முரம்பு – 1

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த முத்துசாமிக் கவுண்டரை கட்டுத்தெருவில் கட்டியிருந்த கருப்பு மாடு கயிறை அறுத்துக் கொண்டு வந்து தன் நாவால் வலதுகை மணிக்கட்டில் தடவி எழுப்பியது. தன் மனைவி பூரணியாகத்தான் இருக்கும் என நினைத்தார், இல்லை. மெல்ல எழுந்து உட்காருவதற்குள் நான்கைந்து தடவை தடவித் தடவிக் கூப்பிட்டு, வெளியில் செல்லும் வாசல்படியைக் காட்டியது. அதுவரை லேசான மழைச்சத்தம் மட்டுமே கேட்டவருக்கு, யாரோ அடிவயிற்றிலிருந்து கத்தி அழும் சத்தம் மிகப் பக்கத்தில் கேட்டது. என்ன ஏதெனப் பதறியடித்து ராந்தல் வெளிச்சத்தில் அட்டணையில் வைத்திருந்த சில்லாக்கோலை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். மழை நின்று வானம் லேசாக வெளுத்து பொட்டுப் பொட்டாகத் தூறிக்கொண்டிருந்தது.

முத்துசாமிக் கவுண்டர் இரவு சற்று தாமதமாகத்தான் தூங்கிப்போனார். எப்போது சிறு சத்தம் கேட்டாலும், வெளிச்சம் வந்தாலும் உடனே எழுந்துகொள்பவர், எப்போதாவதுதான் இதுமாதிரி அடித்துப்போட்டது போல் உறங்குவார். அதிலும் நேற்றிரவு தன் கொட்டாயில் இருந்து கொல்லன் பெரும் பதட்டத்தோடு வந்து, ‘என்னனே தெர்ல மாமா, நாலஞ்சிநாளா பெரியாடு ரண்டும், சின்னாடு ஒண்ணும் எதயும் தின்னமாட்டுது. மல்லாட்டக்கொடி, வேலங்கா, புண்ணாக்கு, தழங்கன்னு எல்லாம் தந்து பாத்துட்டன். கஞ்சித்தண்ணி, பச்சத்தண்ணிகூட வச்சிப் பாத்துட்டன் குடிக்க மாட்டுது. ஒடம்பெல்லாம் நெருங்கிப்போயி எலும்பும் தோலுமா நிக்கிது. இப்டியே வுட்டா இன்னும் செத்த நேரத்துல செத்துடுமோன்னு பயமாருக்கு மாமா. அதான் வேற போக்கில்லாம மழயில ஒடியாந்தன்’ என்று அழுதுகொண்டு சொன்னதைக் கேட்டுவிட்டு மனசு கேட்காமல் எறவானத்தில் செருகியிருந்த பெரிய கொடுவாளை எடுத்துக்கொண்டு கொட்டும் மழையில் சாக்குப்பையை தலைக்குப் போட்டுக்கொண்டு தெக்க குட்டக்கிணறு தாண்டி அருணாச்சலம் செட்டியார் கொட்டா வழியாக ஓடையைக் கடந்துபோய் வைத்தி கொல்லியோரம் ஓடைக்கரையில் இருந்த குட்டிப்புளியம் பட்டை கால் படி அளவுக்கு கொடுவாளால் சீவி தன் துண்டில் போட்டு கட்டிக்கொண்டு, பாலு செட்டியார் கயனியொட்டிய வெட்டுப்பாறை வழியில் சோமாசம்பாறை ஏறி, படிசுனைக்குக் கிழக்குப் பக்கமாக பள்ளத்தில் காரைக்கும் பூலாவுக்கும் மத்தியில் பெரண்டைக்கொடி ஏறியிருக்கும் கலர்வீதி மரப் பட்டையில் கொஞ்சம் கொடுவாளால் கீறி உரித்து எடுத்துக்கொண்டு கொல்லன் கொட்டாய்க்குச் சென்று அங்குள்ள குத்துரலில் இரண்டையும் போட்டு நன்றாக இடித்து, தண்ணீரில் கலந்து வடிக்கட்டி, ஆட்டுக்கு ஒருசொம்பு வீதம் தன் கையால் கொடுத்துவிட்டு, ‘எதுக்கும் கவலப்படாமப் போயி நிம்மதியா படு கொல்லா. செத்த நேரத்துல தானா ஆடுங்க மேய ஆரம்பிச்சிடும்’ என நம்பிக்கை வார்த்தை சொல்லிவிட்டு, கிடுகிடுவென ஆசா பாய் கிணத்து மேடு ஏறி இறங்கி தொப்பரையாக நனைந்தபடி கொட்டாய்க்கு வந்து கண்ணயர்ந்து கட்டிலருகே தென்னங்கீற்றை விரித்துப்போட்டு வெறுங்கையை தலையணையாய் வைத்துப் படுத்திருந்த பூரணியம்மாவின் தூக்கத்தைக் களைக்காமல் மெல்ல கட்டில்மீது போட்டிருந்த தேங்காய்ப்பூ துண்டால் தலை உடல் கை கால் எல்லாம் துடைத்துவிட்டு, கட்டிய ஈரச்சோமம் மாற்றிக்கொண்டு சற்று தள்ளி உரியில் டீப்பனியில் வைத்திருந்த சாம சோற்றில் அடுப்புத் திட்டுமீது மோர் சொம்பில் சிறு கிண்ணம் போட்டு மூடிவைத்திருந்த முருங்கக்கீரை சாம்பாரை ஊற்றிப் பிசைந்து பசியின்றி உண்டுவிட்டு படுத்ததுதான் தெரியும், சற்று நேரத்தில் பூரணியம்மா எழுந்து அருகில் வந்து, ‘ஏந்தே, கொல்லன் கொட்டாய்க்குப் போன காரியம் என்னாச்சு…? ஏன், காலிலதான் ஏன்ச்சி போனாக்கா என்ன…? எதுக்கிந்த நடு ராவுல கொட்ற மழயில காலு நிக்காம ஓடணும்…?’ எனக் கேட்டது, சற்று தள்ளியிருக்கும் கட்டுத்தெருவின் வடக்குப் பக்கம் அடித்த சாரலில் மாடு நனைந்து குளிரில் நடுங்கிக்கொண்டு கத்தியது கேட்டு, கட்டிய புடவையின் தலப்பைத் தலையில் போட்டுக்கொண்டு ஓடிப்போய் அதை அவிழ்த்து நெடுங்காலில் கட்டிவிட்டு வந்தது எதுவும் தெரியாமல் அசதியில் ஒரு சடலம்போல் உறங்கிக்கொண்டிருந்தார்.

”இம்மாங்காலமா பாடுபட்டு சம்பாரிச்ச வூடு சட்டிபான துணிமணி எல்லாம் ஆத்தோட பேச்சே…’’

”ஏய் கெய்வி எதுக்குடி இப்ப வெண்டுவரிக்கும் கத்தி அய்வுறவ…?’’

”உயிரோட தப்சமேன்னு சந்தோசப் படறத வுட்டுட்டு, துணி போச்சு மயிரு போச்சுனு அய்வறா பாரு முண்டகலப்பி…’’

குரல் வந்த திக்கு நோக்கி எட்டி நடந்த கவுண்டருக்கு ஒன்றும் புரியவில்லை. யாராக இருக்கும்? அதுவும் இந்த தனித்த மழை இரவில் விடிவதற்கு இன்னும் இரண்டுமணி நேரமே இருக்கும் சமயத்தில், ஊரைவிட்டு தள்ளியுள்ள கொல்லிக்காட்டில் வந்து வாழ்வே சூன்யமானதுபோல் அழுவதும் பேசுவதுமாக. 

பத்துப் பதினைந்து பேர் பிள்ளை குட்டிகளுடன் தன் முரம்பு கொல்லியோர துரிஞ்ச மரத்தடியில் கட்டின ஈரத்துணியோடு நின்றிருந்தார்கள். இரண்டு மூன்று பேர் மட்டும் தலையிலும் கையிலும் துணி மூட்டையும், குண்டான் சட்டியும் வைத்திருந்தார்கள். இன்னும் சிலர், தவுலத்கான் சாயுபு கொட்டாய் தாண்டி வரும் சத்தம் கேட்டது.

கூட்டத்தில் கிழிந்த ஈரத் துண்டை தன் நான்கு வயது மகனின் தலையில் போட்டிருந்த செவடன் ஓடிவந்த கவுண்டரைப் பார்த்துவிட்டு, ”ஐயா சாமி… எங்க வூடெல்லாம் ஆத்து வெள்ளத்துல அடிச்சினு போயிரிச்சிய்யா…’’ பெருங்குரலெடுத்து கத்திக்கொண்டு வந்து தோளில் வைத்திருந்த பிள்ளையை அவர் காலின் கீழே போட்டுவிட்டு தானும் தரையில் விழுந்தான்.

செவடன், தாழ்ந்த சாதியைச் சேர்ந்த உயர்ந்த உழைப்பாளி. தன் கட்டையை ஒருநாள்கூட தரையில் வெறுமே சாய்க்கக்கூடாது எனும் உறுதியோடு இருப்பவன். அதிலும் முத்துசாமிக் கவுண்டரை தன் ஆதர்சமாகக் கொண்டவன். ‘டேய் செவடா, போயி அவன வெட்டிட்டு வாடா’ என்றால் மறுபேச்சு பேசாமல் போய் வெட்டிவிட்டு வருவான். பசி பட்டினி நோய்நொடி எது வந்தாலும் கவுண்டர் தவிர வேறு யாரிடமும் சென்று நிற்காதவன். தன் தந்தைக்கும் ஒருபடி மேலாக, இன்னும் சொன்னால் தான் கும்பிடும் ஒத்தக் கை முனியனுக்கு நிகராக வைத்து வணங்குபவன். சாமியே தம் அழுகுரலைக் கேட்டு காப்பாற்ற நேரில் வந்துவிட்டதாய் நினைத்து தனக்கு முன் தன் குழந்தையை கவுண்டரின் காலடியில் போட்டுவிட்டு ‘தொப்பென’ விழுந்தான்.

”ஏய் செவடா… என்னடா இது அறியாப்புள்ளயாட்டம் வந்து கால்ல வீந்துகினு, ஏந்திரிடா’’ என்று சொல்லிக்கொண்டு கீழே குனிந்து அழுதுகொண்டிருந்த குழந்தையை முதலில் தூக்கினார்.

குழந்தை அழுதழுது தேம்பல் கண்டிருந்தது. மழையிலும் ஆற்று நீரிலும் வெகுவாய் நனைந்துபோய் காய்ச்சல்  அடித்துக்கொண்டிருந்தது. நெற்றி, கழுத்து, கன்னம் என வரிசையாய் தொட்டுப்பார்த்தவர், தலைமுடியிலிருந்து ஈரத்துளி வழிந்து கன்னத்தில் இறங்குவதைப் பார்த்துவிட்டு, தன் தோள்மேல் போட்டிருந்த வெள்ளைத் துண்டை எடுத்து துவட்டிவிட்டார்.

அதற்குள் மரத்தடியில் நின்றிருந்த ஆண்களும் பெண்களும் தங்கள் பிள்ளை குட்டிகளோடு வந்து கவுண்டரை சூழ்ந்துகொண்டார்கள். செவடன் மெல்ல எழுந்து, கூனிக்குறுகி வார்த்தையற்று நின்றான். பேராமுட்டா கிழவியும் செவடன் மனைவியும் மட்டும் சிறுகுரலில்  அழுகையை விட்டுவிட்டுத் தொடர்ந்தார்கள்.

”சாங்கியாலம் வரிக்கும் அராறு தண்ணிதான் போயினிருன்ச்சு. திடுதிப்புனு பாஞ்சாமத்துல ஏறி வூட்டுவுள்ளார வந்துருச்சு. கதவோரத்துல படுத்துனுருந்த புள்ள நனஞ்சிபோயி அய்வனதும்தான் பாத்தன். என்ன பண்றது, ஏது பண்றதுனு தெரியாம, புள்ளய தூக்கினி வெளிய ஓடியாந்து மோட்டு மேல நின்னா… கண்ணு முன்னாலயே வூடு கொஞ்ச கொஞ்சமா அடிச்சினு போயிடிச்சியா. போவ திக்கில்லாம உசுரக் கையில புடிச்சினு கல்லுமுள்ளு பாக்காம இங்க ஓடியாந்டம்யா…’’ செவடன் சொல்லிக்கொண்டு அழுவதைப் பார்த்த அழாதவர்களும் கூட சேர்ந்து அழ ஆரம்பித்தார்கள்.

”குடிக்க தண்ணிவண்ணி இல்லாம ராப்பகலா கெழவனும் நானும் பாடுபட்டு சேத்துவச்ச வூடு, துணிமணிலாம் தண்ணியோட தண்ணியா வெள்ளத்துல போச்சே சாமி…’’

பேராமுட்டா கிழவி அழமுடியாமல் அழுதுகொண்டே வந்து கவுண்டரின் காலில் விழப்பார்த்தார். தடுத்து நிறுத்திய கவுண்டருக்கும் கண்கள் லேசாகக் கலங்க ஆரம்பித்தது.

தென்பெண்ணையாறு வருடம் முழுக்க நீரோடும் வற்றாநதி. அதிலும் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு உண்டாகி மரம், செடிகொடி, இலை, பூ, காய், பழம், முள் என அடித்துக்கொண்டு இரு கரைகளும் தொட்டுப் போகும் அழகைப் பார்க்க கண்கோடி வேண்டும் என்பார்கள். ஆற்றின் தென்கரையில் ஊர் இருப்பதால் குடிநீருக்கும் பாசனத்துக்கும் எப்போதும் பஞ்சம் வந்தது கிடையாது. ஆனால் கடந்தாண்டு மழை பொய்த்துப் போனதில் ஆறு முற்றிலும் வற்றிக் காய்ந்து அம்சி மடுவு, ஈஸ்வரன் மடுவில் மட்டும்தான் தண்ணீர் இருந்தது. இந்தாண்டோ, அப்படியே நேர்மாறாக சென்ற ஆண்டுக்கும் சேர்த்து மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்ததில் சாத்தனூர் அணை தன் முழுக்கொள்ளளவை எட்ட, தயவு தாட்சன்யமின்றி நீர் திறந்துவிடப்பட்டது. அப்படியும் ஓரிடத்தில் அணையில் லேசாக விரிசல் விட, ‘இதற்குமேல் விட்டால் அணை உடைந்து பெருநாசம் விளையக்கூடும்’ என அஞ்சிய அதிகாரிகள், சட்டென யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பெரும்நீரை திறந்துவிட்டுவிட்டார்கள். அதனால் ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு கரையோரம் உள்ள ஊர்களும் பயிர்களும் சில உயிர்களும் இரவோடு இரவாக அடித்துப்போயின.

அழுகையும் கண்ணீரும் மட்டுமே சொந்தமாகக் கொண்டு நிற்கும் செவடனிடமும் அங்குள்ளவர்களிடமும் என்ன சொல்வது எனத் தெரியாமல் கூட்டிப் போய் தன் மேட்டு நிலத்தில் வேப்ப மரத்தருகில் ஆடு மாடுகளுக்காகப் போட்டிருந்த புதுக் கொட்டகையின் மூலையில் கட்டுக்கொடியால் சுருட்டிக் கட்டிவைத்திருந்த சாக்குப்பைகளை அவிழ்த்து வரிசையாக விரித்துப் போட்டு அதில் உட்கார வைத்தார்.

”வக்கத்த மக்கிங்க நாங்க எங்க போவம் சாமி…? எங்க கொற காலத்த இனிமேலு எப்டிதான் ஓட்டப்போறம்னு தெர்லயே…?’’

”வூட்டோட சேத்து எங்களயும் அந்த ஆத்தா கொண்டுனு போயிருந்தா, இப்டி சீப்பருக்காம நிம்மிதியா போயிருப்பமே… உயிர இந்தாடின்னு கைல தந்துட்டு, வேடிக்க பாக்கறது அந்த முண்டக்கண்ணிக்கே அடுக்குமா…?’’

”வந்துரும் வந்துரும்னு நம்பனப்பலாம் ஏமாத்தன மழ… இப்டி மானத்த கீச்சினு வந்து எங்க வாயி வவுத்துல அடிச்சிருச்சே…’’

சாக்குப்பையில் கட்டிய மாராப்பு இல்லாத ஈரப்புடவையோடு உட்கார்ந்ததும் அதுவுமாக, வாயில் வந்ததெல்லாம் சொல்லி ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்த பேராமுட்டா கிழவியை ஓர் அதட்டு அதட்டி நிப்பாட்டினான் செவடன்.

சற்று முன்பு வரை வெளுத்திருந்த வானம் திரும்பவும் கருக்க ஆரம்பித்தது. நாலா பக்கமிருந்தும் தவளையோடு சேர்ந்து இன்னும் சில பெயர் தெரியாத பூச்சிப்பொட்டுகளும் கத்தும் சத்தம் முன்னைவிட அதிகமாகக் கேட்டது. காற்றும் உடன் வலுக்க, கடைசி அழுகுரலும் கொஞ்ச கொஞ்சமாக அடங்கியது.

அதற்குள் தன்னருகில் கட்டிலில் படுத்திருந்த கணவரைக் காணாமல் எழுந்து தேடிக்கொண்டு வந்து பின்னால் நின்ற பூரணியம்மா, ”எதுக்கு தே, நம்முளுக்கு இந்த வேண்டாத வேல…?’’ என்றார், அங்குள்ளவர்களைப் பார்த்துவிட்டு. அவருக்கு மட்டும் கேட்கும் குரலில்.

கேட்ட கவுண்டருக்கு சுர்ரென கோபம் தலைக்கேறிவிட்டது.

”பாவம், வூடு துணிமணியலாம் வெள்ளத்துல வுட்டுட்டு கட்ன துணியோட வந்து நிக்கறாங்க. பாத்துனு சும்மாருக்க சொல்றியா…? சூத்த மூடினு போடி, ஈத்தரபோறன்.’’

கவுண்டரைக் காட்டிலும் பூரணியம்மா, இல்லாதவர்களுக்கு கேட்காமலேயே தேடிப் போய் உதவக்கூடியவர். ஏதோ தூக்கக் கலக்கத்தில் இப்படிக் கேட்டுவிட்டார். கவுண்டர் திட்டிவிட்டு போனதும்தான் தான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்தார். எப்போதும் தன் மூன்று மகன்களில் யாரிடமாவது கொல்லியில் உள்ள கணவருக்கு இரவு உணவை கையெழுத்து மறைவதற்குள் கொடுத்தனுப்புபவர், அதிசயமாக இன்று தானே கொண்டுபோய் தந்துவிட்டு காலையில் மழை விட்டதும் புளிச்சக்கீரை ஆய்ந்துகொண்டு வருவதாகத் தன் ஒரே மகளிடம் சொல்லிவிட்டு, கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் சாக்குப்பையை தலைக்குப் போட்டுக்கொண்டு பொடிநடையாக வந்துவிட்டார்.

அங்கிருந்து வேக வேகமாக நடந்து முரம்புக் கொல்லி அருகில் மேற்கால பக்கமாக இருந்த கொட்டாவுக்குள் வந்த கவுண்டர், சில்லாக்கோலை ஓரமாக மல்லாட்டை மூட்டை மீது சாய்த்து வைத்துவிட்டு, பக்கத்தில் பாதி கிழிந்துபோன துப்டி போட்டு மூடியிருந்த அடுக்குச்சட்டியை எடுத்துக்கொண்டு போய் கட்டுத்தெருவில் கட்டியிருந்த கன்னுக்குட்டியை அவிழ்த்து, சற்று முன்னால் தன்னை வந்து எழுப்பிவிட்டுப் போன கருப்பு மாட்டில் கொஞ்ச நேரம் பால்குடிக்க விட்டு பிடித்துக்கட்டிவிட்டு, பால் கரந்து வந்தார்.

முத்துசாமிக் கவுண்டர் ஊர் பெரியவர்களில் ஒருவர். அடுத்த ஆவணி பதினாறு வந்தால் ஐம்பத்தி நான்கு வயது. நல்லது கெட்டது எது ஊரில் நடந்தாலும் தனக்குத் தெரியாமல் நடக்காது எனும் அளவுக்கு முக்கியமானவர். தன் ஒடிசலான தேகத்தைக் கொண்டு ஒருவரும் நினைத்துப்பார்க்காத அளவுக்கு உழைக்கக்கூடியவர். பெரும் பணக்காரர் இல்லை என்றாலும் சொல்லிக்கொள்ளும் படியான அளவுக்கு நிலமும் திறனும் மதிப்பும் கொண்டவர். குறிப்பாக, பள்ளத்தில் இருக்கும் ஒன்றரை ஏக்கர் முரம்பு நிலம், தன் அப்பா அவருக்குத் தந்துவிட்டுப் போனது. நெல் கரும்பு போன்ற நீர் அதிகம் தேவைப்படும் பயிர்கள் பயிரிடமுடியாத வானம் பார்த்த பூமி என்றாலும், மல்லாட்டை சாமை கம்பு எள்ளு என எது போட்டாலும் மானாவாரியாக விளையக்கூடியது. ஊரிலிருந்து மேற்கில் ஒண்ணரை மைல் தொலைவில் இருக்கும் கொல்லைக்கு நாள் தவறாது வந்துவிடுவார். அதிலும் பயிர் அறுவடை காலங்களில் கொட்டகையிலேயே இரவு படுத்துத் தூங்குவது வழக்கம். அப்படி மேற்குத் துண்டு தவிர மற்ற ஆறு துண்டிலும் போட்டிருந்த மல்லாட்டைக்கு துணையாகக் கடந்த பத்து நாட்களாகக் கொல்லியில் தங்கியிருந்தவர். விடாமல் இப்படி மழை பெய்வதால் இந்தாண்டு ஏதோ பெரும் ஆபத்து ஒன்று நிகழப்போவதை முன்னமே உணர்ந்திருந்தார். அதுவும் அந்த ஆபத்து நீர் வடிவில் வரும் என ஒருபோதும் அவர் எதிர்பார்க்கவில்லை.

கரந்த பாலை எடுத்துப்போய் கொட்டகையின் தென்கிழக்கு மூலையில் இருக்கும் அடுப்பின் மீது  வைத்துவிட்டு, கட்டிலுக்கடியில் மழையில் நனையாமல் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த சுள்ளிக் குச்சிகளில் அரி அள்ளிப்போய் உடைத்துப் பற்றவைத்து காய்ச்சினார்.

பூரணியம்மாவுக்கு கவுண்டர் எதற்காக இத்தனை வேகமாக பால் கரந்துவந்து அதுவும் இந்த நேரத்தில் காய்ச்சுகிறார் எனப் புரிந்துவிட்டது. மெல்ல அவர் பின்னால் போய் நின்று மாடத்தில் கவிழ்த்து வைத்திருந்த படி சொம்பையும் ரோட்டா சொம்பையும், பக்கத்தில் மூட்டை மேல் கழுவிக் காயவைத்திருந்த சின்ன டீப்பனியையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்து, மூங்கில் தடுக்கு ஓரமாக பெரிய குண்டானில் நிரம்பியுள்ள மழைநீரில் அவற்றை நன்கு கழுவிவிட்டு உள்ளே போனார்.

”இந்தா… இந்தப் பால கொண்டுனு போயி கொட்டாயில கீற புள்ளிங்களுக்கு ஊத்திக் குடு. பாவம், எல்லாம் அய்தய்து சோந்துபோயி கெடக்குதுங்க.’’

கவுண்டர் சொன்னதைக் கேட்டு அதற்காகவே காத்திருந்தவராய் வாங்கிக்கொண்டு, மழை வருவதற்குள் காலில் பொத்த நெருஞ்சி முள்ளையும் பிடுங்கி எறியாமல் மேட்டுக் கொல்லி கொட்டாய்க்குப் போன பூரணியம்மா, அழுக்கு மூட்டைகள் போல் நெருங்க நெருங்க அங்கே சாக்குப்பை மீது சுருண்டுகிடந்த குழந்தைகளுக்கும் பேராமுட்டா கிழவிக்கும், மொண்டி கிழவனுக்கும் ஆளுக்குக் கொஞ்சம் சுடுபால் ஊற்றிக்கொடுத்துவிட்டு, கடைசியாக செவடனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் ஊற்றிக்கொடுத்தார்.

மழையில் நனைந்துபோய் பசியில் அழுதழுது தாயின் மடியில் தூங்கிப்போயிருந்த குழந்தை ஒன்று மட்டும் எவ்வளவு எழுப்பியும் எழவில்லை.

[இன்னும்]

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=