முரம்பு – 2

சென்ற வைகாசி தேய்பிறை நாளில் அருங்காட்டிலிருந்து வெட்டி வந்த மூங்கில் கழிகள் கொண்டு கட்டப்பட்ட கொட்டகைக்குள் அழுகுரல் சத்தமும், வெளியில் மழை வருவதற்கு முன்னான இடியோசையும் ஒருசேர ஒலிக்கத் தொடங்கியது.
”அய்யோ… எம்புள்ள ஏந்திரிக்க மாட்டுதே. நானு என்ன பண்ணுவன்…? முச்சுப் பேச்சக் காணாமே…?’’
பேராமுட்டா கிழவியின் பேத்தி பரிமளா துடிதுடித்துப் போய் கத்தி அழுவதைப் பார்த்த செவடன், வெடுக்கென அவள் கையிலிருந்த குழந்தையைப் பிடுங்கிக்கொண்டு ஒரே ஓட்டமாக முத்துசாமிக் கவுண்டர் இருக்கும் முரம்பு கொட்டா நோக்கி ஓடினான். செத்தநேரம் ஓய்ந்திருந்த மழை மீண்டும் தன் கோரமுகம் காட்ட, முடியனூரான் கொல்லி தாண்டி வந்துகொண்டிருந்தது.
ஓடிவந்து கொட்டாயின் வாசப்படியில் மூச்சுவாங்க நின்று, ”ஓ கவுண்ரே, சட்னு ஓடியாங்க…’’ என்றான்.
செவடன் கத்திய கத்தில் கட்டுத் தெருவில் கட்டியிருந்த கருப்பு மாடும் கன்னுக்குட்டியும் பயந்துபோய், முட்டிக்கால் உயரமுள்ள மண் சுவருக்கும் பனைஓலை கூரைக்கும் நடுப்பட்ட திறப்பில் எட்டிப் பார்த்தது.
கொட்டாவுக்குள் கவுண்டர் இல்லாததைக் கண்ட செவடனின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது.
”அய்யோ, இந்த நேரம்னு பாத்து கவுண்ர காணாமே… இந்தப் பாவி இனிமேலு என்ன செய்வன்…? கொழ்ந்தப் புள்ள கண்ணத் தொறக்குமா தொறக்காதா தெர்லயே” அழுது புலம்பிக்கொண்டு கட்டுத் தெருவுக்குள் ஓடிவந்து, கையிலிருந்த குழந்தையை அங்குள்ள கயிற்றுக் கட்டிலில் போட்டுவிட்டு, திரும்பவும் கவுண்டரைத் தேடிக்கொண்டு கொட்டாய் பக்கமாக ஓடினான்.
முன்பைவிட பலமடங்கு பெரிதாக ‘டப் டப் டப்’பென ஒவ்வொரு துளியாக முதலில் போட்டுவிட்டு, அடுத்தடுத்த நொடிகளில் வானம் கிழிந்துகொண்டு கொட்டுவதுபோல் மழை கொட்டியது.
சரியாக அந்நேரம், ஊருக்குள் எங்கு பார்த்தாலும் கூச்சலும் அழுகையும். ஆட்கள் அங்குமிங்கும் ஓடுகிறார்கள். நீரில் மூழ்கிக்கொண்டிருக்கும் வீடுகளுக்குள் யாராவது மாட்டிக்கொண்டார்களா என திரும்பத் திரும்ப நீச்சல் தெரிந்தவர்கள் ஓடிப் போய் பார்க்கிறார்கள். எப்படியும் ஐம்பது வீடுகளுக்கு மேல் இதுவரை வெள்ளத்தில் அடித்துப்போயிருக்கும். இரண்டு பேர் செத்துபோய்விட்டதாகப் பேசிக்கொள்கிறார்கள். இந்து, முஸ்லிம் என்ற பாகுபாடு பார்க்காமல் ஊர்க்காரர்களை பாதுகாப்பாய் கூட்டிப்போய் அல்லாக்கோயில் முன்பக்கம் உள்ள சிமிட்டி சீட்டுப்போட்ட பள்ளிக்கூடத்தில் உட்கார வைக்கிறார்கள். உள்ளே நான்கைந்து இடங்களில் ஒழுகுகிறது. வெளியில் கொட்டும் மழையைக் காட்டிலும் இவ்வொழுகள் எவ்வளவோ தேவலாம் என தள்ளித் தள்ளி உட்காருகிறார்கள். இடம் கிடைக்காதவர்கள் வெளியிலுள்ள பெரிய ஆலமரத்தடியிலும், வரிசையாய் நிற்கும் புளியமரத்தடியிலும் ஒதுங்கி நிற்கிறார்கள். மூசா பாய் வீட்டிலிருந்து பெரிய தார்பாய் கொண்டுவந்து சைக்கிள் கடை முன்னாலிருக்கும் மேடான இடத்தில் நான்கு அவிஞ்ச கழிகள் நட்டு அதன்மேல் போட்டு, ஒருபக்கம் மட்டும் உள்ளே போகவர சிறிதாக வழிவிட்டுவிட்டு, மற்ற பக்கங்களில் கல் கட்டை எது கிடைக்கிறதோ எடுத்து வரிசையாக வைக்கிறார்கள். மழைநீர் உள்ளே நுழையாமல் இருக்க மண்வெட்டி எடுத்துவந்து வெட்டி வாரி நான்கு பக்கமும் மண்ணால் மரிசிபோல் தடுப்பு கட்டுகிறார்கள். தகவல் அதற்குள் எப்படி எட்டியதோ தெரியவில்லை தானிப்பாடி காவல் நிலையத்திலிருந்து போலீஸ்காரர்கள் இருவரும், தீயணைப்பு வீரர் ஒருவரும் வந்திருந்தார்கள்.
”ஓ கவுண்ரே… கவுண்ரே… இந்த நேரத்துல போயி எங்கதான் போனீங்களோ, தெர்லயே…’’ பெருங்குரலெடுத்து செவடன் கத்தினான்.
அவன் குரலை கவுண்டர் கேட்காமல் செய்வதற்கா இல்லை அவன் குரலுக்கு போட்டியாகவா எனும் அளவுக்கு மழையின் சத்தம் மேலும் மேலும் வலுத்தது.
”நாங்க என்ன பாவம் செஞ்சம்னு தெர்லயே… ஏன் எங்குளுக்கு மட்டும் இப்டி சோதன மேல சோதனயா வர்தோ…?’’
செவடன் அப்படியே உடைந்துபோய் கணுக்கால் வரை நிற்கும் மழை நீரில், கட்டிய கிழிந்துபோன கட்டம்போட்ட லுங்கியைக் கூட மடித்துக்கட்டாமல் முட்டிபோட்டு உட்கார்ந்து புலம்பி அழுதுகொண்டிருக்கும்போது, முத்துசாமி கவுண்டர் தலையில் சிறு குண்டானில் எதையோ வைத்து எடுத்துக்கொண்டு மேற்குப் பக்கமிருந்து கோனாமூட்டு கொல்லி தாண்டி வந்துகொண்டிருந்தார்.
கொட்டாயின் முன்னால் செவடனையும் அவன் மழையில் நனைந்தபடி அழுது கொண்டிருப்பதையும் பார்த்த கவுண்டருக்கு ஏதோ நடக்கக் கூடாத அசம்பாவிதம் ஒன்று நடந்துவிட்டது என அவன் சொல்லாமலேயே தெரிந்தது.
எட்டி வேகமாக வந்தவர், தலையில் வைத்திருந்த குண்டானை இறக்கி கொட்டாவுக்குள் வெளியில் நின்றவாறு ‘தொப்பென’ வைத்துவிட்டு, ”செவடா ஏய்… என்னாச்சிடா…?’’ என்றார்.
கவுண்டரின் பதட்டமானக் குரல் கேட்டுத் துள்ளி எழுந்தவன், ”புள்ள… மூச்சி… இல்ல… கெடக்குது… ஏந்திரிக்கல… கொட்டாயில…’’ பீரிட்டு வரும் அழுகையை அடக்கமுடியாமல் குரல் உடைந்துபோய் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிவிட்டு, கவுண்டரின் கையைப் பிடித்து கூட்டிக்கொண்டு வேகமாக கட்டுத் தெருவுக்குப் போனவன், அங்கே கண் திறந்து கை கால் அசைத்து விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையையும், அதன் முகம் கை கால் உடலெங்கும் நாவால் நக்கிக் கொடுக்கும் கருப்பு மாட்டையும், அதை அருகிருந்து பார்த்துக்கொண்டிருந்த கன்னுக்குட்டியையும் பார்த்துவிட்டு நம்ப முடியாதவனாய் கவுண்டரின் கையை விட்டுவிட்டு ஓடிப்போய் குழந்தையை அலேக்காகத் தூக்கிக் கொண்டான்.
எதுவும் புரியாமல் பேந்தப் பேந்த முழித்த செவடனையும், அவன் பின்னால் எகிரி எகிரிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்த கன்னுக்குட்டியையும் மாறி மாறிப் பார்த்து சிரித்தது குழந்தை.
செவடனால் எவ்வளவு முயன்றும் அழுகையை அடக்க முடியவில்லை. திரும்பவும் எடுத்த இடத்திலேயே குழந்தையை படுக்கப் போட்டுவிட்டு வாசப்படி அருகில் நிற்கும் கவுண்டரைப் பார்த்து, ”புள்ள பேச்சுமூச்சு இல்லாமக் கெடன்ச்சின்னு… துடிச்சிப்போயி தூக்கியாந்தன். இப்ப என்னடான்னா, மாடுகூட சேந்து நல்லா சிரிச்சி வெளாடினுகீது. நானு கும்பட்ற ஒத்தக் கை முனியன் மேல ஆணயா சொல்றன், என்னால நம்பவே முடில கவுண்ர…’’ என்றான், திரும்பித் திரும்பி குழந்தையையும் மாட்டையும் கன்னுக்குட்டியையும் பார்த்துக்கொண்டு.
இவ்வளவு நேரம் நடந்தவற்றைப் பார்த்த கவுண்டர், ஒருவாறு என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துவிட்டார். ‘எவ்வளவு எழுப்பியும் எழுந்திரிக்காத குழந்தையை ஆடு மாடுகளுக்கு மட்டுமின்றி அவ்வவ்போது மனிதர்களுக்கும் தன்னால் முடிந்த சிறுசிறு வைத்தியத்தால், அதுவும் தம்மருகில் இருக்கக்கூடிய மரஞ்செடி கொடிகள் கொண்டு செய்யும் மிக எளிய வைத்திய முறையால் ஏன் எழவில்லை என சோதித்து சரிப்படுத்துவேன் என நம்பி தூக்கி வந்திருக்கிறான். கொட்டா, கட்டுத்தெரு எங்கு தேடியும் தான் இல்லாததைப் பார்த்துவிட்டு துடித்துப்போய் கட்டிலில் குழந்தையைப் போட்டுவிட்டு என்ன செய்வது, ஏது செய்வது எனத் தெரியாமல் வெளியில் வந்து நின்று அழுதிருக்கிறான். நான் வருவதற்குள் கட்டிலில் மூச்சிப் பேச்சின்றி பசி மயக்கத்தில் கிடந்த குழந்தையை மாடு தன் நாவால் நக்கி, வருடி உஷ்ணப்படுத்தி எழ வைத்திருக்கிறது.’
வெட்டிப் பிளந்து வரிசையாக அடுக்கியிருக்கும் சிறு விறகுப் பட்டறையோரம் இருந்த பானையிலிருந்து சொரக்குடுவ நிறைய தண்ணீர் மொண்டு வந்து, குழந்தையைத் தூக்கி உட்காரவைத்து குடிப்பாட்டினார். பெரும் பசியில் இருந்திருக்கும்போல, தன் தொண்டை மார்பெல்லாம் வழிய வழிய மொத்த நீரையும் குடித்து முடித்தது. அதற்குள் பூரணியம்மாவும், செவடன் மனைவியும், பரிமளாவும் மழையில் நனைந்துகொண்டு வந்திருந்தார்கள்.
அழுதுகொண்டு வந்த பரிமளாவைப் பார்த்த கவுண்டர், ”வூடு துணிமணிலாம் வெள்ளத்துல போய்ட்டா எல்லாம் போச்சின்னு ஆய்டுமா…? புள்ளக்கி பாலுகூட தராம அப்டி என்னதான் தாய்க்காரியோ நீ…?’’ என்று ஓத்தாமுட்டு விட்டுவிட்டு, கட்டிலில் படுத்து எறவானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த குழந்தையைத் தூக்கி அவள் கையில் கொடுத்து, ”போயி புள்ளக்கி மொதல்ல பாலு தந்து தூங்க வையி. நல்லகாலம் அந்த ஆண்டவன் மாடு ரூவத்துல வந்து ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆவாம காபந்து பண்ணிகீறான்…’’ என்று முகத்தை சற்று கோபமாகக் காட்டி சொல்லிவிட்டு, கருப்பு மாடு பக்கத்தில் போய் நின்று அதன் கழுத்து முகம் உடல் எங்கும் தடவிக்கொடுத்தவர் செவடனிடம், ”இங்கயே மழக்கி ஒதுக்கமா ஒக்காந்திருங்க… தோ வந்துட்றன்’’ என்றார்.
செத்த நேரம் வாசப்படியருகில் போய் நின்று கொட்டும் மழையையும் வானையும் குனிந்து பார்த்துவிட்டு, ”இந்த மழ இப்போதக்கி வுட்ற மாரி தெர்ல… வா போவம்’’ என்று தன் மனைவி பூரணியம்மாவை கூட்டிக்கொண்டு நனைந்தபடி பக்கத்திலிருந்த கொட்டாய்க்குப் போனார்.
மரங்கள் வேரோடு பெயர்த்துக்கொண்டு விழும் அளவுக்கு காற்று பலமாக வீசியது. கவுண்டர் தன் இத்தனை ஆண்டுகால வாழ்நாளில் இப்படி ஒரு மழையைக் கண்டதில்லை என தனக்குள் நினைத்துக் கொண்டார்.
”பெரிபடியால ரண்டு படி அரிசி கீது இதல… என் மச்சான் கொட்டாய்ல போயி எழ்ப்பி வாங்கியாந்தன்… சட்டுனு அடுப்ப மூட்டி ஒல வையி… மழ வுட்டா பாப்பம், இல்லனா சாக்குப் பை போட்டு மூடி எடுத்துனு போயி மக்கிங்குளுக்கு தந்துட்டு வருவம். பாவம், பசில எம்மாந்நேரந்தான் இருப்பாங்க…’’
கட்டில் மீது கிடந்த பச்சைத் துண்டை எடுத்து முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு, ‘அப்பாடா’ என உட்கார்ந்ததும் கவுண்டரின் மனமானது தன்னைமீறி எதையோ யோசிக்க ஆரம்பித்தது.
கவுண்டரின் ஊர், பேருந்து வசதியில்லாத சிறு உட்கிராமம்தான் என்றாலும் மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லாத அழகான ஊர். மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடும் தென்பெண்ணையாறு ஊரின் வடக்குப் பக்கமாக ஓடிவந்து வளைந்து, மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிவரும் இன்னொரு சிறு காட்டாறான பாம்பாறுடன் கலக்கும் இடத்தருகில் இருப்பது. வன்னியர் கோனார் செட்டியார் பாப்பார் பள்ளர் பறையர் இருளர் தொம்பர் அம்பட்டர் வண்ணார் உடையார் துலுக்கர் எனப் பல சாதி மதத்தினர் இருந்தாலும் ஒருநாள் கூட சாதிச்சண்டையோ மதச்சண்டையோ வந்ததில்லை. அப்படியே வந்தாலும் அடுத்த சில நிமிடங்களில் பேசி முடிவுக்கு வந்துவிடும். அண்ணன் தம்பி, மாமன் மச்சான், அக்கா தங்கச்சி என ஒருவருக்கொருவர் உறவுமுறை சொல்லி ஒற்றுமையாக வாழ்பவர்கள். விவசாயம் ஒன்றே வாழ்வாகவும் தொழிலாகவும் கொண்டவர்கள்.
இடி சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து மழை விட்டதுபோல் இருந்தது.
”ஏந்தே, நம்மப் புள்ளிங்குளுக்கு ஒண்ணும் ஆயிருக்காதுல்ல…?’’
இவ்வளவு நேரம் தம் பிள்ளைகளைப் பற்றிய நினைப்பே இல்லாமல் இருந்த கவுண்டருக்கு பூரணியம்மா கேட்டதும்தான், ‘அய்யோ நம்மப் புள்ளிங்குளுக்கு என்ன ஆயிருக்குமோ…?’ என்ற சிந்தையே வந்தது. கூடவே, ‘அதெல்லாம் ஒண்ணும் ஆயிருக்காது’ என்ற தெம்பும்.
அதோடு, ஆற்றை ஒட்டிய பள்ளத்திலிருந்து கோடுபோட்டதுபோல் வரி வரியாக மேடு நோக்கியிருக்கும் தெருக்களையும் வீடுகளையும், மேட்டுத் தெருவில் புளியமரத்தின் அருகிலுள்ள தம் கூரை வீட்டையும், எத்தனை பெரிய வெள்ளம் வந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் எட்டாத இடத்தில் அது இருப்பதையும் நினைத்துக்கொண்டார்.
பூரணியம்மா அப்படியே ஊற்றிக் குடிக்க ஏதுவாக உப்புப் போட்டு துடுப்பால் நன்கு கிளறிவிட்ட கஞ்சிசோற்றை கரித்துணியால் பிடித்து மெதுவாகக் கீழே இறக்கி வைத்தார். வெல்லம் இருந்திருந்தால் போட்டுக் கிளறி இன்னும் வடியவிட்டு இறக்கியிருக்கலாம். அவசரத்திற்கு உப்புதான் இருந்தது.
வெளியே, மழை இனி வரவே வராது எனும் அளவுக்கு வானம் வெளுத்திருந்தது. அதிலும் கிழக்குப் பக்கம் முற்றும் வெளிவாங்கி இன்னும் கொஞ்ச நேரத்தில் பொழுது விடியப்போவதைச் சொன்னது.
கொட்டாயின் வடக்கு மூலையில் அம்மி மேல் கவிழ்த்து வைத்திருந்த இரண்டு குண்டானில் ஆக்கிய சோற்றை பாதி பாதியாகக் கொட்டி எடுத்துக்கொண்டு, வேண்டுமென்றால் இன்னும் போட்டுக்கொள்ள பொட்டலத்தில் மடித்துவைத்திருந்த கல்லுப்பை புடவையில் வைத்து முடிந்துகொண்டு கவுண்டரின் பின்னாலேயே வந்த பூரணியம்மா, கட்டுத்தெருவில் உட்கார்ந்திருந்த செவடனுக்கு குரல்கொடுத்து வரச் சொல்லிவிட்டு, மேட்டுக் கொல்லி கொட்டாவுக்கு நடுநடுவில் சிறுசிறு குட்டையாக நின்றிருக்கும் மழைநீரில் கால் வைத்து சேற்றில் சிக்கிக்கொள்ளாமல் பார்த்து கவனமாக நடந்துபோனார்.
பேர்பாதிபேர் பசியில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சுருண்டு படுத்திருக்க, மீதி பேர் ‘செவடன் தூக்கினுப் போனப் புள்ளக்கி என்னாச்சோ, ஏதாச்சோ…?’ பேச்சுக்கு நடுவில் வெள்ளத்தில் அடித்துப் போன தம் வீட்டைப் பற்றியும் துணிமணிகள் பற்றியும் ஊரிலிருக்கும் மற்றவர்கள் என்னாகியிருப்பார்கள் என்பது பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
பின்னிய தென்னங்கீற்றை வரிசையாகக் கட்டி, அதன்மேல் அறுத்துக் காயவைத்த மஞ்சம்புல் வைத்து வேய்ந்திருந்த கொட்டாய்க்குள் தலை இடித்துக்கொள்ளாமல் குனிந்துபோய், கொண்டுவந்த இரண்டு குண்டானையும் ஓரமாக வைத்துவிட்டு, பால் ஊற்றிக் கொடுத்த இரு சொம்பையும், டீப்பனியையும், அடுக்குச்சட்டியையும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்து பானை நீரில் கழுவிவிட்டு, சின்ன அன்னக்கூடையில் குடிக்கத் தண்ணீர் மொண்டுவர இஸ்மாயிலான் பாய் தொட்டிக்குப் போனார் பூரணியம்மா.
பின்னாலேயே வந்த செவடனையும் பேத்தி பரிமளாவையும் அவள் கையில் கண்விழித்து உட்கார்ந்து சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குழந்தையையும் பார்த்த பேராமுட்டா கிழவி, பெரும் புதையலைக் கண்டதுபோல் ஆர்ப்பரிக்க எழுந்து வந்து, ”எஞ்சாமிடி நீ… ஒனக்கென்னாச்சிடி யம்மா… கொஞ்ச நேரத்துல இந்தக் கெழ்விய துடிதுடிக்க வச்சிட்டல்ல, பாதகத்தி…’’ என்று சொல்லி குழந்தையை வாங்கிக்கொண்டு கீழே படுத்திருப்பவர்களை மிதித்துவிடாமல் மெல்ல தாண்டிப் போய் நெடுங்காலில் சாய்ந்து உட்கார்ந்து விட்ட இடத்திலிருந்து கொஞ்ச ஆரம்பித்தார். பதிலுக்கு, குழந்தையும் சிரிப்புச் சத்தம் காட்டியது பார்த்து கவுண்டரும் செவடனும் புன்னகைத்துக்கொண்டார்கள்.
பூரணியம்மா வந்ததும் படுத்துக்கொண்டிருந்தவர்களை எழுப்பி, ஆளுக்கு கொஞ்சம் கஞ்சிசோறு ஊற்றிக் கொடுத்தார். சுடச்சுட ஊதிஊதிக் குடித்தவர்களின் பசி வேகமாக அடங்கியது. பார்த்து உள்ளுக்குள் மகிழ்ந்த கவுண்டர், அங்கிருந்து மெதுவாக நடந்து வெளியில் வந்து நின்று மழை பெய்து ஓய்ந்திருக்கும் வானையும், தூரத்தில் தொப்பர நனைந்துபோய் சூரியவொளியில் மின்னும் அரசங்கல்லின் பாறைகளையும், அதன் பின்னால் மாசி வேகமாக மேற்கு நோக்கி மிதந்தோட விட்டுவிட்டுத் தெரியும் மூலக்காடு மலையையும் பார்த்தார்.
”இந்த ராவு மட்டும் நீங்க கொல்லில இல்லாமப் போயிருந்தா… நாங்க என்ன கெதி ஆயிருப்பம்னே தெர்ல சாமி.’’
செவடன் சொன்னதைக் கேட்டு திரும்பிய கவுண்டர், ”ஆண்டவன்னு ஒருத்தன் கீற வரிக்கும் கஷ்டத்துல கீறவங்களுக்கு யாரு மூலிமாது ஒத்தாச பண்ணிடுவான். இன்னிக்கது என்மூலிமா நடந்துகீது, அவ்ளதான்…’’ என்றார், பல் தெரியாமல் மெல்ல புன்னகைத்துவிட்டு.
தூரத்தில் தன் பெரிய மகன் மாணிக்கமும், நடுமகன் ஏழுமலையும் சென்ற மாதம் பள்ளிக்கூடத்தில் எனாமாய்த் தந்த புது காக்கி டவுசர் போட்டுக்கொண்டு நடந்து வருவது தெரிந்தது.
மகன்களைப் பார்த்ததில் கவுண்டருக்கு சந்தோசம் என்றாலும், வந்து என்ன சொல்லப் போகிறார்களோ என்னும் பதட்டமும் உள்ளுக்குள் இருந்தது. சற்று தொலைவு வரை மெதுவாக வந்தவர்கள், பக்கம் வரவர வேகமாக ஓடிவந்து கட்டிக்கொண்டார்கள்.
பெரியவன் மாணிக்கம் அழுதுகொண்டு, ”ஐயாய்யா, நம்மூரு கீல தெரு வரிக்கும் ஆத்துல அடிச்சினு போயிருச்சிய்யா… அந்தாண்ட சேரி தெரு முழ்சுக்கும் ஒரு வூடு வுடாம அடிச்சினு போச்சுய்யா’’ கைகளை ஊர்நோக்கி காட்டிக் காட்டி சொன்னான்.
நள்ளுவன் ஏழுமலை, ”வூட்டுவுள்ளார தூங்கினுருந்த கடசிவூட்டு கோபாலு தாத்தாவும் அலமேலு பாட்டியும் வெள்ளத்துல அடிச்சினு போய்ட்டாங்கய்யா. நேத்து சாங்காலம்தான் கோயிலாண்ட கோலி ஆடறப்ப அவுங்க ரண்டுபேத்தயும் நானு பாத்தன்’’ என்றான்.
”போலீஸ்காரங்கலாம் வந்துகீறாங்கய்யா. ஒரே அழ்வ சத்தமா கேட்டு ராத்திரிலாம் பயிந்துனுருந்தோம். எப்படா காலில வரும் கொல்லிக்கி போலாம்னு பாத்துனுருந்தோம்.’’
”வூட்ல நானு, அண்ணன், அக்கா, தம்பி யாருமே தூங்கலய்யா… தம்பிதான் வுடாம அழ்துனே இருந்தான், பாவம். கதவ தொறக்கக் கூட பயமாருன்ச்சி… பொத்துல வழியாதான் வெளிய பாத்தோம்.’’
இருவரும் மாறி மாறி சொல்லக் கேட்ட கவுண்டர், ”சேரி சேரி அழ்வாதீங்க. கொட்டாயில கீறா பாரு அம்மாக்காரி, போங்க அவக்கிட்ட…’’ என்று சொல்லி இருவரது கண்களையும் தோள்மேல் போட்டிருந்த துண்டால் துடைத்துவிட்டு, கொட்டாவுக்குள் அனுப்பி வைத்தார்.
சரியாக அதேநேரம், முரம்புக் கொல்லி தாண்டி மேடேறி போலீஸ் வண்டி ஒன்று முத்துசாமிக் கவுண்டரை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தது.
[இன்னும்]
*