சொல்லன்றி எதுவுமற்றவன்! – 242
சிறுதெய்வங்களுக்கும், பெருந்தெய்வங்களுக்குமான மிக முக்கிய வேறுபாடாக எதைப் பார்க்கிறீர்கள்?
சிறுதெய்வங்கள் நம் மீது எப்போதும்; எதிலும் மிகுந்த உரிமையோடு இருப்பவை. அது கோபமானாலும் சரி, அன்பானாலும் சரி. ஆனால், பெருந்தெய்வங்கள் அவ்வாறு கிடையாது.
இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். கடந்த 2016 ஆம் ஆண்டு ஆடி மாதம் எங்கள் ஊரில் உள்ள குலதெய்வத்திற்கு பொங்கலிட்டு முப்பூசை போட்டபோது சாமி வந்து, ‘நான் ஒங்க எல்லாரு மேலயும் கோவமா கீறன்டா. நீங்க எல்லாரும் என் புள்ளைங்க. யாரும் எனக்கு ஏத்தம், தாத்தி இல்ல. ஏன்டா ஒத்துமயா இல்லாம… இப்டி பிரிஞ்சி சின்னாபின்னமா கீறீங்க. அடுத்தாண்டு ஒருத்தரு வுடாம… ஒண்ணா ஒத்துமயா வந்து என்னக் கும்புட்டாதான்… உங்க முன்னாடி வருவன். இல்லனா இனி எப்பயும் வரமாட்டன். பாத்துக்கங்க’ என்றது.
அடுத்தாண்டு எல்லோரும் ஒற்றாகச் சென்று வழிபட்டோம். மகிழ்வோடு வந்து, ‘நான் இப்பதான்டா சந்தோசமா கீறன். இப்பிடியே எப்பயும் எல்லாரும் ஒத்துமயா இருக்கணும். அதான்டா என் ஆச’ என்றது.
இப்படித்தான் சிறுதெய்வங்கள் நம்முடன் பேசும். நம்மோடு இருக்கும். நம்மை வழிநடத்தும். காக்கும். கோபம் கொள்ளும். அன்பு காட்டும். வேண்டியதை உரிமையுடன் கேட்டுப் பெற்றுக்கொள்ளும். ஏனெனில் அவை நம்மைப் போல் இம்மண்ணில் பிறந்து வாழ்ந்து மறைந்த நம் மூதாதைகள். ஆனால், பெருந்தெய்வங்கள் அப்படிக் கிடையாது.
[இன்னும்]
*