ஐபக்கம் – 034 : ai.kuku2023@gmail.com

#மார்ச்28,2024

ஐ பிறந்த இந்த மூன்றாவது மாத 28 ஆம் தேதியில், அவனுக்கென ஒரு மின்னஞ்சல் முகவரி உருவாக்கி அறிமுகம் செய்திட நினைத்தோம். ஆம்!

அதற்காக இன்று மாலை ஐந்து மணி இருக்கும். ஐ தூங்கி எழும் வரை காத்திருந்து, தூக்கிக்கொண்டு வந்து மடிக்கணினியில் உட்கார்ந்து, அவனுக்காக ‘ai.kuku2023@gmail.com’ என்ற பெயரில் மின்னஞ்சல் முகவரி உருவாக்கி, இவ்வாறு சொல்லிட்டோம்.

”ஐ, பாப்பா… தங்கமே… இன்னிக்கோட நீ பொறந்து மூணு மாசம் ஆகுது, சாமி. சரியா சொல்லனும்னா… 92 நாள். அதனால நீ பொறந்த இந்த 28 ஆம் தேதியில… உனக்கு, உன் பெயர வச்சியே ஒரு மெயில் ஐடி உருவாக்கி இருக்கோம். ஆமா, மகனே.

நாம இருக்க இந்த உலகம்… இன்னிக்கி தொழில்நுட்பத்தோட உச்சத்துல இருக்கு. அதோட, நாளுக்கு நாள் நெனச்சிப் பாக்காத அளவுக்கு வளர்ந்துட்டும் வருது. இப்படிப்பட்ட  உலகத்துல… மெயில் ஐடி’ன்றது ரொம்ப முக்கியமான ஒண்ணு. அதனாலதான் நாங்க இதோ, உனக்காக… ஒரு தொடக்கமா இத உருவாக்கி இருக்கோம், மகனே.

இத வச்சு… நீ யாருக்கு வேணாலும் மெயில் அனுப்பலாம்; பேசலாம்.

ஒரு வரியில சொல்லனும்னா… இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய வரப்பிரசாதம், மகனே. இதக் கொண்டு பல அரிய விஷயங்கள மிக எளிதா செய்யலாம். ஆமா, மகனே.

அப்படிப்பட்ட தொழில்நுட்பத்துக்கு அடிப்படையான ஒண்ணுன்னா… அது இந்த மெயில் ஐடி’தான். நாளைக்கு நீ வளர்ந்து, இத நல்லவிதமா பயன்படுத்தி… பல அரிய விஷயங்கள செய்வன்ற நம்பிக்கைலதான் செய்திருக்கோம்.

இங்க இன்னொரு முக்கியமான விஷயத்த நீ தெரிஞ்சிக்கனும். உன் அப்பா நான்… என்னோட பதினெட்டாவது வயசுலதான் மெயில் ஐடி உருவாக்கினேன். உன் அம்மா 17 வயசுல உருவாக்கினாங்க. ஆனா, பாரு… உனக்கு பிறந்த மூணாவது மாசத்துலயே உருவாக்கி இருக்கோம். இத வச்சியே நீ, இது எத்தன முக்கியமானதுன்னு தெரிஞ்சிக்கலாம்; புரிஞ்சிக்கலாம்.’’

இதனை அப்படியே ஒன்று விடாமல் கூறிவிட்டு, கையோடு, ஐ’யின் மின்னஞ்சல் முகவரிக்கு, எங்களது மின்னஞ்சலில் இருந்து நானும் மதியும் தனித்தனியாக மின்னஞ்சல் அனுப்பினோம். ஆம்!

இக்கணினி உலகில், இன்றைய தொழில்நுட்பத்தின் உச்சப் பெயராய் ஒலிக்கக்கூடிய ‘AI technology’யையோ தற்செயலாய் தனது பெயராய் கொண்டிட்ட ஐ’க்கு, இந்த மூன்றாவது மாதத்தில், அத்தொழில்நுட்பத்தின் முக்கிய அங்கமான மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, நன்முறையில் அறிமுகம் செய்திட்டதில் மகிழ்ச்சி மட்டுமல்ல… பெருமையும் கொள்கிறோம்.

வேறென்ன சொல்ல?

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=