முரம்பு – 5

உச்சிவான் ஏறி பகலவன் தகிக்க ஆரம்பித்திருந்தான். ஈரப்பதம் குறைந்து காற்று வெப்பம் மிகுந்திருந்தது. மழையில் நனைந்து கும்மாளமிட்ட மரங்களும் செடிகொடிகளும் வெயிலின் உக்கிரம் தாளாமல் வாடி வதங்கிக்கொண்டிருந்தன. கரம்புக் காடுகளில் ஆங்காங்கே மேய்ந்து திரிந்த ஆடுகளும் மாடுகளும் மேய்வதை விட்டுவிட்டு நிழல் தேடி ஒதுங்கிக்கொண்டிருந்தன.
மனைவி பிள்ளைகளோடு வேகமாக வந்த முத்துசாமிக் கவுண்டர், முரம்புக் கொல்லி பாதையோரம் வந்ததும் நின்று, ”போயி கொட்டாய்ல இருங்க, வந்துட்றன்’’ என்று பூரணியம்மாவைப் பார்த்து சொல்லிவிட்டு, வெப்பால மர வழியாக கொல்லிக்குள் இறங்கி முட்டியளவு உயரத்திற்கு சாம விளைந்திருக்கும் மேற்குத் துண்டில் நடந்து போய், நடுத்துண்டின் மரிசி மேல் கட்டிய சோமத்தை கூட மடித்துக் கட்டாமல் அப்படியே தொபுக்கடீர் என்று உட்கார்ந்தார்.
பின்னாலேயே அழுதுகொண்டு வந்த செவடன், கவுண்டர் உடைந்துபோய் மரிசியில் தனியாக உட்காருவதைப் பார்த்துவிட்டு தொந்தரவு செய்யாமல், மேற்குத் துண்டின் வேலியோரமாக அவிஞ்ச மரமும் வேப்ப மரமும் ஒன்றோடொன்று பினைந்திருக்கும் நிழலில் ஓரமாகப் போட்டிருந்த பல்பங்கல்மீது உட்கார்ந்து, கவுண்டரையே பார்த்துக்கொண்டிருந்தான்.
ஊரிலுள்ள அல்லாகோயிலில் மதியம் ஒரு மணிக்கு கூவும் அஜ்ஜான் சத்தம் மெல்லியதாய்க் கேட்டது. கிழக்கே முடியனூரான் கொல்லி ஒட்டிய கிளைக் கால்வாய் கல்லாக்குட்டையில் சேவிக் கவுண்டரும், மாரி தாத்தாவும் ஆடு மேய்த்துக்கொண்டிந்தார்கள்.
கவுண்டர் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்பார், பிரச்சனை பெரிதாக வெடிக்கும் என எதிர்பார்த்த தலைவருக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. அதோடு, அவர் வானைப் பார்த்து கும்பிட்டுவிட்டு மண்ணில் விழுந்து வணங்கியதும், மனைவி மக்களை கூட்டிக்கொண்டு வந்து கலெக்டரைப் பார்த்து ‘வூடில்லாத எம்மக்கிங்குளுக்கு நல்லது செய்யணும்னு வந்துகீறிங்க… ஒங்க இஷ்டப்படியே செய்ங்க சாமி… எல்லாரும் நல்லாருப்பீங்க’ என்று சொல்லி கும்பிட்டுவிட்டு, தன்னை ஒரு புழுவைப் போன்று மதிக்காமல் போனதும் பெருந்தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்த்தியது.
கூடவே, தான் சிறுவனாக இருக்கும்போது ஆசை ஆசையாக வளர்த்த கறவல் மாடு புல், மல்லாட்டக்கொடி, புண்ணாக்கு எதுவும் தின்னாமல் தண்ணீர்கூட குடிக்காமல் இரண்டு நாட்களாக மந்தமாக ஏதோ நோய்வாய்ப் பட்டதுபோல் இருப்பதைப் பார்த்துவிட்டு துடித்துப் போய் அழுததும், அதைப் பார்த்த தன் தந்தை மாட்டை பிடித்துக்கொண்டு முரம்புக் கொல்லியில் ஏரோட்டிக்கொண்டிருந்த கவுண்டரிடம் வந்து காட்டியதும், அவர் அதைப் பார்த்துவிட்டு ஏர் ஓட்டுவதை அப்படியே நிறுத்திவிட்டு எங்கோ ஓடிப் போய் கருவேல மரத்தின் வேர் எடுத்துவந்து கஷாயமாக்கி, அத்துடன் கருவேலம் பூவையும் பிஞ்சையும் இடித்துப் போட்டு சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து மாட்டுக்குக் கொடுத்து சரியாக்கியதும், அதற்காகத் தன் தந்தை பாக்கெட்டிலிருந்து எடுத்துத் தந்த ஐந்து ரூபாய் நோட்டை வாங்காமல் சத்தமாக சிரித்துவிட்டு ‘ஆண்டவன் கொடுத்தத இந்த வாயில்லா ஜீவனுக்குக் கொடுக்கறன்… இதுக்கெதுக்கு காசு…?’ என்று சொல்லிவிட்டுப் போனதும் நினைவுக்கு வர, கண்கள் தானாகக் கலங்க ஆரம்பித்தது.
‘என்னதான் இருந்தாலும் அந்த மனுசனுக்கு நாம இப்டியொரு துரோகம் செஞ்சிருக்கக் கூடாது.’
‘வாப்பா இருந்திருந்தா நம்மள ஆயுலுக்கும் மன்னிச்சிருக்க மாட்டாரு.’
‘இதப் பாத்துனு கீற அல்லா… என்னிக்கில்ல என்னிக்கினாலும் நமக்கு தண்டன தராம வுடமாட்டாரு.’
தலைவர் தான் கவுண்டரின் மேல் கொண்ட பகை காரணமாக இழைத்த பெரும்தவறை உணர்ந்து, தனக்குள் இப்படி ஏதேதோ சொல்லி புலம்ப ஆரம்பித்தார்.
மேட்டுக் கொல்லி கொட்டாயின் பக்கத்தில் நின்று நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கருப்பு மாடு, அங்கிருந்தவர்களை கண்டு அஞ்சி மெல்ல ஒதுங்கி வந்த வழியே திரும்பி ஓடிவந்தது. சரியாக செவடன் உட்கார்ந்திருக்கும் வழியாக சாம கொல்லிக்குள் இறங்கி, கவுண்டரின் பின்னால் போய் நின்று அவரது வலப்புற பின்முதுகுத் தோள்பட்டையில் நாவால் நக்கியது.
இவ்வளவு நேரம் ஏதோ ஆழ்நினைவில் மூழ்கியிருந்த கவுண்டர், சட்டென நினைவு வந்தவராய் திரும்பி தன் மாட்டைப் பார்த்துவிட்டு, அதன் கன்னம் கழுத்து முகம் எங்கும் வராத புன்னகையை வரவழைத்துக் காட்டி வருடிக்கொடுத்தார்.
எழுந்து மெதுவாக பக்கத்தில் வந்த செவடன், ”ஏன் கவுண்ர, இப்டியொரு காரியத்த பண்ட்டு வந்த…?’’ என்று கேட்டான்.
எதுவும் பேசாமல் மாட்டுக்கு வருடிக்கொடுத்தார் கவுண்டர்.
”ஒங்ககிட்டதான் கேக்கறன்… ஏன் இப்டியொரு காரியத்த பண்ட்டு வந்த கவுண்ர…?’’
சற்றே குரலை உயர்த்தி திரும்பவும் கேட்டுவிட்டு, மரிசி தாண்டி கவுண்டரின் முன்பக்க துண்டுக்கு வந்தான் செவடன்.
”நீங்க மட்டும் என்ன தடுக்காம வுட்ருந்தா… அந்த பெட்டா மவன இன்னிக்கி பொலிபோடாம வுட்ருக்க மாட்டன்.’’
கேட்டும் கேட்காதது போல் தான் பாட்டுக்கு மாட்டின் காதிலிருந்த உணியைப் பிடுங்கி, கிழே கிடந்த சிறு கல்மீது வைத்து இன்னொரு கல்லால் நசுக்கினார்.
”அந்த தெவுடியா மவன சும்மா வுட்ருக்கக் கூடாது கவுண்ர… வெட்டி பொலி போட்ருந்தாதான் என் ஆத்தரம்லாம் அடங்கிருக்கும்.’’
செவடன் சொன்னதைக் கேட்டு மெல்ல தலை நிமிர்த்திப் பார்த்த கவுண்டர், ”எப்டி எப்டி… அவனக் கொன்னுப்போட்ட்டா எல்லாம் சரியாப்புடுமா…?’’ என்றார்.
”அதுக்காக அவன் பண்ற அக்கரமத்தலாம் பாத்துனு சும்மாருக்க சொல்றீயா கவுண்ர…?’’
”அவன் அக்கரமம் பண்றவனா இருந்தாலும்… இந்த வாட்டி வூருக்காகப் பண்ணிகீறான். அதும் வூட்ட வெள்ளத்துல வுட்டுட்டு நடுத்தெருவுல நிக்கிற நம்ம மக்கிங்களுக்காக…’’
தான் சொன்னதைக் கேட்டு மறுபேச்சு பேசாமல் அமைதியாக நின்ற செவடனைப் பார்த்து கவுண்டர் சொன்னார்.
”நாலு புள்ளிங்க எனுக்கு… பொறக்கப்போற புள்ளயோட சேத்தா அஞ்சி. அம்மாந் நெலத்த என் ஒருத்தனுக்காக வச்சிக்கிறதவுட… வூடில்லாத ஏழபாழங்க நாப்பதம்பது பேத்துக்கு கொடுத்தம்னா எம்மாந் சந்தோசப் படுவீங்க…? ஒங்க புள்ளகுட்டிங்க நாளிக்கி எம்மாந் தெம்பாருக்கும்…? அதான் ஒண்ணும் பேசாம எடுத்துக்குங்க சாமின்னு தந்துட்டு வந்டன்.’’
கண்கலங்க கவுண்டர் சொல்லிவிட்டு உதடசைத்து சிரிப்பதைப் பார்த்து சட்டென ஓடிவந்து கவுண்டரின் காலில் விழுந்த செவடன், ”ஐயா சாமி, நீங்க மனுசன்ல்லயா… கடவுளு. நான் கும்பட்ற ஒத்த கை முடியன்தான் நீங்க. இன்னிக்கில்ல… இன்னும் எத்தன தலமொற வந்தாலும் நீங்க செஞ்ச இந்த நல்லதுக்கு எல்லாரும் நல்லாருப்பாங்க. இத வயிறார சொல்றன் சாமி’’ கண் கலங்கி உணர்ச்சிப்பெருக்கில் சொன்னான்.
பிள்ளைகளைக் கொட்டாயில் விட்டுவிட்டு கவுண்டரைத் தேடி வந்த பூரணியம்மா, சற்று தள்ளி நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டுவிட்டு தானும் கண்கலங்கி அழுதுகொண்டு வந்தவழியே திரும்பி கொட்டாய்க்குப் போனார்.
மேட்டுக் கொல்லியில் நின்றிருந்த கலெக்டரும் தாசில்தாரும் தலைவரையும் மனைகாரையும் கூட்டிக்கொண்டு மரத்தடியில் உட்கார்ந்திருந்த கூட்டத்தினர் முன்னால் போய் நின்று, மனுவில் கையெழுத்து போட்டிருந்த குடும்பத் தலைவர்களின் பெயர்களைச் சொல்லி வரிசைப்படி உட்காரச் சொன்னார்கள். இன்னும் யார் யார் வீடெல்லாம் ஆற்று வெள்ளத்தில் அடித்துப்போனதோ அவர்களின் பெயர்களையும் கேட்டு பட்டியலில் சேர்த்துக்கொண்டு, மனைகாரிடம் சொல்லி மொத்த நிலத்தையும் கயிறு கொண்டு அளந்து, நடுவில் மூன்று தெருக்கள் விடச்சொல்லி, வரிசைக்கு பத்து வீடுகளாக அறுபது மனைகள் பிரித்து அடையாளத்துக்கு மொளக்குச்சி அடிக்கச் சொன்னார்.
தான் பிள்ளையார் சுழி போட்ட துரோகம் ஒன்று தன் கைமீறிப் போய்விட்டதை உணர்ந்த ஊர் தலைவர், செய்வது அறியாமல் தவித்துக்கொண்டு மெல்ல ஒதுங்கிப் போய் பக்கத்தில் இருந்த சிறு நுனா மரத்தின் நிழலில் போட்டிருந்த கல்மீது உட்கார்ந்தார்.
கொட்டாய்க்குள் இருந்த பேராமுட்டா கிழவி, கவுண்டர் வந்து தன் மனைவி மக்களை ‘பேசாம எங்கூட நடங்க’ என்று வேகமாக கூட்டிக்கொண்டு போவதைப் பார்த்து, ‘என்னாச்சோ ஏதாச்சோ’ என பதறிப்போய் சாப்பிட்ட கையைக் கூட கழுவாமல் எழுந்து வெளியில் ஓடிவந்து பார்த்துவிட்டு, நடப்பது எதுவும் புரியாமல் போய் மரத்தடியில் கூட்டத்தோடு உட்கார்ந்திருந்த தன் ஓரத்தியாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு உடைந்துபோனவர், ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்துபோய் கலெக்டர் முன்னால் நின்று கேட்டார்.
”ஏன் சாமி… பெரிய படிப்புலாம் படிச்சவருதான நீ…? இந்த அநியாயத்த செய்ய எப்டி சாமி ஒனுக்கு மனசு வந்ச்சு…?’’
”அந்தாளு கவுண்ரு, எங்குளுக்குலாம் கொலசாமி. அவருகிட்ட போயி இருந்த பூமியப் புடுங்க்கினு வுட்டீங்களே சாமி… நீங்கலாம் நல்லார்ப்பீங்களா…? ஒங்க புள்ள குட்டிங்கலாம் நல்லாருக்குமா…? இந்த சாபம் ஒங்க வகறாவ சும்மா வுடுமா சாமி…?’’
”வேணும்னு போயி கேட்டாலே இந்தான்னு சந்தோசமா தந்துட்டுப் போற சாமிக்கிட்ட போயி… இப்டி அநியாயம் பண்ணி புடிங்கினு வுட்டீங்களே சாமி… நீங்கலாம் நல்லாவே இருக்க மாட்டீங்க… நாசமாதான் போவீங்க. ஒங்குளுக்குலாம் நல்ல சாவே வராது.’’
அழுதுகொண்டு பேராமுட்டா கிழவி அதிகாரிகளையும், தலைவரையும் பார்த்து என்னென்னமோ சொல்லி தூற்றி மண்ணள்ளி வீசி சாபம் விடுவதைப் பார்த்துப் பதறிய மனைகார், கூட்டத்தில் இருந்த இரண்டு பேரைக் கூப்பிட்டு கிழவியின் வாயை மூடி இழுத்துப் போகச் சொன்னார்.
வந்தவர்கள் கிழவியை அடிக்காத குறைதான். வாயை மூடி தரதரவென இழுத்துப்போய் கூட்டத்தின் பின்னால் ஓரமாக உட்காரவைத்து, ”ஏய் கெழ்வி… இனி வாயே தொறக்கக்கூடாது. தொறந்தன்னா வையி… அடிச்சியே கொன்னுடுவன், பாத்துக்க” என்று மிரட்டிவிட்டுப் போனார்கள்.
மொத்த கூட்டத்தில் நான்கைந்து பேர் தவிர வேறு யாருக்கும் கவுண்டரின் நிலத்தைப் பிடுங்கி தங்களுக்குத் தருவதில் சுத்தமாக விருப்பமில்லை. கொட்டாயில் இருந்து பேராமுட்டா கிழவி வந்த கொஞ்ச நேரத்தில் பின்னாலேயே வந்து கூட்டத்தோடு சேர்ந்தவர்கள், இரவு தொடங்கி நடந்ததையெல்லாம் சொல்லக் கேட்டு நெகிழ்ந்துபோய் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
ஒருவாறு துணிவு கொண்ட ராமனும் முனியனும், தன்னோடு நால்வரை கூட்டிக்கொண்டு போய் கலெக்டரிடமும், தாசில்தாரிடமும் பேசினார்கள்.
”சாமி, எங்குளுக்கு இந்த எடமும் வேணாம்… நீங்க தரப்போற வூடும் வேணாம். நாங்க எங்கனா போயி… எப்டினா பொய்ச்சிக்கறம்.’’
”ஆமாஞ் சாமி… கவுண்ரு எம்மாம் பெரிய மனசுக்கார்ருன்னு கண்ணால பாத்தும் நீங்களாம் அவரு எடத்த புடுங்கித் தர்றதுல குறியா கீறிங்க… இந்த பாவம் எங்குளுக்கு வேணாஞ் சாமி.’’
”கவுண்ரோட அப்பா காலத்துலருந்து வச்சிக்கீற பூமி இது… இதப் போயி புடுங்கினு வுட நெனக்றதே பெரிய பாவம் சாமி.’’
இன்னும் ஏதேதோ சொன்னார்கள். கேட்ட கலெக்டரும் தாசில்தாரும் கோபம்கொண்டு, சற்று தள்ளி உட்கார்ந்திருக்கும் ஊர் தலைவரையும் மனைகாரையும் கூப்பிட்டார்கள்.
”என்னய்யா நடக்குது இங்க…? அவங்களா இந்த எடந்தான் வேணும்னு மனு கொடுத்தாங்க. நீங்களும் இதான் சரியா வரும்னு சொன்னீங்க. இப்ப என்னடான்னா ஆளாளுக்கு வந்து வேணாம்னு சொல்றாங்க. ஏதோ நாங்களா தேடிவந்து கவுண்ரோட வாய்லயும் வயித்துலயும் அடிச்சி நெலத்த புடுங்கிட்டு விட்டமாதிரி சாபம்லாம் வேற விட்றாங்க. எங்களப் பாத்தா உங்க எல்லாத்துக்கும் என்ன வேல வெட்டி இல்லாத முட்டாளுங்க மாதிரி தெரியுதா…?”
பெருங்கோபத்தோடு சொன்ன தாசில்தார், ”தோ பாருங்க… உங்க எல்லாருக்கும் இங்கதான் எடம் ஒதுக்கித் தருவோம். அது இதுன்னு சொல்லிட்டு வந்து வம்பு பண்ணாம ஒழுங்கு மரியாதையா வாங்கிட்டு போங்க. இல்லன்னா அவ்ளோதான் பாத்துக்கங்க’’ என்றார்.
தாசில்தார் சொன்னதைக் கேட்டு பயந்தவர்கள், என்ன செய்வதெனத் தெரியாமல் போய் கூட்டத்தோடு உட்கார்ந்துகொண்டார்கள். இருந்தும் மனம் கேட்காத முனியனும் ராமனும் கூட இருவரை கூட்டிக்கொண்டு முரம்பு கொல்லியில் இருக்கும் கவுண்டரிடம் கிளம்பினார்கள். அவர்கள் போவதைப் பார்த்த பேராமுட்டா கிழவி, தானும் எழுந்து பின்னாலேயே போனார்.
முடியனூரான் கொல்லியிலிருந்த ஆடுகளை மெல்ல ஓட்டிக்கொண்டு மாரி தாத்தா முன்னால் போக, சேவிக்கவுண்டர் பின்னால் வர, தவுலத்கான் சாயுபு கொல்லிக்குள் இறங்காமல் வேலியோரமாகச் சென்று தெற்கே கோனாமூட்டு கொல்லி தாண்டியுள்ள செம்பாயி கரம்புக்கு போவதைப் பார்த்தும் பார்க்காததுபோல் செவடனுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த கவுண்டரின் பின்னால் வந்து நின்றவர்கள், ‘எப்படிப் போய் கவுண்டர் முகத்தில் முழிப்பது… அவரிடம் என்ன பேசுவது…?’ எனத் தெரியாமல் தயங்கித் தயங்கி நிற்பதைப் பார்த்த பேராமுட்டா கிழவி, அவர்களைக் கடந்து முன்னால் வந்தார்.
”எய்யா சாமி, உண்ட வூட்டுக்கே ரண்டகம் பண்ணிட்டு நிக்கிற பாவிய்யா நாங்க… திக்கத்து நின்ன எங்குளுக்கு சாமி மாரி வந்து குந்த எடமும் தின்ன சோறும் போட்டவரு நீங்க… ஒங்க எடத்தயே புடுங்கி எங்குளுக்கு தந்தா எப்டி சாமி எங்களால அத வாங்க முடியும்…?’’
குரலுடைந்து போய் அழுதுகொண்டு வந்து தன் காலில் விழப்போன பேராமுட்டா கிழவியைத் தடுத்து நிறுத்திய கவுண்டர், ”இப்ப என்னாச்சினு இப்டி அய்வற…? எல்லாம் நல்லதுதான நடந்துகீது…?’’ என்றார்.
”எது சாமி நல்லது…? நீங்க காலகாலமா ஓட்டி பயிரு வச்ச பூமியப் புடுங்கி எங்குளுக்கு தர்றது நல்லதா…? பாவம் சாமி… இந்தப் பாவம் எங்கள இன்னும் எத்தன ஜென்மம் எடுத்தாலும் சும்மா வுடாது சாமி.’’
அதற்குள் வந்திருந்த நால்வரும் கவுண்டர் முன்னால் வந்து கையெடுத்துக் கும்பிட்டு, ”இதுக்கெல்லாம் அந்த ஊரு தலிவனும் மனேகாரனும்தான் காரணம்… எங்குளுக்கு ஒண்ணும் தெரியாது கவுண்ர’’ என்றனர்.
கேட்டுவிட்டு சிரித்த கவுண்டர், ”எல்லாம் எனுக்கு தெரியும்… போயி தர்ற எடத்த வாங்கினு… புள்ளகுட்டியோட சந்தோசமா இருங்க; போங்க’’ என்றார்.
”எப்டி சாமி, நாங்க புள்ளகுட்டியோட சந்தோசமா இருப்போம்…?’’
பேராமுட்டா கிழவி பெருங்குரலெடுத்து கத்தி அழுதார்.
எழுந்து பக்கத்தில் போன கவுண்டர், ”த பாரு… எதுக்கிப்ப அய்வற சொல்லு…? நான் சொன்னா அதக் கேப்பியா மாட்டியா…?’’ என்று கேட்டார்.
நொடி கூட தாமதிக்கவில்லை. ‘கேட்பேன்’ என தலையாட்டிய பேராமுட்டா கிழவியைப் பார்த்து, ”மொதல்ல அய்வாம கண்ணத் தொடி… செவடா ஒணுக்கும் சேத்துதான் சொல்றன், கேட்டுக்க. நானு மனசாரதான் ஒங்குளுக்கு என் கொல்லிய தந்துட்டு வந்தன். என் பேச்சுக்கு மதேரி தருவீங்கன்னா… இனி ஒருவாத்த பேசாம போயி, அவுங்க தர்ற எடத்த சந்தோசமா நானு தந்ததா நெனச்சி வாங்கிக்கங்க… அதான் நான் சொல்வன், போங்க…’’ என்று சொல்லிவிட்டுத் திரும்பி, அருகில் இருந்த மாட்டைப் பிடித்துக்கொண்டு கொட்டாய் நோக்கி வேகமாக நடந்தார்.
வேறு வழியின்றி வந்தவர்களும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டுத் திரும்பி மேட்டுக் கொல்லி நோக்கி நடந்து போனார்கள்.
வேகவேகமாக இடத்தை அளந்தார்கள். பொழுது சாய்வதற்குள் அளந்து பிரித்து ஒவ்வொருவருக்கும் ஒப்படைத்து விடவேண்டும் என கலெக்டரும் தாசில்தாரும் மனைகாரிடம் சொல்லிவிட்டார்கள். அதற்குமுன் மொத்த இடத்தையும் பெரிய தாளில் கட்டமாக வரைந்து சிறுசிறு கட்டங்களாகப் பிரித்து, அதில் வரிசையாக எண்களிட்டு, எந்தெந்த எண் யார் யாருக்கு என ஒதுக்கி, ஆவணங்களில் பெயரெழுதிக் குறிப்பிட்டு, கூப்பிட்டு கைநாட்டும் கையெழுத்தும் வாங்கினார்கள். பின், ஊர் தலைவரிடமும் மனைகாரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்டு, கடைசியாக கவுண்டரிடம் போய் ஓர் ஆவணத்தின் கீழே ஓரிடம் காட்டி, அங்கே கையெழுத்து வாங்கி வரச் சொல்கிறார்கள். தலைவரும் மனைகாரும் தயக்கத்தோடு வாங்கிக்கொண்டு மெல்ல முரம்புக் கொல்லி கொட்டா நோக்கி நடந்தார்கள்.
மாட்டைப் பிடித்து வந்து கட்டுத்தெருவில் கட்டிய கவுண்டர், அன்னக்கூடையில் வைத்திருந்த நீரை எடுத்து குடிக்க ஏதுவாக அதன் பக்கத்தில் வைத்துவிட்டு, கொட்டாயின் முன்னால் இருந்த பானை நீரில் போய் முகம் கை கால் கழுவிக்கொண்டு வந்து மாட்டருகில் போட்டிருந்த கட்டிலில் உட்கார்ந்து, தோளிலிருந்த துண்டை எடுத்து முகம் துடைத்துக்கொண்டிருந்தார்.
சரியாக அந்நேரம் அவரைத் தேடிக்கொண்டு தலைவரும் மனைகாரும் கட்டுத்தெரு வாசலில் வந்து நின்று, ”கவுண்ர’’ என்று குரல் கொடுக்க, மெல்ல எழுந்து வெளியில் வந்தார் கவுண்டர்.
தன் முகத்தைப் பார்க்க முடியாமல் தனக்குள் கூசிக்குறுகி நின்ற தலைவர், தலையைக் கீழே தொங்கப்போட்டிருப்பதை முதலில் பார்க்கிறார் கவுண்டர். பின்னர், பக்கத்தில் கையில் ஏதோ காகிதத்தோடு நின்றிருக்கும் மனைகாரைப் பார்த்துவிட்டு பக்கத்தில் போய், ”சொல்லுங்கய்யா’’ என்கிறார்.
சிலநொடிகள் எதுவும் சொல்லாமல் கவுண்டரைப் பார்த்த மனைகார், கையிலிருந்த ஆவணத்தைப் பதட்டத்தோடு பிரித்து கையெழுத்து போடவேண்டிய இடத்தைக் காட்டி, ”இங்க ஒரு கையெழ்த்து’’ என்று முடிக்கும் முன்னமே கை நீட்டி வாங்கிக்கொண்டு உள்ளே போன கவுண்டர், கட்டிலில் உட்கார்ந்து தன் தொடைமேல் வைத்து, ‘மு த் து சா மி’ என ஒவ்வொரு எழுத்தாகப் போட்டு எடுத்து வந்து தந்ததும் வாங்கிக்கொண்டு திரும்பி நடந்தார்.
பக்கத்தில் நின்றிருந்த தலைவர், கவுண்டரை பார்த்து நா தழுதழுக்க எதையோ சொல்ல வாயெடுத்து முடியாமல், கையெடுத்துக் கண் கலங்கியவாறு கும்பிட்டுவிட்டுப் போனார்.
இதையெல்லாம் சற்று தள்ளியிருந்த கொட்டாயின் முன்னால் உள்ள கோழிக்கூண்டின் மேல் கால்களைத் தொங்கப்போட்டு உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த முருகன், மெல்ல எழுந்து கவுண்டரிடம் வந்து அவர் கையைப் பிடித்துக்கொண்டு கேட்டான்.
”இனிமேலு மோட்டுக் கொல்லி நம்முளோட கொல்லி இல்லயாய்யா…?’’
கேட்டு லேசாகக் கண்கலங்கிய கவுண்டர் சட்டென உதடசைத்துப் புன்னகைத்து, ”நம்ம மக்கிங்களோட வூடு’’ என்று சொல்லிவிட்டு, வேகமாக கட்டுத்தெருவுக்குள் போய் கட்டிலில் உட்கார்ந்துகொண்டார்.
கொட்டா வாசல்படியருகில் அமர்ந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த பூரணியம்மா, மகிழ்ச்சியில் கண்கலங்கியபடி ஒவ்வொரு வெங்காயமாக எடுத்து அருவாமனையில் அரிய ஆரம்பித்தார். மேட்டுக் கொல்லியில் பசியோடு இருக்கும் ஊராருக்கும், அதிகாரிகளுக்கும் சேர்த்து மதிய உணவுக்கு ஒண்ணாவூத்தன சோறு பொங்க.
[இன்னும்]
*