இருள்நிறப்பூனை
மலையின் அமைதியிலிருந்தெழுந்து
மெல்லமெல்ல வளியுடன் நடந்து
ஆல்கைப்பிடித்து
பொடியில் வழிந்திறங்கி தரைபற்ற
தன் ஒற்றைக் கண்ணால்
பார்த்துக்கொண்டது மேல்வானம்
ஒருத்தியின் கள்ளப்பார்வையில்
வழுக்கிவிழ நேர்ந்தபோது
தாங்கிப்பிடித்தது
இன்னொருத்தியின் நினைவுக்கரம்
ஒட்டிக்கொள்ளும் பெரண்டை வாசம்
அகலாதுடன் வந்ததறிய
இளைய பிள்ளையானேன்
இசையின்
காத்திருக்கும் நேயச்சொற்களில்
நான்கைந்து கைகட்டித்தொடர
பூசிக்கொண்டது
நேற்றின் மவுனம்
கிழிந்துபோன பூமி கடந்து
சந்தை மண்ணை
பச்சாதாபவிழியில் பார்த்துத்திரும்ப
தட்டென குறுக்கிட்டது
இருள்நிறப் பூனை
நொடிநொடியில் மரணப்படிதொட்டு
மீள
குருதி சாலையானது
தார்சாலை
நீல நிறம் துறந்து
சிவப்பு தரித்த வானம்
கடைசிவரை பார்க்காதது
துளி வருத்தம்தான்