முரம்பு – 6

ஆற்று வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து இடுப்புமூட்டு தண்ணீர் போய்க்கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் ஊர் போடுமுட்டைகள் கும்பள் கும்பளாகக் கூடிக்கொண்டு ஆறே கதியென்று மீன் பிடித்து சுட்டுத் தின்று, குதித்து ஓரி விளையாடிக்கொண்டிருந்தார்கள். போட்டியாகப் பெருசுகளும் ஊத்தா, வெடி, தூண்டில், பறி, வலை, சில்லாக்கோல் சகிதமாக வலம் வந்துகொண்டிருந்தார்கள். அதிகமும் கெண்டை, கெளுத்தி, ஜிலேபி, குரவை, விரால், வித்தி, விலாங்கு, உளுவை, ஒரச மீன்கள்தான்.

”இந்த முத்துசாமிக் கவுண்ருக்கு கிறுக்கு கிறுக்கு எதனா புடிச்சிப் போச்சா என்ன…? நெலத்த தூக்கி ஊராருக்கு இந்தான்னு தந்துட்டு வந்துகீறாரு.’’

”இத்தன புள்ளகுட்டிங்க இருக்கேன்னு கொஞ்சங்கூட நெனக்காம… தானம் பண்ட்டு வந்திருக்கான் இந்த முத்துசாமி.’’

”ஊரு தலிவன்தான் ஏதோ சூச்சி பண்ணி ஏமாத்தி புடுங்கிட்டான்னு பேசிக்கிறாங்க… உண்ம என்னான்னு கவுண்ர கேட்டாதான் தெரியும்.’’

ஊரெங்கும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இதுதான் பேச்சாக இருந்தது. அதிலும் ஒருநாள், அம்மாசி பாட்டி வந்து கவுண்டர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, ”ஏய் முத்துசாமி… வூட்டவுட்டு வெளிய வாடா’’ என கூப்பிட்டு பக்கத்தில் உட்காரவைத்து, அக்கம் பக்கத்தில் இருப்போர்கள் கேட்கும்படி சத்தம்போட்டு,

”அவனுங்கதான் பொசகெட்டுப் போயி வந்து கேக்கறானுங்கனா ஒனக்கெங்கடா போச்சு புத்தி…? நீயும் சுதிமதி கெட்டுப் போயி தூக்கித் தந்துட்டு வந்துகீற… கொஞ்சங்கூட ஒன் பொண்டாட்டி புள்ளிங்களப் பத்தி நெனச்சிப் பாக்கலல்ல…?’’

”இப்டியொரு காரியம் பண்ட்டு வந்தூகீறியே… நாளிக்கி ஒன் புள்ளிங்க வளந்து ஆளாயி கேட்டா அவுங்குளுக்கு என்ன பதிலு சொல்வ…?’’

”யாரு என்ன சொன்னாலும் செரி… நீ செஞ்சது பெரிய தப்புன்னுதான் நானு சொல்வன்.’’

”இந்த ஊரு காரணுங்கதான் எது நடந்தாலும் வந்து என்ன ஏதுன்னு கேக்க மாட்டானுங்க… எனுக்கு தெரியாமப் போச்சு… இல்லனா தொடப்பக்கட்ட எடுத்தாந்து அந்த அதிகாரி நாய்ங்கள உண்டு இல்லன்னு பண்ணாம வுட்ருக்க மாட்டன்.’’

காலையில் சாப்பிட்டுவிட்டு வந்து மதிய சாப்பாட்டு நேரம் வரைக்கும் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லி திட்டிவிட்டு போனதை அவ்வளவு சீக்கிரத்தில் கவுண்டரால் மறக்க முடியாது.

அதேபோல் அன்று ஊர்த் தலைவரும் மனைகாரும் வந்து கையெழுத்து வாங்கிக்கொண்டு போன பின்னர், முருகன் கேட்ட கேள்விக்கு என்ன சொல்வதெனத் தெரியாமல் சட்டென மனத்தில் தோன்றிய ஒரு பதிலைச் சொல்லிவிட்டு போய் கட்டிலில் உட்கார்ந்து வெகுநேரம் கல்லில் தீட்டிய ஓவியம் போல் இருந்துவிட்டு, பட்டென நினைவு வந்தராய் எழுந்துபோய் தவுலக்கான் சாயுபு கொல்லியிலிருந்து ஓட்டை இல்லாத தேக்கு இலைகளாகப் பார்த்து பறித்துவந்து பூரணியம்மாவிடம் தந்து, ”ஆக்கன சோத்த எடுத்துனு போயி மோட்டுக் கொல்லில கீற செவடன்கிட்ட தந்து… எல்லாத்துக்கும் தர சொல்ட்டு… புள்ளிங்கள கூட்டுனு வூட்டுக்குப் போ… ராத்திரி இல்லனா காலில நானு வரன்’’ என்றதையும், அதைக் கேட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் பூரணியம்மா கொண்டுபோய் செவடனிடம் ஆக்கிய சோற்றையும் இலையையும் தந்துவிட்டு, மகள் செல்வியையும் மகன் முருகனையும் கூட்டிக்கொண்டு ஊர் நோக்கி நடந்துபோனதையும் கவுண்டரால் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது.

மெல்ல மேல் வானம் மப்பும் மந்தாரமுமாகி சூரியனை மறைத்துக் கொண்டிருக்க, பூரணியம்மா அன்னக்கூடையில் எடுத்துவந்து தந்துவிட்டுப் போன சோற்றை கண் கலங்கியபடி செவடனும் அவன் மனைவியும் வரிசையாக ஒவ்வொருவருக்கும் இலையில் வைத்துத் தர, பசியில் தவித்துக்கொண்டிருந்தவர்கள் நன்றியோடு வாங்கி சாப்பிட்டனர்.

பேராமுட்டா கிழவி மட்டும் எவ்வளவு சொல்லியும் வாங்காமல் அடம் பிடித்தவர், ஒரு கட்டத்தில் என்ன நினைத்தாரோ, அவராக எழுந்து வந்து வாங்கிக்கொண்டு அதை அப்படியே எடுத்துப் போய் துரிஞ்ச மரத்தடியில் உட்கார்ந்திருந்த தலைவரிடம் காட்டி, ”இப்ப ஒனுக்கு சந்தோசமா சாமி…? நீ நெனச்ச மாரியே கவுண்ரு கொல்லிய புடுங்க்கினு வுட்டல்ல…’’ என்றார்.

எதுவும் பேசாமல் மௌனமாக இருந்த தலைவரைப் பார்த்து, ”அந்த ஆளுக்கு நீ எம்மாம் பெரிய கெடுதலு பண்ணியும் ஒன்மேல பொட்டுக் கோவங்கூட படாம… ஒணுக்கும் சேத்து சோறாக்கித் தந்து கீறாரு. அவருதான்யா மனுசன்… அவருதான் கடவுளு’’ என்று சொல்லிவிட்டு இன்னும் பக்கத்தில் போய் குரலைத் தாழ்த்தி,

”இந்தக் கெழ்வி வயிரு எறிஞ்சி இந்த சோத்து மேல ஆணயா சொல்றன்… நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட. நானு கும்பட்ற ஆத்தா நீ செஞ்ச பாவத்துக்கு… ஒண்ண என்னிக்கும் சும்மா வுட மாட்டா, பாத்துக்க’’ என்று கோபமாகச் சொல்லி சாபம் விட்டுவிட்டு, கொண்டு போன சோற்றை தலைவரின் முன்னால் கீழே தரையில் வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் கிடுகிடுவென வந்துவிட்டார்.

அன்னக்கூடையில் இருந்த மொத்த சோற்றையும் அள்ளி மனைகார் உட்பட ஒருவர் விடாமல் தந்த செவடன், கடைசியாக வெறும் அன்னக்கூடையையும் அன்னக்குத்தியையும் எடுத்துக்கொண்டு முரம்புக் கொல்லி கொட்டாவுக்குப் போனான். கவுண்டர் அங்கே இல்லாததைப் பார்த்துவிட்டு, கட்டுத்தெருவுக்குப் போய் பார்த்தான். அங்கேயும் இல்லை.

வெளியில் வந்து நின்று சுற்றிலும் பார்த்தவன், கிழிந்த செந்நிற பனியனும் கட்டம்போட்ட லுங்கியும் அணிந்துகொண்டு, உடைந்து நூல் சுற்றிய புல்லாங்குழலைச் சிறு துணிக்கயிற்றில் கட்டி கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு, வலது கையில் முனைமடிந்த கொடுவாளையும் தலையில் வெறும் துரிஞ்ச விறகாகப் பார்த்து வெட்டி தோல் உரித்துக் கட்டிய விறகுக்கட்டும் தூக்கிக்கொண்டு தனியாக ஏதோ பேசிக்கொண்டு அவ்வழியாக வந்த சோலைக்கண்ணனிடம், ”முத்துசாமி கவுண்ர எங்கனா பாத்தியா…?’’ என்று கேட்டான்.

நின்று யோசிப்பது போல் தெக்காலப் பக்கம் திரும்பிப் பார்த்த சோலைக்கண்ணன், ”வேடிப்பன் கோயிலு தாண்டி…’’ என்று அரையும் குறையுமாகச் சொல்லிவிட்டு, நின்று கழித்த நேரத்தை சமன்செய்யப் போவதுபோல் வேகமாக நடந்து ஊர்நோக்கிப் போனான்.

கேட்டதும் சட்டென யூகித்தவனாய் செவடன், ‘இந்த நேரத்துல தெக்க போயிருக்காருன்னா… கண்டிப்பா சோமாசம் பாறைக்குதான் போயிருக்கணும்’ என உறுதியாக நினைத்துக்கொண்டு, தெக்காலப் பக்கம் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.

கவுண்டர் எப்போது அதிக சந்தோசமாக இருந்தாலும் சரி, கவலையாக இருந்தாலும் சரி, உடனே கிளம்பி சோமாசம் பாறைக்குப் போய்விடுவார். அதிலும் அங்குள்ள படிசுனை பக்கத்து பெரிய பாறை மேல் தனியாக உட்கார்ந்துகொண்டு மணிக்கணக்காக ஒரு வார்த்தைகூட பேசாமல் சுற்றிலும் உள்ள நூற்றுக்கணக்கான மரம் செடிகொடிகள், புல் பூண்டுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு, நடுநடுவில் கேட்கும் பறவைகளின் கீச்சொலிகளையும் காற்றின் மென்மொழியையும் கேட்டுக்கொண்டு இருந்துவிட்டு வருவது மிகப் பிடித்தமான ஒன்று என்பார்.

நிச்சயம் கவுண்டர் இப்போது அங்குதான் சென்றிருக்க வேண்டும் என நினைத்த செவடன், குட்டைக் கிணறு தாண்டி, சித்தோடை இறங்கி ஏறி, வயல்வெளி நடுவில் ஆங்காங்கே தண்ணீர் வழிந்தோடும் மரிசியிலிருந்து வழுக்கி கழனிக்குள் விழுந்துவிடாமல் பார்த்து மிக கவனமாக நடந்து, வேடியப்பன் கோயில் கடந்து போய், சோமாசம் பாறையின் அடிவாரத்தில் போகும் ஓடைக்கரையில் ஏறி நின்று பார்த்தான். படிசுனை அருகில் கவுண்டர் உட்கார்ந்திருப்பது இரு கள்ளி மரங்களுக்கு இடைப்பட்ட வெளியில் தெரிந்தது.

‘செரி, கவுண்ரு வர்ற வரிக்கும் இங்கயே ஒக்காந்துனுருப்போம்’ என அங்கேயே ஓடைக்கரையில் வழியோரமாக புல்மேல் இரு கால்களையும் ஓடும் நீருள் நீட்டி உட்கார்ந்துகொண்டு, இரண்டு வாரங்களுக்கு முன்னால் கவுண்டருடன் கிரின் குட்டைக்கு விறகு வெட்டப் போயிருந்தபோது, ஓடைக்கரை அத்தி மரத்தில் ஏறி பழம் பறித்து பக்கத்திலுள்ள சோமாசம் பாறையில் உட்கார்ந்து சாப்பிட்டதையும், கவுண்டர் குடும்பத்தோடு இரு மாதங்களுக்கு முன்பு வேடியப்பன் கோயிலுக்கு வந்து பொங்கவைத்து கோழிவெட்டி சாமி கும்பிட்டுவிட்டுப் போனதையும் மனத்துக்குள் அசைபோட்டுக்கொண்டிருந்தான்.

சரியாக ஒரு மணிநேரம் ஆகியிருக்கும். மெல்ல எழுந்து படிசுனை நீரில் முகம் கை கால் கழுவிக்கொண்டு தோளில் போட்டிருந்த துண்டால் முகத்தையும் கைகளையும் துடைத்த கவுண்டர், அருகிலிருந்த பள்ளத்தில் நேற்றிரவு கொட்டிய மழையில் வந்து கொல்லன் ஆட்டுக்கு பட்டை எடுத்துப்போன கலர்வீதி மரத்தையும், அதைச் சுற்றியுள்ள சிறுசிறு காரை, பூலா, சொத்துக்கெளா, ஞானா, எட்டி, துரிஞ்ச, கள்ளி, பொர்ச, எலந்த மரங்களையும்… அதன்மேல் படர்ந்திருக்கும் பிரண்டை, கட்டு, முஷ்ட, கோவ, சீந்தல் கொடிகளையும்… காட்டு மல்லி பூக்களையும், தள்ளியுள்ள கல்லாக்குட்டையில் இருக்கும் இரு பெரும் புளியமரத்தையும், அதன் பின்னால் ஓடையோரமிருக்கும் கொளஞ்சி, நாவல், கொடுக்காய்ப்புளி, பனை மரங்களையும் சற்றுநேரம் நின்று ஆசுவாசமாய் பார்த்துவிட்டு மெல்ல கள்ளிமர பொட வழியாக இறங்கி நடந்து கீழ் பாறைக்கு வரவும், சத்தம் கேட்டு செட்டியார் கொல்லியோர எட்டிமரத்தின் அடியிலிருந்த புதரிலிருந்து நான்கைந்து கவுதாரிகள் ஒருசேர பயந்து பறந்தோடவும் சரியாக இருந்தது.

நின்று அண்ணாந்து கல்லோடு ஒட்டிப் போட்டிருந்த மல்லாட்டக்கொடி போரோரம் இருந்த பெரிய கருங்காட்டுவா மரத்தின் மேல் கிளையில் மலைத்தேன் கூடு ஒன்று புதிதாகக் கட்டியிருப்பதை பார்த்த கவுண்டர், மெதுவாக இறங்கி ஓடைக்கு வந்து அங்கே மறுகரையில் உட்கார்ந்திருக்கும் செவடனை பார்த்துவிட்டு, ”என்னடா செவடா… இங்க வந்து ஒக்காந்துனு கீற…?’’ என்று கேட்டார்.

நீரை எதிர்த்து ஏறிக்கொண்டிருக்கும் சிறுசிறு கொரவ மீன்களைப் பார்த்துக் கொண்டிருந்த செவடன், கவுண்டரின் குரல் கேட்டு தலை நிமிர்த்திப் பார்த்துவிட்டு மெல்லப் புன்னகைத்து, ”ஒங்களத்தான் தேடி வந்தன், கவுண்ர’’ என்றான்.

”ஹாஹா… என்னத் தேடியா…? என்கிட்ட கொடுக்க இனிமேலு என்னடா கீது செவடா… என்னத் தேடி வந்துக்கீற…?’’

கவுண்டர் விளையாட்டாகச் சொன்னதைக் கேட்டு கல்லெறிபட்ட குட்டை போல் கலங்கிய செவடன், ”ஏன் கவுண்ர, இப்டிலாம் பேசற…? எதனா இருந்தாதான் வருவன்னு நெனச்சீட்டியா, என்ன…? எது இருந்தாலும் இல்லனாலும் செரி… இந்த செவடன் என்னிக்கும் ஒங்களத் தேடி வருவான், கவுண்ர’’ என்றான்.

கேட்டுப் புன்னகைத்த கவுண்டர் கனிவான குரலில், ”டேய் செவடா… சொம்மா வெளாட்டுக்கு சொன்னன்டா’’ என்றுவிட்டு, எதையோ நினைத்து ஞாபகம் வந்தவராய், ”செரி அதிருக்கட்டும்… பூரணி கொண்டாந்து தந்த சோறு எல்லாத்துக்கும் பத்திச்சா…?’’ என்று கேட்டுவிட்டு, கட்டியிருந்த சோமத்தை மடித்துக்கட்டி மேலே லேசாக தூக்கிக்கொண்டு தொடமூட்டு நீரோடும் ஓடையில் இறங்கி, மெல்ல ஒவ்வொரு அடியாகத் தரையில் தேய்த்தபடி மேல்நோக்கி நடப்பதுபோல் எடுத்துவைத்து மறுகரைக்கு வந்தார்.

”ம்’’ என தலையாட்டிய செவடன், அதிகாரிகள் மொத்த இடத்தையும் அவசர அவசரமாக அளந்து யார் யாருக்கு எந்தெந்த இடம் என ஒதுக்கித் தந்துவிட்டு ஆவணங்களில் கைநாட்டும் கையெழுத்தும் வாங்கியதையும், இரண்டு மாதத்திற்குள் கூடுமானவரை மேலிடத்தில் பேசி, முடிந்தால் முதல்வர் கருணாநிதியின் பார்வைக்கு எடுத்துப்போய் இலவச வீடுகள் கட்டித் தருவதாகவும், அதுவரை அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவரவர் வசதிக்கேற்ப குடிசைகள் போட்டுக்கொண்டு இருக்குமாறும், கூடிய விரைவில் அனைவருக்கும் பட்டா கிடைக்க வழிசெய்வதாகவும் சொல்லிவிட்டு போனதையும் சொன்னான்.

அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த கவுண்டர், ”செரி, அதுவரிக்கும் மோட்டுக் கொல்லி கொட்டாய்லயே இருந்துக்கங்க… எடம் பத்தலனா மொரம்புக் கொல்லி கொட்டாய்க்கு வந்துருங்க’’ என்றார்.

கேட்டுவிட்டு என்ன சொல்வதெனத் தெரியாமல் மெல்ல பக்கத்தில் வந்த செவடன், ”அதிகாரிங்கலாம் போனதும் ஊரு தலிவன் மட்டும் தனியா என்கிட்ட வந்தான் கவுண்ர. இந்த பெட்டா மவன் எதுக்குடா என்கிட்ட வந்தான்னு ஆத்தரமா வந்ச்சு… எதுவும் சொல்லாம கம்முனு நின்னன். செவடான்னு கூப்டான்… என்னான்னு தல நிமுந்து பாத்தன்… அவ்ளோதான். மெதுவா கிட்ட வந்து என் கைய புடிச்சிக்கினு, ‘எல்லாத்துக்கும் காரணம் நான் ஒருத்தன்தான் செவடா… நானு செஞ்சது பெரிய தப்புதான். இதுக்கு என்ன தண்டன தந்தாலும் பத்தாதுதான். கவுண்ரு முன்னால போயி நிக்கமுடியாம ஒன்கிட்ட வந்துகீறன்… என்ன எல்லாரும் மன்னிச்சிருங்க’ன்னு கண்ணெல்லாம் கலங்கிப்போய் சொன்னான் கவுண்ர. என்ன சொல்றதுன்னு தெரியாம அப்டியே நின்னுனுருந்தன். செத்த நேரம் பாத்தவன்… அவனாவே திரும்பிப் போய்ட்டான், கவுண்ர’’ என்றான்.

செவடன் சொன்னதைக் கேட்டு மெல்ல தன் தாடி மீசையை இடது கையால் வருடிவிட்ட கவுண்டர், ”மனுசங்க எல்லாருமே நல்லவங்கதான் செவடா. நேரங்காலந்தான் அவுங்கள கெட்டவங்களா மாத்திடுது. தோ பாரு… காலில அவன வெட்டி பொலிபோட்டாதான் ஆத்தரம் அடங்கும்னு துடிச்ச. இப்ப நீயே வந்து அவன் தப்ப ஒணந்து மன்னிப்பு கேட்டான், நல்லவன்னு சொல்ற. இம்மாந்தான் செவடா வாழ்க்க. இதல டப்பு டப்புனு ஆத்தர அவசரப்பட்டு என்னாவப் போது சொல்லு…?’’ என்று சொல்லிவிட்டு, ஓடிவரும் ஓடை நீரைப் பார்த்தார்.

மூன்று நெத்துத் தேங்காய்கள் அடித்து வந்தன. பார்த்த கவுண்டர், அருகில் இருந்த நீளமான காய்ந்த ஓணாங்குச்சியை எடுத்துக்கொண்டு, ஒரு காலை மட்டும் நீருக்குள் வைத்து இறங்கி தோதாக நின்றுகொண்டு, அடித்துவரும் காய்களை ஒவ்வொன்றாகத் தடுத்துத் தள்ளி கையால் எடுத்துக் கரையில் போட்டார். ஒன்று கோட்டானாகவும், இரண்டு நல்லதாகவும் இருந்தது. கோட்டானை ஓரமாகக் கரையில் போட்டுவிட்டு, நல்லது இரண்டையும் செவடனிடம் தந்துவிட்டு, மெல்ல ஏறி மரிசியில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

பின்னாலேயே நடந்துபோன செவடன், ”பேராமுட்டா கெழ்விதான் எல்லாரயும் வாய்ல வந்தமாரி ஓத்தாமுட்டு வுட்டு… நல்லா சபிச்சி வுட்ருச்சி, கவுண்ர’’ என்றான்.

கேட்டு வருத்தப்பட்ட கவுண்டர், வேடியப்பன் கோயில் அருகில் போனதும் நின்று, திரும்பிப் பின்னால் வந்த செவடனிடம், ”நீ இங்கயே இருடா செவடா, தோ வந்துட்றன்’’ என்று சொல்லிவிட்டு, கிழக்கால போகும் சின்ன மரிசியில் நடந்து வேடியப்பன் கோயிலுக்குப் போய், அங்குள்ள சீந்தல் கொடி படர்ந்து தொங்கிக்கொண்டிருக்கும் எட்டி மரத்தடியில் கண்கள் மூடி செத்தநேரம் நின்று சாமி கும்பிட்டுவிட்டு வந்தார்.

சரியாக அங்கிருந்து மேற்கால உள்ள கோடிக்கல் பக்கத்தில் முனியப்பன் கோயிலுக்குப் பின் பக்கமாக இருக்கும் ஏரியில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகப் பெய்த மழையில் நிரம்பி கோடிபோகும் நீர், கண்ணாறு வழியாகக் கால்வாயின் மறுபக்கம் வந்து சிறுசிறு ஓடைகளில் ஓடிவந்து, கிட்டத்தட்ட கண்ணெட்டும் தூரம் வரை உள்ள எல்லா கழனிகளையும் கிணறு குட்டைகளையும் நிறைத்திருந்தது.

வேடியப்பன் கோயிலின் வடக்காலப் பக்கமாக ஜம்பைகளுக்கு நடுவில் உள்ள உடைந்த குதிரை மேல் நான்கைந்து நாரைகள் ஒன்றாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு வந்து செவடனை முன்னால் நடக்கச் சொல்லி பின்னால் நடந்த கவுண்டர், குட்டைக்கிணறு தாண்டியதும் கேட்டார்.

”ஏன்டா செவடா… கொஞ்ச நேரத்துக்கு முன்னால என்னமோ பேராமுட்டா கெழ்வி பத்தி சொன்னியே… என்ன சொன்ன…?’’

‘எதுக்கு கவுண்ரு மறுபிடியும் கேக்றாரு’ என்ற யோசனையோடவே செவடன் சொன்னான்.

கேட்டுப் புன்னகைத்த கவுண்டர், ”பாவம் கெழ்வி, கோவத்துல எதனா சொல்லி சபிச்சிருக்கும். ஆனா செவடா…’’ என்று எதையோ சொல்லவந்து இழுத்தவர், செவடன் நின்று திரும்பி கவுண்டரைப் பார்த்ததும், ”நானு மனசார சந்தோசமா போயி வேடிப்பன் கிட்ட பெராத்தன பண்ட்டு வந்துகீறன். அவுங்க யாருக்கும் ஒண்ணும் ஆவாது… எல்லாரும் நல்லபடியா இருப்பாங்க’’ என்றார்.

சட்டெனக் கண்கலங்கிய செவடன் கவுண்டரின் முகத்தைப் பார்த்து, ”மனசார சொல்றன் கவுண்ர… இன்னவரிக்கும் நானு எதுக்கும் ஆசப்பட்டதில்ல. மொத தடவியா ஆசப்பட்டு சொல்றன்… அடுத்த ஜென்முன்னு ஒண்ணிருந்தா… ஒங்குளுக்கு புள்ளயா பொறக்கணும் கவுண்ர. இல்லனா ஒங்க வூட்டு மாடாவாது பொறக்கணும் கவுண்ர, அதான் என் ஆச’’ என்றான்.

எதுவும் சொல்லாமல் கேட்டுவிட்டு, இரு கண்களையும் நொடிநேரம் மூடி உதடசைத்து தனக்குள் சிரித்துக்கொண்டார் கவுண்டர்.

மெல்ல மேடேறி முரம்புக் கொல்லிக்கு வந்து கட்டுத்தெருவுக்குள் நுழைந்ததும் அங்கே கட்டிலில் நான்கு நாட்களுக்கு முன் செட்டியார் கொல்லியிலிருந்து எடுத்துவந்த தென்னம் மட்டையில் செய்துதந்த டிப்பிடிப்பி வைத்து கன்றுக்குட்டியிடம் ஏதோ பேசி விளையாடிக்கொண்டு முருகன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துப் பதறிப்போன கவுண்டர், வெளியில் காட்டிக்கொள்ளாமல் பக்கத்தில் போய் நின்று கேட்டார்.

”யார்ராது பெரிமனுசன் இங்க தனியா கன்னுக்குட்டிகூட ஒக்காந்து வெளாடினு கீறது…? ஓ, முருகன் சாமியா… அம்மாக்காரி கூட வூட்டுக்குப் போவாம இங்கென்ன சாமி பண்ற…?’’

எழுந்து தன் தந்தையைப் பார்த்துவிட்டு எதையோ நினைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தவன், பட்டென கவுண்டரைக் கட்டிக்கொண்டு சொன்னான். ”எனுக்கு ஒன் கூடயே இருக்கணும்னு ஆசயா இருந்ச்சுயா… அதான் அந்த மொடக்காண்ட போனதும் அம்மாகிட்ட சொல்ட்டு ஓடியாந்டன்.’’

”சேரி சேரி அய்வாத… ஐயா வந்துட்டன்ல, இனிமேலு அய்வக்கூடாது’’ என்று சொல்லிக்கொண்டு முருகனைத் தூக்கி கட்டிலில் உட்கார வைத்த கவுண்டர், ”கட்டுல்லயே ஒக்காந்துனுரு சாமி… நானு கன்னுக்குட்டிய அவுத்து வுட்டு பாலு கறந்துனு வர்றன்’’ எனச் சொல்லிவிட்டுப் போய், கன்றுக்குட்டியை அவிழ்த்து கருப்பு மாட்டிடம் விட்டார்.

கொஞ்ச நேரம் பால் குடிக்கவிட்டு பிடித்துக் கட்டிவிட்டு, விறகுமேல் கவிழ்த்து வைத்திருந்த அடுக்குச் சட்டியில் பால்கறந்து எடுத்துப்போய், கொட்டாயில் அடுப்பு பற்றவைத்துக் காய்ச்சி மொத்தத்தையும் செவடனிடம் தந்த கவுண்டர், ”இந்தாடா செவடா… இதக் கொண்டுனு போயி ஒன் பொண்டாட்டிக்காரி கிட்ட தந்து… சின்னப் புள்ளிங்குளுக்கு ஊத்திக் குடுக்கச் சொல்லு’’ என்றார்.

மகிழ்வோடு வாங்கிக்கொண்டு போய் மரத்தடியில் கூட்டத்தோடு உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருந்த தன் மனைவியிடம் தந்துவிட்டு, அங்கிருந்தவர்களிடம் செத்தநேரம் பேசிவிட்டு வந்த செவடன், கவுண்டர் தன் மகனைக் கூட்டிக்கொண்டு தன் மச்சான் கொட்டாய்க்கு மேட்டுக் கொல்லியில் இருப்பவர்களுக்கு இரவு உணவு பொங்க அரிசி வாங்கி வர கிளம்பியதைப் பார்த்துவிட்டு வேகமாக ஓடிவந்து கொட்டாயின் முன்னால் நின்று கத்தி, ”ஓ… கவுண்ர, செத்த நில்லுங்க’’ என்றான்.

நின்று திரும்பிப் பார்த்த கவுண்டரிடம் ஓடி வந்த செவடன் சொன்னான்.

”மக்கிங்க எல்லாரும் குடுச போட்டு சோத்துக்கு வழி பண்ணிக்கற வரக்கும்… ஊரு தலிவன் வேளா வேளக்கி தாஞ்செலவுல சோறு போடறன்னு சொல்ட்டு போயிகீறான், கவுண்ர. அதுமட்டுல்ல… இது அவன் இம்மாந்நாளா செஞ்ச பாவத்துக்குலாம் பரிகாரமா செய்யிறதா சொல்லி, ‘மறுக்காம எல்லாரும் ஏத்துக்குனும்’னு கும்டுட்டு போயிகீறான், கவுண்ர.’’

செவடன் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியில் கண்கலங்கி, கையில் வைத்திருந்த குண்டானைக் கீழே வைத்துவிட்டு, தெக்காலப் பக்கம் திரும்பி எட்டி மரத்தடியில் இருக்கும் வேடியப்பனை மனதார நினைத்து கையெடுத்துக் கும்பிட்டார் கவுண்டர்.

[இன்னும்]

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=