சொல்லின்றி எதுவுமற்றவன்! – 145
மரமும் மரம் சார்ந்த உங்களது வாழ்வையும் இந்நூல் முழுக்க எழுதி இருப்பீர்கள். இதில் சங்க இலக்கியம் எப்படி வந்தது?
இன்றைக்கு நமக்கு கிடைக்கக்கூடிய மிக மூத்த இலக்கியப் படைப்பாக சங்க இலக்கியத்தை சொல்லலாம். அப்படிப்பட்ட படைப்பு இன்றைய நம் வாழ்வுக்கு தொடக்கமாக; ஆதாரமாக; வாழ்வை பிரதிபலிக்கக் கூடியதாக இருப்பதையும் பார்க்கலாம்.
உதாரணத்திற்கு ஒன்றை சொல்கிறேன். எங்களூரில் இளம் பெண்களுக்கு மார்பில் தேமல் வந்தால், அது சரியாக புங்கை மரத்தின் துளிர் இலையைப் பறித்து இரவு தூங்கும்போது மார்பு மேல் வைத்துக்கொண்டு தூங்கச் சொல்வார்கள். இதையேதான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னான சங்கப் பாட்டும் (நற்றி – 9) சொல்கிறது.
‘பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி’
நொச்சி அரும்பை பார்த்தால் நண்டின் கண்கள் நினைவுக்கு வரும். இதைதான் ஒரு சங்கப் புலவன் தம் பாட்டில் உவமையாக வைத்து பாடியிருக்கிறான். இப்படி பல்லி முட்டைக்கு புன்னை அரும்பு, கிளியின் மூக்குக்கு அவரைப் பூ, அணில் பல்லுக்கு முள்ளி மலர், மயில் குடுமிக்கு வாகைப்பூ… என்று இன்னும் எத்தனையோ சொல்லலாம்.
அப்படிப்பட்ட செவ்விலக்கியத்தை அதுவும், கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் ஒன்றை விட்டுவிட்டு எப்படி இந்நூலை என்னால் எழுதியிருக்க முடியும்? அப்படியே எழுதி இருந்தாலும் அது முழுமையாக இருந்திருக்குமா? என்பது சந்தேகம்தான்.
[இன்னும்]
*