முரம்பு – 4

மாசியின் பின்னால் இருந்துகொண்டு சூரியன் இருள் சிந்துவதுபோல் மோட்டார் சைக்கிளில் வந்த ஊர் தலைவரும் மனைகாரும் சற்று தள்ளியுள்ள புங்கை மரத்தின் பின்னால் நின்றுகொண்டு தம் விஷப்பார்வையை வீசிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் நிற்பதைக் கண்டும் காணாததுபோல் தன் சின்ன மகனுடன் நடந்து வந்த முத்துசாமிக் கவுண்டர், மெல்ல மேடேறி மேட்டுக் கொல்லி கொட்டாய் முன்னால் கையில் கொடுவாளுடன் நிற்கும் செவடனிடம் போய் நின்றார்.

ஊர் தலைவரும் மனைகாரும் வருவதைப் பார்த்துவிட்டுத்தான் செவடன் கொடுவாள் எடுத்துக்கொண்டு வந்து நின்றிருக்கிறான் என சொல்லாமலேயே தெரிந்துகொண்ட கவுண்டர், மெதுவாகப் பேச்சுக்கொடுத்து அவனிடமிருந்த கொடுவாளை தரச்சொல்லி வாங்கிக்கொண்டு கொட்டாய்க்குள் போனார்.

சம்மணமிட்டு இடதுகால் குத்தவைத்து உட்கார்ந்து வயிறு நிறைய சாப்பிட்டுக்கொண்டிருந்த பேராமுட்டா கிழவி கவுண்டரை பார்த்துவிட்டு, ”புள்ளக்குட்டியோட என்னிக்கும் எந்தக் கொறவும் இல்லாம நீங்க நால்லாருக்கணும் சாமி’’ என்றார், சாப்பிட்ட கையோடு கூப்பி.

கேட்டு உதடசைத்துப் புன்னகைத்த கவுண்டர், ”அதெல்லாம் இருக்கட்டும், மொதல்ல நல்லா சாப்டு’’ என்றுவிட்டு, கையில் வைத்திருந்த கொடுவாளை எறவானத்தில் செருகிவிட்டு, கொட்டாயின் தெக்காலப் பக்க ஓரமாகப் போட்டிருந்த எட்டிமர தீட்டுக்கட்டைக்குப் பக்கத்திலிருந்த கருங்கல்லின் மீது போய் உட்கார்ந்தார்.

”வூடு துணிமணியலாம் வெள்ளத்துல வுட்டுட்டு… உசுரக் கைல புடிச்சிக்கினு திக்கத்து ஓடியாந்த எங்குளுக்கு… ஒங்கள வுட்டா யாரு சாமி இப்டி குந்த எடமும் சோறும் தந்திருப்பாங்க…?’’

மறுபடியும் பேராமுட்டா கிழவி கவுண்டரைப் பார்த்து உணர்ச்சிப் பெருக்கில் சொல்லிவிட்டு, மூன்றாவது தடவையாக சோறு பரிமாற வந்த பூரணியம்மாவிடம், ”மனசத் தொட்டு சொல்றன் தாயி,  கவுண்ருக்கேத்த பொண்டாட்டிக்காரி தாயே நீ… ஒங்க ரண்டுபேத்தோட நல்ல மனசுக்கும் நானு கும்பட்ற முண்டக்கண்ணியாத்தா என்னிக்கும் தொணயிருந்து, ஒங்கள நோவுநொடி அண்டாமப் பாத்துப்பா தாயி.’’

எவ்வளவு சொல்லியும் கேட்காத கிழவி, தன் மனத்தில் பட்டதையெல்லாம் சோறு சாப்பிட்டுக்கொண்டே நடுநடுவில் சொல்லிக்கொண்டிருந்தது.

கொட்டாய்க்கு வெளியில் ஏதோ வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டு குடுகுடுவென ஓடிப்போன முருகன், கலெக்டர் வண்டியும் தாசில்தார் வண்டியும், கூடவே ஊர் தலைவரின் மோட்டார் சைக்கிளும், அவர்களுக்குப் பின்னாலேயே காலையில் வந்துபோன போலீஸ்காரர்கள் வண்டியும் வந்து நிற்பதைப் பார்த்துவிட்டு உள்ளே வந்தவன், ”ஐ, ஜாலி ஜாலி… நம்ம கொட்டாய்க்கு ஒண்ணு… ரண்டு… ரண்டு பெருசு வண்டி, அப்றம் ரண்டு சிறுசு வண்டி வந்துகீது’’ என்றான், விரல்விட்டு எண்ணிக் காட்டி மகிழ்ச்சி பொங்க.

வந்திருப்பவர்கள் யாராக இருக்கும் என கவுண்டருக்குப் புரிந்துவிட்டது. எப்படியும் கொஞ்ச நேரத்தில் தன்னைக் கூப்பிட்டு பேசுவார்கள் என நினைத்துக்கொண்டார். அதனால் தட்டில் தனக்கு போட்டுக்கொண்டு வந்த சாப்பாட்டை பூரணியம்மாவிடம் ”வேணா, அப்றமா சாப்பட்றன்’’ என்று சொல்லிவிட்டார்.

கலெக்டரும் தாசில்தாரும் வண்டியிலிருந்து இறங்கி ஊர் தலைவரிடமும் மனைகாரிடமும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த செவடன், கோபத்தின் முற்றுருவாய் மாறி நின்றிருந்தான். அதோடு, அவன் மொத்தப் பார்வையும் வஞ்ச நெஞ்சனான ஊர் தலைவர் மேலேயே குவிந்திருந்தது.

கலெக்டர் கேட்டார், ”ஏன் ஊரவிட்டு இவ்ளவு தொலைவுல இருக்க இந்த இடத்துல தரலாம்னு சொல்றீங்க…?’’

தலைவர் சொன்னார், ”சுத்துப்பட்டுலயே இந்த எடம்தான் சார் நல்லா மோட்டுல கீற எடம். அதோட, ஊருக்கு வர்ற வழியிலயும் கீது. காவாயும் பக்கத்துலதான் போவுது. கொஞ்சம் தாண்டிப் போனா ஏரி கூட இருக்குது. தண்ணிப் பஞ்சம் என்னிக்கும் வராது. அதான் சார்.’’

கேட்ட தாசில்தார், ”நீங்க சொல்றதுலாம் சரிதான்… இந்த நெலத்த யாரோ கவுண்டர் ஒருத்தரு பயிர் வக்கிறதா சொன்னீங்களே, அவர் இதுக்கு சம்மதிப்பாரா…?’’

எப்படியும் தாசில்தாரும் கலெக்டரும் இந்தக் கேள்வியை கேட்பார்கள், கேட்டால் என்ன பதில் சொல்ல வேண்டும் என முன்கூட்டியே தலைவரும் மனைகாரும் பேசிவைத்திருந்தார்கள். அதனால் தேர்வில் நன்கு விடைதெரிந்த கேள்வியைக் கண்ட மாணவர் போல் மகிழ்ச்சிகொண்டு பின்னாலிருக்கும் கவுண்டரின் கொட்டாவையும், அதன் முன்னால் நின்றிருக்கும் செவடனையும் பார்த்த மனைகார், ”சார், இந்த ஊருல கீற எண்பது சதமானம் நெலத்துக்கு பட்டாவே கெடயாது சார். ஊருக்குள்ள வீடுகட்டினு இருக்கவங்கள்ல பேர்பாதி பேத்துக்கு மேல பட்டா இல்ல. அதோட, இந்த எடத்துல பயிரு வக்கிற கவுண்ருக்கு இது மட்டுந்தான் நெலம் இல்ல. கீல அதோ அங்க தெரிது பாருங்க பள்ளம்… அங்கயும் நெலம் கீது. அதனால பட்டா இல்லாத இந்த எடத்த தாராளமா நாம ஒதுக்கி வீடு கட்டித்தரலாம்… ஒருத்தரும் கேக்கப்போறதில்ல’’ என்றார்.

கேட்டதும் கலெக்டர், ”பட்டா இல்லாதது சரி… அதுக்காக இத்தன வருஷமா விவசாயம் பார்த்துனு வர்ற ஒருத்தர்கிட்டயிருந்து நெலத்தப் பிடுங்கி… அதுல வீடு கட்டித் தர்றது எனக்கென்னமோ சரியாப் படல சார்’’ என்றார்.

தாசில்தாரைப் பார்த்து கலெக்டர் சொன்னதைக் கேட்டு முகம் அப்படியே மாறிப்போனது தலைவருக்கு. எங்கே இன்னும் செத்தநேரம் விட்டால் இவரே கவுண்டருக்காகப் பேசி வேறு இடம் பார்க்கலாம் என சொல்லிவிட்டு, கூடவே தாசில்தாரிடம் சிபாரிசு செய்து பட்டாவும் வாங்கித் தந்துவிடுவாரோ என பயந்த தலைவர் அதை தடுக்கும் நோக்கில், ”கவுண்டர் ஒண்ணும் பிரச்சன பண்ணக்கூடிய ஆளில்ல சார். நாமெல்லாம் சேந்து கொஞ்சம் எடுத்துச் சொன்னம்னா போரும்… புரிஞ்சுப்பாரு. அதோட, இந்த எடத்த அவரு விக்கப்போறதாவும் ஊர்ல நறய பேருகிட்ட சொல்லிக்கீறாரு. அதனாலதான் நானும் மனைகாரும் இந்த எடம் சரியா வரும்னு முடுவு பண்ணோம்’’ என்றவர், சற்று அருகில் போய் நின்று குரலைத் தாழ்த்திச் சொன்னார்.

”அதுமட்டுல்ல சார்… நாங்க இந்த எடம் சரியா இருக்கும்னு மட்டும்தான் நெனச்சம். ஆனா, வெள்ளத்துல வூட்டப் பறிகொடுத்துட்டு நடுத்தெருவுல நிக்கிற மக்கள்லாம்… இந்த எடந்தான் சரியா இருக்கும்னு முடுவே பண்ணி, அத ஒங்க ரண்டுபேத்துக்கும் மனுவாவே எழுதிட்டாங்க சார்.’’

ஊர் தலைவரையும் மனைகாரையும் அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு தனியாகப் போன கலெக்டரும் தாசில்தாரும், தங்களுக்கு மட்டும் கேட்கும் குரலில் வெகுநேரம் எதையோ மாறி மாறிப் பேசிக்கொண்டிருந்தார்கள். சரியாக அவர்கள் பேசி முடித்து வரும்நேரம், வரிசையாக மூன்று மாட்டு வண்டியிலும் அதன் முன்னாலும் பின்னாலும் நடந்தும் அறுவது எழுபது பேர் கூட்டமாக ஊரிலிருந்து பிள்ளை குட்டிகளோடும், மூட்டை முடிச்சுகளோடும் கவுண்டரின் மேட்டுக் கொல்லி கொட்டா நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

பக்கத்தில் வரும் வரைக்கும் எதுவும் பேசாமல் கவுண்டரின் கொட்டாவையும், அதைச் சுற்றியிருக்கும் நிலத்தையும், அருகில் போகும் மண் பாதையையும் தனக்குள் எதையோ யோசித்தபடி திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டிருந்த கலெக்டர், அவர்கள் வந்ததும் கேட்டார்.

”உங்க எல்லாருக்கும் இந்த மேடான எடத்துல வீடு கட்ட இடம் ஒதுக்கலாம்னு இருக்கோம். உங்களுக்கெல்லாம் சம்மதமா…?’’

கூட்டத்தில் முன்னாலிருந்த இருவரைப் பார்த்து தலைவர் கை காட்டிக் கூப்பிட, தாம் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்துவிட்டு ஓடி பக்கத்தில் வந்து குனிந்து கும்பிட்டு, ”நீங்க எது சொன்னாலும் எங்குளுக்கு சம்மதம்தான் சாமி’’ என்றார்கள்.

பின்னால் கூட்டத்தில் இருந்தவர்களில் ராமன், முனியன் உள்ளிட்ட ஐந்தாறு பேர், ”இது கவுண்ரு கொல்லியாச்சே… இங்க எதுக்கு நம்முளுக்கு எடம் தர்றன்னு சொல்றாங்க…?’’ என்று தங்களுக்குள் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள்.

”சரி, நீங்க எல்லாரும் போய் ஓரமா அந்த மரத்தடியில உட்காருங்க… நாங்க கூப்பிட்டதும் வந்தா போதும்’’ என்று வந்திருந்த ஊராரை சற்று தூரத்தில் பாதையோரம் இருந்த பெரிய வேப்ப மரத்தடியில் போய் உட்காரச் சொன்னார் கலெக்டர். பெரும் சலசலப்புடன் சென்று உட்கார்ந்தார்கள்.

திரும்பவும் கலெக்டரும் தாசில்தாரும் தனியாகப் போய் நின்று பேசிவிட்டு வந்து தலைவரிடம், ”அவர் பேரென்ன சொன்னீங்க… ஏதோ சாமிக் கவுண்டர் தானே…?’’ என்றதும், தலைவரும் மனைகாரும் ஒரே குரலில், ”இல்ல சார், முத்துசாமிக் கவுண்டர்’’ என்றனர்.

என்ன நினைத்ததோ தெரியவில்லை, பள்ளத்தில் முரம்பு நிலத்தில் கட்டியிருந்த கருப்பு மாடு கயிறை அறுத்துக்கொண்டு வேகமாக மேட்டுக் கொல்லி கொட்டா நோக்கி ஓடிவந்தது.

”போய் அவர கூட்டிட்டு வாங்க.’’

கலெக்டர் சொன்னதைக் கேட்டு, எங்கே தான் போய் கூப்பிட்டால் தான்தான் ஏதோ சதிசெய்து கலெக்டரையும் தாசில்தாரையும் போலீஸ்காரர்களையும் கூட்டிவந்திருக்கிறேன் என எளிதில் கவுண்டர் கண்டுபிடித்துவிடுவார் என நினைத்துக்கொண்டு மனைகாரை பார்த்து கூட்டி வரச் சொல்லி தலைவர் சைகை காட்ட… அவரும் வேகமாக நடந்துபோய் கொட்டாயின் முன்னால் நிற்கும் செவடனை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் வாசற்படியில் நின்று, ”கவுண்ர… கவுண்ர’’ என்று குரல் கொடுத்து சத்தமாகக் கூப்பிட்டார்.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக விட்டுவிட்டு விலாசித் தீர்த்த கொடும் மழையில் அங்கங்கே சிறுசிறு குட்டைகளாக நின்றிருந்த மழைநீர் மொத்தமும், காலை முதல் அடித்த கடும்வெயிலில் வேகமாக வற்றி இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது.

மனைகாரின் குரல் கேட்டு எழுந்த கவுண்டரை உட்காரச் சொல்லிவிட்டு யாரெனப் பார்க்க வெளியில் வந்த பூரணியம்மா, யாரோ முகம் தெரியாதவர் அங்கே நிற்பதையும், சற்று தள்ளி ஊர் தலைவரும் அவரோடு முழுக்கால் முழுக்கை சட்டை போட்ட இருவர் நிற்பதையும், அவர்களுக்குப் பின்னால் போலீஸ்காரர்கள் இருப்பதையும், அதற்கும் பின்னால் ஊர்க்காரர்கள் கூட்டமாக மரத்தடியில் உட்கார்ந்திருப்பதையும் பார்த்துவிட்டு, ஏதோ பெரும் அல்லல் ஒன்று நடக்கப்போவதாக உணர்ந்தார்.

”யாரு சாமி நீங்க…?’’

கவுண்டரின் மனைவி தன்னைப் பார்த்து யார் என்று கேட்டதால் கோபமுற்ற மனைகார், அதை வெளியில் காட்டாமல் கள்ளச் சிரிப்பு சிரித்து, ‘என்னய பாத்தா யாருன்னு கேக்கற…? இருடி, இன்னும் கொஞ்ச நேரத்துல நான் யாருன்னு தெரியும்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு மிகப் பணிவானக் குரலில் கேட்டார்.

”நானாம்மா… நானு இந்த ஊரோட மனைகாரரும்மா… கவுண்ரு உள்ளதான கீறாரு…?’’

என்னவோ ஏதோவெனப் பதறிப் போன பூரணியம்மா, ”ஆமா சாமி… அவுரு உள்ளதான் கீறாரு’’ என்றார், நடுங்கும் குரலில்.

ஓடிவந்த மாடு, கொட்டாயின் முன்னால் வரிசையாக வண்டிகள் நிற்பதையும் அதன் பக்கத்தில் புதுப்புது ஆட்கள் ஏழெட்டு பேர் இருப்பதையும் பார்த்துவிட்டு, சற்று தள்ளியிருந்த புங்கை மரத்தின் மறுபக்கமாக ஒதுங்கி சுற்றிக்கொண்டு வந்து செவடன் நின்றிருக்கும் இடத்துக்கு நேரெதிராக நின்று பூரணியம்மாவையும் அவரிடம் மனைகார் எதையோ சொல்வதையும் பார்த்தது.

”போயி கவுண்ர கலெக்ட்ரும் தாசிலுதாரும் கூட்டுனு வர சொன்னாங்கனு சொல்லும்மா…’’

கேட்ட பூரணியம்மா பதட்டத்தோடு திரும்பி உள்ளே நுழைவதற்குள், கவுண்டர் எழுந்து துணிவோடு வெளியே வந்தார்.

பக்கத்தில் நின்றிருந்த செவடன் தன்னிடம் வருவதைப் பார்த்த கவுண்டர், ”நீ இங்கயே இருடா செவடா… நானு போயி என்னான்னு கேட்டுனு வரன்’’ என்று சொல்லிவிட்டு, கலெக்டரும் தாசில்தாரும் நின்றிருக்கும் இடத்திற்குப் போய் மடக்கிக் கட்டியிருந்த சோமத்தை கீழே இறக்கிவிட்டு கேட்டார்.

”கூப்டீங்களாமே சாமி.’’

‘ஆமாம்’ என தலையாட்டிய கலெக்டர், கவுண்டரின் சவரம் செய்யாத முகத்தையும், சட்டை போடாமல் மயிர் மண்டிய மார்பையும், உழைத்து உழைத்துப் புடைத்துப்போயிருந்த கை கால்களையும் ஒருதடவை பார்த்துவிட்டு கேட்டார்.

”நீங்கதான முத்துசாமிக் கவுண்டரு…?’’

”ஆமாஞ் சாமி.”

பக்கத்தில் நின்றிருந்த தாசில்தார், ”இது மொத்தமும் நீங்கதான் ஓட்டி பயிர் வக்கிறீங்களா…?’’ வலது கையால் கொட்டா சுற்றியுள்ள மொத்த நிலத்தையும் காட்டிக் கேட்டார்.

”ஆமாஞ் சாமி’’

”எவ்ளவு நாளா வக்கிறீங்க…?’’

”நெனவு தெரிஞ்ச நாள்ளருந்து சாமி’’

”அதான் எவ்ளவு நாளா…?’’

”ஒரு நாப்பதம்பது வருசமா இருக்குஞ் சாமி.’’

”இந்த நெலத்துக்கு பட்டா வச்சிருக்கீங்களா…?’’

பதில் சொல்லாமல் மவுனமாக நின்ற கவுண்டரைப் பார்த்து, ”கவுண்ரே, உங்ககிட்டதான் கேக்குறன்… இந்த நெலத்துக்கு பட்டா வச்சிருக்கீங்களா…?’’

‘இல்ல’ என மெதுவாகத் தலையாட்டினார்.

”ஏன் இன்னும் பட்டா வாங்கல…?’’

என்ன சொல்வதென்று தெரியாமல் தயக்கத்தோடு, ”இருவது முப்பது வருசமா நானும் நடயா நடந்து பட்டா கேட்டுனுகீறன் சாமி… ஒருத்தரும் தரமாட்றாங்க. எனுக்கு மட்டுல்ல… இங்க சுத்தினு கீற யாரு கொல்லிக்கும் பட்டா இல்ல சாமி.’’

கவுண்டர் சொன்னதைக் கேட்டுவிட்டு, ”கவுண்ர, நான் மத்தவங்க பத்திலாம் கேக்கல… ஏன் இன்னும் நீங்க பட்டா வாங்கல…?’’

திரும்பவும் தாசில்தார் அதே கேள்வியைக் கேட்டார். எதுவும் சொல்லாமல் தலைகுனிந்து நின்ற கவுண்டரிடம், ”சரி, நீங்க போய் உங்க வேலையப் பாருங்க… கூப்டதும் வந்தா போதும்’’ என அனுப்பிவிட்டு, நால்வரும் கூடிப் பேசிக்கொண்டார்கள்.

உண்மையில் கவுண்டரின் ஊரைப் பொறுத்தவரை பட்டா என்பது ஒரு விஷயமே கிடையாது. எதெது யார் யார் நிலம் என எல்லோருக்கும் தெரியும். அதில் அவர் உழுது பயிரிடலாம், வேண்டுமென்றால் யாருக்காவது விருப்பப்பட்டு எனாமாகக்கூட கொடுக்கலாம் அல்லது விற்கலாம். அது அவரவர் விருப்பம். எல்லாம் இரண்டு மூன்று பேர்களை சாட்சியாக முன்வைத்து செய்தால் போதும், அவ்வளவுதான். அதனால் பலரும் பெரிதாக மெனக்கிட்டு அலைந்து திரிந்து பட்டா வாங்கவில்லை. அப்படியே வாங்கப் போனாலும் அது இது என ஏதாவது காரணம் சொல்லி முடிந்தமட்டும் காசை வாங்கிக்கொண்டு, ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் பட்டா தராமல் திருப்பி அனுப்பிவிடுவார்கள். கவுண்டர் கடந்த முப்பதாண்டுகளில் ஏழேட்டு தடவை படித்தவர் துணையோடு எழுதிக்கொடுத்து முட்டிமோதிப் பார்த்துவிட்டார், கிடைக்கவில்லை. அதிலும் ஈராண்டுகளுக்கு முன் குறைந்தது ஓரிடத்தில் ஒருவர் தொடர்ந்து இருபது ஆண்டுகள் வீடு கட்டி வசித்து வந்தாலோ, உழுது பயிரிட்டாலோ அது அவருக்குச் சொந்தமான இடம், கட்டாயம் அதற்கு பட்டா வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்வதாக யாரோ சொன்னதைக் கேட்டு விண்ணப்பித்த கவுண்டர் உள்ளிட்ட முப்பது பேரின் விண்ணப்பத்தையும், ஊர் தலைவர் தன் கையால் மனைகார் முன்னாலேயே கிழித்துப் போட்டது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

ஒருவாறு பேசி முடிவெடுத்தவர்கள் கவுண்டரை திரும்பவும் கூப்பிட்டு, ”உங்களுடைய இந்த எடத்த அரசாங்கம் வீடில்லாத ஏழ மக்களுக்குத் தந்து வீடு கட்டித்தர உதவி செய்யப் போகுது’’ என்றனர்.

தள்ளி நின்று இவ்வளவு நேரம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த செவடன், பக்கத்தில் கிடந்த பெரிய கோலமாவு கல்லை எடுத்துக்கொண்டு கத்தி வேகமாக ஓடிவந்து, ”ஏன்டா… யாரோட எடத்தப் புடுங்கி யாரு யாருக்குடா வூடு கட்டித்தர்றது…?” தலைவரை நோக்கி போடப் போனான்.

தடுத்து நிறுத்திய கவுண்டர், ”ஏய் செவடா… என்னடா இது…? செத்த நான் சொல்றதக் கேளு… போயி ஓரமா நில்லு’’ என்றார்.

”என்ன வுடு கவுண்ர… இந்த பெட்டா மவன இன்னிக்கி கொன்னு பொலிபோட்டாதான்… ஊர்ல நடக்கற அக்கறமத்துக்குலாம் ஒரு முடுவு காலம் வரும்…’’ செவடன் வெகுவாய்த் திமிரினான்.

”என் பேச்சுக்கு மதேரி தருவன்னா… நான் சொல்றதக் கேட்டுனு போயி ஓரமா நில்லு.’’

கவுண்டர் இறுதியாக உறுதியாகச் சொன்னதைக் கேட்டுவிட்டு கண்கள் சிவக்க தலைவரைப் பார்த்து பல்லை நறநறவென்று கடித்த செவடன், கையிலிருந்த கல்லை ஓங்கி கீழே போட்டுவிட்டு பின்னால் போனான்.

சடக்கென வடக்க திரும்பி நின்று வானைப் பார்த்துக் கும்பிட்ட கவுண்டர், கீழே மண்ணில் விழுந்து வணங்கிவிட்டு எழுந்து கொட்டாய்க்குள் போய் தன் மனைவியையும் பிள்ளைகளையும், ”பேசாம எங்கூட நடங்க’’ என கூட்டிக்கொண்டு வேகமாக கலெக்டரும் தாசில்தாரும் நிற்கும் இடத்திற்கு வந்து கலெக்டரின் முகத்தை பார்த்து,

”வூடில்லாத எம்மக்கிங்குளுக்கு நல்லது செய்யணும்னு வந்துகீறிங்க… ஒங்க இஷ்டப்படியே செய்ங்க சாமி… எல்லாரும் நல்லாருப்பீங்க’’ என கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, ஊர் தலைவரையும் மனைகாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் கடந்து முரம்புக் கொல்லி நோக்கி எட்டி நடக்க, பின்னாலேயே செவடன் தாரை தாரையாகக் கண்ணீர் கொட்ட அழுதுகொண்டு போனான்.

[இன்னும்]

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=