முரம்பு – 8

கழுவி திருநீறு தொட்டு பூசையிட்ட அன்னக்கூடையில் அரிசியைக் கொட்டி பொங்கல் வைக்க சிறு குண்டான், மூட மெல்லிசான தட்டு, கிண்ட கரண்டி, தண்ணீர் மொண்டு ஊற்ற ரோட்டா சொம்பு, மஞ்சப் பையில் பெரிபடி பச்சரிசி, வெல்லம், வெற்றிலை பாக்கு, வத்தி, கற்பூரம், தேங்காய், காகிதத்தில் தனித்தனியாக மடித்த மஞ்சள், சிவப்பு, கெதம்பொடி எல்லாம் வைத்து சிம்மாடு கொய்லி தலையில் தூக்கிக்கொண்டு பூரணியம்மா முன்னால் நடக்க, அவரோடு வர்ணக்கோல் எடுத்துக்கொண்டு முருகனும், தண்ணீர் மொள்ள சின்னத் தவலையை எடுத்துக்கொண்டு செல்வியும் போனார்கள்.
தெருமுக்கு போவதற்குள் மாட்டுக்குக் கட்ட புதுக் கயிறு எடுத்துக்கொண்டு முத்துசாமிக் கவுண்டரும், பின்னாலேயே மாட்டுக் கொம்புக்கு வண்ணம் அடிக்க இரு வண்ண டப்பாவும், வைத்துப் படைக்க பன்னிக்கரும்பும் எடுத்துக் கொண்டு மாணிக்கமும் ஏழுமலையும் வந்தார்கள்.
இந்த ஆண்டு கொல்லிக்குச் சென்று பொங்கலிடாமல் வீட்டிலேயே மாட்டைப் பிடித்து வந்து கட்டி இடலாம் என்றுதான் கவுண்டர் முதலில் நினைத்தார். காரணம் பூரணியம்மா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இன்றோ நாளையோ அல்லது அதற்கடுத்த நாட்களிலோ வலி வரலாம், எப்போது வேண்டுமானாலும் குளிகுளிக்கலாம் என்று எண்ணினார். ஆனால் பூரணியம்மாதான் விடாப்பிடியாகக் கொல்லியில் போய் நம் முரம்பு மண்ணில்தான் மாட்டுப் பொங்கல் கும்பிட வேண்டும் என சொல்லிவிட்டார். அதனால் கவுண்டரும் மறுப்பு சொல்லாமல் ‘சரி’ என்றார்.
என்றபோதும் கவுண்டருக்குள் ஒருவித தயக்கமும் பயமும் இருந்தது. எங்கே அதை வெளியில் சொன்னால் பூரணியம்மா வருத்தப்படுவாரோ என நினைத்து சொல்லாமல் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டார்.
தவுலத்கான் சாயுபு கொட்டா தாண்டி முடியனூரான் கொல்லி மொடக்கு திரும்பும்போது, கொட்டாயின் முன்னால் இருந்த பெரியகல்லின் மீது யாரோ உட்கார்ந்திருப்பது தெரிந்தது. செவடனாகத்தான் இருக்குமென கவுண்டர் நினைத்தார். செவடனேதான். மஞ்சப் பையில் எதையோ வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
”நானுதான் மொதல்ல போவன்’’ என கத்திக்கொண்டு வேகமாக முரம்புக் கொல்லி மேடேறி, முதலில் ஓடிப்போய் கொட்டாயின் முன்னாலிருந்த கோழிக்கூண்டின் மேல் உட்கார்ந்தான் முருகன்.
மெல்ல பின்னால் போய் கொட்டா முன்னால் நின்று, தலையிலிருந்த அன்னக்கூடையை இறக்கிக் கீழே வைத்த பூரணியம்மா, ”எம்மா செல்வி… தம்பிய கூட்டுனு போயி கோனாமூட்டு தொட்டில தண்ணி மொண்டுனு வா, தாயி’’ என்று சொல்லிவிட்டு கொட்டாவுக்குள் போனார்.
பின்னாலேயே வந்து தன் கையில் வைத்திருந்த புதுக் கயிறை ஏழுமலையிடம் தந்த கவுண்டர், ”இந்தா… எல்லாத்தயும் கொண்டுனு போயி பூசக்கூட கிட்ட வைங்க’’ என்றுவிட்டு எழுந்து நின்ற செவடனை பார்த்துப் புன்னகைத்து, ”வா செவடா… நல்லாகீறியா…? ஊரு மக்கிங்கலாம் நல்லாகீறாங்களா…?’’ என்று கேட்டுக்கொண்டே கட்டுத்தெருவுக்குள் போய் நெடுங்காலில் கட்டியிருந்த கருப்பு மாட்டை அவிழ்த்தார்.
”எல்லாம் நல்லாகீறாங்க, கவுண்ர…’’ என்று சொல்லிக்கொண்டு பின்னாலேயே போன செவடன், மஞ்சப் பையில் மாட்டின் கழுத்தில் கட்ட எடுத்துவந்திருந்த சிறு மணியைக் கட்டில்மேல் வைத்துவிட்டு, கன்னுக்குட்டியை அவிழ்த்துப் பிடித்துக்கொண்டு தயாராக நின்றான்.
மெல்ல வெளியில் வந்து கொட்டாயின் முன்னால் நின்று மாணிக்கத்திடம் பேசிக்கொண்டிருந்த பூரணியம்மாவிடம், ”ஏன் பூர்ணி… நானும் செவடனும் போயி மாட்ட குளுப்பாட்டினு வரம்… எல்லாந் தயாரு பண்ணி வைய்யி’’ என்று சொல்லிவிட்டு, மேற்கே போகும் கொடிவழியில் செவடனைக் கூட்டிக்கொண்டு நடந்தார் கவுண்டர்.
என்னதான் கவுண்டர் மாட்டைப் பிடித்துக்கொண்டு தனக்கு முன்னால் நடந்துபோனாலும் அவர் சிந்தை முழுக்க வேறு எதிலோ இருப்பதைக் கவனித்த செவடன், எதுவும் பேசாமல் அமைதியாகப் பின்னால் நடந்தான்.
நேற்று மதியம் சரியாக இதேநேரம், கவுண்டரும் முருகனும் கொல்லியிலிருந்து வர்ணக்கோலும் வீட்டுக் கூரையில் செருக பொங்கத்தழையும் எடுத்துக்கொண்டு போகும்போது, வீட்டின் முன்னால் கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு என்னாச்சோ ஏதாச்சோ என பதறியடித்து கையில் கொண்டுவந்ததைக் கீழே போட்டுவிட்டு ஓடிக்கொண்டிருந்தார்கள்.
கூட்டத்தின் உள்ளே நுழையும் முன்னமே அம்மாசி பாட்டியின் குரல் பெரிதாகக் கேட்டது. மெல்ல விலக்கி உள்ளே போன கவுண்டர், திண்ணையில் அவரது ஐந்து வயது பேத்தி இரண்டு நாட்களாக அடித்த காய்ச்சலில் உடல் சோர்ந்துபோய் பேச முடியாமல், கை கால் அசைக்கமுடியாமல் கிட்டத்தட்ட முக்கால்வாசி பிணம்போல் கிடப்பதைப் பார்த்தார்.
”இனி பொழக்கிறது கஷ்டந்தான்’’ என்றார்கள் பார்த்த பலரும்.
அதுவும் பள்ளத்துத்தெரு போடுமுட்டைகளோடு கூடிக்கொண்டு மட்டமத்தியானத்தில் ஆற்றோர புளியமரத்தில் புளியம்பழம் பொறுக்கப் போய் எதையோ கண்டு பயந்ததால் வந்த காய்ச்சல் என்பதால், ”பாவம் அறியாப்புள்ள… இனி அந்தக் கடவுளுதான் அத காபுந்து பண்ணணும்’’ என்று வடக்குத் தெரு முனுசாமியும் ராமலிங்கமும் பேசிக்கொண்டார்கள்.
தாயில்லாத குழந்தை. தன் மருமகள் நினைவாக அம்மாசி பாட்டியிடம் இருக்கும் ஒரே ஜீவன். அதற்கும் இந்நிலை என்பதால் துடித்துப்போய் போட்ட கூச்சலில் ஊரே கூடிவிட்டது. என்னென்னமோ செய்துபார்த்துவிட்டார், சரியாகவில்லை. கடைசி நம்பிக்கையாக முத்துசாமிக் கவுண்டரிடம் திருநீறு பிடித்துப்போட தூக்கிவந்திருந்தார்.
அம்மாசி பாட்டி மட்டுமல்ல. ஊரில் சாதி மதம் பார்க்காமல் யாருக்கு உடம்பு சரியில்லை என்றாலும் கவுண்டரிடம் நம்பிக்கையோடு தூக்கிக்கொண்டு வந்துவிடுவார்கள். மறுப்பு சொல்லாமல் அவரும் மகிழ்வோடு கடவுளிடம் வேண்டி, தன் கையால் திருநீறு பிடித்துப்போடுவார், சரியாகிவிடும்.
கவுண்டர் குழந்தையின் நெற்றி கன்னம் கை கால் எங்கும் தொட்டுப் பார்த்துவிட்டு, நடுவீட்டுக்குப் போய் சாமி படத்தின் கீழே உட்கார்ந்து அம்மாசி பாட்டியின் மகன் பெரியசாமி வாங்கி வந்திருந்த வெற்றிலை பாக்கை முன்னால் வைத்துப் படைத்து, வத்தி கற்பூரம் ஏற்றி கையெடுத்துக் கும்பிட்டு கண்கள் மூடி உள்ளுக்குள் எதையோ முணுமுணுத்து பிரார்த்தனை செய்தார்.
இரண்டு நிமிடங்கள் செய்திருப்பார். கண்களை மெல்ல திறந்து, ”போயி புள்ளய தூக்கியாங்க…’’ என்றார்.
வெளியில் ஓடிப்போய் திண்ணையில் படுக்கப் போட்டிருந்த பிள்ளையைத் தூக்கி வந்தார்கள்.
திருநீறு தட்டிலிருந்து பிடி விபூதி எடுத்து குழந்தையின் தலையில் போட்டுவிட்டு, நெற்றியில் சிறு கோடு கிழித்ததுபோல் பொட்டிட்டு, கட்டை விரலாலும் ஆல்காட்டி விரலாலும் ஒருசேர கழுத்தில் தடவிவிட்டு, இன்னும் பிடி அள்ளி அம்மாசி பாட்டியிடம் தந்து, ”வூட்டுக்குப் போயி புள்ளயோட ஒடம்பெல்லாம் பூசிவுட்டுட்டு… செத்த திர்நீற தண்ணில போட்டு குடுப்பாட்டு. ராவுக்குள்ள சரியாப்புடும்… அதுக்கப்றம் அந்த ஆண்டவன் வுட்டவழி’’ என்றார்.
தான் கும்பிடும் பெரியாயி அம்மனே கவுண்டர் உருவில் வந்து சொன்னதாகக் கேட்டு, தெம்போடு குழந்தையைத் தூக்கிக்கொண்டு போனார் அம்மாசி பாட்டி.
நேற்று நடந்த இச்சம்பவத்தை நினைத்துக்கொண்டு முன்னால் நடந்த கவுண்டர், எதுவும் பேசாமல் கன்னுக்குட்டி பிடித்துக்கொண்டு பின்னால் வந்த செவடனிடம் திரும்பிப் பார்க்காமலே, ”ஏன்டா செவடா… என்ன ஆளு ஒருமாரியா கீறமாரி தெரிது…?’’ என்று கேட்டார்.
தான் சொன்னதைக் கேட்டு எதுவும் சொல்லாமல் மெளனமாக வந்த செவடனை கவுண்டர் நின்று திரும்பிப் பார்த்ததும், ”ஒண்ணுல்ல கவுண்ர…’’ என்றான் மெல்ல.
ஏதோ இருக்கிறதென நினைத்த கவுண்டர், தன் சோமத்தில் இடுப்போரம் மடித்து வைத்திருந்த இரண்டு ரூபாய் தாளை எடுத்து, ”இந்தாடா…’’ என்று நீட்டினார்.
கவுண்டர் தான் கேட்காமலேயே பணம் தருவதைப் பார்த்த செவடன் சங்கடத்தோடு, ”எதுக்கு கவுண்ர… வேணாம்’’ என்றான்.
செவடன் சொன்னதைக் கேட்டு முறைத்த கவுண்டர், ”ஒங்கிட்ட இப்ப வேணுமா வேணாமான்னு கேக்கல… ஒழ்ங்குமாதேரியா புடிடா’’ என்று அதட்டி அவன் கையில் தந்துவிட்டு திரும்பி நடந்தார்.
புளியமர மேடேறி பெரிய கால்வாயில் மதகுப் படி இறங்கி ஏறி, மணி ஆச்சாரி கொல்லி வேலியோரமாக நடந்து, சத்தி பாறை ஒட்டிய மண்பாதை வழியாகப் போய் ஏரியில் கட்டியிருந்த சோமத்தை அவிழ்த்து கல்மேல் ஓரமாக வைத்துவிட்டு, இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு கவுண்டர் முன்னால் இறங்க, பின்னாலேயே செவடன் கவுண்டர் தந்த காசை அவர் சோமத்துக்குப் பக்கத்தில் பறக்காமல் இருக்க மேலே ஒரு கல்லெடுத்து வைத்துவிட்டு கட்டிய லுங்கியோடு இறங்கினான்.
செவடனுக்கு ரத்த சொந்தமென சொல்லிக்கொள்ள யாரும் கிடையாது. நினைவு தெரிவதற்கு முன்பே அப்பா அம்மாவை காலராவுக்குப் பலி கொடுத்தவன். பேராமுட்டா கிழவிதான் பாடிபரதேசி பிள்ளையெனப் பார்க்காமல் தன் பிள்ளைபோல் எடுத்து மாரிலும் தோளிலும் போட்டு வளர்த்தவர். பத்து வயதில் முரம்புக் கொல்லிக்கு மல்லாட்டப் புடுங்க கிழவியோடு வந்தபோது கவுண்டரை பார்த்தவன். அதுமுதல் இருபது வருடத்திற்கும் மேலாக கவுண்டரின் நிழல்போல இருப்பவன். முன்நின்று அவனுக்கு திருமணம் செய்துவைத்தது, அவன் குழந்தைக்குப் பெயர் வைத்தது எல்லாமே கவுண்டர்தான்.
தன் உண்மையான பெயர் முனியன் என்பதை கிட்டத்தட்ட செவடனே மறந்திருப்பான். பேராமுட்டா கிழவி ஆசையாக வைத்தது, அவன் குலதெய்வமான ஒத்தக் கை முனியனின் பெயர். எட்டு வயதாக இருக்கும்போது ஊர் தமட்டைகளோடு கூடிக்கொண்டு ஆற்று மணலில் கப்பை விளையாடப் போயிருக்கிறான். சாப்பிடாமல் விளையாடப் போனவனை ஊரெல்லாம் தேடிவிட்டு கடைசியாக ஆத்துக்குப் போன கிழவி, நான்கைந்து தடவை கூப்பிட்டும் திரும்பிப் பார்க்காமல் விளையாடிக் கொண்டிருந்தவனை, ”ஏய் செவடா… ஒண்ண எம்மாந் நேரமாடா கூப்பட்றது…? செவுட்டு நாய…’’ என்று தவடாம் பட்டையில் ஒன்று வைத்து வீட்டுக்கு இழுத்து வந்திருக்கிறார். அதைப் பார்த்த பருவாரம் அதுமுதல் அவனை செவடன் என்று கூப்பிட, அதுவே அவன் பெயராகிவிட்டது.
அரைமணி நேரம் இருக்கும். இருவரும் பேசிக்கொண்டு மாட்டையும் கன்னுக்குட்டியையும் வைக்கோலால் அதன் நிறம் மாறும் வரைக்கும் நன்றாகத் தேய்த்துக் குளிப்பாட்டிவிட்டு, தாங்களும் வெயிலுக்கு இதமாக தேய்த்துக் குளித்துக்கொண்டு மெல்ல கரையேறி வந்தார்கள்.
கவுண்டரும் செவடனும் வருவதற்குள் பூரணியம்மா செல்வியிடம், கட்டுத்தெருவை நன்கு கூட்டிப் பெருக்கி வாரி ஓரிடத்தில் கும்பலாக கூட்டிவைக்கச் சொல்லிவிட்டு, மாணிக்கத்திடம் மூன்று கல் எடுத்து வந்து போடச்சொல்லி அடுப்பு மூட்டி பொங்கல் வைக்கத் தயாராக இருந்தார்.
ஊரிலிருந்து அம்மாசி பாட்டியின் மகன் பெரியசாமி பெரிய மரக்காவில் எதையோ எடுத்துக்கொண்டு மேடேறி கொட்டா நோக்கி வருவதை பார்த்துவிட்டு, கையில் வைத்திருந்த அணில்காயை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஓடிவந்து முருகன் பூரணியம்மாவிடம் சொல்லவும், அவன் பக்கத்தில் வந்து நின்று எடுத்துவந்த மரக்காவை அவரிடம் நீட்டவும் சரியாக இருந்தது.
சாமை அரிசி. முக்கால் மரக்காலிருக்கும். பெரிபடியால் மூன்று படி.
பார்த்துவிட்டு, ”என்னடா இது…?’’ என்றார் பூரணியம்மா.
”சாமரிசி அத்த… அம்மாதான் மாமாகிட்ட கையோட போயி தந்துட்டு வான்னு சொல்ச்சி… அதான்’’ என்றான்.
கேட்டதும் பூரணியம்மா மேற்கே திரும்பிப் பார்த்து, ”அதோ வராரு பாரு ஒங்க மாமா… நீயே அவருகிட்ட வந்ததும் கொடு…’’ என்று சொல்லிவிட்டு, கொட்டாயின் கூரையிலிருந்து எடுத்து வந்த ரவ மஞ்சம்புல்லை அடுப்பில் சுள்ளி விறகுக்குக் கீழே வைத்துப் பற்ற வைத்தார்.
கவுண்டர் வந்ததும் மாட்டை மாணிக்கத்திடம் தந்துவிட்டு பெரியசாமியை பார்த்து, ”என்ன ஓய்… அதிசிமா காத்து இந்தப் பக்கம் அடிச்சிக்கீது…?’’ என்றார்.
மரக்காவில் எடுத்துவந்திருந்த சாமை அரிசியைத் தயக்கத்தோடு கவுண்டரிடம் நீட்டி, ”அம்மா இத ஒன்கிட்ட தந்துட்டு வர சொல்ச்சி, மாமா…’’ என்றான்.
கேட்ட கவுண்டர் தலையைக் கோணலாக திருப்பிப் பார்த்து, ”எதுக்கு… நேத்து ஒன் பொண்ணுக்கு திர்நூறு புடிச்சிப்போட்டதுக்கு கூலியா…?’’ என்று கேட்டுவிட்டு சத்தமாகச் சிரித்தார்.
‘ஆமாம்’ என்பதுபோல் மெல்ல தலையாட்டினான் பெரியசாமி.
அதைப் பார்த்த கவுண்டர் பொய்யாக கோபம் காட்டி, ”ஏன்டா ஒக்காலவோலி… ஒணுக்கு எம்மாருந்தா கூலி கொண்டாந்திருப்ப கூலி…? எடு அந்த சிமிர… லவடிக்கபால்…’’ என்றார்.
என்ன சொல்வதெனத் தெரியாமல் தலை குனிந்து நின்ற பெரியசாமியிடம் கவுண்டர், ”செரி ஓய்… இம்மாந்தூரம் கொண்டாந்துட்ட… வேணும்னா ஒண்ணு பண்ணு… கொண்டாந்தத செவடன்கிட்ட தந்துட்டு போ’’ என்றார்.
ஏன் சம்பந்தமே இல்லாமல் செவடனிடம் தர சொல்கிறார் எனப் புரியாமல் விழித்தான் பெரியசாமி.
அதைப் புரிந்துகொண்ட கவுண்டர், ”வைத்தித்துக்கும்… திர்நூறு புடிச்சிப் போடறதுக்கும்… என்னிக்கும் யாருகிட்டயும் கை நீட்டி கூலி வாங்க மாட்டன்… இஷ்டம்ருந்தா செவடன்கிட்ட தந்துட்டு போ… இல்லனா கொண்டாந்தத நீயே எடுத்துனுபோயி ஒன் அம்மாக்காரிக்கிட்டயே தந்துடு’’ என்று சொல்லிவிட்டு போய், மாட்டின் கொம்பை கொடுவாளால் லேசாக சீவிவிட்டு, அதில் மாணிக்கமும் ஏழுமலையும் ஆளுக்கொரு கொம்பில் நீல வண்ணமும் பச்சை வண்ணமும் அடித்ததும் மூக்கணாங்கயிறு உட்பட பழைய கயிற்றையெல்லாம் அவிழ்த்துவிட்டு, சக்கரை ஆலை சந்தையிலிருந்து போனவாரம் வாங்கிவந்த புதுக் கயிறு கட்டிவிட்டு, செவடன் கொண்டுவந்திருந்த மணியைக் கழுத்தில் கட்டிவிட்டார்.
சற்று தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்த பெரியசாமி, மெதுவாக கால்களைத் தரையில் தேய்த்துக்கொண்டு செவடனிடம் போய், ”இந்தா’’ என்று நீட்டினான்.
வாங்காமல் கவுண்டரை திரும்பிப் பார்த்த செவடன், ‘வாங்கிக்கோ’ என அவர் சைகைகாட்டி சொன்னதும் வாங்கிக்கொண்டான்.
”செரி மாமா… நானு வூட்டுக்குப் போறன்’’ என சொல்லிவிட்டு பெரியசாமி கிளம்பிப் போனதும் செவடன் கேட்டான்.
”ஏன் கவுண்ர… அவன் கொண்டாந்தத ஏங்கிட்ட தர சொன்னீங்க…?’’
செவடனின் கேள்வியைக் கேட்டு பலமாக சிரித்த கவுண்டர், ”இருக்கவன் இல்லாதவனுக்கு தரணும்… அதான மொற…?’’ என்றார்.
கவுண்டரின் பதிலில் நெகிழ்ந்த செவடன், கையில் வைத்திருந்த சாமையை எடுத்துப்போய் காட்டுத்தெரு வாசப்படியோரம் வைத்துவிட்டு வந்தான்.
ஓரிடத்தில் கும்பளாகக் கூட்டி வைத்திருந்த கட்டுத்தெரு குப்பையின் முன்னால் நேற்று மதியம் கொட்டா அட்டணை மேல் வைத்துவிட்டுப் போன வேப்பிலை, மாவிலை, ஓணாங் கொடி, பெரண்டைக் கொடி, ஆவாரம் பூ, பூளா பூ, அறுகம்புல் எடுத்துவந்து வைத்துவிட்டு, அத்துடன் வீட்டிலிருந்து கொண்டுவந்த வர்ணக்கோலையும், பன்னிக்கரும்பையும் வைத்து, பறித்துவந்த வாழை இலையில் பொங்கல் இறக்கி அதில் கட்டி வெல்லம் போட்டு கொஞ்சமாக அள்ளிவைத்து, மாட்டை பிடித்து வந்து பக்கத்தில் இருந்த முளைக்குச்சியில் கட்டிவிட்டு கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டார்கள்.
மேற்கே அரசங்கல்லுக்குப் பின்னால் சூரியன் முழுதும் அடங்கி லேசாக கருக்க ஆரம்பித்தது. சட்டென என்ன நினைத்ததோ தெரியவில்லை, கருப்பு மாடு நான்கு பக்கமும் மாறிமாறி பார்த்துக்கொண்டு சத்தமாகக் கத்தியது. ஏதாவது கடித்துகிடித்துவிட்டதா எனப் பார்க்க அருகில் போன செவடனைக் கண்டு பயந்துபோய் முரண்டுபிடித்தது.
பார்த்த கவுண்டர், ”நீ இப்டி வாடா… நானு போயி பாக்கறன்’’ என சொல்லிக்கொண்டு கிட்டே போனார்.
அப்போதும் மாடு ஓரிடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடியது.
கவுண்டருக்கு ஒன்றும் புரியவில்லை. கையெடுத்துக் கும்பிட்டு, ”எம்மா கருப்பச்சி தாயே… என்னடியம்மா ஆச்சி ஒணுக்கு…? எல்லாரும் கூடி பொங்க வச்சி ஒன்ன கும்டதான வந்தோம்… ஏன்டியம்மா இப்டி கத்தறவ…?’’
கவுண்டர் சொன்னதைக் கேட்டு லேசாக கண்கலங்கி ஓரிடத்தில் அமைதியாக நின்றது மாடு. மெதுவாக பக்கத்தில் போய் நின்று அதன் கழுத்து, முகம், தோள்பட்டை, வயிறு எங்கும் தடவிக் கொடுத்தார். பதிலுக்கு மாடு எப்போதும் போல் இல்லாமல் கவுண்டரின் கையில் தன் நாவால் இரண்டு மூன்று இடத்தில் வேகமாக எதையோ சொல்வதுபோல் நக்கியது.
இவ்வளவு நேரம் நன்றாக இருந்த வானம் சட்டென மின்ன ஆரம்பித்தது. காற்றும் அதற்கேற்ப வேகமாக அடிக்க, ஒரு கட்டத்துக்கு மேல் இன்னுமின்னும் அதிகமாகி விட்டால் ஆளையே தூக்கிக்கொண்டு போய்விடும் அளவுக்கு கோரமானது.
கிழக்கே வானம் இருட்டிக்கொண்டு வருவதைப் பார்த்த கவுண்டர், ”எப்பா மாணிக்கா… எல்லாத்தயும் தூக்கினு கொட்டாவுள்ள ஓடுங்க. செவடா… நீ கன்னுக்குட்டிய புடிச்சினு கட்டுத்தெருக்கு போ’’ என்றார், பதட்டமாக.
கவுண்டர் சொன்னதைக் கேட்டு ஆளுக்கொன்றாய் எடுத்துக்கொண்டு ஓடினார்கள். பொங்கல் வைத்த குண்டானைத் தூக்கிக்கொண்டு நடந்த பூரணியம்மா எண்ணி நான்கடி வைத்திருப்பார். சட்டென முடியாமல் கீழே வைத்துவிட்டு வயிற்றைப் பிடித்துக்கொண்டு நின்றுவிட்டார். எவ்வளவு முயன்றும் ஓர் அடிகூட அவரால் எடுத்துவைக்க முடியவில்லை.
பெருவலி. அதுவும் பிரசவ வலி வந்துவிட்டது. தாங்கமுடியாமல் அப்படியே தொம்மென கீழே உட்கார்ந்துவிட்டார்.
‘டப்டப்’ என ஒவ்வொன்றாகப் போட்ட தூத்தல், கண்மூடி திறப்பதற்குள் ‘சோ’வென கொட்ட ஆரம்பித்தது. கையில் பிடித்திருந்த மாட்டை விட்டுவிட்டு பூரணியம்மாவிடம் ஓடிவந்த கவுண்டர், மெல்ல அவரை தூக்கி தாங்கலாக நிற்கவைத்து தன்மேல் சாய்த்துக்கொண்டு, ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து தொப்பரையாக நனைந்துகொண்டு கட்டுத்தெருவுக்கு கூட்டிப்போனார்.
பூரணியம்மாவால் அதற்கு மேல் ஓரடிகூட வைக்க முடியவில்லை. வலி தாங்காமல் கத்தி அழுதுகொண்டு கீழே உட்கார்ந்துவிட்டார். கவுண்டருக்கு என்ன செய்வது ஏது செய்வது என ஒன்றும் புரியவில்லை.
பிரசவ வலியெடுத்து தாங்கமுடியாமல் பூரணியம்மா கத்துவதைப் பார்த்து துடித்துப்போன செவடன், கட்டுத்தெருவில் அங்கும் இங்கும் ஓடி என்ன செய்வதெனப் பார்க்கிறான். அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை. மேட்டுக் கொல்லி இருந்த இடத்துக்குப் போனால்தான் உண்டு. வெளியில் மழைவேறு. அதுவும் பேய்மழை.
பூரணியம்மா துடிப்பதைப் பார்த்து தானும் துடித்துப்போய் கலங்கிய கவுண்டர், ”டேய் செவடா… ஒரே ஓட்டமா ஓடி… பேராமுட்டா கெழ்விய கூட்டியாடா…’’ வேறுவழியின்றி சொன்னார்.
ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை. சட்டென்று ஓடினான் செவடன்.
பூரணியம்மாவுக்குத் தெரிந்துவிட்டது, இன்னும் செத்தநேரத்தில் குழந்தை பிறக்கப்போகிறது. அதுவும் இதற்கு முன்னான பிரசவம் போலில்லாமல் இம்முறை ஏதோ நடக்கக்கூடாத ஒன்று நடக்கப்போகிறது என உள்ளுக்குள் தோன்றியது. கை கால் மட்டுமின்றி அவரது உடல் மொத்தமும் நடுங்கியது. வெளியில் கேட்கும் இடி சத்தத்தை மிஞ்சிய குரலில் கத்தினார்.
சட்டென ஏதோ சொல்ல நினைத்து கவுண்டரை நோக்கி கை காட்டி கூப்பிட்ட பூரணியம்மா, ”புள்ள… புள்ள…’’ என தன் அடிவயிற்றை நடுங்கும் கைகளால் தொட்டுத் தொட்டுக் காட்டினார்.
அடிவயிறு முன்னைவிட பெரிதாகத் தெரிந்தது. குழந்தை இறங்கி இன்னும் கொஞ்ச நேரத்தில் வெளியே வரப்போவதுபோல் இருந்தது.
கவுண்டருக்கு ஒன்றும் புரியவில்லை. பூரணியம்மாவோடு சேர்ந்து தானும் அழுகிறார். கை கால் வயிறு எங்கும் மாறி மாறி பிடித்தார். ஏதேதோ சொல்லி கடவுளிடம் வேண்டினார்.
ஒரு கட்டம் வரைக்கும் பொறுத்த பூரணியம்மா, வலி தாங்க முடியாமல் கால்களை அகல விரித்து தரையில் உதைத்து கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு எலும்பெல்லாம் முறிவதுபோல் தன் முழு பலத்தையும் சேர்த்து, ”எம்மோவ்…’’ என அடிவயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்து வேகமாகக் கத்திவிட்டு அப்படியே தரையில் சரிந்துவிட்டார்.
கட்டிய புடவையும் பாவாடையும் தொடைவரை ஏறியிருந்த பூரணியம்மாவின் கால்களுக்கு நடுவில் சட்டென குழந்தை வெளியே வந்து விழுந்தது. சிறு சத்தமும் இல்லை, அசைவும் இல்லை. இருகால்களும் தரையில் உதைத்து உதைத்து காயமாகி ரத்தம் வந்துகொண்டிருந்தது.
ரத்தக் கறையோடு தொப்புள்கொடியுடன் காலிடையில் கிடந்த குழந்தையை எங்கே எப்படித் தொடுவது எனத் தெரியாமல், தன் நடுங்கும் கையால் விரலளவே இருந்த பிஞ்சுக் கையை மெல்ல தொட்டார். சில்லென கல் போல இருந்தது.
பதறிப்போய், ”பூர்ணி… பூர்ணி…’’ என்று கத்தி கூப்பிட்டார். கையைப் பிடித்து இழுத்தார். ஓர் அசைவும் இல்லை. உடைந்துபோய், ”அய்யோ… இப்ப நானு என்ன பண்ணுவன் சாமி…? என்ன பண்ணுவன்…? அய்யோ…” சத்தம்போட்டு அழுதார்.
எழுந்து இரு தோளையும் பிடித்து உலுக்குகிறார். அப்போதும் அசையவில்லை. வெளியில் யாரோ கத்திக்கொண்டு ஓடிவரும் சத்தம் கேட்கிறது. பேராமுட்டா கிழவியும் அவள் பேத்தியும் மழையில் நனைந்துகொண்டு மூச்சுவாங்க ஓடிவந்தார்கள்.
கீழே தரையில் கட்டிலருகே பூரணியம்மாவும் பிறந்த குழந்தையும் பேச்சு மூச்சின்றி கிடப்பதைப் பார்த்துவிட்டு, ”எம்மா… எம்மா…’’ என்று எழுப்புகிறார்கள். சிறு அசைவும் இல்லை. உடல் கொஞ்சம் கொஞ்சமாக சில்லென மாறிக்கொண்டிருந்தது.
சட்டென எழுந்து எறவானத்தில் செருகியிருந்த கொடுவாளை எடுத்து தொப்புள்கொடியை அறுத்த பேராமுட்டா கிழவி, குழந்தையைத் தூக்கி தன் பேத்தியிடம் தந்துவிட்டு, பூரணியம்மாவின் இரு கன்னத்திலும் மாறி மாறி அடித்தார். உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும் வேகமாகத் தேய்த்து சூடாக்கினார். கடைசியாக மார்மீது இரு கைகளையும் வைத்து ஓங்கி ஓங்கி அழுத்தினார். டப்பென தூக்கிப்போட்டது பூரணியம்மாவுக்கு.
மெல்ல கண் திறந்தார். ‘புள்ள எங்க?’ என இரு விழிகளும் தேடின. அவரால் எழமுடியவில்லை. கை கால் எதையும் அசைக்க முடியவில்லை. மெல்ல தலையைத் தூக்கிப் பார்த்தார். காலடியில் பேராமுட்டா கிழவியின் பேத்தி உட்கார்ந்துகொண்டு தன் கால்மேல் குழந்தையை போட்டிருப்பது தெரிந்தது.
ஏதேதோ செய்து பார்த்தாள். அசையவில்லை. ஓடிவந்து பேராமுட்டா கிழவி குழந்தையைத் தூக்கி தன் கால்மேல் போட்டு பிஞ்சுக் கையைப் பிடித்து உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும் தேய்த்தார். மார்மீது அழுத்திப் பார்க்கிறார். வாயில் வாய் வைத்து ஊதுகிறார். குப்புற படுக்கவைத்து முதுகில் தன் இரு கட்டை விரலும் ஒருசேர அழுந்தத் தேய்த்தார். எந்தவோர் அசைவும் இல்லை.
கடைசியாக இரு கால்களையும் பிடித்துத் தூக்கி தலைகீழாகத் தொங்கவிட்டு, இரண்டு மூன்று தடவை குலுக்கிப் பார்த்தார். அப்போதும் அசையவில்லை.
அதற்குள் பேராமுட்டா கிழவியின் பேத்தி பூரணியம்மாவின் தலைமாட்டுக்கு வந்து உட்கார்ந்து அவர் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு, ”புள்ளிக்கி ஒண்ணுல்லம்மா… ஒண்ணும் ஆவாது…’’ என உடைந்த குரலில் கண்கலங்கி சொல்லிக்கொண்டிருந்தாள்.
எப்படிச் சொல்வது எனத் தெரியாமல் தவித்த பேராமுட்டா கிழவி, ”சாமி’’ என நடுங்கிக்கொண்டு கூப்பிட்டார், பக்கத்தில் துடிதுடித்து உட்கார்ந்திருந்த கவுண்டரைப் பார்த்து.
கிழவியின் குரல் கேட்டு மின்னல் பாய்ந்ததுபோல் தலையை மிக வேகமாக திரும்பிப் பார்த்தார் கவுண்டர்.
கவுண்டரையும் பூரணியம்மாவையும் மாறி மாறிப் பார்த்த பேராமுட்டா கிழவி, ஒருவாறு துணிவுகொண்டு, கண்கலங்கி அழுதபடி கவுண்டரிடம் சொன்னார்.
”புள்ள சாமிக்கிட்ட போய்ட்டான்யா…’’
[இன்னும்]
*