ஐயா 100 | வடிவரசு 05

செப்டம்பர் 01, 2024 இன்றைய தினம் – இரு வகையில் எனது வாழ்வில் மிக மிக முக்கியமானது.

ஒன்று, ஐயா என்னும் மகத்தான மனிதரின் நூறாவது பிறந்தநாள் இன்று. இரண்டு, நான் எழுத வந்து அதாவது, எனது முதல் நூலான ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ வெளியாகி இன்றோடு சரியாக ஐந்தாண்டுகள் நிறைவாகியுள்ளது.

ஐயா பற்றி ஏற்கனவே எவ்வளவோ எழுதிவிட்டேன் என்றாலும், இன்னும் எழுதுவதற்கு பல விஷயங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் இனிவரும் காலங்களில் வாய்க்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் எழுதுவேன்.

அதோடு, ஐயாவின் இந்த நூறாவது பிறந்தநாளுக்குப் பரிசாக முன்னமே அவரது நூறாம் அகவை ஆண்டில் பிறந்த மகன் ஐ’யை அவர் கரத்தில் தந்துவிட்டேன்.

கூடவே, தனது வாழ்நாளெல்லாம் மற்றவர்களுக்காகத் தந்து தந்து வாழ்ந்த; வாழும் ஒரு மகத்தான மனிதருக்கு, அவரது இளைய மகனாக எனது வாழ்நாளில் தரக்கூடிய மிக உச்ச ஒன்றையும் இந்த நன்னாளில் தந்திருக்கிறேன். அது என்ன என்பது குறித்து இப்போது சொல்லப் போவதில்லை. ஆனால் ஒன்று, அதற்காக எப்போதும் பெருமைப்படுவேன்.

எழுத வந்த இந்த ஐந்து ஆண்டுகளில்… ‘ஐயா (எ) 95 வயது குழந்தை’ தொடங்கி, ‘ஆடூஉ மகடூஉ’ வரை 18 நூல்கள் எழுதி இருக்கிறேன். [தற்போது எழுதிக்கொண்டிருக்கும் முரம்பு அகராதி, ஐ பக்கம் சேர்த்தால் 20 நூல்கள். இவற்றில் 11 நூல்கள் அச்சாகி வெளியாகியுள்ளன. மற்றவை அடுத்தடுத்து வெளியாக உள்ளன.] இவற்றுக்காக கொடிசியா – இளம் படைப்பாளர் விருது தொடங்கி, மத்திய அரசு – கலாச்சார அமைச்சகத்தின் ஜூனியர் ஃபெல்லோஷிப் விருது வரை பெற்றிருக்கிறேன்.

இவ்வுன்னத தினத்தில் தற்போது உருவாக்கி வரும் ‘முரம்பு கிராமியச் சொல்லகராதி’ குறித்த தகவல் ஒன்றையும் பகிர விரும்புகிறேன்.

அகராதி கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதம் நிறைவாகிவிட்டது. இன்னும் ஐம்பது சதவிகிதம் முடித்து அடுத்தாண்டு இறுதியில் வெளியாகும் என நம்புகிறேன். தமிழில் இதுவரை வந்துள்ள அகராதிகளைக் காட்டிலும் பல்வேறு விதத்தில் இவ்வகராதி தனித்ததாய் இருக்கும் என்பது மட்டும் உறுதி.

ஐயாவுக்கு என் இனிய முதலழுகை தின வாழ்த்துகள்.

ஐயாவின் இப்பிறந்தநாளில் எனது வேண்டுதலெல்லாம் இதுதான். அவர் இப்பூமியில் வாழ விரும்பும் கடைசி நிமிடம் வரை நோய்நொடியின்றி மகிழ்வோடு வாழ்ந்திட வேண்டும். அது மட்டுமே இப்பேரியற்கை அன்னையிடம் யான் பிரார்த்திப்பது.

வாழ்க ஐயா; வளர்க அவரது எளிய புகழ்!

என்றும் அன்புடன்,

அவரது இளைய மகன் வடிவரசு.

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=