புள்ளியில் புள்ளி

என் சிறகுகளுக்குக் கீழ்
மொத்த ஞாலமும் உறங்கிக்கிடந்தபோது
படித்துவிட்டதாய் நினைத்தேன்
வானின் பாதியை

என் கால்களுக்குக் கீழ்
பேராழ் துளியாக
பிள்ளையாகிப்போனேன்
சொல்லுக்கு

இயற்கையில் நானும்
என்னிலதுவும்
பின்னிக்கொண்டது
ஓரந்திமப் பொழுதில்

இதிகாசத்தில்
முக்கியப்பாத்திரமாக
அனுமதியின்றி நுழைந்தவனுக்கு
கருப்புக் கவலையாக இருந்தது
வெளியேறுவழி தெரியாதது

ஆயுளறையில் மாட்டிக்கொண்டேன்
அன்பின் நூலில் சிக்குற
ஆகப்பெருமாசையுற்றதால்

கேள்விகளுக்கு முன்
விடையுதித்திடும் மனது
கவசம் மாட்ட எத்தனிக்க
காணாமற்போனது கடுகாக

கடைசிக்கும்
கடைசியாக
கண்மூடி பார்த்தபோது
யாரோவிருக்க திகிலிற்றேன்

இப்போதென் சிறகுகளுக்குக் கீழ்
மொத்த ஞாலமும் விழித்துக்கொண்டதால்
ஒன்றாகிப்போனேன்
வானின் புள்ளிகளில் புள்ளியாக
புள்ளிக்குள் புள்ளியாக
அல்லது
புள்ளியோடு புள்ளியாக
புள்ளியில் புள்ளியாக

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=