முரம்பு – 3

அப்போது பிறந்த குழந்தைபோல் மழையில் நனைந்திருந்த சின்ன வேப்ப மரத்தருகில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கொட்டாயின் முன்னால் நின்றிருந்த முத்துசாமிக் கவுண்டரை நோக்கி வந்த பெரிய மீசை வைத்த போலீஸ்காரர், ”இங்க முத்துசாமிக் கவுண்டர்ன்றது…?’’ சொல்லி முடிக்கும் முன்பே கவுண்டர், ”அது நானுதான், சொல்லுங்க’’ என்றார்.
பின்னாலிருந்த செவடன் கவுண்டரின் பக்கத்தில் வருவதற்குள் பெரிய மீசை போலீஸ்காரர் வந்து கவுண்டரையும் அவர் கட்டியிருந்த செம்மண் கறைபடிந்த சோமத்தையும், தோள்மேல் போட்டிருந்த சிறுசிறு நீலநிற கட்டம்போட்ட வெள்ளைத் துண்டையும் அதன்கீழே தெரிந்த பூணூலையும் பார்த்துவிட்டு, ”நீங்கதானா அது…?’’ என்றார், குரலில் கொஞ்சம் வஞ்சம் கலந்து.
மடித்துக்கட்டியிருந்த சோமத்தை கீழே அவிழ்த்துவிட்டு, ”ஆமா’’ என்றார் கவுண்டர், தலையை லேசாக ஆட்டி.
அருகில் வந்த செவடனையும், பின்னாலிருக்கும் கொட்டாயையும், அதனுள் ஆட்கள் இருப்பதையும், கொட்டா சுற்றியுள்ள பெரு நிலத்தையும், அதில் ஒருபக்கம் கொள்ளும் உளுந்தும் விதைத்திருப்பதையும் தலையை அப்படியும் இப்படியும் அசைத்து ஒருவாட்டிப் பார்த்துவிட்டு, எதையோ கேட்க நினைத்தவர் கேட்காமல் பக்கத்தில் நின்றிருந்த செவடனைப் பார்த்து, ”குடிக்க தண்ணிவண்ணி எதனா இருக்குமா இங்க…?’’ என்றார், தன் கட்டை விரலை வாயருகில் வைத்துக் காட்டி.
கவுண்டர் திரும்பி செவடனைப் பார்த்து மெல்ல தலையசைத்துக் கண்காட்ட, உடனே கொட்டாயிலிருந்து தண்ணீர் மொண்டு வர வேகமாகப் போனான்.
”கவுண்ரே, ஒங்ககிட்ட ஒண்ணு சொல்லிட்டுப் போவதான் வந்தோம்…’’
பெரிய மீசை போலீஸ்காரர் கவுண்டரிம் பேச ஆரம்பித்ததும் உடனிருந்த மெலிந்த போலீஸ்காரர் மெல்ல விலகி கொட்டா பார்த்து நடந்து போனார்.
”ராத்திரி வந்த ஆத்து வெள்ளத்துல ஒங்க ஊர்ல காவாசி அடிச்சினு போச்சு, தெரிமா…?’’
மெதுவாகத் தலையாட்டி, ”தெரியும்” என்றார்.
”அவங்க எல்லாரயும் இப்ப பள்ளிக்கோடத்துல தங்க வச்சிருக்கோம். தாசில்தாரும், கலெக்ட்ரும் பத்துப் பதனோரு மணிக்குலாம் வந்துருவாங்க. மனைகாரு ராத்திரியே வந்டாரு…’’
சொல்லிக்கொண்டிருக்கும்போதே மெலிந்த போலீஸ்காரர் செவடன் கொட்டாயிலிருந்து படி சொம்பில் மொண்டு வந்த தண்ணீரை வாங்கிக்கொண்டு, அவனை அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு எடுத்து வந்து பெரிய மீசையிடம் தந்தார்.
வாங்கி அண்ணாந்து வாய் நிறைய ஊற்றிக் கொப்பளித்து, அங்கிருந்தபடியே கிழக்குப் பக்கம் திரும்பி இரண்டடி தள்ளியுள்ள சிறு புளியங்கன்று மீது துப்பிவிட்டு, மொடமொடவென கொண்டுவந்த மொத்த நீரையும் குடித்துவிட்டு காலி சொம்பை மெலிந்தவரிடம் தந்தனுப்பினார்.
”வூடு இல்லாம நிக்கற காலனி ஆளுங்களுக்கு… எடமும் வூடும் கட்டித்தர தலிவரும் மனைகாரும் கலெக்டரு வந்தவொடனே மனு கொடுக்கலான்னு கீறாங்க.’’
பெரிய மீசை சூசகமாய் எதையோ உள்வைத்துப் பேசுவதைப் பார்த்த கவுண்டருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அதுவும் இதை ஏன் நம்மிடம் வந்து சொல்கிறார் என்று நினைத்தவருக்கு, ‘எடமும் வூடும் கட்டித்தர தலிவரும் மனைகாரும் கலெக்டரு வந்தவொடனே மனு கொடுக்கலான்னு கீறாங்க’ எனும் வார்த்தைகள் ஓரளவுக்கு அவர் சொல்லப்போகும் விஷ(ய)த்தை உணர்த்தியது.
மெல்ல உதடசைத்து பல் தெரியாமல் புன்னகைத்தார் கவுண்டர்.
”ஊரு தலிவரும் மனைகாரும் பேசி… மோட்டுல கீற இந்த எடத்துல அவுங்குளுக்குலாம் வூடு கட்டித்தர முடுவு பண்ணிக்கீறாங்க.’’
கேட்ட கவுண்டருக்கு பகீரென்றது. அதோடு, அவர் இதைத்தான் சொல்லப்போகிறார் என்று ஏறக்குறைய யூகித்திருந்தார். சரி, சொல்ல வந்ததை முழுதாகச் சொல்லி முடிக்கட்டும் என அமைதி காத்தார்.
”அத எப்டி ஒங்கக்கிட்ட வந்து சொல்றதுன்னு தெரியாம… என்ன சொல்லச் சொல்லி அனுப்புனாங்க.’’
இவ்வளவு நேரம் சொன்னதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த கவுண்டர், சோமத்தை மடித்துக் கட்டிக்கொண்டு, ”எவன்மூட்டு எடத்துல வந்து எவன் எவனுக்கு வூடு கட்டித்தர்றது…? என்னமோ ஊரு ஒலகத்துல எடமே எங்கயும் இல்லாதமாரி… நானும் என் கொல்லியும்தான் கெடச்சமா ஒங்குளுக்கு…?’’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு,
”நாலு புள்ளக்கி தவுப்பன் நானு. என் வூட்டுக்காரி அஞ்சாவது புள்ளய வவுத்துல சொமந்துனு கீறா. இது ஊரு தலிவனுக்கும் தெரியும், மனேகாரனுக்கும் தெரியும். அவனுங்கதான் புத்திகெட்டுப்போயி சொன்னாங்கன்னா… பெரிவங்க நீங்க புத்திமதி சொல்லாம, அத என்கிட்ட சொல்ல வந்டீங்க. ஒங்கள கையெடுத்துக் குப்பட்றன்… போங்க சாமி. இருக்கற பூமிய புடுங்க்கினு என்னயும் எம்புள்ளிங்களயும் நடுத்தெருவுல நிக்கவுட்றாதீங்க… ஒங்குளுக்கு புண்ணியமா போவும்’’ என்றார்.
கேட்டும் கேட்காததுபோல் இருந்த போலீஸ்காரர், ”நானு சொல்றத சொல்லிட்டன்… அப்றம் ஒங்க இஷ்டம் கவுண்ர’’ என்று புறப்படத் திரும்பினார்.
”செத்த நில்லுங்கய்யா… நானு சொல்றதயும் ரவ கேட்டுனுப் போங்க.”
சற்று பக்கத்தில் போன கவுண்டர், ”நானு உசுரோட கீறவரிக்கும் அவனுங்க எண்ணம் பலிக்காது… பலிக்கவும் வுடமாட்டன். அப்டி எதனா நடந்தா… அது என் பொணத்து மேலதான் நடக்கும், பாத்துக்கங்க’’ என்று கோபத்தில் கத்திச் சொல்லிவிட்டு, பெரிய மீசை போலீஸ்காரரைத் தாண்டி முரம்புக் கொல்லி நோக்கி வேகமாக நடந்து போனார்.
கொட்டாயின் வாசப்படியில் நின்று போலீஸ்காரர் எதையோ கவுண்டரிடம் சொன்னதையும், அதைக் கேட்டு கவுண்டர் கோபமாகி ஏதோ கத்திச் சொல்லிவிட்டுப் போவதையும் பார்த்துக் கொண்டிருந்த செவடன், மடித்துக் கட்டியிருந்த லுங்கியைக் கீழே இறக்கிவிட்டு வேகமாக வந்து, ”என்னாச்சி சாமி, எதனா சமாச்சாரமா…?’’ என்றான், பணிவாக.
முகம் சிவந்துப்போயிருந்த போலீஸ்காரர், ”போயி ஒங்க கவுண்ருகிட்ட சொல்லி வையி. அவுரு எம்மாந் தடுத்தாலும் முடுவு பண்ணது பண்ணதுதான். அவரால ஒண்ணும் புடுங்க முடியாதுன்னு சொல்லு…’’
கோபமாகச் சொல்லிவிட்டு பல்லைக் கடித்துக் காட்டியவர், மெலிந்த போலீஸ்காரரைப் பார்த்து வண்டியை எடுக்கச்சொல்லி, பின்னால் ஏறிக்கொண்டு திருப்பி ஊர் நோக்கி கிளம்பிப் போனார்.
எதுவும் புரியாத செவடன், ஒருவித பயம் கலந்த சங்கடத்தோடு முரம்புக் கொல்லி கொட்டாயிலிருந்து மாட்டைப் பிடித்துப் போய் சனிமூல துண்டோரம் மேய்த்துக்கொண்டிருந்த கவுண்டர் அருகில் போய் நின்றான்.
ஊரில் மேட்டுத் தெருவில் இருக்கும் கவுண்டரின் வீடு குடியானவர்கள் வீட்டுக்கும் பாய்மார்கள் வீட்டுக்கும் நடுவில் இருப்பது. நான்கைந்து வீடுகள் வரிசையாகக் கட்டி தாராளமாகக் குடியிருக்கும் அளவுக்கு பெரிய இடம். தென்னை வாழை கொய்யா பப்பாளி வேம்பு கறிவேப்பிலை அணில்காய் மல்லி கனகாம்பரம் அவரை பூசனி என வீட்டைச் சுற்றி மரங்களும் செடிகொடிகளும் நட்டுவைத்து சிறு தோட்டம்போல் இருப்பது. எப்படியாவது அந்த இடத்தை வளைத்துப்போட்டால் நாளை பல ஆயிரம் ரூபாய் லாபம் வைத்து விற்றுவிடலாம் என கணக்குப்போட்ட ஊர் தலைவர், முதலில் வீட்டருகில் இருக்கும் காலி இடத்தை கவுண்டரிடம் விலைக்குக் கேட்டார். அதை அவர் விற்பதாக இல்லை என்றதும் கடுப்பாகி, ‘மொத்த இடத்தையும் கொடுத்துவிட்டு கொல்லிக்கு ஓடிவிடு. இல்லையென்றால் கோயிலுக்கு அந்தப் பக்கமாக குடியானவர்கள் வசிக்கும் பகுதிக்கு போய்விடு’ என மறைமுகமாக மிரட்டிப்பார்த்தார். எதற்கும் அசராத கவுண்டர், ஊரார் முன்னாலேயே சுடு வார்த்தைகள் சொல்லி அவனைத் திட்டிவிட்டார். அந்தப் பகையை மனத்தில் வைத்துதான் இப்போது பழிவாங்கப் பார்க்கிறான் என கவுண்டர் புரிந்துகொண்டார்.
செவடனையும் அவன் ஏதோ சங்கடத்தில் வந்து நிற்பதையும் பார்த்த கவுண்டர், எதையோ சொல்ல வாயெடுத்து சொல்லாமல் திரும்பி மாட்டிடம் போய் நின்று அதன் கழுத்திலும் தோளிலும் அடிவயிற்றிலும் தடவிக்கொடுத்தார்.
மொத்த வானமும் நன்றாக வெளிவாங்கி சூரியன் கொலுத்த ஆரம்பித்திருந்தது. ஊருக்குள் போன போலீஸ்காரர்கள் அல்லாக்கோயில் முன்புள்ள கடைவாசல் திண்ணையில் உட்காந்திருந்த ஊர் தலைவரிடமும் மனைகாரிடமும் நடந்ததைச் சொல்ல, மறுபேச்சு பேசாமல் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
”செரி, நீங்க போங்க சார்… கலெக்ட்ரு வந்ததும் நாங்க பாத்துக்கறம்.’’
போலீஸ்காரர்கள் இருவரையும் அனுப்பிவிட்டு, தலைவர் காதர் பாட்சா எழுந்துபோய் ஆலமரத்தடியில் இருந்த சிறு கட்டைச் சுவர்மீது உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவர்களில் நான்கு பேரை கூட்டிக்கொண்டு வந்தார்.
வெள்ளம் ஓரளவுக்கு வடிந்திருந்ததால் மக்கள் அங்கும் இங்கும் நடமாட ஆரம்பித்திருந்தார்கள். வெள்ளத்தில் அடித்துப் போகாத தம் உடைமைகளை சிலர் போய் எடுத்துவந்து பள்ளிக்கூடத்தின் முன்னாலும், ஆலமரத்தடியிலும் வைத்துக்கொண்டிருந்தார்கள். நான்கைந்து இஸ்லாமிய இளைஞர்கள் அங்கிருப்பவர்களுக்குத் தருவதற்காக அல்லாகோயிலில் சமைத்த உணவை எடுத்துவந்தார்கள்.
”ஒங்குளுக்குலாம் இனி எப்பயும் வெள்ளம் வராத மாரி மோடான எடத்துல… அல்லா புண்ணியத்துல எடம் தந்து… வூடும் கட்டித்தர சொல்லி கலெக்ட்ருகிட்ட மனுதரலாம்னு நானும் மனைகாரும் முடுவு பண்ணிகீறோம். நீங்க என்ன சொல்றீங்க…?”
ஏதோ கடவுளே நேரில் வந்து நின்று சொன்னது போல் கேட்டு கையெடுத்துக் கும்பிட்டவர்கள், ”ஒங்குளுக்கு புண்ணியமா போவும் சாமி’’ என்றார்கள்.
முதலில் இப்படி ஓர் எண்ணமே தலைவருக்கு இருக்கவில்லை. மனைகார்தான் கலெக்டரும் தாசில்தாரும் காலையில் வந்ததும் மனு தரலாம் என்றார். அதைக் கேட்ட தலைவர், கவுண்டர் மேல் கொண்ட பகை காரணமாக அவர் நிலத்தை எப்படியாவது பிடுங்கிக்கொண்டு நடுத்தெருவில் நிறுத்தி அவமானப்படுத்த இதுதான் தக்க சந்தர்ப்பம் என நினைத்து, கவுண்டரின் நிலத்தை குறிப்பிட்டுச் சொல்லி அங்கேயே வாங்கித் தரலாம், அதுதான் ஊருக்கு வரும் பாதையோரம் இருக்கிறது. அதோடு, சின்ன டேமிலிருந்து வரும் பெரிய கால்வாயும் அதன் அருகில்தான் போகிறது போன்ற காரணங்களைச் சொல்லி மனைகார் சம்மதத்தையும் பெற்றிருந்தார்.
”கவுண்ரே’’
கூப்பிட்டது கேட்டும் கேட்காதது போல் இருந்த கவுண்டரின் பக்கத்தில் போன செவடன், போலீஸ்காரர்கள் போகும்போது அவனிடம் சொல்லிவிட்டுப் போனதை பெரும் சங்கடத்தோடு தயங்கித் தயங்கி சொன்னான்.
கேட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்த கவுண்டரிடம், எப்படிக் கேட்பது எனத் தெரியாமல் தவித்த செவடன் ஒருவாறு துணிவுகொண்டு கேட்டுவிட்டான்.
”கேக்றது சரியா தப்பான்னுலாம் தெர்ல கவுண்ர… கேக்காமயும் என்னால இருக்கமுடில… எதுக்கந்த போலீஸ் நாய்ங்க என்னிக்கும் இல்லாம இன்னிக்கி வந்துட்டு போறானுங்க…? மறைக்காம எங்கிட்ட சொல்லு கவுண்ர.’’
இவ்வளவு நேரம் மவுனமாக இருந்த கவுண்டர், சட்டென தலைமேல் தன் இரு கைகளையும் வைத்துக்கொண்டு மரம் தம்மென உடைந்து தரையில் விழுவதுபோல் ‘அய்யோ’ என கத்திக்கொண்டு கீழே முட்டிபோட்டு உட்கார்ந்து, ”என்னடா சொல்ல சொல்றவன்…? ஊரு தலிவனும் மனேகாரனும் கூடினு… ஒங்குளுக்குலாம் என் மோட்டு கொல்லிய புடுங்கி, அதல வூடு கட்டித்தரப் போறானுங்களாம்.’’
உடைந்த குரலில் சொல்லிவிட்டு தலைகுனிந்து மென் சத்தத்தில் அழ ஆரம்பித்தார்.
எத்தனை பெரிய சோதனை வந்தாலும் சோர்ந்து போகாமல் மலைபோல் நின்று சமாளிக்கும் கவுண்டர், இப்படி தலைமேல் கை வைத்துக்கொண்டு உடைந்துபோய் உட்கார்ந்து தலைகுனிந்து அழுவதைப் பார்த்து துடித்துப்போன செவடன், ”யாரூட்டு எடத்துல வந்து யாரு வூடு கட்டித் தர்றது…? இந்த செவடன் உசுரோட கீறவரிக்கும் வுடமாட்டன் கவுண்ர. தலிவன் அந்த தெவுடியா மவன் எம்மாம் இருந்தா… ஊர ஒட்டினுகீற தான் எடத்த எங்க அரசாங்கம் புடுங்கி வூடில்லாத மக்கிங்களுக்கு தந்துடுமோன்னு… இப்டியொரு திட்டம் போட்ருப்பான். அதும் ஊரவுட்டு இம்மாந் தொலவுல காட்டுல கீற கொல்லிய புடிங்கித்தர நெனப்பான்.’’
உச்ச கோபத்தில் சொல்லிவிட்டு கவுண்டரின் கையைப் பிடித்துத் தூக்கி நிற்கவைத்தான்.
கவுண்டர் கண்கலங்கி அழுதுகொண்டிருந்தையும், செவடன் ஏதோ கோபமாகக் கத்தி சொல்லிக்கொண்டிருந்ததையும் பார்த்த கருப்பு மாடு, மேய்வதை நிறுத்திவிட்டு மெதுவாக கவுண்டரின் பக்கத்தில் வந்து நின்று, அவரது இடது கை மணிக்கட்டருகில் பின்னங்கையில் தன் நாக்கை நீட்டி நக்கிக்கொடுத்தது.
மாணிக்கமும் ஏழுமலையும் மேட்டுக் கொல்லி கொட்டாயிலிருந்து பூரணியம்மாவை கூட்டிக்கொண்டு முரம்பு கொல்லிக் கொட்டாய்க்கு வந்திருந்தார்கள்.
கஞ்சிசோறு ஊற்றிக்கொடுத்த ஏணங்களைப் பானை நீரில் சாம்பல் போட்டு தேங்காய் நாரில் தேய்த்துக் கழுவி கவிழ்த்து வைத்த பூரணியம்மா, கொட்டாய்க்குப் பின்னாலிருந்த சிறு முருங்கை மரத்தில் சொரடால் மாட்டி கைப்பிடி கீரை பறித்து அன்னக்கூடையில் வைத்துக்கொண்டு, வீட்டுக்குப் போய் கொட்டாயில் இருப்பவர்களுக்கு சோறாக்கி எடுத்து வரலாம் எனக் கிளம்பி, கவுண்டரும் செவடனும் இருக்கும் சனிமூலை துண்டுக்கு வந்து சொல்லிவிட்டு, காட்டுவா மரத் துண்டுவழியாக இறங்கிப் போனார்கள்.
எதுவும் நடக்காதது போல் இருந்த கவுண்டரிடம் செவடன் உறுதியான குரலில் மறுபடியும் சொன்னான்.
”அந்த மயிரானுங்க கலிக்டரு கிலிக்டருன்னு யார வேணா கூட்டுனு வரட்டும்… அவனுங்களால ஒண்ணும் புல்திட முடியாது. இந்த செவடன் கீறவரிக்கும் புடி மண்ணக்கூட இங்கருந்து அள்ளினு போவ வுடமாட்டன், பாத்துக்க கவுண்ர.’’
மாட்டை அருகிலுள்ள துரிஞ்ச மரத்தின் மேல் தெரியும் வேரில் பிடித்துக் கட்டிவிட்டு செவடனை கொட்டாயில் இருக்கச் சொன்ன கவுண்டர், தெக்கால பக்கமாக நடந்து சின்னக் கோனார் கொல்லி வழியாக புளியமர குட்டைக் கிணறு தாண்டி, எலந்தமர ஓடையோரம் இருக்கும் அருணாச்சலம் செட்டியார் கிணத்தில் போய் இறங்கி, இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு கட்டியிருந்த சோமத்தை அவிழ்த்து கல் படிக்கட்டுமேல் மடித்து வைத்துவிட்டு, அங்கிருந்து ‘சர்’ரென சொரப்பானம் அடித்தவர், வெகுநேரம் நீருக்குள் மூச்சுப் பிடித்துக்கொண்டு இருந்துவிட்டு, சூராவளிக்கரைக்கு வந்து சோமம் எடுத்துக் கட்டிக்கொண்டு துண்டை அவிழ்த்து நீரில் முங்கி அங்குள்ள பலவக் கல்லில் அடித்துக் கும்மி அலசிப் பிழிந்து தோள்மேல் போட்டுக்கொண்டு மேலேறி, வரிசையாக சீத்தாமரம் இருக்கும் மரிசியில் நள்ளிரவு முதல் நடந்ததை அசைபோட்டபடி… வேடியப்பன் கோயில் பக்கமாகப் போய் பாதி உடைந்துபோயிருக்கும் சாமி சூலம் முன்னால் நின்று, ஏதோ நினைத்தவராய் வெறுமனே சில நிமிடங்கள் இருந்துவிட்டு, சட்டென வேகமாகக் கிளம்பி குட்டைக்கிணறு கடந்து மேடேறி கொட்டாய்க்கு வந்தார்.
ஊர் தலைவர் அதற்குள் வெள்ளத்தில் வீட்டை இழந்தவர்களை ஒன்றுகூட்டி கலெக்டருக்கும் தாசில்தாருக்கும் அவர்கள் எழுதுவது போல் மனு எழுதி, அதில் ஊரை விட்டு தள்ளியுள்ள முத்துசாமிக் கவுண்டரின் மேட்டு நிலத்தைக் குறிப்பிட்டு, அங்கே தங்களுக்கு இடம் ஒதுக்கி வீடு கட்டித்தர வேண்டும் என்று கேட்டு வரிசையாக ஒவ்வொருவரிடமும் கைநாட்டும் கையெழுத்தும் வாங்கி முடித்திருந்தார்.
வீட்டுக்குப் போய் கட்டிய புடவையைக் கூட மாத்தாமல் அடுப்பு மூட்டி உலைவைத்து சோறும் முருங்கக் கீரை போட்டுக் கடைந்த பருப்பு சாம்பாரும் செய்து அன்னக்கூடையில் வைத்து மூடி சிம்மாடு கொய்லி தலையில் தூக்கிக்கொண்ட பூரணியம்மா, மாணிக்கத்தையும் ஏழுமலையையும் வீட்டிலேயே பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு, மகள் செல்வியையும் வீட்டுக்குப் பின்னால் ஈரமண்ணில் கொட்டாங்குச்சியில் இட்லி சுட்டு விளையாடிக்கொண்டிருந்த சின்ன மகன் முருகனையும் கூட்டிக்கொண்டு பொடிநடையாக நடந்து தவுலத்கான் சாயுபு கொட்டா தாண்டி வந்துகொண்டிருந்தார்.
சரியாக அவர்கள் முடியனூரான் கொல்லி முடக்கு திரும்பும்போது, கலெக்டர் வண்டியும் தாசில்தார் வண்டியும் ஒன்றன்பின் ஒன்றாக அவர்களைக் கடந்து ஊருக்குப் போய்க்கொண்டிருந்தது.
பெரும் பசியோடு இருப்பார்கள் என்பதால் நேராக மேட்டுக் கொல்லி கொட்டாய்க்குப் போன பூரணியம்மா, சின்னவனை அனுப்பி கவுண்டரை கூட்டிக்கொண்டு வரச் சொல்லியிருந்தார்.
தலையில் வைத்திருந்த அன்னக்கூடையை செவடனைக் கூப்பிட்டு இறக்கிவிடச் சொல்லி எடுத்துக்கொண்டு உள்ளே போனவர், தூங்கி எழுந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவர்களை வரிசையாக அமரச் சொல்லி, தைத்த கல்யாணமுருங்கை இலையை அவர்களின் முன்னால் போட்டு அதில் தண்ணீர் தெளித்துவிட்டு குண்டானிலிருந்த சோற்றை அள்ளிப் பரிமாறினார். பின்னாலேயே செல்வி, பெரிய டீப்பனியிலிருந்து கரண்டியால் மொண்டு ஒவ்வோர் இலையாக சாம்பார் ஊற்றிக்கொண்டு வந்தாள்.
அவர்களோடு உட்கார்ந்து சாப்பிடாமல் எறவானத்தில் செருகியிருந்த கொடுவாளை எடுத்துக்கொண்டு செவடன் வேகமாக வெளியில் வந்து நிற்கவும், ஊர் தலைவர் தன் மோட்டார் சைக்கிளில் மனைகாரை கூட்டிக்கொண்டு முரம்புக் கொல்லி மேடேறி கொட்டாய் நோக்கி வரவும் சரியாக இருந்தது.
[இன்னும்]
*