனச்சா… நாம எதுவும் தின்னவும் முடியாது, வாழவும் முடியாது. அதது அப்பப்ப தேவக்கி ஏத்தமாரி அளவா நாயமா இருக்கணும், அதான் செரி.’’
மனத்தில் இருந்ததை அப்படியே வார்த்தையாகச் சொல்லிவிட்டு எழுந்த கவுண்டர், முருகனை அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு கட்டுத்தெருவுக்குப் போய் ஓரமாக தார்ப்பாய் போட்டு மூடி வைத்திருந்த மல்லாட்டக் கொடியில் செத்த அள்ளி மாட்டிடம் போட்டுவிட்டு அடுக்குச் சட்டியை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு வந்து அவனைக் கூட்டிக்கொண்டு தெற்காலப் பக்கம் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.
நேராக குட்டைக்கிணறு தாண்டி சித்தோடை இறங்கி ஏறி, வேடியப்பன் கோயில் கடந்து ஓடைக்கரையில் பேத்திமரத்தின் மேல் படர்ந்திருக்கும் ஓணாங்கொடியைப் பறித்துக்கொண்டு, சோமாசம் பாறையில் ஏறிப்போய் கள்ளி மீது படர்ந்து தொங்கிக்கொண்டிருக்கும் பிரண்டைக் கொடியும், சற்று தள்ளியுள்ள பள்ளத்தில் பூத்துக் குலுங்கும் ஆவாரம் பூக்களையும் எடுத்துக்கொண்டு, மறுபக்கமாக இறங்கி கிரீன் குட்டைக்கு முன்னாலுள்ள கந்தக்கோனார் கரம்பில் கிளைக் கால்வாயை ஒட்டி ஆங்காங்கே வெண்ணிறத்தில் பொரி போன்று வரிசையாய் பூத்திருக்கும் பூளா பூக்களையும் பறித்துக்கொண்டு, திரும்பி பாலு செட்டியார் கொல்லி வழியாக எலந்த மர ஓடையைக் கடந்து அருணாச்சலம் செட்டியார் கிணத்தருகே வந்து அங்குள்ள மாமரத்தில் ஐந்தாறு கொத்துகளையும் சற்று தள்ளியுள்ள வேப்ப மரத்தில் ஏழெட்டு கொத்துகளையும் உடைத்துக்கொண்டு, வரும் வழியில் மரிசியில் பிடியளவு அறுகம்புல்லும் பிடுங்கிக்கொண்டு, சின்னக்கோனார் கொல்லி புளியமர வழியாக நடந்து மேடேறி முரம்புக் கொல்லிக்கு வந்தார் கவுண்டர்.
வந்த கையோடு எடுத்து வந்ததை நான்காகப் பிரித்து, ஒன்றை கொட்டாயின் கூரையிலும் இன்னொன்றை கட்டுத்தெருவின் கூரையிலும் செருகிவிட்டு, மீதமுள்ள இரண்டில் ஒன்றை அட்டணையில் சில்லாக்கோலுக்குப் பக்கத்தில்… நாளை சாயங்காலம் வந்து மாட்டுக்குப் பொங்கலிட்டு படைக்கும்போது வைக்க வைத்துவிட்டு, ஒரு பங்கை மட்டும் ஊரிலுள்ள வீட்டின் கூரையில் செருக கையில் எடுத்துக்கொண்டு ஊர்நோக்கி நடந்தார்.
அல்லாகோயிலில் மதியம் ஒரு மணிக்கு அஜ்ஜான் கூவும் சத்தம் கேட்டது. யாரோ பாய்மார்கள் இரண்டு பேர் தவுலத்கான் சாயுபு கொட்டாய் முன்னால் நின்று, மேட்டுக் கொல்லியில் ஊரார் புதிதாக வீடுகட்டி குடியேறியிருப்பது பற்றி உருதுவில் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். தெற்கே ஆசா பாய் கிணற்றில் ஏழெட்டுப் பருவாரம் இடுப்பில் கோவணம் கட்டிக்கொண்டு செட்டு மேலிருந்து ‘ஓ’வென கத்தியபடி குதிப்பது தெரிந்தது.
இவ்வளவு நேரம் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த முருகன் ஏதோ கேட்க நினைத்து, ”ஐயா’’ என்றான்.
மெல்ல குரல் கேட்டு நின்ற கவுண்டர், பக்கத்தில் தன்னோடு மூன்று வர்ணக்கோலை ஒருசேர தோள்மேல் வைத்து எடுத்துக்கொண்டு வந்த முருகனைப் பார்த்து மென்மையாகச் சிரித்து, ”என்ன சாமி…?’’ என்று கேட்டார்.
”எதுக்குயா இந்த தழ, பூவலாம் பறிச்சினு போறம்…?’’
கவுண்டரின் கையில் இருந்த இலை, பூ, கொடிகளைக் காட்டி கேட்டான்.
மகனின் புத்திசாலித்தனமான கேள்வியைக் கேட்டு உள்ளுக்குள் மகிழ்ந்த கவுண்டர், ”இதெல்லாம் ஏன் பறிச்சினு போறம்னுதான கேக்கற…? இரு சொல்றன்’’ என்றுவிட்டு, குனிந்து கால்மடக்கி உட்கார்ந்து அவன் முகத்தைப் பார்த்து, ”ஏன் தெரிமா… இது எல்லாமே நம்மள சுத்தி கீற மரஞ்செடிகொடி, புல், பூண்டுங்களருந்து எடுத்தாந்தது. இது எல்லாத்துலயுமே ஒரு ஒரு கொணம் கீது. மாங்கா எலயும் வேப்பந் தழயும் இருந்தா… எந்த நோவுநொடியும் கிட்ட அண்டாதுனு சொல்வாங்க. பெரண்ட சூட்டத் தொறத்தி குளிச்சிய தரும். அறுவம்புல்லு கீல கீற பாதத்த குறிக்கர்து. ஓணாங்கொடி மேல கீற தலமயிர குறிக்கர்து. மஞ்சளா கீற ஆவாரம்பூவும், வெள்ளயா கீற பூளாப்பூவும், நடுவுல கீற ஒடலயும் நாம சாப்பட்ற சாப்பாட்டயும் கய்க்கிற வெளிக்கயும் சொல்லர்து. இப்டி எல்லாஞ் சேந்தத நாம பொங்கலன்னிக்கு கொண்டாந்து வூட்டுக் கூரயில சொருவி வச்சி கும்டம்னா… ஒட்டு மொத்த படைப்பயும் நாம கும்டம்னு ஆவும். அதுங்குளும் நாம கும்டத சந்தோசமா ஏத்துக்கினு, அந்த வருசம்லாம் நம்முளுக்கு தொணயா இருந்து எந்த நோவுநொடியும் இல்லாம காபுந்து பண்ணும். அதாலதான் காலகாலமா இதல்லாம் எடுத்துனு வந்து பொங்கலன்னிக்கி வூட்டுக் கூரையில சொருவுறோம்’’ என்றார்.
கேட்ட முருகனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பெரிதும் வியந்தான். அதோடு, அவனுக்கு புரிந்தது போலவும் இருந்தது. அதேசமயம் புரியாதது போலவும் இருந்தது. எதையோ நினைத்தவனாய் கவுண்டரின் கையிலிருந்த ஒவ்வொன்றையும் காட்டி, ”இது மாங்கா எல… இது வேப்பந் தழ… இது அறுவும்புல்லு… இதெல்லாம் என்னதுய்யா…?’’ என்று கேட்டான்.
மகிழ்ச்சியுடன் ஒவ்வொன்றின் பெயரையும் சொன்ன கவுண்டர், கடைசியாக ஒவ்வொன்றாகக் காட்டி அவற்றின் பெயர்களை சொல்லச் சொன்னார். பூளாப் பூ, பிரண்டைக் கொடி தவிர, மற்றவற்றின் பெயர்களைச் சரியாகச் சொல்லிவிட்டான். திரும்பவும் இன்னொரு தடவை வரிசையாக சொல்லித்தந்து கேட்க, இந்தத்தடவை தவறின்றி எல்லாவற்றின் பெயரையும் சொல்லிவிட்டான். உடனே கவுண்டர் அவன் தோளில் தட்டிக்கொடுக்க, ஏதோ பெரும் புதையல் இருக்கும் இடத்தின் ரகசியத்தை அறிந்துகொண்டவன் போல அவ்வளவு மகிழ்ந்தான்.
மெல்ல நடந்து ஊருக்குள் போனவர்கள், பள்ளிக்கூடம் தாண்டி ஆலமர மேடேறி அல்லாகோயில் இடதுபக்கம் திரும்பி வளைந்து தெருவுக்குள் நுழைந்ததும் தம் வீட்டு முன்னால் ஊரே கூடி நின்று ‘குய்யோ முறையோ’வென்று கத்திக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, என்னமோ ஏதோவெனப் பதறியடித்து கொண்டுவந்த வர்ணக்கோல், செடிகொடிபுல்பூண்டு எல்லாவற்றையும் போட்டுவிட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடினார்கள்.
[இன்னும்]
*