க
நிசப்தமுண்டுபெருகிய உடம்பில்
தனிமை தகிப்படங்கி
இயலாமையின் உச்சக்குரல் கேட்டது
பகலுதிர்ந்த மாலையில்
பலங்குன்றிய யாக்கையுடன்
செய்வதறியா யோசனையில்
நுனிப்பிடி அறுந்திட
தலைகுப்புற சரிந்து
முரம்பென நொறுங்கினேன்
நினைவின் குருணியள்ளி
கனவின் பசப்பு கலந்து
ஒட்டவொட்ட மறுத்தது
பாசாங்கின் மிளிர் வன்மம்
மீறியும் பிணைந்த
வலச்சுண்டு விரலை
கோரமுகம் வழியக்காட்டி
களிப்புடன் பிரித்தது
இறக்கம் துளியுமின்றி
தொடர்ந்து நிகழும்
இன்மைப்போரில் சிக்குண்டு
சத்தமின்றியழுதுப் புலம்பியது
காலத்தின் கசந்த வாய்கள்
ககக் ககக் க
ககக் ககக் க
ககக் ககக் க
ககக் ககக் க